Thursday, July 29, 2010

தூர்தர்ஷன் சில நினைவுகள்

நிகழ்காலத்தில் கடந்த நாட்களை நினைத்துக்கொண்டே இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பார்கள். ஆனாலும், பால்யத்தின் நினைவுகளை மனம் மீண்டும் மீண்டும் அசை போட்டுக்கொண்டே இருக்கிறது.இன்றைய சூழலில் ஒருவருடைய வாழ்வின் மிகச்சிறந்த நாட்கள் தம் 15 ஆம் வயதுக்குள்தான் நிகழ்கின்றன என்பது என் எண்ணம்.அதன் பிறகு அவனுக்கு வாழ்வைப்பற்றிய பயமுறுத்தல்களே ஊட்டப்படுகின்றன . பத்தாவது படிக்கும்போது எப்படியாவாது பத்தாவது நல்லா படிச்சீங்கன்னா அப்புறம் கவலை இல்லை என்றனர் ஆசிரியர்கள். தமிழ் வாத்தியார் சுப்பிரமணியன் சொன்னார், பன்னண்டாங் கிளாஸ்ல நல்லா படிச்சு டாக்டருக்கோ இஞ்சினீரிங்குக்கோ போனீங்கன்னா பிறகு லைப்ல கவலை இல்லடே, எனக்கு தெரிஞ்சு ஏழெட்டு வருசமா டாக்டர் படிக்கவன் இருக்கான், என்றார்.கல்லூரியில் சேர்ந்த போது இந்த நாலு வர்ஷமும் நல்லா படிச்சு நல்லா வேலைக்கு போயிட்டா அப்புறம் உங்கள யாரு படிக்கச் சொல்லப் போறாங்க? அப்புறம் நீங்கதான் ராஜா என்றனர். இப்படியாக இலக்குகள் மாறியதே தவிர பயமுறுத்தல்கள் குறையவே இல்லை.
வேலையிலும் கூட இப்போ ஹார்ட் வொர்க் பண்ணினீங்கன்னா அப்புறம் ஹாயா இருக்கலாம் என்று வேலைத் திணிப்புகள்.அப்படியென்றால் எப்பொழுதுதான் ஒரு மனிதன் கவலையின்றி வாழ்வது? பால்யத்தின் நினைவுகள் மட்டுமே எண்ணிப் பார்க்கும்தோறும் மகிழ்ச்சியை அளிக்க வல்லது. சிலருக்கு கசப்பான அனுபவங்களும் இருக்கலாம் .பொதுவில் மகிழ்ச்சியே அதிகம் இருக்கும் என்று நம்புகிறேன்.சில நாட்களுக்கு முன்னால் "போயின அந்நாட்கள்" "gone are the days" என்று ஒரு மின்னஞ்சல் வந்தது.

அந்த மின்னஞ்சலில் என்னுடைய சிறுவயதின் காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவை இடம் பெற்றிருந்தன. அப்பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அடையாளமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்தன.

கீரிப்பாறையில் 1988 இல் டயனோரா வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினோம். ஆன்டனா, டிவி பூஸ்டர், ஆன்டனா பூஸ்டர் ,ஸ்டெபிலைசர் என்று 12 ஆயிரம் ஆனதாக அப்பா சொன்னார்.எட்டு சானல்களுக்கு தனித்தனி பட்டன்கள் இருக்கும்.மலைப்பகுதி ஆனதால் டிவி புள்ளி புள்ளியாகத் தெரியும்.பெரும்பாலும் பகல் நேரங்களின் திருவனந்தபுரம் மண்டல ஒளிபரப்பின் கதகளி மட்டுமே தெரியும்.நான் சட்டை செய்ததில்லை. எனக்கு விளையாட காடும் ஓடைகளும் இருந்தன.முழங்கால் வரை சருகுகள் மூடிய ரப்பர் காடுகளில் பயமின்றித் திரிந்திருக்கிறேன்.
ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் எங்கள் வீட்டில் ராமாயணம் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் கூடிவிடும். மலையாளம் கலந்த தமிழ் தவிர வேறு மொழிகளே அறிந்திருக்காத மக்கள் ராமனையும் சீதாவையும் தந்திரக்காட்சிகளையும் பார்த்து மகிழ்வார்கள்.ஒன்றும் புரியாததால் நான் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டேன். 
 
 
 
 
 
 
 
 
 
 
   
 
 
கீரிப்பாறையில் ஒருநாளும் டிவியில் வண்ணம்  தெரிந்ததில்லை. அப்போது VCR எனப்படும் டெக் பிரபலமாகத் தொடங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் பள்ளி விடுமுறை சமயங்களில் ஐந்தாறு குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து டெக் மற்றும் கேசட்டுகள் வாடகைக்கு எடுத்து படங்கள் பாப்போம்.அப்போது மட்டுமே கலரில் தெரியும் டிவியை மிகுந்த விருப்பத்துடன் பாப்போம்.
 
