Friday, November 20, 2009

ஸ்பூனரிசம் (Spoonerism)

சில சமயம் நாம் பேசும் பொது வார்த்தைகளின் எழுத்துக்களை மாற்றி உச்சரித்து புதிய வார்த்தைகளை தவறுதலாக உருவாக்குவோம்.எல்லாருமே எதோ ஒரு சமயம் அப்படி tongue slip ஆகியிருப்போம். உதாரணம் ஓடிப் போனான் , போடி ஓனான். ஒரு அக்றிணை பிறவியை போடி வாடி என்று கூறுவது போல் ஆகிவிட்டது.கல்லூரி நாட்களில் நான் இவ்வாறு யோசித்திருக்கிறேன்.பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் உபயோக்கியமுடியாத வார்த்தைகள்.(Unparliamentary words ).

Wednesday, November 11, 2009

தமிழ் வகுப்பும் நகைச்சுவையும்..!

பள்ளிநாட்களில் நான் அதிகம் ரசித்தது தமிழ் வகுப்புகளே. மிக்க சுவாரஸ்யமானவை. காரணம் பாடங்கள் அல்ல. அவ்வகுப்புகளின்போது அரங்கேறும் நகைச்சுவை நிகழ்வுகள்தான்.குறிப்பாக 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளின் தமிழ்ப்பாடவேளைகளை என்னால் மறக்கவே முடியாது. முதலில் 8 ஆம் வகுப்பு பற்றி சொல்கிறேன். 9 ஆம் வகுப்பு பற்றி அப்புறம். 8 ஆம் வகுப்பில் கல்யாண சுந்தரம் சார்.மழித்த மீசை. நல்ல உயரம், அதற்கேற்றார் போல தேகம்.வேஷ்டி சட்டையில் ஒரு கச்சிதமான தமிழாசிரியருக்கான இலக்கணங்களுடன் வருவார்.கண்ணாடியை விட்டுவிட்டேன். எல்லா தமிழ் வாத்தியார்களைப் போலவே கண்ணாடியும் அணிந்திருப்பார். சுருங்கச் சொல்வதெனின் ஒரு நேர்மையான தமிழாசிரியர்.
சிலசமயங்களில் வேஷ்டியின் நுனியால் காதைக் குடைந்துகொண்டே அடுக்கு மொழியில் "அதனை எடுத்து... கொடுத்து... உடுத்து... " என்று பாடம் நடத்துவது அவ்வளவு ரம்யமாக இருக்கும்.ஆனால் பிரம்பைக் கையில் எடுத்தார் என்றால் தொலைந்தோம். ஒருமுறை ஸ்ரீராம் வாங்கிய அடியைப் பார்த்து நாங்களெல்லாம் கழிந்து விட்டோம்.

Friday, October 23, 2009

கந்தல் துணி - பாகம் 2

இந்த வார விகடன் இணைப்பில் (செண்டிமெண்ட் விகடன்) நான் கடந்த பதிவின் தொடர்ச்சியாக (கந்தல் துணி) எழுத நினைத்த ஒன்றைப் பற்றி ரீ.சிவக்குமாரும் எழுதியிருக்கிறார். அட பரவாயில்லையே நாம கூட விகடன்ல வர்ற ஒரு பத்தி அளவுக்கு யோசிச்சிருக்கொமே என்று வியப்படைய ஒன்றுமில்லை.இந்த நொந்து போன செண்டிமெண்ட்ஸ் பத்தி யாரு எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

Thursday, October 1, 2009

கந்தல் துணி - பாகம் 1

தமிழ் சினிமா இன்றுவரையில் எண்ணற்ற cliche க்களை கொண்டுள்ளது.பலரும் பல பதிவுகளில் அடித்துத் துவைத்த கந்தல் துணிதான் என்றாலும் என் பங்குக்கு கொஞ்சம் நானும் துவைக்கிறேன். இல்லாவிட்டால் blogger இலக்கணம் மீறப்படுவிட்டதாகிவிடும். எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

