Friday, May 4, 2012

தமிழ் சினிமாவின் புதிய தளபதி


சமீபத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்த்தேன்.தமிழ் சினிமாவின் புதிய நடிப்பு புயல் நடன சூறாவளி, நவயுக நாயகன், வெகு விரைவில் சூப்பர் ஸ்டார் ஆக்கப்படப் போகும் தகுதியுடைய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் மெய்மறந்தேன்.
படத்தில் டிராபிக் சிக்னலில் ஒரு பெண்ணை பார்க்கிறார். அவள் தன்னுடைய முகத்திரையை விலக்கியதும் ஐயோ அம்மா என்று கவுண்டமணி ரீதியில் அந்தப் பெண்ணை காரி உமிழ்ந்து இகழ்கிறார். நியாயமாகப் பார்த்தால் அந்தப் பெண்தான் இவரை உமிழ்ந்திருக்க வேண்டும்.என்ன செய்வது கோடிகளாய்க் குவித்த ஊழல் பணத்தில் ஒரே நாளில் நாயகனாகிவிட்டாரே. நாயகன் மீது உமிழ முடியுமா ?

ஜீவா நடித்திருந்திக்க வேண்டிய படம் இது. படத்தின் வெற்றியின் அளவைக் குறைத்ததில் நாயகனின் பங்கு மிகப் பெரிது.சந்தானம் தனியொரு ஆளாக படத்தைத் தாங்குகிறார். சந்தானம் மட்டும் இல்லை என்றால் வெறும் குப்பை என மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கும். என்னதான் சந்தானம் இருந்தாலும் கடைசி 20 நிமிடங்கள் திக்கித் திணறி தண்ணீர் குடித்து இயக்குனர் ஒப்பேற்றி இருப்பது சலிப்பை அளிக்கிறது.

நடிப்பு, நடனம், நகைச்சுவை என அனைத்தையும் திறம்படச் செய்ய முயன்று தோற்கிறார் ஹீரோ. சந்தானம் வசனம் பேசும்போது ஹீரோ கொடுக்கும் பார்வை ரியாக்ஷன்கள் படுபரிதாபம். பேசாமல் அப்போதும் கூலிங் கிளாஸ் போட்டிருந்திருக்கலாம்.நிறைய இடங்களில் SMS ஜீவாவை இமிடேட் செய்ய முயன்று எரிச்சலூட்டுகிறார்.


படம் முழுக்க தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசுவதாக நடிக்க முயற்சிக்கிறார் , கொஞ்சம் கூட சிரிப்பே வரவில்லை. படம் முடிய கால்மணி நேரம் இருக்கும்போது ஹீரோ சரியாக இங்கிலீஷில் பேசுகிறார்.ஏன் இங்கிலீஷ் தெரியாதது மாதிரி நடிக்க வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை. தமிழ் நாட்டின் கஷ்டகாலம், புதிய தளபதியின் அடுத்தடுத்த படங்களை பெரிய பெரிய இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பில் இனி வருடம்தோறும் காணலாம். இதனால் இளைய தளபதி கடுமையான பீதியில் இருப்பதாகக் கேள்வி. கவலைப் படவேண்டாம் நடனத்தில் உங்களை யாராலும் மிஞ்ச முடியாது.என்ன ஒன்று கஷ்டமான ஸ்டெப்புகளை ஆடுகிறேன் என்று சுறா படத்தில் செய்தது போல தரையில் படுத்து உருளாமல் இருந்தால் போதும். இல்லாவிட்டால் மக்கள் புதிய தளபதியின் பாக்கியராஜ் நடனமே பரவா இல்லை என்னும் முடிவெடுக்கும் சாத்தியம் உள்ளது.

