Sunday, May 30, 2010

சிம்ம சொப்பனம் - பாகம் II

சில பதிவுகளுக்கு முன்பு நமது சிம்ம சொப்பனமாக விளங்கிய தமிழ் வாத்தியாரைப் பற்றி கூறியிருந்தேன். அவருடனான மற்றுமொரு
 எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறுகிறேன்.

நாகராஜன் சார் பாடம் நடத்தும் வேளைகள் தவிர பிற நேரங்களில் முகத்தில் புன்னகை தவழ காணப்படுவார்.அந்த மாதிரியான ஒரு வேளையிலேயே அவருக்கு கோபம் வரும்படியான ஒரு கலகத்தை விளைவித்துவிட்டான் நமது நண்பன் சண்முகம். நாங்களெல்லாம் மூன்று நாட்கள் விடுமுறை கழிந்து ஒரு திங்கட்கிழமையில் பள்ளிக்கு வந்தோம். வகுப்பில் பெஞ்சுகள் மேஜைகள் கலைந்து கிடந்தன.முந்தைய நாட்களில் ஏதோ மீட்டிங் நடந்திருக்க வேண்டும்.

வினை, ஒரு அழகிய சிறிய இனிப்புப் பெட்டியில் (sweet box) மூடிக் கிடந்தது ஏனோ நண்பன் சண்முகம் கண்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது .அவன் அந்த பெட்டியைத் திறந்து பார்த்தான்.உள்ளே 99 சதவிகிதம் வெற்றிடமும் ஒரே ஒரு எறும்பு மொய்த்த கிரீம் பிஸ்கட்டும் இருந்தது.என்னவோ தெரியவில்லை மிகுந்த குதூகலமாகி விட்டான். கீழே கிடந்த அந்த பெட்டியை குப்பைத் தொட்டியில் போட்டிருந்தால் இன்று நான் இந்தப் பதிவை எழுத வேண்டிய அவசியமில்லாமல் போயிருக்கும் ஆனால் வலிய அந்த விதி என் பக்கம் இருந்திருக்கின்றது.நேராக அந்தப் பெட்டியைக் கொண்டு பொய் சாரின் டேபிளிலேயே வைத்து விட்டு வந்து ஜம்மென்று உட்கார்ந்தான்.

சண்முகம் கொஞ்சம் பார்ப்பதற்கு K.S.ரவிக்குமார் மாதிரி இருப்பான். பேசினால் கூட கொஞ்சம் முத்து படத்தில் ரவி குமார் மலையாளம் பேசுவாரே அது மாதிரி இருக்கும். சரி சண்முகம் அந்த பெட்டியை சாரின் டேபிள் மேல் வைத்தான், யாருமே தடுக்கவில்லையா என ஒரு கேள்வி எழலாம்.. ஆனால் எங்களுக்கோ அன்றைய தினத்துக்கு ஒரு பொழுதுபோக்கின் உத்திரவாதம் தென்பட்டதால் ஒன்றும் சொல்லவில்லை.சும்மா இருந்த சிறுத்தையை சுரண்டிப்பார்த்தான் சண்முகம்.
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நம்ம நிகழ்ச்சியின் அடுத்த போட்டியாளர் நம்ம சாமித்தோப்பு சண்முகம் இப்போது மேடைக்கு வருகிறார் என்று சாந்த்ரா அழைக்காமலேயே சண்முகத்தின் performance அரங்கேறியது.முதலில் சார் வந்தவுடன் அந்த இனிப்பு பெட்டியைப் பார்த்தார். புருவத்தை லேசாகச் சுருக்கியவாறே "இது யாருப்போ இங்கன வச்சா? " என்றார். சண்முகத்திடம் ஒரு பழக்கம் உண்டு பேசும் பொழுது கைகள் சட்டை காலர் பட்டன்களைப் போடுவதுபோல ஒன்று சேர்த்துப் பிடிப்பான். அவ்வாறே சட்டை காலர்களை சேர்த்துப் பிடித்து எழுந்து "ஹி ஹி ஹி நான்தான் சார்" என்றான்.அப்படி கேனத்தனமா சிரிச்சது மட்டுமில்லாம எங்களையெல்லாம் பார்த்து "எப்படி சார இம்ப்ரெஸ் பண்ணினேன் பாத்தீங்களா என்கிற ரீதியில் ஒரு லுக் வேறு விட்டான்.

சார் முதலில் பையனுக்கு எதோ பிறந்தநாள் போல இருக்கு என்று எண்ணி விட்டுவிட்டார்.பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை.பாடம் நடத்த ஆரம்பித்தார். எங்கள் மனமோ பெட்டியை முட்டி மோதியது.நாங்கள் ஆவலுடன் எதர்பார்த்த அந்தக் கணமும் வந்தது. ஏனோ சார் அன்று ஸ்வீட் சாப்பிடும் மூடில் பத்து நிமிடம் முன்னதாகவே பாடத்தை முடித்துவிட்டு அவர் டேபிளில் சென்று அமர்ந்தார். மெல்ல பெட்டியைத் திறந்தார்.