அங்கிருந்து அப்பாவுக்கு அருப்புக்கோட்டைக்கு மாற்றலாகியவுடன் முதன் முதலில் டிவி கலரில் தெரிய ஆரம்பித்தது. கொடைக்கானல் டிவி நிலையம் அருகில் இருந்ததால். துல்லியமான வண்ணத்தில் டிவி பார்ப்பதே அலாதியானது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நான் பார்த்த முதல் திரைப்படம் "வெற்றிக் கரங்கள்".அதுவும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகப் போகும் படம் பற்றி புதன் கிழமை எதிரொலி என்னும் நிகழ்ச்சியில் வாசகர் கடிதம் படித்துக்கொண்டே இருக்கும் போது கடைசியாகச் சொல்வார்கள்.அந்த அறிவிப்பிற்காக முழு நிகழ்ச்சியின் மொக்கைகளையும் பாப்போம்.
தூர்தர்ஷன் மட்டுமே தெரிந்த அந்த நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகள் மிகுந்த எதிர்பார்ப்பினை அளித்தன. இரண்டு அரைவட்ட வடிவங்கள் "சங்கீத ஸ்வரங்கள்" என்னும் அழகன் படப் பாடலில் இறுதியில் வரும் ஓசையோடு சுழலுவதில் ஆரம்பிக்கும் அன்றைய ஞாயிறின் பொழுது.அப்பா காலையில் ரங்கோலி பார்க்க ஆரம்பிக்கும் போது அரைத் தூக்கத்திலேயே அந்நாளைய ஹிந்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விழிக்க மனமின்றி படுத்திருப்பேன்.
கார்ட்டூன் படங்கள் பார்க்க அவ்வளாக வாய்ப்பில்லாத அச்சமயங்களில் ஜங்கிள் புக் என்னுடைய விருப்பமான நிகழ்ச்சி.மோக்லி,பாலு,பஹீரா, மோக்லியின் ஓநாய் அம்மா, கண்ணைக்கவரும் வண்ணத்தில் நீலவானம் , நட்சத்திரங்கள் , ஷேர்கான் வில்லன் புலி,மோக்லியின் பூமாராங் என்று பலவுமாகச் சேர்ந்து என்னை அந்த உலகத்தினுள்ளே அழைத்துச் சென்றுவிடும்.

அப்புறம் ஜங்கிள் புக் முடிந்தவுடன் டக் டேல்ஸ் , டேல்ஸ் பின் என்று மனம் மகிழும் கார்டூன்கள் பார்ப்பேன். 

 

அதன் பிறகு வந்தது சந்திர காந்தா. மிகப் பெரும் செலவில் உருவாக்கப் பட்ட ஒரு ஹிந்தி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர். சந்திரகாந்தாவில் எப்போதும் இடி இடித்துக் கொண்டே இருக்கும். ராஜா அரண்மனையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல தொடர் முழுவதும் நடந்து கொண்டே இருப்பார்.

மகராஜா ஷிவ்தத்,குரூர் சிங் ,சனி, என்று பல கதாபாத்திரங்கள். யக்கு கதாபாத்திரம் எங்களிடையே மிகப் பிரபலம். தலையில் அடிபட்டால் மூளை குழம்பி முட்டாள் போல நடந்துகொள்ளும் காமடி வில்லன் கதாபாத்திரம் அது.


அப்புறம் அந்த தொடர் இடையிலேயே நிறுத்தப் பட்டது. பின்பு மகாபாராதம் ஒளிபரப்பானது,
1992 இல் தூர்தர்ஷனில் சில வெளிநாட்டுத் தொடர்கள் இடம்பெற்றன.ஓஷீன் எனும் ஜப்பானியத் தொடர், ஒரு ஏழை அனாதைப் பெண் ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருப்பாள்.


அவள் படும் கஷ்டங்கள், அவள் அவற்றை சமாளிக்கும் விதம் என்று கதை செல்லும். மொழி புரியாமலேயே கண்களில் நீர் வரவழைத்த நிகழ்ச்சி அது .மொழி அப்போது ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை.கேட்டலிலும் பார்த்தாலே உவகை அளிப்பதாக இருந்தது. ஜப்பானின் பனிக்காலம், கூசும் பனியின் ஒளி, என்ற அந்த காட்சிப் பிம்பம் இன்னும் கண்ணில் நிற்கிறது.
அப்புறம் ஜையண்ட் ரோபோ என்னும் குழந்தைகள் நிகழ்ச்சி , ஒரு ரோபோவுடன் சிறுவனின் நட்பு பற்றிய தொடர். ஒரு எதிரி ரோபோ நகரத்தை அழிக்க முயலும்போது ஜையண்ட் ரோபோவும் சிறுவனும் சேர்ந்து காப்பாற்றுவார்கள். சிறுவன் ஆபத்து நேரங்களில் கையில் கட்டியிருக்கும் வாட்ச் மூலம் ரோபோவை உதவிக்கு அழைப்பான். அதில் சிறுவன் ரோபோவின் கரங்களில் உட்கார்ந்து ரோபோவுடன் சேர்ந்து பறப்பான்.


இதே போன்று ஒரு ரோபோ கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.கடைசியில் நல்ல ரோபோவை கேட்ட ரோபோ அடித்து வீழ்த்தும்போது கமான் ஜையண்ட் ரோபோ கமான் என்று சிறுவனுடன் சேர்ந்து நானும் கதறியிருக்கிறேன்.
ஸ்டிரீட் ஹாக் (Street Hawk) என்னும் அதிரடித்தொடர்,ஒரு மோட்டார் பைக் சாகச வீரன் தன் பிரத்யேக பைக்குடன் செய்யும் அதிரடி சாகசங்கள். 

ஜேம்ஸ் பாண்டின் கார் போல இதில் ஹீரோவுக்கு பைக். பைக் பறக்கும், அதில் துப்பாக்கியிருக்கும் இன்னும் பல சிறப்பம்சங்கள் இருக்கும். எனினும் பைக்கில் உட்காந்திருக்கும்போது மட்டும்தான் ஹீரோ பலமுடன் இருப்பான். மற்ற சமயங்களில் அடிவாங்குவான்.

