Monday, November 7, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5

"Design" என்பது வரைபடம் "drawing" இல்லாமல் முழுமையாகாது. ஏனெனில் டிராயிங் தான் இயந்திரப் பொறியாளர்களின் மொழி (Engineers language). [சில நேரங்களில் பதிவுகளில் மேஜர் சுந்தர்ராஜன் போல தமிழிலும் ஆங்கிலத்திலும் சிலவிஷயங்களைக் கூற வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. பொறுத்துக் கொள்ளவும்].ஒரு எஞ்சினியரின் மனதில் இருப்பதை, இயந்திரத்தில் அப்பொருளை உருவாக்கும் தொழிலாளிக்கு கொண்டு சேர்ப்பதே "drawing". ஒரு இசையமைப்பாளர் தான் மனதில் தோன்றும் இசையை குறிப்புகள் மூலம் இசைக்கருவியை வாசிப்பவருக்கு தெரியப்படுத்துவது போலத்தான் இதுவும். ஒரு "Technical drawing " எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.


இதில் அந்த பொருளைத் தயாரிக்க என்னென்ன அளவுகள் தேவை என்பன போன்ற விஷயங்கள் டிராயிங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். வலது மேல் மூலையில் காணப்படும் தோற்றம் " Pictorial View' எனப்படும். பழையகால கையால் வரையப்பட்ட படங்களில் இது சாத்தியமில்லை. தற்போதுள்ள 3D modelling software கள், Drawing களின் சிக்கல்களை (Complexity) வெகுவாகக் குறைத்துள்ளன.

மேலும் "Drawing" இல் இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. ஒன்று பெரிய இரும்புத் தகடுகளை வெட்டி ஒட்டி செய்யப்படும் "Fabrication" சம்பந்தமான டிராயிங்க்குகள். இதில் drawing களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளை இரும்புத் தகடுகளில் வரைந்து , Cutting torch flame மூலம் வெட்டி welding மூலம் இணைத்து தேவையான வடிவங்களாக உருவாக்குவது "Fabrication" எனப்படும். இரும்புத் தகடுகள் என்றில்லை , கூரைகளைத் தாங்கும் அமைப்புகள் செய்வதும் "Fabrication" எனப்படும்.


இன்னொரு வகை plastic பொருட்களின் Drawings. இவற்றில் தயாரிக்க வேண்டிய பொருளின் அளவுகள் இருந்தாலும் அவை தயாரிப்பில் அவசியப்படுவதில்லை. ஏனெனில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் "Molding" எனும் தயாரிப்பு முறை மூலம் " Molding Machine" கள் மூலமாக உருவாக்கப் படுகின்றன.


இது ஒரு பாட்டிலின் அச்சு (Mold). நமக்கு வேண்டியது பாட்டில், ஆனால் உண்மையில் அதற்கு முதலில் தேவைப்படுவது பாட்டிலுக்கான "Die" (அச்சு). இந்த Mold அல்லது Die உருவாக்குவதற்கு தனி படிப்பு உள்ளது. "Tool and die making". இந்தத் துறையில் தேர்ச்சி பெறுபவர்கள் "Tool Designer" என்று அழைக்கப்படுவார்கள்.சரி எவ்வாறு ஒரு die அல்லது mold உருவாகிறது ?
முதலில் பாட்டிலின் 3D மாடல் ஆனது ஒரு Modellinrg Software (CAD Computer Aided Design & Drafting) இல் உருவாகப் படுகிறது.பின்பு அது ஒரு Manufacturing Software (CAM Computer Aided Manufacturing) க்கு மாற்றப்படுகிறது.இப்படியாக பாட்டிலின் 3D Model ஐ CAM software இரு பகுதி அச்சுகளாக பிரித்தெடுக்கும்.பின்பு அந்த இரு பகுதிகளுக்கும் "Tool Path" குறியீடுகளையும் உருவாக்கிவிடும்.


"Tool Path" குறியீடுகளை ஒரு CNC (Computer Numeric Control) Machine இல் மாற்றி பாட்டிலின் அச்சினை உருவாக்கிவிடலாம்.இது ஒரு எளிய உதாரணமே.இதன் பின்புலத்தில் Tooling Engineer இன் பெரும்பங்கு உள்ளது.

