Sunday, May 1, 2011

தல போல வருமா ?

ஒரு மனிதன் எப்படி ஒரு நடிகனின் ரசிகனாகிறான் ? சிறுவயது முதலே ஒரு நடிகன் நடித்த படத்தின் பாடல்களைக் கேட்டோ , அவன் நடித்த படங்களில் உள்ள சண்டைக் காட்சியைப் பார்த்தோ , அவன் செய்யும் ஸ்டைலான செயல்களினாலோ ரசிகனாகிறான் . அந்த வகையில் பாடல்கள் மூலமாக நான் கமலின் ரசிகனானேன் , சண்டைக்காட்சிகளில் விஜயகாந்தை ரசித்தேன் , ஸ்டைலில் சூப்பர் ஸ்டார் ரஜினியை ரசித்தேன் .. அதாவது அந்த சிறுவயதில் நான் மட்டுமில்லை பொதுவில் எல்லாரும் சண்டைக்காட்சிகள் ரசிப்போம்.. எங்கவீட்டுப்பிள்ளை MGR நம்பியாருக்கு எதிராக சாட்டையை சுழற்றியபோது MGR ரசிகனாகவும் இருந்தேன் .. அதெல்லாம் ரொம்ப சின்ன வயது .. இன்ன நடிகர் தான் என்றில்லாமல் சண்டை போடும் எல்லா நடிகர்களும் எனக்குப் பிடிக்கும் .. ஒரே ஒரு விஷயம் அவர்கள் பேன்ட் அணிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.. அதுவும் பெல்பாட்டம் பேன்ட் என்றால் ஆகாது.. இறுக்கமான பேன்ட் அணிந்திருக்க வேண்டும். ஷூ வுக்குள் பேன்ட்டை விட்டிருந்தால் ரொம்பவும் குஷியாகிவிடுவேன். அதனாலேயே ரஜினி ஜெய்சங்கர் போன்றோரின் கவ்பாய் படங்கள் மிகவிருப்பம்.. அதன் பாதிப்பில் நானும் சாக்ஸ்க்குள் பேன்ட்டை சுருட்டிவிட்டு பெரிய ஹீரோ மாதிரி நினைத்துக்கொண்டு அலப்பறை பண்ணியிருக்கிறேன் .. சொல்லவந்தவிஷயத்திலிருந்து சற்றே விலகிவிட்டேன்.விஷயத்திற்கு வருவோம்.

ஒரு நடிகனின் ஆத்மார்த்தமான ரசிகனாக உருவெடுப்பது ஒரு 14 அல்லது 15 வயதிலிருந்துதான். விதிவிலக்கு ரஜினி மட்டுமே. சின்னக் குழந்தை முதல் வயதானவர்கள் என எல்லாரையும் கவர்ந்த அவர்போல உலகளவில் ஒருத்தரும் கிடையாது. சிறுவயதில் நகைச்சுவைக் காட்சிகளும் காதல் காட்சிகளும் படங்களில் நமக்கு போரடிக்கும். சண்டை மற்றும் நடனம் மட்டுமே பிடிக்கும் .அதனால்தான் என்னவோ இன்றைய குழந்தைகளுக்கு விஜயைப் பிடிக்கிறது . ஆனால் விடலைப்பருவத்தில் நமக்கு நகைச்சுவையும் காதல் காட்சிகளும் பிடிக்க ஆரம்பிக்கும். One Hero worship துவங்கும்.அப்படியான தருணத்தில் ஆசை , காதல் மன்னன் ,வாலி, அமர்க்களம், தீனா என்று அஜித் அசத்த ஆரம்பிக்க , இன்றைய ஒட்டுமொத்த தல ரசிகர்களுமே அந்நாளில் தான் தலையின் ரசிகனாக உணர ஆரம்பித்திருப்போம். விஜய் அளவுக்கு நகைச்சுவை நடிப்பு தெரியாது, நடனம் தெரியாது , வசன உச்சரிப்பும் சிறப்பில்லை போன்ற குறைபாடுகளுடன் அஜித் பற்றி மற்றவர்கள் தூற்றிக்கொண்டிருந்தபோது எனக்கு தலையிடம் தென்பட்டதெல்லாம் அவரிடம் இருந்த ஒரு விதமான ஸ்பார்க் தான் கண்களில் பரபரப்பைத் தேக்கி வைத்திருந்த அந்தப் பொறிதான் . ஜெயிக்கவேண்டும் என்ற அவரின் வைராக்கியமே அத்தனை குறைகளையும் மறைத்து இன்னும் அவரை அழகாக்கியது. குழந்தைகளும் பெரியவர்களாக மாறும் ஒரு 14 வயதில் அஜித் படங்களைப் பார்த்தால் கண்டிப்பாக அந்த மனிதனின் தகிக்கும் வேகம் அவர்களுக்குப் பிடிக்கும்.