ஞாயிறு மாலை நாலேகால் மணியிலிருந்து நாலரை மணிவரை விளம்பரங்கள் ஒளிபரப்புவார்கள். கபில் தேவ் வரும் பூஸ்ட் விளம்பரம் சன் பிளவர் எண்ணையின் மிகப் பெரிய பூரிகள் வரும் விளம்பரம்,நிஜாம் பாக்கு விளம்பரம் என ஒரு கதம்பமாக அந்த பதினைந்து நிமிடங்களும் கழியும்.பின்பு இப்போது போல உலகத் தொலைகாட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்கிற அறைகூவல்கள் எதுவுமின்றி ஒரு படம் ஒளிபரப்புவார்கள். இடையில் திரைப்படம் தொடர்கிறது என்று நீளத்தைக் குறைக்கும் வேலைகள் நடக்கும்.

எப்போதாவது தலைவர்கள் மரணம் நிகழ்ந்தால் அன்று படம் கோவிந்தாதான். காலையிலிருந்து ஒரு கிழவர் "டொயிங் டொயிங் "என்று வீணை போல ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு முகாரியில் மூக்கைச் சீந்திக்கொண்டு இருப்பார். சரி எப்படியும் நான்கு மணிக்குள் இந்த இழுவை முடிந்துவிடும் என்று பார்த்தால் நான்குமணிக்கு மேலாகவும் தொடர்ந்து கொண்டிருக்கும். சரி நாலரை மணி ஆகவில்லையே என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டால் நாலரைக்கும் அவரே இம்சிப்பார்.லேசாக நம்பிக்கை இழந்தாலும் ஐந்து மணிக்கு ஒருவேளை படம் போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு ஐந்து மணிக்கு வந்து பார்த்தால் கிழவர் இன்னும் உற்சாகமாக முகாரியில் ஒப்பாரி நிகழ்த்திக் கொண்டிருப்பார். அப்படியே மனம் துவண்டு விடும். தலைவர் இறந்த துக்கத்தை விட படத்தை இழந்த எரிச்சலே அதிகம் இருக்கும்.
இதற்கிடையில் 1993 இல் சன் டிவி தனது ஒளிபரப்பைத் தொடங்கியது.பலரும் கால மாற்றத்திற்கேற்ப கேபிள் டிவி இணைப்பினைப் பெற்று பல டிவி சானல்களை பார்க்கத் தொடங்கினார்கள் .இருந்தாலும் தூர்தர்ஷன் தொடர்ந்து போட்டியில் இருந்தது.

பின்பு ஸ்ரீ கிருஷ்ணா, ஓம் நமச்சிவாயா, ஜெய் ஹனுமான், அலிப் லைலா என்று மந்திர தந்திர மாயக் காட்சிகள் நிறைந்த தொடர்களை ஒளிபரப்பி பார்வையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டது. 

 

தொண்ணூறுகளின் இறுதியில் சன் டிவியில் மர்மதேசம் மிகப் பெரும் பிரபலமாக விளங்கிய போது பள்ளியில் நண்பர்கள் இந்தவாரம் ராஜேந்திரன் என்ன பண்ணினான் தெரியுமா என்று பீற்றிக்கொள்வார்கள்.நாங்கள் பதிலுக்கு இந்த வாரம் ஜெய் ஹனுமான்ல என்ன ஆச்சு தெரியுமா என்று தூர்தர்ஷனை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
மிலே சுரு மேரா தும்ஹாரா என்ற பாடல் , ஒளியும் ஒலியும் இவையெல்லாம் தூர்தர்ஷனின் அடையாளச்சின்னங்கள்.


சுரபி , "Turning Point " போன்ற பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கிய தூர்தர்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக சோகை இழந்தது. (சித்தார்த் ஹக்கும் ரேணுகா சஹானேயும் நிகழ்ச்சியை வழங்கும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும்.இன்று மானாட மயிலாட கலா மாஸ்டர் கெமிஸ்ட்ரி கமெண்டுகள் கேட்கும்போது காதில் ரத்தம் வரும்.)


 
பல தமிழ் ஆங்கில சானல்களின் வரவால் தூர்தர்ஷன் காணாமல் போயிற்று. வெகுநாட்களுக்குப் பிறகு கல்லூரியில் விடுதியில் தூர்தர்ஷன் மட்டும் தெரியும். அப்போது வேறு வழியில்லாமல் பார்க்க நேர்ந்தது.
கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார். எல்லா நவீன தொழில்நுட்ப வசதிகளை வைத்துக்கொண்டிருந்தும் ஏன் தூர்தர்ஷன் தள்ளாடுகிறது என்று புரியவில்லை என்று. இனிமேல் அது மீண்டெழ சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
எப்படிஎன்றாலும் தற்போது 25 வயதை ஒத்தவர்களுக்கு பல இனிய நினைவுகளை அளித்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

Tuesday, July 13, 2010

ராஜா ரஹ்மான் சில பகிர்வுகள் - தொடர்ச்சி

இந்தப் பதிவு கடந்த பதிவில் நான் ராஜா ரஹ்மான் பற்றி எழுதியிருந்த என் தனிப்பட்ட கருத்துக்களுக்கு எதிவினையாற்றிய புருனோவின் கேள்விகளுக்கு என் பதில்.

முந்தைய பதிவின் எனது கருத்துக்களை இள நீலநிறத்தில் "Highlight" செய்தும் ,
டாக்டர் புருனோவின் எதிர்வினைகளை நீல நிறத்திலும்,
அதற்கான எனது பதில்களை வழக்கமான கறுப்பு நிறத்திலும் எழுதியுள்ளேன்.

புருனோ அவர்களின் நெடிய வினாக்களுக்கு என்னால் முடிந்தவரை பதிலளிக்க விரும்புகிறேன்.

//கொஞ்சம் ரஹ்மானின் பக்கம் வருவோம்.ரஹ்மானின் பெரிய பலம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி./
அந்த வளர்ச்சி அனைவருக்கும் பொது தான். மற்றவர்கள் அதை பயன்படுத்த வில்லை என்பதற்கு ரகுமான் எப்படி பொறுப்பு.