1. க்ளைமாக்ஸ் ஐ நெருங்கும் சமயம், வில்லன் ஹீரோயினைத் துரத்திக் கொண்டிருப்பான். இருபது வயலின்கள் பின்னணியில் ஆர்ப்பரிக்க ஜீவமரணப் போராட்டத்தில் ஹீரோயின் ஓடிக்கொண்டிருப்பாள்.இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு கட்டத்தில் ஹீரோயின் வில்லனின் பின்னால் தூணுக்குப் பின்பாக மறைந்திருப்பாள். வில்லன் அவளைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பான். ஒரு கட்டை ஹீரோயின் கண்ணில் படும், அந்தக் கட்டையை எடுத்து சத்தம் போடாமல், பதுங்கி வந்து வில்லன் மண்டையில் அடித்தால் தப்பித்து விடலாம்,

Saturday, September 19, 2009

கேட்கப்படாத ஒரு புள்ள பூச்சியின் குரல் (நியாயம்).!

கல்லூரியில் நான்கு வருடங்களும் நான் விடுதியிலேயே தங்கிப் படித்தேன். கடைசி வருடம் மட்டும் நான் வெளியில் அறை எடுத்து தங்குகிறேன் என்று சொன்னதற்கு வீட்டில் மறுத்து விட்டார்கள். கெட்டுப் போய் விடுவேனாம்.நானெல்லாம் " நீ ஊதவே வேணாம் பெருசு" கேஸ் என்பது தெரியாதல்லவா?. வேறு வழியின்றி நான் விடுதியிலேயே தங்க வேண்டியதாயிற்று.

விடுதி எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களையும் சில கசப்பான அனுபவங்களையும் அளித்திருக்கிறது. பொதுவாக வகுப்பில் ஒரு மூலையில் உக்கார்ந்து "அண்ணே எனக்கு எது புடிக்கலியோ தூங்கிடுவேன்..!" என்று செந்தில் பாணியில் உறங்குபவன் நான்.நான்கு வருடங்களில் வெகு சில பேராசிரியர்கள் தவிர என் பெயர் யாருக்கும் தெரியாது. நாம யாரு வம்புக்கும் போறதில்ல யாரு தும்புக்கும் போறதில்ல.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம் என்று வடிவேலு பம்மும் விதமாக பம்மிக்கொண்டே வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பிரச்சனை இன்றி கழிந்தது.பரீட்சை நேரங்களில் கூட்டாக சேர்ந்து படிப்பது, அலாரம் வைத்து நள்ளிரவில் எழுந்து படிப்பது என்று இனிய விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன.மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது சனிதிசை எனக்கு.

Thursday, September 10, 2009

கவிதை எனப்படுவது யாதெனில்..!

கவிதை எனப்படுவது யாதெனில் வரிவரியா
யெழுதப் படுமுரை நடையாம் .
ரீமிக்ஸ் குறள் நன்றாக இருக்கிறதா? இல்லாவிட்டால் காறி துப்பவும் :-)...

கவிதை எழுவது ஒரு நுட்பமான விஷயம். எல்லோராலேயும் அது முடியாது. "ஒரு ஸ்வீட் ஸ்டாலே" ஒண்ணுக்குக் கீழ ஒண்ணு.. அதானப்பா கவித... "பணியாரம் சாப்பிடுகிறதே" அடடே... ஆச்சரியக்குறி ... என்பதல்ல கவிதை.

Friday, August 28, 2009

கால்சட்டை (Pants)

ஆங்கிலேய வருகைக்குப் பின் பிரபலமான பேன்ட் எனப்படும் கால்சட்டை நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகிப் போனது. சின்ன வயதிலிருந்து சொல்லப்போனால் 5 வயதிலிருந்தே பேன்ட் அணிவதை மிகவும் விரும்பியிருக்கிறேன்.அந்த வயதில் டவுசர் (எங்களூரில் நிக்கர் ) அணிந்த நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். "பார்ல .. பேண்டு போட்டுட்டு அப்பிடியே விளையாட வந்திருக்கான்.." என்று. தமிழ் "பேண்டுக்கு" வேறொரு அர்த்தம் இருப்பதை நினைவில் கொள்க.