நமது ஹீரோவின் நடனம் குறித்து யுவகிருஷ்ணா தனது விமர்சனத்தில் குறிப்பிடும்போது நடிக்க வந்து இத்தனை வருடங்களாகியும் அஜித்துக்கே நடனம் வரவில்லை என்று கூறுகிறார். வரலாறு படம் பார்க்கவில்லை போலும். தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டால் அப்படத்தில் அஜித் நன்றாகவே ஆடியிருப்பார் . சரி அத்தனை குறைகளை மீறியும் அஜித்தை நமக்கு ஏன் பிடிக்கிறது என்றால் ஊரை விற்ற ஊழல் பணத்தில் சொந்தப் படம் எடுத்து ஹீரோவாக அறிமுகம் ஆகவில்லை. எந்தத் திறமையும் இல்லாமல் அறிமுகம் ஆகி 20 வருடங்களில் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தினை பெறுவது எளிதான காரியம் அல்ல.


கன்னட சினிமாவில் எப்படி புனீத் ராஜ்குமார் வலுக்கட்டாயமாக ஹீரோ ஆக்கப்பட்டு ஒரு நட்சத்திரம் ஆக்கப்பட்டரோ அதே போன்ற நிலைமை தமிழ் நாட்டிலும் பிரகாசமாக தெரிகிறது. நாட்டில் நடக்கும் கொடுமைகளை மறக்க திரையரங்குக்கு சென்றால் அங்கேயும் ஊழல்வாதிகளின் வாரிசுகள் ஊழல் பணத்தில் ஆடிகொண்டிருந்தால் மக்கள் என்னதான் செய்வது ? நேற்று அருள்நிதி, இன்று உதயநிதி, நாளை தயாநிதி. ஆளுக்கு மூன்று படங்கள் வருடத்திற்கு நடித்தாலும் ஒன்பது படங்கள், சன் டிவி, கலைஞர் டிவி, கே டிவி என அனைத்திலும் அந்த ஒன்பது படங்களின் ட்ரைலர் மாறி மாறி ஓடி மக்களை இம்சிக்குமே? 

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆனவுடன் சன் மியூசிக், இசையருவி என சிறப்பு நிகழ்சிகள் போட்டு தாரை தப்பட்டைகளை அடித்துக் கிழித்து தொங்கவிடுவார்களே. தமிழ்நாட்டு மக்களின் நிலைமை கவலைக்கிடம்தான் இனி. மணிரத்னம், கவுதம் மேனன், செல்வராகவன், கே வி ஆனந்த் , AR முருகதாஸ், KS ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குனர்கள் இனி தெலுங்கு, ஹிந்தி படங்களை மட்டும் எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிடில் தங்களுடன் படம் பண்ண சொல்லி நிதிகள் "செல்லமாக" அழைக்கும் போது தலைவலி வயிற்று வலி , வாந்தி பேதி என்று கூறி எஸ்கேப் ஆகிவிடவும். தமிழ்நாட்டுக்கு புண்ணியமாகப் போகும்.

ஆனால் பாருங்கள் பதிவுலகில் சினிமாவை லட்சியமாகக் கொண்டு, எழுத்தை தவமாக கொண்ட சொம்படிக்கும் பதிவர்கள் யுவகிருஷ்ணா ,ஜாக்கி சேகர் போன்றவர்களுக்கு அடித்தது யோகம்.ஏற்கனவே பரசுராம் 55 மூலம் யு டியூபை கலங்கடித்தாயிற்று. வெள்ளித் திரையையும் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம், தங்கள் விமர்சனங்களில் புதிய தளபதியை புகழ்ந்து தள்ளியிருப்பதைப் பார்த்தால் அது நிஜமாகவே வாய்ப்பிருக்கிறது.