இப்படி தான் எழுத்தாளர் சுஜாதாவை பிடிக்காத கும்பல் ஒன்று கூறிக்கொண்டு அலைந்தது

"தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காலம் சார்ந்தது என்பதே உண்மை.இளையராஜா உச்சத்திலிருக்கும் போது கணிப்பொறி இந்தியாவில் ஆராய்ச்சி நிலையங்களில் மட்டுமே இருந்த விஷயம். தொழில்நுட்பம் இல்லாததற்கு இளையராஜா எப்படி பொறுப்பேற்க முடியும்? அவர் ஒன்றும் விஞ்ஞானி அல்லவே.வெறும் இசைஞானி தானே?
பிற்காலத்தில் கணிப்பொறி தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்த காலங்களிலும் இளையராஜா தன் பங்கினை சிறப்பாகவே செய்திருக்கிறார். காதலுக்கு மரியாதை, டைம், ஏன் தேவதை என்று நாசரின் ஒரு மொக்கை படத்திற்கு கூட பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார். "ஒருநாள் அந்த ஒருநாள் " பாடலின் இசை மிகபிரம்மாண்டமானது.
தற்போது தனம், வால்மீகி என்று அவரே மொக்கையாக சிலவற்றை அளித்திருப்பது எனக்கும் வருத்தம் தந்த விஷயம்தான்".

1992ல் சின்ன சின்ன ஆசை முதல் 2010ல் உசிரே போகுதே வரை ஒரு படத்தில் பாதி பாடல்களில் வார்த்தைகள் மிக மிக தெளிவாகவே உள்ளன

நேற்று இல்லாத மாற்றம்

என் வீட்டு தோட்டத்தில்

புத்தம் புது பூமி வேண்டும்

என்று உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் தற்சமயம் பக்கத்து அறையில் ஒலிப்பது கூட ரஹ்மான் பாடல் தான்.

கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை.

எனக்கு வார்த்தைகள் தெளிவாகவே கேட்கின்றன

நீங்கள் காது மருத்துவரை அணுகவும்.

காதில் பிரச்சனை இல்லை என்றால் எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

"அட புருனோ சார் நீங்களே ஒத்துக் கொண்டீர்களே.பாதி பாடல்களில் வார்த்தைகள் மிக மிக தெளிவாக உள்ளன என்று.எனில் மீதி பாடல்கள் தெளிவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறதுதானே?
இருப்பினும் நான் உதித் நாராயணனையும் சாதனா சர்கமையும் மிகவும் விரும்புகிறேன்.
உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றுதான், ரஹ்மானின் ஆரம்ப கட்டப் பாடல்கள் உன்னத தரம்.எந்த சந்தேகமும் இல்லை.என்னுடைய மொபைலிலும் கணிப்பொறியிலும் ரஹ்மான் ஆரம்ப காலப் பாடல்கள் நிறைய உள்ளன.
எனக்கு காது தெளிவாகத்தான் கேட்கிறது.வேறு எந்த மருத்துவரையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.தேவைப்பட்டால் உங்களிடமே வருகிறேன்."

//மற்றும் அவர் நம் மண்ணுக்கென உரிய விஷயங்களை குறைவாகவே இசைப் படுத்தியிருக்கிறார்.//

ஓ இளையராஜா மேற்கத்திய இசையை பயன்படுத்தவேயில்லையா.

குறை கூற வேண்டும் என்பதற்காக அபத்தங்களை அடுக்க வேண்டாம்.

"ராஜா மேற்கத்திய இசையைப் பயன்படுத்தவே இல்லை என்று நான் எந்தவகையிலும் கூறவே இல்லையே ? என் ஞாபகம் சரியென்றால் 1984 இல் வெளிவந்த (அப்போது நான் பிறக்கவே இல்லை ) எனக்குள் ஒருவன் திரைப்படத்தில் "எங்கே எந்தன் காதலி " "மேகம் கொட்டட்டும்"பாடல்களில் அவர் வழங்காத மேற்கத்திய இசையையா ரஹ்மான் உட்பட இன்றைய இசையமைப்பாளர்கள் வழங்குகிறார்கள்? கொஞ்சம் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூறுங்கள் பார்ப்போம்?"

/கண்டிப்பாக மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.படம் வெளியான சில வாரங்கள் மாதங்கள் அவற்றை ரசிக்க முடிகிறது.அப்புறம் எப்பொழுதாவதுதான் திரும்பவும் கேட்கத்தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க என் எண்ணமே.//

இது அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும் .ஒரு படத்தில் மெலடி பாடல்கள் மட்டுமே தான் காலம் கடந்தும் நிற்கும்.

வெற்றிவிழாவில் அனைத்து பாடல்களும் நல்ல பாடல்கள்தான்.ஆனால் இன்றும் சட்டென்று நினைவிற்கு வருவது பூங்காற்று என் பேர் சொல்ல தான்.

"அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் அப்படியே பொருந்திவிடாது. ஜெமினியில் "ஓ போடு" திருடா திருடியில் "மன்மதராசா" மிகச்சிறந்த துள்ளிசைப் பாடல்கள் என்பதில் ஐயமில்லை.எனினும் தற்போது அவற்றை கேட்க சற்று ஆயாசமாக உள்ளது. உங்களுக்கு ஒருவேளை அப்படி இல்லாமலிருக்கலாம்."

