Monday, January 10, 2011

BBC காணொளித் தொகுப்பு-விலங்குகளின் விந்தை உலகம்-பாகம் 2

மது அருந்தும் குரங்குகள் :
மது அருந்துவது ஏதோ மனித இனம் மட்டும் செய்யும் செயல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்பதன் ஆதாரமே கீழ்வரும் காணொளி. கரீபியன் தீவுகளில் குரங்குகள் கடற்கரையோர மது விடுதிகளில் புகுந்து மதுபானங்களைத் திருடிக் குடிப்பது சாதாரண நிகழ்வு. மனிதன் மதுவை விரும்பும் ஜீன்களுக்கான காரணி முன்னோர்களிடமிருந்து  மரபணு வழியாகத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பது விஞ்ஞானிகள் வாதம். 
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை மது பிடிப்பதைப் போல குரங்குகளும் தனக்கென தனியான ருசியினை  விரும்புகின்றனவாம்.
ஆச்சரியப் படத்தக்க வகையில் வெகு சில குரங்குகளே மதுவைத் தவிர்க்கின்றன, அந்த சதவிகிதம் மது அருந்தாத மனிதர்களின் சதவிகிதத்திற்கு நிகராக இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
குரங்குகள் போதையில் செய்யும் குறும்பும் சேட்டைகளும் அட்டகாசம் ;-)




அகவொலி (Infrasonic Sound) ஆல் ஈர்க்கப்படும் முதலைகளும் திமிங்கலங்களும் :

மனிதன் செவிகளுக்கெட்டாத நுண்ணிய ஒலிகளை மிருகங்கள் கேட்பதுண்டு. மனிதன் வேட்டை மிருகமாக இருந்த காலத்தில் அவனுக்கும் அத்தகைய புலன் கூர்மை இருந்தது. பரிணாமம் வளர வளர தனக்கான ஆயுதங்களை அவன் செய்யத்தொடங்கியதும் கூரிய புலன் உணர்விற்கான அவசியம் குறையலாயிற்று.காலப்போக்கில் அவன் அத்திறனை இழந்துவிட்டிருந்தான்.
அமெரிக்காவின் ஒரு மாகாணமாகிய ப்ளோரிடாவில் வசிக்கும்  முதலைகள் கார்களின் உறுமலில் உள்ள அகவொலிகளைக் கேட்டு தன்னுடைய இணையென எண்ணி ஏமாறுகின்றனவாம். கார் மட்டுமல்ல , படகுகள் ஏற்படுத்தும் சத்தமும் , விண்ணில்  ஏவப்படும் ராக்கெட்டுகள் எழுப்பும் நுண்ணொலிகளும் கூட அவற்றைக் குழப்புகின்றனவாம். இணைதான் அருகில் உள்ளது என்று எண்ணி தன் உடம்பை அதிரச்செய்து   தண்ணீர் திவலைகளை எழுப்பி தன் இருப்பிடத்தை அறியச்செய்யுமாம்
அதுபோலவே பாடும் திமிங்கலங்களும் ஒன்றையொன்று தொடர்புகொள்ள பிரத்யேக அகவொலிகளை எழுப்பும். கடினமான சொற்றொடர்களை நாம் நினைவில் கொள்ள ராகமாக படிப்பதுபோல அவைகளும் ராகமாக ஒலி எழுப்புமாம். ஆனால் மனிதன் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல்களும் இது போன்ற Infrasonic Sound  மூலமாகவே வேறு கப்பல்களுடன் தொடர்பு கொள்வதால் திமிங்கலங்களின் சமிக்ஞை இடையூறுக்குள்ளாகின்றனவாம்.




எறும்புகளின் விவசாயம்

விவசாயம் செய்வது மனிதனின் தொழில் மட்டும் இல்லை. சிலவகையான எறும்புகளும் தனக்கென்ற உணவினை விளைவித்துக் கொள்கின்றன.
ஒருவகையான பூச்சிகள் தேன்போன்ற திரவம் ஒன்றை சுரக்கின்றன. எறும்புகள் அவற்றை மொத்தமாகப் பிடித்து அந்த பூச்சி விரும்பி உண்ணும் தாவரத்தின் மேல் கொண்டு சேர்க்கின்றன. பூச்சிகள் தாவரத்தின்  சத்தினை உறிஞ்சி வாழ்கின்றன, பதிலுக்கு எறும்புகள் விரும்பும் தேன்போன்ற திரவத்தை (Nectar) எறும்புகளுக்கு அளிக்கின்றன. எறும்புகள் செய்யவேண்டியது தன்னுடைய கொம்புகளினால் (Antennae) அந்த பூச்சிகளை உரசித்  தூண்டுவது மட்டுமே. பூச்சிகளுக்கும் நன்மை உண்டு , பிற பூச்சிகளிடமிருந்து எறும்புகள் அந்த தேன் தரும் பூச்சிகளைக் காக்கின்றன.
எறும்புகளின் விவசாயம் ஆச்சரியமூட்டுகின்றது.   