என் பெரிய மாமா (அம்மாவின் முதல் அண்ணன்) ஒரு மெல்லிய பச்சை நிற சபாரி ஒன்று எனக்கு தந்தார். அது மிகவும் பிடித்தமையால் எப்போதும் அதையே அணிந்து என் ஆச்சி வீட்டுக்குப் போவேன். என் சித்திகள் என்னை பாச்சா உருண்டைக்காரன் என்று கிண்டல் அடிப்பார்கள். அவர்கள்
வீட்டுப் பக்கத்தில் ஒருவன் பேன்ட் சட்டை அணிந்து பாச்சா உருண்டை விற்பனை செய்துகொண்டிருப்பான்.

Wednesday, August 19, 2009

தமிழ்க்கிழவி-2

பணம் படைத்தவன் பற்றி அவ்வை சொன்னது ..! எந்தக்காலத்திற்கும் பொருந்தும் :-)

நல்வழிப் பாடல்

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்- இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.

கல்லானே ஆனாலும்- ஒருவன் படிக்காதவன் ஆனாலும்
கைப்பொருள்ஒன் றுண்டாயின்-அவனிடம் செல்வம் (பணம்) இருந்தால்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - எல்லாரும் அவனிடம் சென்று உறவாடுவார்கள்
இல்லானை இல்லாளும் வேண்டாள்-பணம் இல்லாதவனை மனைவி கூட மதிக்க மாட்டாள்
மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் -ஈன்றெடுத்த தாயும் ஒதுக்குவாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்- அவன் சொல்லுக்கு மதிப்புக் கிடையாது

Friday, August 7, 2009

தமிழ்க்கிழவி-1

சங்கப்புலவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் அவ்வையார்தான்.பல அரிய உண்மைகளை எளிய பாடல்களில் அளித்திருக்கிறார். இன்றளவும் அவரது பாடல்களை நான் சிலாகித்து வந்திருக்கிறேன்.மிக எளிய தமிழில் எளிதில் அர்த்தம் புரியும் வகையில் நிறைய பாடல்கள் தந்திருக்கிறார். (இரண்டு மூன்று முறை படித்துப்பார்த்தால் எளிதில் பாடலின் சாராம்சம் புரிந்து விடும்) . இனி அவ்வப்போது அவர் பாடல்களை இங்கு விளக்கத்தோடு காணலாம்.

நல்வழிப் பாடல்

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் : வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

புரிகிறதா..? இரண்டு மூன்று முறை திரும்ப வாசித்துப் பாருங்கள்.
விளக்கம் பார்ப்போம்.

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் - கடினத்தன்மை கொண்டவை
நெகிழ்வான மிருதுவானவற்றை வெல்ல முடியாதாம்.
வேழத்தில் - யானையில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - யானையின் உடம்பில் பாயும் ஈட்டியானது பஞ்சுமூட்டையைத் துளைக்க முடியாது
நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை - நெடிய
இரும்பினால் ஆன கடப்பாரையால் மலையைப் பிளக்க முடியாது.
பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.- அதே
மலையில் பசுமையான மரத்தின் வேர்கள் சுலபமாக உள்ளே சென்றிருக்கும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் !

சிறுவயதில் ஒருநாள் அப்பா என்னிடம் கேட்டார் " வளர்ந்து என்ன ஆகப்போற மக்களே? நான் கண்டக்டர் ஆவேன் டாடி ..! "அப்பா ஒரு டாக்டரையோ இஞ்சினியரையோ எதிர்பார்த்திருந்திருப்பார். நான் சொதப்பிவிட்டேன் . அப்பா முகம் மெல்ல மாறியது. குரல் சற்று கடுமையாக ஏன் என்றார். ஏன்னா கண்டக்டர் தான் கை நிறைய பை நிறைய ரூவா வச்சிருப்பார் டாடி ..! அடுத்த அரைமணி நேரம் நீதி போதனை வகுப்பு நடந்தது.