//இப்போது ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.ரஹ்மான் ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்களே இசையமைப்பார்.ராஜாவோ 80 களில் தொடங்கி 90 களின் பாதிவரையில் ஆண்டுக்கு 20 படங்களுக்கு குறையாமல் இசையமைத்திருக்கிறார்.//

ரகுமானின் இசையில் வரும் சின்ன சின்ன விஷயங்களை கவனித்தால் அதற்கு (பாடல் பதிவிற்கு) தேவைப்படும் உழைப்பு என்பது இளையராஜாவின் பாடல் பதிவிற்கு தேவைப்படும் உழைப்பை விட அதிகம் என்று புரிந்து கொள்ளலாம்.

"ஒரு சிறிய கணக்கு உங்கள் கவனத்திற்கு. நடிகர் மோகன் 1981 muthal 1988 அல்லது 1989 வரை 25 வெள்ளிவிழாப்படங்களில் நடித்திருக்கிறார். சராசரியாக ஒரு வருடத்திற்கு மூன்று வெள்ளிவிழப்படங்கள்.வருடம் முழுவதும் அவரது திரைப்படங்கள் திரையரங்களில் ஓடிக்கொண்டே இருந்திருக்க வேண்டும்.படங்களின் கதையும்,பாடல்களும் மட்டுமே இதனைச்சாதிக்க உதவின.சில படங்கள் பாடல்களுக்காக மட்டுமே ஓடின.பட்டியலிட்டால் இன்னும் நீளும். எல்லாப் பாடல்களும் இன்றளவும் மோகன் ஹிட்ஸ் என்றே ரசிகர்களால் விரும்பப்படுவன. காரணம் ராஜா.
ரஹ்மானும் இது போல பாடல்களுக்காக படங்களை ஓட வைத்திருந்தாலும் தொடர்ச்சியாக ராஜா போல வழங்கியதில்லை.
சங்கமம்,பவித்ரா,மேமாதம், விக்ரமனின் புதிய மன்னர்கள், என்று சிலவற்றைக் கூறலாம்."

அடுத்த விஷயம் : ரகுமான் உலகம் முழுவதும் செல்ல வேண்டியுள்ளது :) :) :) :)

"ராஜாவின் காலத்தில் இந்தியாவில் மற்றும் உலக அளவில் நிலவியப் பொருளாதார சூழலும், தொழில்நுட்பம் இணைய தளம் போன்ற வளர்ச்சிகள் இல்லாததாலும் ,ராஜாவுக்கு உலக அளவில் தன்னுடைய இசையை "Marketing" செய்யும் தேவை இல்லாமல் போனது.இந்திய சினிமா குறிப்பாக ஹிந்தி சினிமா வளர்ச்சியடையத் தொடங்கிய போதுதான் மணிரத்னம் போன்றோரால் ரஹ்மானின் இசை ஐரோப்பிய கண்டத்தை ஆக்கிரமித்து அதன் மூலமாக வந்ததே ஹாலிவுட் பட வாய்ப்புகள்.மேலும் "Concert" கள்."

//ஒவ்வொரு படத்திலும் குறைந்தது 3 பாடல்களாவது பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றிப் பாடல்கள்.//

இது அனைத்து ராஜா படங்களுக்கும் பொருந்தாது என்பது உங்களுக்கு தெரியாது.

"கண்டிப்பாக ஒத்துக் கொள்கிறேன்.வருடத்திற்கு 20 படங்கள் இசையமைக்கும் போது 25 சதவிகித படங்கள் சோபிக்கவில்லை என்பது பெரிய விஷயமில்லைதான்.ஆனால் வருடத்திற்கு 3 படங்கள் தரும்போது எல்லாமும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று ஒரு ரஹ்மானின் ரசிகனாக எதிர்பார்ப்பதில் என்ன தவறு?"

//இல்லாவிடில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றவை.//

இது அனைத்து ராஜா படங்களுக்கும் பொருந்தாது என்பது உங்களுக்கு தெரியாது.

"என்னால் சில பட்டியல்கள் தர முடியும் காதல் ஓவியம்,சிந்து பைரவி,அக்னி நட்சத்திரம் ,மௌனராகம்,இன்னும் மோகன் படங்கள் என அனுமார் வால் மாதிரி நீளும்."

//இன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளில் எல்லா பாடல் போட்டிகளிலும் ராஜாவின் பாடல்களே அதிகம் பாடப் படுகிறது.//

ஹி ஹி ஹி நீங்கள் போட்டி எல்லாம் பார்ப்பதில்லையா சார்
"ராஜாவின் பாடல்கள் மட்டுமே பாடப் படுகிறது என்று கூறவில்லை.அதிகமாக அவரது பாடல்களே பாடப் படுகிறது என்றே கூறினேன்.உண்மை என்ன என்று தமிழக மக்களைக் கேட்டு தெரிந்து கொள்ளவும்."

//ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றது தேர்ந்த விளம்பர வியாபர யுக்திகளினால் அந்த திரைப்படம் உலக அரங்கில் வைக்கப்பட்டதன் மூலமாகத்தான்.//

சீச்சி இந்த பழம் புளிக்கும் என்ற நரி நினைவிற்கு வருகிறது

ராஜாவை இசையமைக்க ஒரு ஹாலிவுட் இயக்குனரும் கூப்பிட வில்லை சார்.ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்தால் தான் ஆஸ்கர் கிடைக்கும்.

அதை புரிந்து கொள்ளுங்கள்.

"மேற்கத்திய இசையை மறுஆக்கம் செய்ததினால்தான் ரஹ்மானுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்கிறேன் நான் நீங்கள் மறுக்கிறீர்களா புருனோ சார்? நான்கூறிய வரிகளில் உண்மை இல்லை என்று உங்களால் திட்டவட்டமாக மறுக்க முடியுமா?ஆஸ்காருக்கு ரஹ்மான் உரியவரே.ஆனால் அதை வைத்து இளையராஜா திறமையற்றவர் எனும் ரீதியில் பேசும் நண்பர்களுக்காகவே இவ்வரியை நான் எழுதினேன்.ரஹ்மானின் எழுச்சியின் போது ராஜா கிட்டத்தட்ட ஒய்வு பெற்றுவிட்டார். அவர் போட்டிக்கே இல்லை. அதற்காக ராஜாவைத் தாழ்த்துவது எவ்விதத்தில் நியாயம்?