CNC பற்றி விரிவான தகவல்களுக்கு நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் வலைத்தளம் பார்க்கலாம். இங்கே CNC Program


இப்போது பாட்டிலின் Die அல்லது Mold ஐ உருவாக்கியாயிற்று.பிளாஸ்டிக் பாட்டிலை உருவாக்க சில "Molding Process" உள்ளன.அது பற்றி கூற ஆரம்பித்தால் அது ஒரு பெரிய கதையாகிவிடும். தற்போதைக்கு பிளாஸ்டிக் பாட்டில் "Blow Molding" எனும் முறையில் உருவாக்கப்படுகிறது என்பதை மட்டும் சொல்கிறேன். 


இப்போது ஒரு முக்கியமான விஷயத்திற்கு மீண்டும் வருவோம். சரி பாட்டிலுக்காக வரைந்த drawing என்ன ஆயிற்று.? இப்போது பாட்டில் சரியான அளவுகளில்தான் உருவாகியுள்ளதா என்று சோதித்துப் பார்க்க "Quality Department" இல் உள்ள பொறியாளருக்கு Drawing அவசியமாகிறது.

......மேலும் பார்ப்போம்

Tuesday, August 30, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-4

Research & Engineering அல்லது Research & Development:

Research & Engineering அல்லது Research & Development என்பது ஒரு Product Development நிறுவனத்தின் மூளையைப் போன்றதாகும்.இங்குதான் ஒரு Design Engineer இன் வேலை ஆரம்பமாகிறது. மார்க்கெட்டிங் துறை மக்கள் விரும்பும் வகையில் வேண்டிய வசதிகளுடன் Industrial Designers மூலமாக பொருளின் வெளி வடிவத்தை R&D துறைக்கு அனுப்பும். ஆனால் இங்கு வெறுமனே கையால் வரையப்பட்ட படங்கள் உதவாது. மேற்கொண்டு அந்த வடிவினை பூர்த்தி செய்ய அளவுகள் (Dimensions) வேண்டும்.

சரி இந்த அளவுகளை (Dimensions) எங்ஙனம் நிர்ணயம் செய்வது ? அதற்கு இருவிதமான வழிமுறைகள் உள்ளன. ஒன்று அதற்காகவே உள்ள ஒரு intermediate software.அதில் ஒரு பொருளுக்கான அடிப்படை அளவுகளை நிறுவலாம்.சிரமமின்றி Complex surface geometry ஐ வடிவமைக்கலாம்.ஆனால் இதைக் கொண்டு முழுமையான டிசைனை வடிவமைக்க முடியாது. எனவே வெளிப்புறப் பரப்பினை (Outer Surface) மட்டும் ஒரு பொதுவான Format இல் Pro-E போன்ற அதிக வலுவான மென்பொருளுக்கு மாற்றி அதிலிருந்து மேம்படுத்துவார்கள்.

இன்னொரு வழிமுறை என்னவென்றால் மரத்தாலோ, "பிளாஸ்டர் ஆப் பாரிஸ்" ஆலோ அந்த பொருளின் "மாதிரி" யை "Exact Replica" உருவாக்குவார்கள். அது நாம் செய்ய வேண்டிய பொருளின் அளவினைக் கொண்டிருக்கும். பிறகு அப்பொருளை ஒரு "Laser Scanner" இன் மூலமாக அதனுடைய வெளிப்புறப் பரப்பினை (Outer surface) ஸ்கேன் செய்து மென்பொருள் மூலம் Pro-E போன்ற High End software க்கு மாற்றி மேலும் மேம்படுத்துவார்கள்.


ஒரு 30 வருடங்களுக்கு முன்புவரை "Draftsman அல்லது Draughtsman" என்பவர் அதற்கென பணியமர்த்தப்பட்டிருப்பார். பொதுவாக டிசைன் இஞ்சினியர் விரும்பியபடி வரை படங்கள் வரைந்து கொடுப்பதுதான் அவரது வேலை.

கணினி தொழில்நுட்பம் வளர ஆரம்பித்த 80 களின் தொடக்கத்தில் "Auto CAD" எனப்படும் 2D software Draftsman களின் பணியை இலகுவாக்கியது. அதுவரை கையால் பென்சிலின் உதவி கொண்டு டிராயிங் போர்ட் (Drawing Board), டிராப்டர் (Drafter) மூலம் வரைந்துகொண்டிருந்தவர்கள், கணினியின் உதவியால் சிரமமின்றி வரைய ஆரம்பித்தனர்.

