Friday, August 28, 2009

கால்சட்டை (Pants)

ஆங்கிலேய வருகைக்குப் பின் பிரபலமான பேன்ட் எனப்படும் கால்சட்டை நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகிப் போனது. சின்ன வயதிலிருந்து சொல்லப்போனால் 5 வயதிலிருந்தே பேன்ட் அணிவதை மிகவும் விரும்பியிருக்கிறேன்.அந்த வயதில் டவுசர் (எங்களூரில் நிக்கர் ) அணிந்த நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். "பார்ல .. பேண்டு போட்டுட்டு அப்பிடியே விளையாட வந்திருக்கான்.." என்று. தமிழ் "பேண்டுக்கு" வேறொரு அர்த்தம் இருப்பதை நினைவில் கொள்க.

என் பெரிய மாமா (அம்மாவின் முதல் அண்ணன்) ஒரு மெல்லிய பச்சை நிற சபாரி ஒன்று எனக்கு தந்தார். அது மிகவும் பிடித்தமையால் எப்போதும் அதையே அணிந்து என் ஆச்சி வீட்டுக்குப் போவேன். என் சித்திகள் என்னை பாச்சா உருண்டைக்காரன் என்று கிண்டல் அடிப்பார்கள். அவர்கள்
வீட்டுப் பக்கத்தில் ஒருவன் பேன்ட் சட்டை அணிந்து பாச்சா உருண்டை விற்பனை செய்துகொண்டிருப்பான்.

Wednesday, August 19, 2009

தமிழ்க்கிழவி-2

பணம் படைத்தவன் பற்றி அவ்வை சொன்னது ..! எந்தக்காலத்திற்கும் பொருந்தும் :-)

நல்வழிப் பாடல்

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்- இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.

கல்லானே ஆனாலும்- ஒருவன் படிக்காதவன் ஆனாலும்
கைப்பொருள்ஒன் றுண்டாயின்-அவனிடம் செல்வம் (பணம்) இருந்தால்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - எல்லாரும் அவனிடம் சென்று உறவாடுவார்கள்
இல்லானை இல்லாளும் வேண்டாள்-பணம் இல்லாதவனை மனைவி கூட மதிக்க மாட்டாள்
மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் -ஈன்றெடுத்த தாயும் ஒதுக்குவாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்- அவன் சொல்லுக்கு மதிப்புக் கிடையாது

Friday, August 7, 2009

தமிழ்க்கிழவி-1

சங்கப்புலவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் அவ்வையார்தான்.பல அரிய உண்மைகளை எளிய பாடல்களில் அளித்திருக்கிறார். இன்றளவும் அவரது பாடல்களை நான் சிலாகித்து வந்திருக்கிறேன்.மிக எளிய தமிழில் எளிதில் அர்த்தம் புரியும் வகையில் நிறைய பாடல்கள் தந்திருக்கிறார். (இரண்டு மூன்று முறை படித்துப்பார்த்தால் எளிதில் பாடலின் சாராம்சம் புரிந்து விடும்) . இனி அவ்வப்போது அவர் பாடல்களை இங்கு விளக்கத்தோடு காணலாம்.

நல்வழிப் பாடல்

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் : வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

புரிகிறதா..? இரண்டு மூன்று முறை திரும்ப வாசித்துப் பாருங்கள்.
விளக்கம் பார்ப்போம்.

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் - கடினத்தன்மை கொண்டவை
நெகிழ்வான மிருதுவானவற்றை வெல்ல முடியாதாம்.
வேழத்தில் - யானையில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - யானையின் உடம்பில் பாயும் ஈட்டியானது பஞ்சுமூட்டையைத் துளைக்க முடியாது
நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை - நெடிய
இரும்பினால் ஆன கடப்பாரையால் மலையைப் பிளக்க முடியாது.
பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.- அதே
மலையில் பசுமையான மரத்தின் வேர்கள் சுலபமாக உள்ளே சென்றிருக்கும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் !