//ஜெய்ஹோ பாடலைவிட அவருடைய மற்ற எத்தனையோ துள்ளிசைப் பாடல்கள் தமிழிலும் ஹிந்தியிலும் எவ்வளவு சிறப்பாக உள்ளன என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.//

"ஆமாம் சார் ஆஸ்கர் என்பது தமிழ் படத்திற்கு அளிக்கப்படும் விருது கிடையாது.

உண்மை அது ஒரு ஹிந்தி - ஆங்கிலத் திரைப்படம்.பிரிட்டிஷ் இயக்குனரால் இயக்கப் பட்டது.என் வருத்தம் ஜெய்ஹோ பாடலை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் என்பதே. மாறாக ரஹ்மானுக்கு கிடைத்துவிட்டதே என்னும் பொறாமை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்."

/இளையராஜா உலக இசையின் சாற்றினை இந்திய இசையில் கலந்தார்.ரஹ்மானோ உலக இசையை (மேற்கத்திய இசையை) மறு ஆக்கம் செய்கிறார்.//

ரகுமானோ இந்திய இசையை உலகிற்கு அளிக்கிறார்

"இந்திய இசையான இந்துஸ்தானியா? கருந்தமிழ்நாட்டிசையான கர்நாடக இசையையா அவர் உலகுக்கு அளித்தார்? அவர் வழங்குவது கலவை "Fusion" எனலாம்.ராஜாவும் இதைதான் செய்தார்.ஆனாலும் நம் பாரம்பரியமான இசை சிதையாமல் செய்தார்."

// "Originality" என்பது ராஜவிடமே அதிகமாக இருக்கிறது.//

ஆதாரம் ப்ளீஸ்

"இது கொஞ்சம் பதில் கூற கடினமான கேள்விதான்.என்னைவிட ராஜாவின் "Cult Followers" உதவி செய்தால் வரவேற்கிறேன்."

/நாம் விரும்புவது நம் மண்ணின் இசை அதன் பாரம்பரியம் கெடாமல் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே.இளையராஜா அதைத் தொடங்கி செவ்வனே செய்து நம்மை மகிழ்வித்து ஓய்விலுள்ளார்.
ரஹ்மானும் அதன் நீட்சியாகத் தொடரவேண்டும் என்பதே நம் விருப்பம். //

புஷ்பவனம் குப்புசாமி பாடல்களை கேட்டுள்ளீர்களா.
மண்ணின் இசையை அளிக்க பலர் உள்ளனர்.
ஆனால் இந்திய இசையை உலகிற்கு அளிப்பவர்கள் வெகு சிலரே

"அப்போ நம் மண்ணின் இசையும் இந்திய இசையும் ஒன்றில்லை என்கிறீர்களா?
செம்மொழியான தமிழ்மொழியாம் பாடலில் கூட நம் மண்ணின் மணமுள்ள கலைஞர்கள் இல்லை. புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்களே நம் மண்ணின் இயல்பான கலைஞர்கள். அதுசரி பிளாசி யை வைத்து சங்கப் பாடல்களை "Rap" என்னும் பெயரில் "Rape" செய்தவர்தானே ரஹ்மான்? கத்துக்குட்டி யுவன் கூட கிராமிய சூழலில் வந்த பருத்திவீரனில் இயல்பான நாட்டுப்புறப் பாடல்களை அசலாக இடம்பெறச் செய்தார். கிழக்குச் சீமையிலேவில் மற்றும் கருத்தம்மாவில் ரஹ்மான் அப்போதும் கூட மேற்கத்திய இசையையே கலந்து வழங்கியிருந்தார்."

சிந்தசைசருக்கும் பாடல் வரி சிதைவதற்கும் சம்மந்தம் இல்லை !!
வெறும் வயலினை வைத்து கூட பாடல் வரியை சிதைக்க முடியும் :) :)

"உண்மை... சிதைத்தாலும் கண்டுகொள்ளாதவர் ரஹ்மான்."

நான் எப்பொழுதும் இளையராஜாவின் இசையை குறை கூறுவதில்லை.
பெரும்பாலான ரகுமான் ரசிகர்கள் அப்படித்தான்.

ஆனால் ராஜா ரசிகர்களால் ரகுமானை குறை கூறாமல் இருக்க முடியவில்லையே ஏன்?

"நானும் ரஹ்மானின் ரசிகன்தான்.அதற்காக என்னுடைய வருத்தங்களை சொல்வது தவறா?"

எனக்கு பிடித்தது என்பது வேறு சிறந்தது என்பது வேறு இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு பிடித்த சமையல்காரர் உங்கள் அம்மா.ஆனால் உலகின் மிகச்சிறந்த சமையல்காரர் உங்கள் அம்மாதான் என்றும் மற்றவர்களுக்கு சமைக்க தெரியாது என்று கூறுவது ஏற்புடையதா?

"அம்மாவே சமைத்தாலும் உப்பு காரம் சரியாக இல்லையெனில் நாம் கூறுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்."