தற்போது தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக கணினியில் 3D CAD Software மூலம் டிசைனரே தனக்கு வேண்டியவற்றை வடிவமைத்துக் கொள்வது எளிதாகிவிட்டது. (Draftsman என்னும் வேலை கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.)
இதற்கு நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் அதிகமாக

1.Pro Engineer
2.Catia
3.Solid works
4.Unigraphics
5.Ideas
போன்ற மென்பொருட்கள் பயன்படுகின்றன.

சரி வேறு என்னவெல்லாம் R&D இல் செய்கிறார்கள் ? ஒரு பொருள் எந்தவிதமான தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கவேண்டும் (Technology),போட்டியாளர்களிடம் இல்லாத புதிய விஷயங்கள் என்னென்ன இடம்பெற்றிருக்க வேண்டும் (Innovation) போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பது இவர்கள் வேலை.
உதாரணத்திற்கு வாஷிங் மெஷினை எடுத்துக்கொள்வோம்( நான்கரை வருடங்கள் இதிலேயே உழண்டு கொண்டிருப்பதனால் எனக்கு வேறு வழியில்லை). வாஷிங் மெஷினில் ஒரு டிஸ்ப்ளே யூனிட் (Display unit) இருக்கும். இன்னும் எவ்வளவு நேரம் துவைக்கும் தற்போது மெஷின் எந்த பணியை செய்து கொண்டிருக்கிறது (துவைத்தல்,அலசுதல், பிழிதல்) போன்ற விஷயங்களை தெரிவிப்பது டிஸ்ப்ளே யூனிட்.
இதில் வெறும் LED அமைக்கலாமா , LCD அமைக்கலாமா அல்லது Touch Screen அமைக்கலாமா என்று தீர்மானிப்பது இவர்கள் வேலை.

கீழே காணும் படத்தில் மூன்று விதமான மெஷின்களின் User Interface பகுதி காண்பிக்கப்பட்டுள்ளது.முதலில் காணும் மெஷினில் வெறும் LED விளக்குகள், பட்டன்கள் (Buttons) மற்றும் ஒரு நாப் (Knob)(குமிழ்) உள்ளன. இவை மூலம் நமக்கு வேண்டிய செட்டிங்க்ஸ் செய்து கொள்ளலாம்.
இரண்டாவது காணும் மெஷினில் நாப், பட்டன்கள் மற்றும் ஒரு 7 Segment Display உள்ளன.
மூன்றாவது காணும் மெஷினில் நாப் இல்லை , இரண்டே இரண்டு பட்டன்கள் மற்றுன் ஒரு தொடு திரை உள்ளன.

இவை அனைத்துமே செய்யப்போவது ஒரே வேலையைத்தான், ஆனால் தொழில்நுட்பங்கள் வெவ்வேறு. 
இது ஒரு சிறிய உதாரணம் தான். இது போல அஜிடேட்டர் (Agitator) எந்த டிசைனில் இருந்தால் நன்றாக் துணி துவைக்கும், எந்த மோட்டார் பொருத்தினால் மின்சாரம் குறைவாக செலவாகும் என்று மெஷினின் பலபகுதிகளையும் பற்றி ஆராய்வது மற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பங்களையும் நம்முடைய தேவைக்கேற்றபடி எவ்வாறு வடிவமைக்கலாம் என்று ஆராய்ச்சி செய்வது இவர்கள் வேலை.

மேலும் Design  பற்றி விரிவாக அடுத்த பதிவில் காண்போம்.

படங்கள்:
Google,http://www.emiracle.eu

Thursday, August 25, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-3

Research and Engineering (R&E) மற்றும் Human Resource பற்றி பார்ப்பதற்கு முன்னால் கொஞ்சம் "Industrial Design" பற்றி பார்ப்போம். Industrial design என்பது ஒரு பொருளுக்கான வெளிப்புறத் தோற்றம் "External appearance" எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் துறை. Marketing மற்றும் R&E க்கு இடைப்பட்ட துறை. பெரும்பாலும் மார்க்கெட்டிங் தேவைகளுக்கு ஏற்ற படி வேலை செய்வதால் அதிகமும் மார்க்கெட்டிங் துறையின் கையிலிருக்கும் துறை இந்த Industrial Design.