இன்றுவரை இந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு பெரிய குறிக்கோள், இலக்கு எல்லாம் கிடையாது. "எது நடக்கிறதோ அதுவே அது" என்றே வாழ்க்கை ஓடுகிறது இன்றுவரை. அன்று அப்பாவின் அறிவுரைக்குப்பின் மருத்துவம் படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

Monday, August 3, 2009

என் பதிவுகள்

இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும்போது அதிக இடைவெளி இன்றி தொடர்ந்து எழுத முடியுமா என்று ஒரு மலைப்பு இருந்தது.வாரம் இரண்டு பதிவுகள் எழுதலாம் என்று எண்ணம். அதுவே பெரிய விஷயம். இந்தவாரம் முதல் வேலைப்பளு சற்று அதிகமாகிறது. எனினும் விடாது தொடர முயல்கிறேன்.

பதிவுகள் பெரும்பாலும் வீட்டில் (பாச்சுலர் என்பதால் ரூமில்.. திருமணமாகாத இளைஞர்கள் தங்குவது எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் அது ரூம் தான்) தாளில் முதல் பிரதி எழுதி , தேவைதான இடங்களில் திருத்தி, பின்பு இரவில் தட்டச்சு செய்து (google indic transliteration உபயோகிக்கிறேன். blogger இல் தமிழில் எழுத்துருக்கள் கொண்டுவரமுடியும் என்றாலும் google indic transliteration இல் சௌகர்யமாக உணர்கிறேன். ) draft இல் சேமித்து பின்பு சமயம் கிடைக்கும்போது பதிவேற்றம் செய்கிறேன்.

நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆவல் தான்.ஆனால் முழுவதும் என் எண்ண ஓட்டத்தில் தோன்றுபவையாக இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. வெறுமனே பல தகவல்கள் அடங்கிய வலைத்தளங்களின் தொடர்புக்கண்ணிகள் (Links) தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவேளை இந்த வலைப்பூ மிக வறண்ட நிலைக்கு செல்லுமானால் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தலாம். அப்படி ஒரு நிலை வராது என்று நம்புவோம்..!

கடந்த இரண்டு பதிவுகளில் நான் படித்த எஸ்.எம்.ஆர்.வி பள்ளியில் நடந்த சில சம்பவங்கள் பற்றி எழுதியிருந்தேன்.சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவையே. பதிவின் நாயகனும் நிஜமே. சற்று சுவாரசியப்படுத்த சிறிது நகைச்சுவை கலக்க முயற்சித்திருக்கிறேன். படிப்பவர்களுக்கு வெடிச்சிரிப்பு வராவிடினும் இதழோரம் ஒரு புன்னகை பூத்திருந்தால் எனக்கு வெற்றியே.

கடந்த இரண்டு பதிவுகளைப் படித்த நண்பர்கள் " டேய் நீதானே அந்த முருகேஷ்..? பேரை மாத்தி ஆளை மாத்தி எழுதுறியா? என்கிறார்கள்.அப்படியெல்லாம் இல்லை.

பொதுவாக புதிதாக எழுதுபவர்களுக்கென்று ஒரு பொதுவான எழுத்து நடை இருக்கும். A common pattern. அனேகமாக நானும் அந்த நடையில் தான் எழுதுவதாக எண்ணுகிறேன். இன்னும் எழுத எழுத எனக்கென்று ஒரு பாணி உருவாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்... !

Wednesday, July 29, 2009

தேங்காயும் புட் பாலும்...!

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.


இது கவி காளமேகம் எழுதிய ஒரு சிலேடை . இதை இரட்டுற மொழிதல் என்றும் சொல்வார்கள். இரண்டு பொருள் வரும்படி ஒரே வார்த்தைகளால் பாடுவது சிலேடை. இதன் அர்த்தம் பார்ப்போம் .
நஞ்சிருக்கும் - பாம்பு கொடிய விஷமுடையது
வாழைப்பழம் நைந்து (கனிந்து ) இருக்கும்.
தோலுரிக்கும் - பாம்பு அடிக்கடி தோல் உரிக்கும்.
வாழைப்பழம் தோலுரித்து உண்ணப்பட வேண்டியது.
நாதர்முடி மேலிருக்கும்- பாம்பு சிவபெருமான் தலையில் இருக்கும்.
வாழைப்பழம் பஞ்சாமிர்தமாக அபிஷேகம்
செய்யப்பட்டு லிங்கத்தின் மீது காணப்படும்.
வெஞ்சினத்தில் பல்
பட்டால் மீளாது - பாம்பு கொத்தினால் நம் உயிர் மீளாது.
கூட்டு பொரியலாக செய்யப்படும் வாழைக்காய்
மீது நம் பல் பட்டால் அது மிஞ்சாது.