இளையராஜாவின் ரசிகர்கள் ஏன் இது போல் ரகுமானை குறை கூற மெனக்கெடுகிறார்கள் என்று தெரியவில்லை.உங்களுக்கே அவர் இசை மேல் நம்பிக்கை இல்லையா
ரகுமானின் பாட்டு நல்லாயில்லை என்று கூற வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு வந்தது ஏன் :) :) :)

"புருனோ சார், டென்ஷன் பேடா.. ராஜாவின் இசைமேல் நம்பிக்கை இல்லாமலா இத்தனை இயக்குனர்கள் அவரை விரும்பியிருக்கக்கூடும்?

எனக்கு ரஹ்மானின் மேல் எந்தப் பொறாமையும் வெறுப்பும் இல்லை .சில சிறிய வருத்தங்களே அவர்மேல் உள்ளன.அதுவும் கூட எப்படியெல்லாம் இருந்த நம் ரஹ்மான் எனும் ஆதங்கமே.மற்றபடி ரஹ்மானின் நல்லா இல்லாத பாட்டுக்களையே நான் அவ்வாறு கூறினேன். மற்றபடி ரஹ்மான் விசிறிகள் ராஜாவை தாழ்த்திப் பேசுவது இல்லை என்பது உண்மை அல்ல.பழங்காலத்து ஆள் என்று  கூறுவது உண்டு."
எனினும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Monday, July 12, 2010

இளையராஜாவும் ரஹ்மானும் , சில பகிர்வுகள்..!

இளையராஜா ரஹ்மான் குறித்து எனக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி விவாதம் நிகழ்வதுண்டு. எங்கே யுவன் , ஹாரிஸ் ஜெயராஜ், எல்லாம் இல்லையா என்றால் இன்னும் அவர்கள் தனித்த பாணியை உருவாக்காதது காரணமாக இருக்கலாம். மேலும் இருவருமே சிறந்த "Copy Cats" என்பதால் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. முதலில் நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ரஹ்மானின் இசையின் தரம் ராஜாவை விட உயர்ந்தது என்பவர்களுக்கு என் பதில்,K.V.மகாதேவனை விட M.S.V. இசையின் தரம் உயர்ந்ததாக இருந்திருக்கலாம், M.S.V யை விட ராஜாவின் இசையின் தரம் உயர்ந்ததாகத் தெரியலாம்.ஏனெனில் இசையின் தரம் என்பது அந்தந்த கால கட்டங்களில் இருந்த ஒலிப்பதிவு தொழில்நுட்பம் சார்ந்ததே அன்றி இசையமைப்பாளரின் திறமை இன்மை காரணம் அன்று.கண்டிப்பாக ரஹ்மான் ஒரு மிகத்திறமை வாய்ந்த இசையமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்காரை வசப் படுத்திய இந்தியன் என்பதில் நானும் பெருமை அடைகிறேன்.அதற்காக அவர் கடந்துவந்த பாதை என்பது குண்டும் குழியுமான ரோடு எனக் கொண்டால் இளையராஜா கடந்த பாதை முட்களாலான மண்பாதை எனக் கொள்ளலாம். முகேஷ், கிஷோர், லதாமங்கேஷ்கர் பிடியிலிருந்த தமிழ் மக்களின் ரசனையைத் தமிழின் பால் திருப்பிய மிகப்பெரும் பணி ராஜாவினுடையது என்பது மறுக்க முடியாதது.

இன்றைய சூழ்நிலையில் சாரு நிவேதிதா போன்றவர்கள் இளையராஜாவை முற்றிலும் நிராகரிக்கலாம். அவர்களுக்கெல்லாம் தமிழ் இசை உலக இசை போல இல்லை என்பது மிகப் பெரும் வாதம்.

எதற்காக தமிழ் இசை உலக இசை போல இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்? இன்று உலக இசையில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் அவர்களுக்குச் சொந்தமான மண்ணின் இசையையே உருவாக்கினர்.உலகளாவிய சூழலில் மேற்கத்திய பண்பாட்டு ஆதிக்கம் அதிகமான காரணத்தால் அவர்களுடைய இசை பல நாடுகளிலும் கேட்கப்பட்டு உலக இசை என்ற பொதுப் பெயர் உருவாயிற்று.அதனால் நாம் உலக இசையைப் படைக்கத் தேவையில்லை.மாற்றாக நமது இசையை உலகுக்குப் பரப்பும் முயற்சிகளை எடுப்போம்.

80 களுக்கு முன் "Stereo sound effects" தமிழில் பயன்பாட்டுக்கு வராத காலங்களில் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பாடல்கள் வந்தன.குழல் ஸ்பீக்கர்கள் மட்டுமே இருந்த காலத்தில் அவ்வகைப் பாடல்களே நன்றாக ஒலிக்கும். 2 in 1 எனப்படும் "Tape Recorder" கள் வரத்தொடங்கிய காலம்தான் இளையராஜா கோலோச்சிய தமிழ்த்திரை இசையின் பொற்காலம்.எனினும் அந்த காலகட்டங்களிலேயே மிகச்சிறந்த துல்லியமான இசையை அவர் அளித்திருக்கிறார் என்பது என் எண்ணம்.1982 இல் வெளிவந்த "நினைவெல்லாம் நித்யா" திரைப்பட பாடல்களில் அவ்வளவு இனிமை நிறைந்திருக்கிறது.இன்றளவும் திகட்டாத பாடல்கள்.படங்களைப் பட்டியலிடத் தொடங்கினால் 500 க்கும் மேற்பட்ட படங்களைக் கூறவேண்டியிருக்கும்.இந்தியாவிலேயே முதல் முறையாக கணிப்பொறி உதவியுடன் இசை அமைத்ததும் அவர்தான்.விக்ரம் படத்திற்காக.
இளையராஜாவின் உச்சக் காலங்களில் சில இசையமைப்பாளர்கள் இருந்தார்கள்.சந்திர போஸ் ,சங்கர் கணேஷ் போன்றோர். அவர்களால் ஒருவழியாக பாடல்களுக்கு மெட்டமைக்க முடிந்ததே ஒழிய பாடலின் முன் வரும் இசையையும்(Preludes), பல்லவிக்கு சரணத்திற்கும் உள்ள இடைவெளியை (interludes) நிரப்பும் இசையையும் சரிவர இனிமையாகத் தர முடிந்ததில்லை.உதாரணம் வேண்டுமானால் சந்திர போஸ் இசையமைத்த மனிதன் திரைப்படப் பாடல்களையும் சண்டைக்காட்சிகளையும் பாருங்கள். அக்கால தூர்தர்ஷன் நாடகங்களில் வரும் இசையைவிட கொஞ்சமே மேம்பட்டு இருக்கும் அவை.