அஜித்தின் மாபெரும் பலமாக இருப்பதே எத்தனை தோல்விகள் வந்தாலும் தளாராத அவரது தன்னம்பிக்கையும் பக்கபலமான மிகப்பெரிய ரசிகர் கூட்டமும்தான். உண்மையிலேயே மிகப்பெரிய ரசிகர் கூட்டம், எப்படிஎன்றால் ரஜினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரசிகர் படை.
இன்றைக்கு காசு கொடுத்து கட் அவுட்டுக்கு பாலூற்ற சொல்லும் ஜீவா போன்றவர்கள் அஜித்தின் ரசிகர்களில் 100 இல் ஒரு பங்கு இருந்தாலே , எடுரா வண்டிய .. விடுடா ராமேஸ்வரத்துக்கு என்று உண்ணாவிரதமிருந்து தமிழக மீனவனையும் ஈழத்தமிழனையும் காப்பாற்றி இருப்பர்.
இப்படி சுயலாபத்துக்காக ரசிகனை மொட்டை அடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் எனக்கு இனி ரசிகர் மன்றமே வேண்டாம் என்று உதறிய தலயை 
யார் தூற்றினாலும் என் போன்ற எண்ணிலடங்காத தல வெறியர்கள் அப்படியேதான் இருப்போம் தலையின் வெறியனாகவே.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கே இந்த முடிவு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் தல எப்பவுமே முதலில் வீட்ட நல்லா பாத்துக்கோங்க அப்புறம்தான் ரசிகர் மன்றம் என்றே கூறிவருபவர். எனவே அவரது முடிவு என்போன்றவர்களால் வரவேற்கப்படுமே ஒழிய வருந்த வைக்காது. ரஜினியே கூட பாபாவுக்கு நேர்ந்த எதிர்ப்பால் பாமக வுக்கு எதிராக இருந்து ரசிகர்களைத் தூண்டி  பின்பு கலைஞரையும் பாமக கூட்டணியையும் ஆதரித்து ரசிகர்களை கேனையர்களாக மாற்றினார். ஆனால் தல தெளிவாக, ரசிகர்கள் கைமீறிப் போனதும் நாகரிகமாக தான் நற்பணி மன்றங்களை கலைத்துவிட்டார். ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்து முதலமைச்சர் பதவிதான் என்று கனவுகாணும் நடிகர்களுக்கு மத்தியில் , நடிகர்களின் பலமான ரசிகர் மன்றங்களையே கலைக்கும் முடிவு அஜித்தின் நெஞ்சுரத்திற்கு ஒரு சான்று.


இத்தனை வருடங்களாக அவர் எவ்வளவு பக்குவமடைந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. வாய்க்கொழுப்பு நடிகரென்று அவரை இகழ்ந்த பத்திரிகைகள் எல்லாம் இன்று அவரைப் பார்த்து வாயடைத்து நிற்கின்றன. ச்சே என்ன ஒரு முடிவுடா..? நீதாண்டா பொதுவாழ்க்கையில் நடிக்காத ஒரே நடிகன் என்று போற்றுகின்றன.
தன்னுடைய லட்சியமான கார் ரேசில் கலந்துகொள்ளக் கூட தானே உழைத்து சம்பாதித்து கோடிகளைக் கொட்டி கலந்துகொண்டவர் அஜித். அதில் கூட 
தன்னால் யாருக்கும் பாதிப்பு வரக் கூடாது என்று படங்களைத் தவிர்த்து நஷ்டங்களை சம்பாதித்தவர் அஜித். உண்மையிலேயே இவர் அரசியலுக்கு வந்திருந்தால் ஒரு மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் தவிர்த்து நம்முள் ஒருவராக இருக்கவே அவர் விரும்புகிறார். அவருடைய எளிமைக்கு ஒரு சின்ன உதாரணம், ஓட்டளிக்கும் இடத்தில் கூட வரிசையில் ஒருவராக நின்று காத்திருந்து ஓட்டளிக்கிறார் . இத்தனைக்கும் மக்கள் அவரை முதலில் போக அனுமதித்தும் மறுக்கிறார்.தனக்கிருக்கும் பிரபலம் என்ற பிம்பத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று எண்ணுபவர் அஜித்.


அவருடைய இந்த முடிவினால் அவர் சில ரசிகர்களை இழக்கலாம். ஆனால் எண்ணற்ற நடுநிலை சினிமா ரசிகர்கள் மனதிலும் , என் போன்ற தல வெறியர்கள் மனதிலும் இன்னும் நூறு படிகள் மேலே ஏறி இருக்கிறார் .
என்றுமே நம்ம தல போல வருமா? 


பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல ..!