இவ்வாறு தேன் பாயும் சோலைகள் உள்ள திருமலைராயன் மலையில் பாம்பும் வாழைப்பழமும் ஒன்றாகும். என்பதே இதன் அர்த்தம்.

http://pm.tamil.net/pub/pm0220/kalamega.pdf


என்னடா ஏதோ foot ball தேங்காய் என்று தலைப்பிட்டுவிட்டு செய்யுளுக்கு விளக்கம் தருகிறானே என்று பார்க்கிறீர்களா? தொடர்பு உண்டு.

Wednesday, July 22, 2009

கேள்வியும் நானே...! பதிலும் நானே..!

நான் எட்டாம் வகுப்பிலிருந்து நாகர்கோயிலில் படிப்பைத் தொடர்ந்தேன். அதற்கு முன் 1-4 வரை கீரிப்பாறை என்னும் கிராமம் என்று கூட சொல்ல முடியாத ஒரு காட்டுப்பகுதியில். ( அப்பாவுக்கு வனத்துறையில் வேலை). 4-7 வரை அருப்புக்கோட்டையில், அப்பாவுக்கு பணி இடமாற்றம் காரணமாக.)

வகுப்பில் நான் நான்காவது பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டேன். அதில் குப்புசாமி,பாலு,பாலசுப்ரமணி, ஸ்ரீனிவாசன் என்று ஏற்கனவே நான்கு பேர். சீக்கிரத்தில் சகஜமாகி விட்டோம்.

எங்கள் ஜோதியில் முருகேஷ் என்பவன் ஐக்கியமானான். அவன் ஒரு interesting personality. அதிதீவிர சினிமா நடிகைகள் ரசிகன். இன்ன நடிகைதான் என்றில்லாமல் டீன் ஏஜ் ஹீரோயினில் இருந்து நடுத்தர வயது கடந்த ஆன்ட்டி நடிகைவரை அவனுக்குப் பிடிக்கும்.

தன்னுடைய அபிமானத்தை வெளிக்காட்ட , தினத்தந்தி,தினகரன் பேப்பர்களில் வரும் சினிமா விளம்பரங்களை உள்ளடக்கிய பக்கங்களால் புத்தகங்களுக்கும், நோட்டுக்களுக்கும் அட்டை போட்டு வருவான். பாடம் நடக்கும் வேளைகளில் போட்டோ பார்த்து நேரம் போக்குவோம்.

Friday, July 17, 2009

திரைப்படங்களில் கதாநாயகி அறிமுகம் - ஒரு பார்வை ..!

தமிழ் சினிமாவில் hero worship தான் அதிகம். செம பில்டப்புகளோடு அந்தரத்தில் பறந்தபடியே வந்து கயிறு கட்டி டான்ஸ் ஆடும் காட்சிகள், இந்த இளம் தலைமுறை நடிகர்களிடையேயும் , நடுத்தர வயது கடந்த சரத் குமார் , விக்ரம் முதல் நஷ்டக்கணக்கு காட்ட படமெடுக்கும் தொழிலதிபர் கம் தயாரிப்பாளர் கம், டைரக்டர் கம், நடிகர்கள் J.K.ரித்தீஷ், S.Ve.சேகர் மகன் அஸ்வின் சேகர் வரை ஒரு தீராத மோகத்தையும் நமக்கு தலைவலியையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் சில ரசிக்கும்படியான hero introduction பாடல்களும் உண்டு. கற்க கற்க -வேட்டையாடு விளையாடு. நச்சென்ற பாடல் மற்றும் காட்சிகள்.
இதுபோன்ற பாடல் காட்சிகள் super star தவிர யாருக்கும் பொருந்துவதில்லை என்பது என் எண்ணம்.
ஆச்சரியப்படும் விதமாக ஹீரோயின்களுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சமாவது வாய்ப்பும் கொடுக்கிறார்கள். She is a fantacy - காக்க காக்க ,சுற்றும் பூமி சுற்றும் - டும் டும் டும் , இப்படி கொஞ்சம் அடுக்கலாம், ஜோதிகா நிறைய ஆடியிருக்கிறார்.

