Sunday, September 15, 2013

ஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்!

சாரு  நிவேதிதா தனது நண்பர்களோடும் ஜெயமோகன் தனது நண்பர்களோடும் சில வாரங்களுக்கு முன் இமயமலை நோக்கி ஒரு பயணம் சென்று திரும்பி வந்தது நாம் அனைவரும் அறிவோம். ம்ம்ம் ..சரி சரி நம்மில் சிலபேர் அறிவோம். அதுவொன்றும் சரிந்து விழும் இந்தியப் பொருளாதாரத்தை  நிமிர்ந்து எழச் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் இல்லை என்றாலும் வலையுலகில் அது குறித்து சிற்சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. சாரு நிவேதிதா  இமயம் செல்ல தேர்ந்தெடுத்த பாதை மிக மிக அபாயமானது என்றும் இடுப்பு செத்த பயலுவள் தான் சொகுசான பாதையில் செல்வர் என்று ஜெயமோஹனை இடித்துரைத்தது தனது பயணத்தின் துவக்கத்திலேயே நடந்தது.  ஜெயமோகன் இதுகுறித்து எந்த ஒரு எதிர்வினையும் எழுப்பாமலேயே சென்று வந்து பயணத்தை பற்றிய தொடரையும் எழுதிக் கொண்டிருக்கிறார். 

சாருவின் தொண்டரடிப் பொதிகளில் முக்கியமான ஒருவரான பிச்சைக்காரன் அண்மையில் கவிஞர்...? ரியாஸ்  குரானாவிடம் ஒரு பேட்டி  என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

சாரு இமயம் போனால் , ஜெயமோகனும் போகிறார்,,,அவர் கல்யாணத்துக்கு போனால் இவரும் போகிறார்...உங்கள் கருத்து ? :)  

அட இதிலென்னப்பா இருக்கிறது ? இருவரும் ஒரே சமயத்தில் (கிட்டத்தட்ட) இமயமலை சென்றது ஒரு தற்செயல் நிகழ்வுதான். மரபான பாணியில் ஒரு பயணக் கட்டுரையும் பின் நவீனத்துவ , transgression பாணியில் ஒரு பயணக்கட்டுரையும் கிடைக்கிறதே என்று எளிதாக எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்.
மாறாக தமிழர்தம் குலத்தொழிலாம் பகடி மட்டுமே என் பணி என்று கிண்டல் மட்டுமே வருகிறது பிச்சைக்காரரிடமிருந்து.
சாருவின் அண்மைய பயணங்கள் பற்றி எனக்கு ஒரு ஞானமும் இல்லை. ஆனால் கூபா செல்ல வேண்டும் லத்தீன்அமெரிக்கா செல்ல வேண்டும் என்று உண்டியல் குலுக்கியது மட்டும் என் கேடு கேட்ட நினைவில் வந்து தொலைக்கிறது.

ஜெயமோகனின் பயணங்கள் பற்றி ஒரு நான்கைந்து வருடங்களாக நாம் படித்து வருகிறோம். வடகிழக்கு நோக்கிய இரு பயணங்கள், அருகர்கள் சென்ற பாதையில், குகைகளை நோக்கிய ஒரு பயணம், அமெரிக்க பயணக் குறிப்புகள் , புல்வெளி தேசம் என்னும் தலைப்பில் ஆஸ்திரேலியப் பயணக் குறிப்புகள் என்று   அவை வெளியாகிவந்த காலகட்டத்தில் ஒவ்வொருநாளும் அந்த உடனடி நிகழ்வுகளை தன்னுடைய கூர்ந்த மொழிநடையில் ஜெ தன்னுடைய தளத்தில் வெளியிட்ட போது சுஜாதாவின் தொடர்கதைகளை பத்திரிகைகளில் ஒவ்வொரு வாரமும் காத்திருந்து படிப்பதைப் போன்ற உணர்வினைப் பெற்றேன். 

எத்தனையோ நாட்கள் கடுமையான அலைச்சலுக்குப் பிறகும் மின்னல் போல உடனுக்குடன் பதிவுகளை எழுதி சரியான புகைப்படங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய மிகுந்த ஈடுபாடு வேண்டும்.  இம்முறை கூட இமயத்தில் இணையத் தொடர்பு  வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே ஜெவால் உடனடிப் பதிவுகள் எழுத இயலாமல் போயிற்று .