சிறுவயதில் ஒருநாள் அப்பா என்னிடம் கேட்டார் " வளர்ந்து என்ன ஆகப்போற மக்களே? நான் கண்டக்டர் ஆவேன் டாடி ..! "அப்பா ஒரு டாக்டரையோ இஞ்சினியரையோ எதிர்பார்த்திருந்திருப்பார். நான் சொதப்பிவிட்டேன் . அப்பா முகம் மெல்ல மாறியது. குரல் சற்று கடுமையாக ஏன் என்றார். ஏன்னா கண்டக்டர் தான் கை நிறைய பை நிறைய ரூவா வச்சிருப்பார் டாடி ..! அடுத்த அரைமணி நேரம் நீதி போதனை வகுப்பு நடந்தது.

இன்றுவரை இந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு பெரிய குறிக்கோள், இலக்கு எல்லாம் கிடையாது. "எது நடக்கிறதோ அதுவே அது" என்றே வாழ்க்கை ஓடுகிறது இன்றுவரை. அன்று அப்பாவின் அறிவுரைக்குப்பின் மருத்துவம் படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

Monday, August 3, 2009

என் பதிவுகள்

இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும்போது அதிக இடைவெளி இன்றி தொடர்ந்து எழுத முடியுமா என்று ஒரு மலைப்பு இருந்தது.வாரம் இரண்டு பதிவுகள் எழுதலாம் என்று எண்ணம். அதுவே பெரிய விஷயம். இந்தவாரம் முதல் வேலைப்பளு சற்று அதிகமாகிறது. எனினும் விடாது தொடர முயல்கிறேன்.

பதிவுகள் பெரும்பாலும் வீட்டில் (பாச்சுலர் என்பதால் ரூமில்.. திருமணமாகாத இளைஞர்கள் தங்குவது எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் அது ரூம் தான்) தாளில் முதல் பிரதி எழுதி , தேவைதான இடங்களில் திருத்தி, பின்பு இரவில் தட்டச்சு செய்து (google indic transliteration உபயோகிக்கிறேன். blogger இல் தமிழில் எழுத்துருக்கள் கொண்டுவரமுடியும் என்றாலும் google indic transliteration இல் சௌகர்யமாக உணர்கிறேன். ) draft இல் சேமித்து பின்பு சமயம் கிடைக்கும்போது பதிவேற்றம் செய்கிறேன்.

நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆவல் தான்.ஆனால் முழுவதும் என் எண்ண ஓட்டத்தில் தோன்றுபவையாக இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. வெறுமனே பல தகவல்கள் அடங்கிய வலைத்தளங்களின் தொடர்புக்கண்ணிகள் (Links) தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவேளை இந்த வலைப்பூ மிக வறண்ட நிலைக்கு செல்லுமானால் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தலாம். அப்படி ஒரு நிலை வராது என்று நம்புவோம்..!

கடந்த இரண்டு பதிவுகளில் நான் படித்த எஸ்.எம்.ஆர்.வி பள்ளியில் நடந்த சில சம்பவங்கள் பற்றி எழுதியிருந்தேன்.சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவையே. பதிவின் நாயகனும் நிஜமே. சற்று சுவாரசியப்படுத்த சிறிது நகைச்சுவை கலக்க முயற்சித்திருக்கிறேன். படிப்பவர்களுக்கு வெடிச்சிரிப்பு வராவிடினும் இதழோரம் ஒரு புன்னகை பூத்திருந்தால் எனக்கு வெற்றியே.

கடந்த இரண்டு பதிவுகளைப் படித்த நண்பர்கள் " டேய் நீதானே அந்த முருகேஷ்..? பேரை மாத்தி ஆளை மாத்தி எழுதுறியா? என்கிறார்கள்.அப்படியெல்லாம் இல்லை.

பொதுவாக புதிதாக எழுதுபவர்களுக்கென்று ஒரு பொதுவான எழுத்து நடை இருக்கும். A common pattern. அனேகமாக நானும் அந்த நடையில் தான் எழுதுவதாக எண்ணுகிறேன். இன்னும் எழுத எழுத எனக்கென்று ஒரு பாணி உருவாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்... !