ஒரு டிஜிட்டல் பேட் (Digital Pad) இல் ஸ்டைலஸ் (Stylus) மூலமாக வரைந்து அதனை புகைப்படத்திற்கு இணையாக ஒளியூட்டி உருமாற்றுவார்கள் (Photo Realistic Rendering).ஒரு காகிதத்தில் வரைந்து வண்ணமூட்டுவது போலத்தான் இதுவும். ஆனால் இது அதற்கென உள்ள பிரத்யேக மென்பொருட்கள் மூலமாக கணினியில் செய்வார்கள். இதில் Adobe illustrator, Solid works, Rhinoceros, Pro-E போன்ற மென்பொருட்கள் உதவுகின்றன.இது போல வரைவதற்கு Industrial Design என  தனிப் படிப்பே உள்ளது. IIT களிலும், National Institute of design அகமதாபாத் , மேலும் வேறு பல கல்லூரிகளிலும் கற்றுத்தருகிறார்கள்.

பொதுவாக ஒரு பொருளின் முப்பரிமாண தோற்றத்தினைக் (3D view) காட்ட Isometric view ஐசொமெட்ரிக் என்னும் வகையினைப் பயன்படுத்துவார்கள்.ஆனால் விளம்பரங்களுக்காக எடுக்கப்படும் Portfolio வில் (ஒரு ஆல்பம் எனக் கொள்ளலாம்) ஐசொமெட்ரிக் வியூ அவ்வளவு எடுப்பாகத் தெரியாது. அங்கே " Perspective view" எனப்படும் வரையும் உத்தியைக் கையாள்கிறார்கள். இது வரைதலானாலும் புகைப்படம் எடுத்தாலும் இரண்டிலும் பயன்படுகிறது.

உதாரணங்களுக்கு சில படங்களைப் பார்ப்போம்.
(படங்களைப் பெரிதாக்க அதன் மீது கிளிக்கவும்.)இதில் முதலில் உள்ள பெர்ஸ்பெக்டிவ் வியூ (Perspective view) ஒரு பொருளை குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்ப்பதாக வரையப்பட்டுள்ளது.ஒரு நேரிணையான தோற்றத்தை (Realistic Appearance) அளிப்பதற்கு இந்த Perspective view ஆனது பயன்படுத்தப் படுகிறது. இதில்

1.Single point perspective
2.Two point perspective
3.Three point perspective
என மூன்று வகையுள்ளது.

வேனிஷிங் பாயின்ட் களின் எண்ணிக்கையை பொறுத்து இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றது. அதிகமும் Two point perspective மற்றும் Three point perspective உபயோகிக்கப் படுகிறது.
வேனிஷிங் பாயின்ட் (Vanishing Point) எனப்படுவது ஒரு பொருள் பார்வையிலிருந்து மறையும் தூரத்திலுள்ள ஒரு புள்ளி எனக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ரயில் தண்டவாளங்களைப் பார்க்கும்போது எந்தப்புள்ளியில் இரண்டு தண்டவாளங்களும் இணைகின்றனவோ அதுவே அதன் வேனிஷிங் பாயிண்ட்.
Isometric view தட்டையான தோற்றத்தை அளிப்பதால் Portfolio வில் அதனை உபயோகப்படுத்துவதில்லை. ஆனால் ஒரு பொருளுக்கான வரைபடத்தில் (Drawing )அது முக்கியப் பங்காற்றுகிறது.
சரி இதற்கு மேலும் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் பற்றி கூறப்போவது இல்லை.
படங்களைப் பார்த்து வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளுங்கள்.

(படங்களைப் பெரிதாக்க அதன் மீது கிளிக்கவும்.)

இப்படியாக இண்டஸ்ட்ரியல் டிசைன் என்பது நன்றாக வரையத் தெரிந்த மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.மிக நல்ல வேலைவாய்ப்புகள் மிக அதிக சம்பளத்துடன் உலகம் முழுவதிலும் எளிதில் கிடைக்கும். அது என்ன நன்றாக வரையத் தெரிந்த மாணவர்கள் ? மற்றவர்கள் படிக்க முடியாதா? கண்டிப்பாக முடியும் ஆனால் அதற்கு மிகக் கடுமையான பயிற்சி தேவைப்படும். ஏனெனில் ஒரு கான்செப்ட்டுக்கு வரை வடிவம் கொடுக்கும் சமயத்தில் பெரும்பாலும் மென்பொருட்கள் உபயோகிப்பதில்லை. கையாலேயே வரைந்து ஒரு வடிவம் கொடுப்பார்கள்.அதற்கு இயல்பிலேயே நன்றாக வரையும் திறன் பெற்றவர்களாலேயே எளிதில் வரைய முடியும்.