எண்ணற்ற விந்தைகள் கொண்ட விலங்குகளின் உலகத்தைப் பற்றி மனிதன் அறிந்தது மிக மிகக் குறைவுதான்.நவீன தொழில்நுட்பத்துடன் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை ஆவணப்படுத்தி வருகின்றோம்.
மேலும் சில சுவாரஸ்யமான காணொளிகளை வரும் பதிவுகளில் காண்போம்.

Saturday, January 8, 2011

தமிழன் : அன்றும், இன்றும்..!


தமிழன் அன்று :

உண்டால் அம்ம, இவ்வுலகம் – இந்திரர்;
அமிழ்தம் இயைவது ஆயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின்; உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
அதாவது தேவலோகத்து இந்திரர் அமிர்தமே தந்தாலும் தமிழன் தனியாக சாப்பிடாமல் எல்லாருடனும் பகிர்ந்து உண்பானாம்.

புகழ் கிடைக்கிறதென்றால் தமிழன் உயிரைக் கூட கொடுப்பானாம், பழி நேரும் நிலை வந்தால் உலகையே கொடுத்தாலும் அச்செயலைச் செய்ய மாட்டானாம்.

அயர்வில்லாது உழைப்பவன், தமக்கென வாழாமல் பிற நலனுக்காகவும் வாழ்பவன் இவன் போன்றவர்கள் வாழ்வதாலேயே இன்னும் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கூறியிருக்கிறார். 

இந்த புறநானூற்றுப் பாடல் அந்நாளைய தமிழனின் இயல்புகளை குறைந்த சொற்களில் நிறைவாய் விளக்குகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளில் நம் இனம் எப்படி எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.
  
தமிழன் இன்று :

1.அன்டார்டிகாவுக்கே  போனாலும் அரிசி சோறு செய்து சாப்பிடுவது , தன்மானமா சாப்பாடா என்று கேட்டால் சாப்பாட்டில் சரணடைவது.

2.தன் பிள்ளைகள் தமிழை எவ்வளவு தப்பாக எழுதினாலும் வாசித்தாலும்  கவலைப்படாமல் இருப்பது , மாறாக ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையோ தவறோ இருந்தால் டியூஷன் வைத்தாவது ஆங்கிலம் வளர்ப்பது.

3.தமிழெல்லாம் எனக்கு வாசிக்கிறதோ எழுதுறதோ ரொம்ப கஷ்டம் என்று கூறுவது . அதனினும் கொடுமை அவ்வாறு கூறுவதைப் பெருமையாக நினைப்பது.

4.தப்பித்தவறி யாராவது கொஞ்சம் தமிழ் ஆர்வத்துடன் இருந்தால் "வந்துட்டாருய்யா புலவர்" என்று அவர்களைப் பழிப்பது.

5.அயல் மொழி பேசும் ஊரில் தமிழனைக் கண்டால் ஆங்கிலத்திலேயே பேசுவது(அலட்டுவது). பெரும்பாலும் மூஞ்சியை சுளித்துக் கொண்டே பிற தமிழனைத் தவிர்ப்பது.
.
6.கோபப்படவேண்டிய  முக்கியமான  விஷயங்களுக்கு மொண்ணையாக இருப்பது , உப்புப்பெறாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி கோவப்படுவது.
(ஊழல்கள், ஈழம், மு செயல்பாடுகள் போன்றவற்றில் அமைதியாக இருந்துவிட்டு, கமலஹாசன் படம் வரும்போது பிரச்சனை செய்வது)

7.இலவசங்களுக்காக பல்லிளித்து நிற்பது , மேலும் இந்த மக்களை சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை ஆட்சியாளர்கள் மனதில் ஆணித்தரமாக பதிய வைத்தது.

8.பணம் கொடுத்தால்தான் இனிமேல் ஒட்டு என்னும் அளவிற்கு இனமானத் தமிழன் ஈனமான          தமிழனாக ஆனது.

தமிழனின் மிகப்பெரும் சரிவு  அவன் எதையும் எதனுடனும் சமரசம் செய்து கொள்வது.
சுலபத்தில் எதையும் மறந்து விடுவது.

அன்றைய தமிழனின் குணநலன்களையும் இன்றைய தமிழனின் குணநலன்களையும் பார்த்தால் எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்றுதான் கூறத்தோன்றுகிறது.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

என்பது புறநானூற்றுப் பாடல் பொன்முடியார் எழுதியது.

இந்த இரண்டாயிரம் வருடங்களில் நாம் சீரழிந்ததற்குக் காரணம் நன்னடை நல்காத நமது வேந்தர்கள் என்றே நினைக்கிறேன்.
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி..!