இப்போது நாம் பார்க்கப்போகும் நடிகை 80 களில் மிக டீசென்ட் ஆக நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர். இப்போதும் அழகான அம்மா, ஆன்ட்டி நடிகை. நதியா. தன் பெயரில் hair style (நதியா கொண்டை என்று ஒன்று உண்டு) , புடவைகள் ,இன்ன பிற இதர பொருட்கள் என்று மிக famous ஆக இருந்தவர்.

பாடு நிலாவே பட ஷூட்டிங் சமயத்தில் நதியா எங்கள் வீட்டில் வைத்து மேக்கப் போட்டுக்கொண்டதாக அம்மா சொன்னார். எனக்கு அப்போது 2 அல்லது 3 வயது இருந்திருக்கும். ஒரு சீப்பைக் கூட அந்த மேக்கப் குழுவினர் விட்டுச்சென்று விட்டனர்.ரொம்ப வருடங்கள் அந்த சீப்பு "நதியா சீப்பு" என்ற பெயரில் எங்கள் வீட்டில் இருத்து. 1999 இல் வீடு மாறி சொந்தவீட்டுக்கு வரும்போது தூக்கி எறிந்துவிட்டோம்.

இவர் படங்களில் அறிமுகம் ஆகும் காட்சி மூன்றே விதங்களாகத்தான் இருக்கும். நதியா காலையில் எழுந்து jogging போவார். ரம்யமான பாதையில் செல்வார். ஒரு இயற்கை காட்சியை பார்ப்பார். நதியோரம் செல்வார். நீரில் துள்ளும் மீன்களைப் பார்ப்பார். சமயம் பார்த்து குயில் வேறு கூவித் தொலையும். அப்புறமென்ன பாட்டுதான். பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க ..

சரி இரண்டாவது வகையைப் பார்ப்போம். நதியா காரில் ஒரு மலைப்பாதையில் செல்வார். சமவெளியில் ஓட்டவே மாட்டார். மலைப்பாதை ஓரம் கண்டிப்பாக முன்னர் பார்த்த நதி ஓடியே தீரும். இப்படியே அழகை ரசித்தவாறே போகும் வண்டி திடீரென்று நின்றுவிடும். காரணம்..? பெட்ரோலோ ப்ரேக்கோ இன்ஜினோ இல்லை நண்பர்களே..!
radiator இல் தண்ணீர் காலியாகி நின்று விடும். அப்புறம் நதியா தண்ணீர் கேன் ஐ எடுத்துக்கொண்டு நீர் பிடிக்க அந்த நதிக்கு வருவார், அதே ரம்யமான சூழ்நிலை, மீன்கள்,தெளிவான நீர், தப்பாது வரும் குயிலோசை.. பாட்டு ரிபீட்டு....

இப்போது மூன்றாவது வகை .. a combination of either one of the above said situations along with the hero . Jogging செய்து கொண்டோ, அல்லது தண்ணீர் பிடிக்கவோ நதியா வருவாரா.. அப்போது இந்தமுறை குயிலின் பாட்டுக்கு பதில் ஹீரோ பாடுவார். "மலையோரம் வீசும் காற்று..!" இந்த பாடலில் மயங்கி ஹீரோவுக்கு தெரியாமல் நதியா பின்தொடர்ந்து செல்வார்.அப்பிடியே sympathy creat ஆகி லவ்ஸ் டெவலப் ஆயிடும்.இதைத்தான் அந்த அம்மிணி காலம்காலமாக செய்து கொண்டிருந்தார்.
இவ்வாறு ஹீரோக்களைப் போலவே நதியா தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொண்டது மிகுந்த ஆச்சரியமான விஷயம்தானே? 