ஒரு டிசைனின் துவக்கத்தில் இவ்வாறுதான் வரைபடங்கள் உருவாக்குவார்கள்.இவ்வாறாக இண்டஸ்ட்ரியல் டிசைன் பற்றி ஓரளவுக்கு கூறியாயிற்று என்று நினைக்கிறேன். நான் படித்த போது இதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாமலேயே கடந்து வந்து விட்டேன். அடுத்த பதிவில் R&E மற்றும் Human Resource பற்றி பார்க்கலாம்.

படங்களுக்கு நன்றி:
brookbanham.com

Saturday, August 20, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-2

கடந்த 2008 ரிசஷன் (Recession) சமயத்தில் வரிசையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் நிறுவனங்கள் குறைந்த ஊதிய உயர்வையோ அல்லது போனஸ் பணத்தையோ குறைத்தனவே ஒழிய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எனக்குத் தெரிந்த வகையில் மிகவும் குறைவுதான். (இந்தியாவில் இந்நிலை. ஆனால் அமெரிக்காவில் எங்கள் நிறுவனம் சில பிளான்ட் களை மூடியது , ஆட்குறைப்பு நடவடிக்கையும் இருந்தது.)ஏனெனில் மெக்கானிகல் நிறுவனங்களில் ஓரளவுக்கு விசுவாசம் இருக்கவே செய்கிறது.ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் அவ்வாறு இல்லை,(விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை) சீக்கிரமே ஒரு நிறுவனம் விட்டு நிறுவனம் தாவும் மனப்பாங்கு சற்று அதிகம். அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வரை ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், பின்பு 30 % ஊதிய உயர்வுடன் சில பல க்விக் ஜம்ப் அடித்து சீக்கிரமே நிறைய ஊதியம் பெறுகிறார்கள்.இது தவறென்றும் இல்லை என்றாலும் மெக்கானிகல் துறையைப் பொறுத்த வரையில் நாம் தயாரிக்கும் பொருளைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள இரண்டு வருடங்கள் போதாது. IT துறை போல துவக்க நாட்களில் சம்பளமும் இருக்காது. ஆனால் நாம் ஒரு வேலையில் நிலைத்து நுட்பங்கள் கற்றுவிட்டால் 5 ஆம் வருடத்தில் நாமும் IT க்கு இணையான சம்பளம் பெற முடியும்.கல்லூரி முடிக்கும் போது 21 வயது என்று எடுத்துக் கொள்வோம். 22 வயதில் ஒரு வேலை கிடைத்தாலும் அடுத்த 4 வருடங்களில் கண்டிப்பாக நம் சம்பளம் IT க்கு இணையாகும். நாம் செய்ய வேண்டியது சரியான சந்தர்ப்பங்களில் பெரிய நிறுவனங்களுக்கு முயற்சி செய்து வேலை பெறுவதுதான்.

கல்வி என்றால் என்ன ? எல்லாம் படித்து முடித்த பிறகு எவ்வளவு நினைவில் உள்ளதோ, அதுவே கல்வி.
படிக்கும் காலத்தில் மாணவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும் என்று அனைவரும் அறிவோம். வகுப்பில் 10 பேர் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். மீதி நிறைய சராசரி மாணவர்களும் கொஞ்சம் மின்னலே மாதவன் ஆகும் முயற்சியில் உள்ள மாணவர்களும் இருப்பார்கள். எவ்வளவு அரியர் வைக்கிறோம் என்பது வேலை தேடும் சமயத்தில்தான் பெரும் பிரச்னையை உண்டாக்கும். சில நிறுவனகள் "History of no arrears" என்பதில் மிகக் கறாராக இருப்பார்கள்.என்னதான் நாம் பார்முலாக்கள் படித்து தயாராக இருந்தாலும் உள்ளே நுழையவே முடியாது. எனவே அரியர் இல்லாமல் ஒரு 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது உத்தமம்.