அது போகட்டும், சாரு என்ன கூறுகிறார் ? ஜெ யின் கட்டுரைகள் விக்கிபீடியாவிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டது என்று. ஒரு நகரைப் பற்றிய தகவல்களுக்கு , வரலாறு பெயர்க்காரணம் போன்றவை குறித்து அறிவதற்கு விக்கிபீடியா பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
இன்று இந்தியாவில் இந்தியராகப் பிறந்தாலும் ஒரு தென்னமேரிக்கராகவே  வாழும் தென்னமேரிக்கர் போலவே "Espanol" அதாம்பா ஸ்பானிஷ் பேசும் சாருவிற்கு ( அதுசரி சாரு ஸ்பானிஷ் பேசி ஸ்பானிஷ் தெரிஞ்ச யாராவது கேட்டிருக்காங்களா?) வேண்டுமானால் எல்லா நகரங்களைப் பற்றிய வரலாற்றுப் பின்புலம் தெரிந்திருக்கலாம்.( ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் நிற்கும் ஜாதகம் உடைய ஒரு மனிதன்.! ). ஆனால் சாமானிய மனிதனாகிய ஜெ  வுக்கு விக்கிபீடியா உதவி செய்தது எவ்வளவு பெரிய தவறு?   முதல் வேலையாக விக்கி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.


சாரு இப்படி என்றால் பிச்சைக்காரன் ஒரு படி மேலேயே போய்விட்டார் 

**///"அதாவது சாரு இமயமலை போனால் , அங்கு சாரு மறைந்து இமயமலையாகவே ஆகி விடுகிறார். ஜெமோ போனால் , அங்கு மலை இருப்பதில்லை...ஜெமோதான் இருப்பார்

இங்குள்ள சிலர் ஐரோப்போ சுற்றூலா செல்லுவார்கள். 10 நாட்களில் 12 நாடுகள் செல்வார்கள்
எப்படி அது முடிகிறது என தெரியவில்லை


ஜெ ஒரு விமானம் பிடித்து இமயமலையின் ஒரு பாதுகாப்பான இடதுக்கு போய் அமர்ந்து , இமயத்தின் வழியே என தான் படித்ததை எழுதுவார்
ஆனால் சாரு , இமயமலை வாழ்வை வாழ்ந்து விட்டு வந்து இருக்கிறார்

என்றாவது ஒரு நாவலில் அது வீரியத்துடன் வெளிவரும்.. அதாவது அவர் பயணம் , நம் ஒவ்வொருவரின் அனுபவம் ஆகி விடும்..ஆனால் ஜெமோவை பொருத்தவரை , மற்றவர்களின் அனுபவங்கள்தான் அவர் பயணமாக இருக்கும் "///**

சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் மணி முத்துக்கள். 
அது எப்படி ஜெயமோகன் பத்து நாட்கள் பயணம் சென்றால் அது வெறும் பயணம் . சாரு  நிவேதிதா சென்றால் அது வாழ்க்கை அனுபவம்.?
அது பயணமா இல்லை வாழ்க்கை அனுபவமா என்பது பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். வெற்றுப் பகடி  "மட்டுமே" செய்யும் நமக்கு எப்படி தெரியும்? 

சாருவின் இமயமலைப் பயண அனுபவம்   என்றாவது ஒரு நாவலில் "வீரியத்துடன்" வெளிவரும் என்று பிச்சை சூளுரைக்கும்போதுதான் நமக்கு லேசாக கிலி பிடிக்கிறது. 
சாருவின் "வீரியத்தை" குப்பி கொடுத்தல் , குப்பி அடித்தல் என்னும் ரீதியிலேயே படித்துப் பழகிவிட்டதால் மேற்படி வாசகம் பீதியை ஏற்படுத்துவதில் வியப்பொன்றும் இல்லை. புனிதமான இமயமலை சாருவின் எழுத்தில் நல்லபடியாக வர சாருவின் ஞானகுரு எல்லாம் வல்ல நித்தியனந்தாவைப் பிரார்த்திக்கிறேன்.