தமிழ்நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

Thursday, May 3, 2012

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு என் அனுபவம்-7

இதுநாள் வரை இயந்திரப் பொறியியல் துறையில் Design Engineer குறித்து சில விஷயங்களைப் பார்த்தோம்.இந்த பதிவில் வேலை வாய்ப்பு பற்றி பார்ப்போம்.இன்றைய கால கட்டத்தில் ஒரு இயந்திரப் பொறியியல் மாணவர் வேலை வாய்ப்பு குறித்து கவலைப்படத் தேவை இல்லை.உலகெங்கிலும் வாய்ப்புகள் பரவிக்கிடக்கின்றன.திரைகடலோடியும் திரவியம் தேடும் தில் இருந்தால் போதும். ஆப்பிரிக்க நாடுகளில் ஆசிரியர் வேலைகள், மத்திய கிழக்கு , அரேபிய தீபகற்பத்தில் Refrigeration and Air conditioning , Heavy Fabrication and erection  மற்றும் செங்கோவி அண்ணன் பணிபுரியும் குழாயில் துறை Pipinig என எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோக வடிவமைப்பு Design துறையில் பல நாடுகளிலும் சென்று பணிபுரியலாம்.


ஒரு இயந்திரப் பொறியியல் வல்லுனரால் கணினித் துறையில் மென்பொருள் வடிவமைப்பாளராகிவிட முடியும். என்னுடன் படித்த நிறைய நண்பர்கள் இன்று தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிகின்றனர். (நமக்கு இந்த C,C++, எல்லாம் வேலைக்காகவில்லை).Main Frame technology என்ற  தொழில்நுட்பம் கற்று IBM போன்ற நிறுவனங்களில் நுழைந்தவர்கள் அதிகம்.
என்னதான் இருந்தாலும் கல்வி கற்ற துறையிலேயே வேலை பார்ப்பது என்பது அலாதி அனுபவம்.ஒரு டிசைன் எஞ்சினியர் சாகும் வரையில் டிசைன் எஞ்சிநியராகவே இருக்க விரும்புவான்.அந்த உணர்வை இங்கே வார்த்தைகளில் எழுத முடியாது. அது உணரப்பட வேண்டிய ஒன்று.

தொடரின் துவக்கத்தில் கூறியது போல படிக்கும் போது arrears இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கியம். GE போன்ற நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க சில அடிப்படைத் தகுதிகளில் அதுவும் ஒன்று. சில நிறுவனங்கள் அதிகபட்சம் இரண்டு arrears மட்டும் ஏற்றுக்கொள்ளும்.

அரசுப்பணிகளில் ரயில்வே , IES Indian Engineering Service, மற்றும் பல UPSC Union public service Comission, ISRO, DRDO, மற்றும் பல போட்டித் தேர்வுகள் எழுதலாம்.இதுபற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

கல்லூரியில் படிக்கும் போதே உங்கள் விருப்பம் எந்தப் பிரிவில் என்று தெரிந்து கொண்டால் அது தொடர்பான திறன்களை மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கும். சிலருக்கு வாகனம் தொடர்பாக ஆர்வமிருக்கும், அவர்கள் Thermodynamics, thermal Engineering , Automobile, போன்ற பாடங்களின் அடிப்படைகளை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

சிலருக்கு Refrigeration and Air conditioning துறையில் ஆர்வமிருக்கும். அவர்கள் Thermodynamics, thermal Engineering, Heat and Mass Transfer போன்ற பாடங்களில் நல்ல தேர்ச்சி இருக்கவேண்டும்.

இதுபோக இயந்திரப் பொறியியல் துறையின் எந்தப் பிரிவுக்கு வேலைக்கு செல்லவேணடுமென்றாலும் "Engineering  drawing, Engineering Mechanics, Strength of materials" போன்ற பாடங்களின் அடிப்படைகள் தெரிந்திருக்க  வேண்டும்.

நான் சொல்வது மிகவும் அடிப்படையான விஷயங்கள் தெரிந்திருந்தால் போதும் என்பதே. படித்த அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. எனவே நேர்முகத்தேர்வில் உங்களிடம் கேள்வி கேட்பவர்கள் எதிர்பார்ப்பது உங்களுக்கு அடிப்படை அறிவு அனைத்து பாடப் பிரிவுகளிலும் உள்ளதா என்பதே. அதனை சமாளித்து விட்டால் போதும்.வேலையை பெற்றுவிடலாம்.

இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் கோலோச்சும் அனைத்து பெரிய நிறுவனங்களும் , இயந்திரப் பொறியியல் டிசைன் துறையில் கால்பதித்துள்ளன.Infosys , CTS, TCS, Wipro  என அனைத்து பெரிய நிறுவனங்களும் வாகன உற்பத்தி, விமானம், கனரக இயந்திரங்கள் போன்ற அனைத்து துறைக்கும் டிசைன்   சேவையை அளிக்கின்றன.இவை போன்ற நிறுவனங்கள் "Service Providers". 

இதுபோக OEM (Original Equipment Manufacturer என்ற வகையில் நிறுவனங்களின் design center கள் இந்தியாவில் நிறைய உள்ளன. அதாவது மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய டிசைன் சென்டர்களை இந்தியாவில் நிறுவியுள்ளன.இது TCS,Infosys,Wipro போல அன்று. TCS போன்ற நிறுவனங்கள் பல நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும். ஆனால் OEM தனக்கான தேவையை தன்னுடைய  design center கள் மூலமாக பெற்றுக்கொள்ளும்.

ஒரு டிசைன் என்ஜினியர் ஆவதற்கு அடிப்படைத் தகுதி பாடங்களில் அடிப்படைகளில் பலமாக இருத்தல் மற்றும் ஏதேனும் ஒரு 3D CAD Modelling Software அறிந்து வைத்திருப்பது.இன்றைய சூழ்நிலையில் பெருவாரியான நிறுவனங்கள் PRO-E என்னும் சாப்ட்வேர் உபயோகிக்கின்றன.
இதுபோக Catia,Unigraphics, Solidworks  என பல மென்பொருட்கள் உள்ளன.

Robert Bosch  போன்ற நிறுவனங்கள் "Internship" "Apprenticeship" தகுதித் தேர்வுகள் நடத்தி பயிற்சி அளிக்கின்றன.இவைகள் மூலமாகவும் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

Central Institute of Plastic Engineering & Technology (CIPET) இல் பட்டயப் படிப்புகள் படிப்பவர்களுக்கு பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வடிவமைக்கும் நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

Atlantis lab போன்ற சில நிறுவனங்கள் PRO E  பயிற்சியும் அளித்து வேலை வாய்ப்பு பெறவும் உதவுகின்றன. ஆனால் கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்.

ஒரு வழியாக ஒரு வேலை கிடைத்தாயிற்று. எப்போதும் நமக்கு வழங்கப்படும் முதல் ப்ராஜக்ட் சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும், முடிவு எப்படி இருந்தாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் முக்கியம். நிர்வாகம் நம்முடைய ஆளுமையை நாம் எடுக்கும் முயற்சிகளைக் கொண்டே கணிக்கும். 21 அல்லது 22 வயதில் கல்லூரியை முடித்து வந்திருப்போம்.விளையாட்டு மனப்பான்மை முற்றிலும் அகலாத பருவம்  இது. விளையாட்டுத் தனமாக பணியில் இருந்தாலும் சிறப்பாக வேலையை முடித்தால் பிரச்சனை இல்லை.ஆனால் வெறும் விளையாட்டு பணி உயர்வினையும் சம்பள உயர்வினையும் பாதிக்கும்.எனவே கவனம் தேவை.


இதுநாள் வரையில் நான் இங்கு பகிர்ந்து கொண்டது பெரிதும் என்னுடைய அனுபவங்களே. இதில் நான் பகிந்து கொண்டவை முற்றிலும் சரியானது என்பது என் வாதமல்ல.நான் கூறியவற்றில் தவறுகள் இருக்கலாம். இதில் நான் தெரிந்து கொள்ளத் தவறியவை , அடி வாங்கி கற்றுக் கொண்டவை போன்றவற்றைப் பகிந்துள்ளேன்.என்றாவது ஒருநாள் யாருக்காவது ஒருவகையில் பயன்படும் என்கின்ற நம்பிக்கையில்.

வாழ்த்துக்களுடன்