ஆனால் இதிலும் விதி சில சமயங்களில் விசித்திர நிகழ்வுகளை நடத்தும். ஒருமுறை வகுப்புத் தோழர் வேகமாக என்னிடம் வந்து .. பாசு கொஞ்சம் புனுமாட்டிக் கம்பாரட்டார் ( Pneumatic Comparator) பற்றி சொல்லிகொடுங்க பாஸ் என்றார். அது ந்யுமேட்டிக் கம்பாரட்டார் என்று உச்சரிக்கத் தெரியவில்லை. அப்புறம் சென்னையில் நான் வேலைக்கு அலைந்து கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை பஸ்ஸில் பார்த்தேன். பாஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று விசாரிக்கும் போது , அதுவா பாஸ் எனக்கு இந்த கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு அன்று ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் பெயரைக் கூறி என்னை ஜெர்மனி அனுப்ப போறாங்க அதன் ஜெர்மன் கிளாஸ் க்கு போயிட்டு வர்றேன் என்று கூறி ஆச்சரியப்பட வைத்தார். எங்கு சென்றாலும் திறமைக்கு மரியாதை உண்டு. ஆங்கிலம் பெரிய விஷயமில்லை, கற்றுக் கொள்ளலாம்.பயம் கொள்ளத் தேவை இல்லை.

பொதுவாக மாணவர்கள் பரீட்சை முடிந்தவுடன் நோட்டுக்களை எடைக்கு போட்டு பணம் வாங்கி செலவழிப்பார்கள். புத்தகங்களை பழைய புத்தகக் கடைகளில் பாதி விலைக்கு விற்று விடுவார்கள்.என்னைப் பொறுத்தவரையில் இது நல்லதல்ல. என்னதான் கூகிளில் எல்லாம் கிடைத்தாலும் சில நுட்பமான தேவைகளில் நம் நோட்டுப் புத்தகங்கள் உதவுவது போல எதுவும் உதவாது.

இன்னும் என்னுடைய "Strength of Materials" போன்ற முக்கியமான நோட்டுக்கள் என்னிடம் உள்ளன. மிகச் சமீபத்தில் கூட அவை வேலை தேடும் நேரத்தில் Basics படிக்க மிகவும் உதவின.

கடந்த பதிவில் நிறுவனகளின் கட்டமைப்பு பற்றி குறிப்பிட்டிருந்தேன் . அவற்றில் மார்க்கெட்டிங் (Marketing) பற்றி பார்க்கலாம்.

மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட் என்பது பொருளுக்கான (Product) தேவைப்படும் விஷயங்களை (requirement) மக்களிடமிருந்து பெற்று (Customer requirement), இஞ்சினியரிங் டீமுக்கு கொடுப்பது. அதாவது ஒரு வாஷிங் மெஷின் எடுத்துக் கொண்டோமானால் அது இன்ன வடிவம் இருக்கவேண்டும், இன்ன நிறம் இருக்க வேண்டும், இன்னின்ன options இருக்கவேண்டும் இன்ன விலை இருக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து Market Research மூலம் தெரிந்து கொள்வார்கள். பின்பு ஒரு Industrial design Engineer மக்களின் கருத்தினை மனதில் கொண்டு கைப்பட ஒரு வடிவம் கொடுப்பார். அதாவது ஓவியம் வரைவார்.

அதோடு மட்டுமில்லாமல் பொருளை விளம்பரப் படுத்துதல் (Advertising Campaign) செய்வதும் அவர்கள் வேலையே.
நல்ல ஓவியம் வரையும் திறமையுள்ள மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவர்கள் "Industrial Engineering" படித்தால் நல்ல வேலை வாய்ப்பையும் அட்டகாசமான சம்பளத்தையும் பெற முடியும்.

மேலும் Research and Engineering பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

Friday, August 19, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-1


நான் வீட்டு உபயோகப் பொருள் (Home Appliances) உற்பத்தி செய்யும் பன்னாட்டு 
நிறுவனத்தில் ஒரு இயந்திரப் பொறியாளனாக ஐந்தரை வருடங்களாக வேலை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாக படித்து வெளியே 
வந்து முட்டி மோதி இன்று ஒரு நிலையை அடைந்திருக்கும் நான்,இயந்திரப் பொறியியல் 
துறையில் எனது  கல்வி மற்றும் வேலை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று
நினைக்கிறேன்.
இது "Mechanical Engineering" படிக்கும் மாணவர்களுக்கு அல்லது படித்து முடித்து விட்டு  
வேலைக்கு முயற்சி செய்யும் நண்பர்களுக்கு ஒரு சிறிய அளவிலாவது நன்மை பயக்கலாம் 
என்ற நம்பிக்கையில் எழுதத் துவங்குகிறேன்.