555 சிகரட் பாக்கட்டில் துண்டு பீடியப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படிப் போனது அவர்முகம். 'இத எவம்ல வச்சது ?" என்ற கர்ஜனை ஒலித்தது. பெட்டி பறந்தது.சண்முகம் பதட்டத்தில் தொந்தி துடிதுடிக்க எழுந்தான் .நான்தான் சார் என்று கம்மிய குரலில் பதிலளித்தான். அப்போதும் காலரைக் கைவிடவில்லை. அவன் கை விடவில்லை.சும்மாவே கோவப்படும் ஒருத்தருக்கு காரணம் கிடைத்தால் விடுவாரா? "சுத்த மாக்கப் பயலா இருக்கியேல?ஒன்ன எல்லாம் எவம்ல ஸ்கூலுக்குள்ள விட்டது ? ராஸ்கல்.. எவ்ளவு தைரியம் இருந்தா குப்பதொட்டில போடவேண்டியத என் டேபிள் ல கொண்டு வச்சிருப்ப ? "சார் சாரி சார்"

எந்த ஊர்ல ஒனக்கு? சாமித்தோப்பு சார்.. சாமித்தோப்புல இப்படித்தாம் சொல்லி குடுத்தானால? மாக்கான்..எந்த நேரத்துலதான் நமக்குன்னு வந்து சேருதானுவோ? என்று புலம்பினார்.

நீ வீட்டுக்கு ஒரே புள்ளையோ ? இல்ல சார் அக்கா உண்டு. அதான் இப்படி இருக்க.. இப்போ ஒனக்கு ஒரு தங்கச்சி இருக்கானு வச்சிக்குவோம். சின்ன புள்ள.ஒங்க அப்பன் ஹால்ல உக்காந்து சாப்பிட்டுட்டிருக்கான். அப்போ உன் தங்கச்சி வெளுக்கி போயிருதா .. அப்போ நீ என்னல பண்ணுவ ?அப்பா இந்தாங்க தக்காளி சட்னினு ஒங்க அப்பன் தட்டுல போய் வைப்பியால ? சொல்லு ? நம்மாள் மண்டையை ஆட்டியவாறே "இல்ல சார்" என்றான். அப்போ இப்போ மட்டும் என்ன காரியம் நீ பண்ணியிருக்க? என்று அக்கினி வீச்சினைத் தொடர்ந்தார்.

ஒட்டு மொத்த வகுப்பும் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து புரண்டு சிரிக்காத குறையாக உட்கார்ந்திருந்தோம்.

உவமையணி,எடுத்துக்காட்டு உவமையணி,தற்குறிப்பேற்ற அணி என்று பலதும் கற்றுத்தந்த வாத்தியார் அன்று கூறியது என்ன அணிஎன்று யோசிக்க முடியவில்லை . தட்டு பெட்டியானால் தக்காளிச்சட்னி என்னவாக இருக்குமென்று நினைத்தேன்.சிரிப்பாக வந்தது.

அன்றிலிருந்து நம்மாள் இருந்த இடம் தெரியாமலேயே வகுப்பை ஓட்டினான்.கடைசியாக ஒன்பதாம் வகுப்பு முடியும் நாளில் சார் எங்களிடம் உருக்கமாகப் பேசினார். "நான் வந்து உங்க மேல எல்லாம் கடுமையா கோபப் பட்டிருக்கேன். ஆனா அதெல்லாம் அந்த நேரத்துக்கப்புறம் நான் மறந்திருவேன். உங்களையும் உங்க வீட்டு ஆட்களையும் நான் ஏசியிருக்கேன். எல்லாத்தையும் நீங்க மறந்திருங்க. என்னையே கட்டுப்படுத்த முடியாம வந்து விழக் கூடிய வார்த்தைகள் அது",என்று சமாதானம் பேசினார்.

பலவித பழிவாங்கும் படலங்களை நினைத்து வைத்திருந்த குமரேசன், ராஜா ரவி ஷங்கர் போன்றோர் தங்கள் எண்ணங்களைக் கைவிட்டு மகாத்மாவாக மிளிர்ந்தனர்.

அப்புறம் கல்லூரி சென்ற நாட்களில் நானும் பாலுவும் ஒரு விடுமுறை தினத்தில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரி வழி செல்லும்போது சாரைப் பார்த்தோம்.மிகுந்த பிரியத்துடன் பேசினார். ஒருவேளை இப்போதெல்லாம் கோபப்படுவதை நிறுத்தியிருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம். என்றாலும் அவரை நினைக்கும் போதெல்லாம் தக்காளிச் சட்னி உவமை நினைவில் வந்து சிரிப்பை வரவழைத்து விடுகிறது.