Thursday, July 16, 2009

நாயைக் கடிக்கும் பூனைக்குட்டிகள்...!

இது பாண்டிச்சேரி நேரு வீதியின் அருகிலுள்ள ஒரு வீதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் . கொழுக்மொழுக்கென்று அழகழகான நாய்க்குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன. பாரதி பாடியதைப்போல் சாந்து நிறமொன்று, சாம்பல் நிறமொன்று,பாலின் நிறமொன்று , பாம்பின் நிறமொன்று என வகைக்கொன்றாக குட்டிகள். Bachelor வாழ்கையில் வளர்க்க முடியாது என்பதால் அந்த கருப்பு நிற குட்டியை மனமின்றி அங்கேயே விட்டு வந்து விட்டேன் .

சரி இந்த புகைப்படத்தைப் பார்த்தால் நமக்கு முதலில் என்ன தோன்றும் ?
தாய்ப் பாசம்...? ஒரு நாய்க்குட்டியை எடுத்துப் போக தோன்றும் ..! அதிக பட்சம் அந்த தாய்க்கு பிஸ்கட் வாங்கிப் போட தோன்றலாம்..!

போன வாரம் நான் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது என் பக்கத்து வீடு குட்டி பையன் ஹரிஷிடம் காண்பித்து இது என்ன என்று கேட்டேன். அவன் அதை சற்று நேரம் பார்த்து விட்டு சொன்ன பதில் மிக விநோதமானது. பூனைக் குட்டிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாயைக் கடிக்கின்றனவாம்.
பொதுவாக என் வீட்டைச் சுற்றி பூனைகள் அதிகம். என் அம்மாவிடம் நட்பு பாராட்டியும் என் தம்பியிடம் பயப்படுவது போன்று நடித்தும் , நான் எப்போதாவது வீட்டுக்கு போனால் " யார்ரா இவன் புதுசா இருக்கான் ..?" என்று வினோதமாக ஒரு look விட்டு விட்டு தன் வேலையைத் தொடர்வதுவுமாக ஒரு 10 பூனைகள் வீட்டைச் சுற்றி வளைய வந்துகொண்டிருக்கும்.


நாய்கள் எங்கள் வீட்டருகில் ரொம்பவும் குறைவே. குறிப்பாக குட்டி நாய்கள்.. மாற்றாக பூனைகளோ வருடா வருடம் மும்மடங்காகப் பெருகி வாழ்வன. சுனாமி வந்த சமயத்தில் மீன் கிடைக்காமல் நாங்கள் சைவ சாப்பாடு சாப்பிட்டபோது பூனைகள் மீன் இன்றி மிகவும் இளைத்து காணப்பட்டன. அப்போது நிறைய பூனைகள் புலம் பெயர்ந்து விட்டன. இருந்தாலும்ஒரு குட்டி பிறந்து நான்கைந்து மாதங்களில் அதுவும் குட்டி போட்டுவிடுகிறது.இதன் காரணமாக பூனைகளையே அதிகம் பார்த்து வளர்ந்த ஹரிஷ் சொன்ன பதிலைப் பார்த்தீர்களா.?

மூன்றாம் கோணம்..பெயர்க்காரணம் ...

மூன்றாம் கோணம் .. ஆங்கிலத்தில் "Third angle" .
எந்த ஒரு சம்பவம் அல்லது விஷயத்தையும் ஒவ்வொரு மனிதனும் இரண்டு விதமாக பார்க்கிறான். சுலபமாக சொல்வதென்றால் 12 B படத்தில் வருவது போல ஹீரோ பஸ்ஸில் ஏறினால் , ஏறாவிட்டால் -விளைவுகள். ஆனால் இரண்டும் தாண்டி மூன்றாவதாகவும் ஒரு விளைவு இருக்க கூடும். அது போன்ற ஒரு கோணத்திலிருந்து சம்பவங்கள் பற்றி எழுதலாம் என்ற எண்ணம். இது தவிர பொதுவான தகவல்கள் , நிகழ்வுகள் பற்றியும் எழுதவும் உத்தேசம்.