செங்கோவி  அண்ணன் முன்பே இது பற்றி தொடர் பதிவு எழுதியுள்ளார்.உங்களுக்காக
இங்கே தொடர்புக் கண்ணிகள்


சிறு சிறு பதிவுகளில் அட்டகாசமாக எழுதியுள்ளார் செங்கோவி அண்ணன்நான் பகிரப்போவது என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களேபடிக்கும் போதும் படித்து முடித்த பிறகும் நான் செய்த தவறுகள் இதனைப் படிப்பவர்கள் செய்யக் கூடாது என்கிற ஒரு எண்ணம்தான் இப்பதிவினை
எழுதத் தூண்டியது.

இன்றைய நுகர்வுக் கலாச்சார காலத்தில்கழுத்தில் அடையாள அட்டையுடன் , INFY,WIPRO,CTS,TCS என்று தகவல் தொழில்நுட்பத்துறையில் அழகழகான பெண்களுடன் 
ஹேய் டியூட்  மொழி பேசி ,வேலை செய்ய முடியவில்லையே என்று நாம் 
வருத்தப்படத் தேவையில்லை.( சீ சீ இந்தப் பழம் புளிக்கும்.. டேய் ராஜேஷ் லேசா கருகுற வாசனை வருது பாரு..)
  
தகவல் தொழிநுட்பத்துறை ஒரு பொருளின் உற்பத்தி மற்றும் சந்தை விற்பனையில் 
எங்கே வருகிறது என்று பார்ப்போம்விவசாயத்துறை உற்பத்தி செய்கிறதுஉலகின் எல்லா 
வருமானத்திற்கும் தாய் தந்தை அதுதான்.நவீன தொழில் நுட்பத்துடன் விளைச்சலைக் 
கூட்ட இயந்திரங்கள் தேவைப்படுகின்றன இங்கும் மெக்கானிகல் எஞ்சினியர்களின் பங்களிப்பு 
தவிர்க்க இயலாததுவிவசாய  விளை பொருட்களை வேறோர் இடத்திற்கு கொண்டு
செல்ல வாகனம் தேவை (Logistics). வாகனங்கள் தயாரிக்க மெக்கானிகல் எஞ்சினியர்கள் 
தேவை இயந்திரப் பொறியியலும் விவசாயமும் இங்ஙனம் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து
இயங்கும் (Symbiotic relationship) வகையில் உள்ளதுவிவசாய உற்பத்தி மூலம் பணம்
புழங்குகின்றதுபணபுழக்கத்திற்கு துணையாய் வங்கிகள் தேவை.வங்கிகள் விரைவான
சேவைக்கும் ,ATM போன்ற வசதிகள் தருவதற்கும் மென்பொருட்கள் தேவைப்படும் இடத்தில் 
தகவல் தொழில்நுட்பத்துறை மிக முக்கிய பங்காற்றுகின்றது. (இவைமட்டும் தவிர ஒரு தொழிற்சாலை இயக்கத்திலும் தகவல் தொழில் நுட்பத்துறையின் 
பங்கு உள்ளது என்பதை மறுக்கவில்லைஎனில் கிட்டத்தட்ட கடைசி இடம்அது தவிர இன்று 
எல்லா துறைகளுமே ஒன்றுக்கொன்று சார்ந்தே உள்ளன என்பதை நான் மறுக்கவில்லை.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் என்பது கவுதம் மேனன் படத்தில் காண்பிப்பதுபோல் அத்தனை 
எளிதல்ல . மின்னலே படத்தில் மாதவன் செம்ம கெத்தாக வந்து பெண்களைக் கண்டால் 
வெறுத்துஅழகாக ரவுடித்தனம்  செய்து மெக்கானிக்கல் மாணவர்களுக்கு ஒரு தவறான 
முன்னுதாரணமாக அமைந்துவிட்டார் என்றே கூறுவேன்


சும்மா படிக்காமல் ரவுடித்தனம் செய்துவிட்டுவகுப்பறைகளை அலட்சியப் படுத்தி 
கெத்தாகத் திரிந்தால்,அரியர் வைப்பது உறுதிஏனென்றால் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் நிறைய பாடங்கள் கணிதம் மற்றும் தர்க்கங்கள் (Logics) கொண்டவையாக இருக்கும்
அது தவிர நிறைய சூத்திரங்கள் (Formulae) நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கும்
சற்றே கடினமாகத் தோன்றினாலும் செய்தாக வேண்டியது அவசியம்

எப்படி சிறுவயதில் நாம் படிக்கும் வாய்ப்பாடுகள் வருங்கால படிப்பிற்கு அவசியமோஅது 
போல மெக்கானிகல் எஞ்சினியரிங் படிப்பிலும் சில பாடங்கள் கடைசிவரை படிப்பிலும்
வேலையிலும மிக அவசியமாக இருக்கும்.
அனைத்துமே பவுதீகம் (Basic Physics) மற்றும் கணிதத்தின் (Mathematics) அடிப்படைதான்
அப்படியான சில பாடப் பிரிவுகளைப் பார்ப்போம் 

1.  Engineering Drawings and Graphics
2.  Machine Drawing
3.  Engineering Mechanics
4.  Strength of materials
5.  Fluid mechanics
6.  Thermodynamics
7.  Thermal Engineering

இவற்றில் முதல் இரண்டும்  கற்பனை சக்தியைத் தூண்டும் பாடங்கள். ஒரு பொருளை 
மேலிருந்து பார்த்தால் எப்படித் தெரியும்? கீழிருந்து பார்த்தால் எப்படி? நேராக மற்றும்  
பக்கவாட்டிலிருந்து பார்த்தால் எப்படித் தெரியும் (Views&Projections) என்று கற்பனை செய்து 
சில விதிகளுக்குட்பட்டு வரைய வேண்டும். ஒரு இயந்திரப் பொறியாளனுக்கு முதல் 
இரண்டு பாடங்களும் வாழ்நாள் வரை துணைவரும்

மூன்றாம் பாடமான எஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் முற்றிலும் பவுதீகம் சார்ந்தது. பொதுவாக மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே படித்து விடுவார்கள். முக்கியமான 
விஷயம் படித்து முடித்து மறந்தும் விடுவார்கள். ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டிய 
விஷயம் என்னவென்றால் இந்த பாடத்தில் நாம் கற்கும் அடிப்படைகள் எப்பொழுதும் 
பணியில் உதவக்கூடியது

நான்காம் பாடமான ஸ்ட்ரெங்த் ஆப் மெட்டீரியல்ஸ் வேலை தேடும் சமயத்தில் மிகவும் 
தேவைப்படும் ஒன்று. ஒவ்வொரு இன்டர்வியூ பேனலிலும் ஒரு நடுத்தர அல்லது சற்றே 
வயதான ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அவர்களுக்கு " Strength of materials" என்றால் குதூகலம். அப்பாடத்தின் அடிப்படைகளில் நாம் வலுவாக இருந்தால் வேலையை எளிதில் தட்டி விடலாம்.
நான்கரை வருடங்கள் ஒரு வீட்டு உபயோகப்பொருள் Global giant இடம் வேலை பார்த்திருந்தாலும் புதிய வேலை தேடும் போது நான் " Strength of materials"  திரும்பவும் புரட்ட வேண்டியிருந்தது. நம்முடைய நிஜமான பொறியியல் அறிவுக்கு ஒரு அளவுகோல் இந்தப் பாடம். 
ஒரு beam (தூண்) இன் ஒரு முனையில் குறிப்பிட்ட எடையை வைத்தால் அது எவ்வளவு 
வளையும், எவ்வளவு தாங்கும் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் சூத்திரங்கள் 
அடங்கியது இப்பிரிவு.இது தவிர வேறு பலவற்றைப் பற்றியும் இப்பாடப் பிரிவு 
உள்ளடக்கியுள்ளது.  

Thermodynamics மற்றும் Thermal Engineering ஆனது   Refrigeration & Air Conditioning மற்றும் வாகனங்களின் இஞ்சின் Engine போன்றவற்றின் படிப்பாகும்.

பொதுவில் நிறுவனங்களின் கட்டமைப்பானது  
1.Marketing
2.Human Resource
3.Research & engineering
4.Design
5.Production
6.Logistics 
7.Sales & Service

என்று வகைப்படுத்தலாம். இது வீட்டு உபயோகப்பொருள் மட்டுமல்ல ஆட்டோமொபைல் 
தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இதில்  Marketing , Research & engineering & Design இந்த மூன்றும் "White collar Job" எனப்படும்.
Production,Logistics மற்றும் Sales&Service இதற்கு அடுத்த படியாக வருபவை.
சற்று அதிகமான உடலுழைப்பு தேவைப்படுபவை.

இவை பற்றி மேலும் விபரங்கள் வரும் பதிவுகளில் பார்ப்போம்.