இன்றளவும் நாம் உபயோகிக்கும் மொபைலில் ரிங் டோன்களாக எத்தனை இளையராஜா பாடல்களில் வரும் இசையை உபயோகிக்கின்றோம்? நமது மண்ணின் இசையான தெம்மாங்குதான் அவர் படைத்த அல்லது மேம்படுத்தி வழங்கிய இசை.அதுதான் அவரது தனித்தன்மை.பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் என்பது தெம்மாங்குப்பாடல்.சிந்து பைரவி வந்திருக்காவிட்டால் நமக்கெல்லாம் எப்படி அந்தப்பாடலைப் பற்றி தெரிந்திருக்கும்? "கரையெல்லாம் செண்பகப்பூ" படத்தில் மனோரமா அந்தப் பாடலை நாட்டுப்புற வடிவில் பாடிக்காட்டுவார்.அதே பாடலை சாஸ்திரிய சங்கீதத்துடன் மிக நுண்ணிய புள்ளி ஒன்றில் மரி மரி நின்னே என்று இணைத்திருப்பரே ராஜா,அதுதான் அவருடைய ஞானத்தின் சான்று.

இன்னும் கூறவேண்டுமானால் பாடல்வரிகளை ஒருநாளும் சிதைத்ததில்லை. அவரும் தாய்மொழி தமிழல்லாத எத்தனையோ பாடகர்களை தமிழுலகுக்குத் தந்திருக்கிறார். மனோ,ஜென்சி ,ஸ்வர்ணலதா என்று பட்டியல் இன்னும் நீளும்.புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று அவரைக் குறைகூறுவோர் அந்தப் பாடகர்கள் குறையில்லாமல் பாடியிருந்தால் ராஜா ஒத்துக் கொண்டிருப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் .

ராஜாவின் இசையில் "Synthesizer" ஆதிக்கம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.அவர் காலத்தில் அவ்வளவு உபயோகிக்கப்படவில்லை.எனினும் அவருடைய பின்னாளைய பாடல்களிலும் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் வரிகள் சிதையாமல் பார்த்துக் கொண்டார்.

அவர் உலக இசை படைக்கவில்லையே என்று நாம் குறைகூறுவதோ அல்லது வருந்துவதோ தேவை இல்லாத ஒன்று. வெளிநாட்டு இசையை ரசிப்போம் ஆனால் நம் மண்ணின் இசை தாழ்ந்தது என்றும் உலக இசைதான் உயர்ந்தது என்றும் கூறுவது முட்டாள் செயல்.
ராஜா உலக இசையை அறியாதவரில்லை.மேற்கத்திய சாஸ்த்ரிய இசையை நன்கு கற்றுத்தேர்ந்ததோடல்லாமல் அதனை நம் சூழலுக்கு ஏற்றவகையில் இணைத்து அசலான பாடல்களை வழங்கியிருக்கிறார்.நல்ல தெம்மாங்கு மெட்டினில் கிடாரையும் பியானோவையும் ஹிந்துஸ்தானி இசைக் கருவியான ஷெனாய் யையும் கூட உறுத்தாமல் இணைத்திருப்பார்.சில உதாரணங்கள் "சின்ன மணிக் குயிலே " அம்மன் கோவில் கிழக்காலே, "கண்ணம்மா காதலென்னும் கவிதை சொல்லடி " வண்ண வண்ண பூக்கள் , பட்டியல் இப்படியாக நீளும்.
ராஜா படைத்தது அசலான நம் மண்ணின் இசை.அவர் நமக்காக ஒரு இசைப் பண்பாட்டை உருவாக்கி அளித்திருக்கிறார்.

கொஞ்சம் ரஹ்மானின் பக்கம் வருவோம்.ரஹ்மானின் பெரிய பலம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. "Woofer" களும் நவீன ஸ்பீக்கர்களும் இல்லாமல் அவரது இசையை ரசிக்க முடியாது.கோவில் திருவிழா குழாய் ஸ்பீக்கரில் ரஹ்மானின் "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு பாடல்" கேட்டால் எவ்வளவு கொடூரமாக இருக்கும்? குழாய் ஸ்பீக்கர் குக்கிராமங்களில் கூட வழக்கொழிந்து போனதால் பிரச்சனை இல்லை.பாடல் மெட்டு எவ்வளவு இனிமையாக இருந்தாலும் வரிகள் காதில் விழாவண்ணம் இசை அதனை அமுக்கிச் செல்கிறது. மற்றும் அவர் நம் மண்ணுக்கென உரிய விஷயங்களை குறைவாகவே இசைப் படுத்தியிருக்கிறார்.கண்டிப்பாக மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.படம் வெளியான சில வாரங்கள் மாதங்கள் அவற்றை ரசிக்க முடிகிறது.அப்புறம் எப்பொழுதாவதுதான் திரும்பவும் கேட்கத்தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க என் எண்ணமே.பாடல்வரிகளை பாடுபவர் தின்றுவிட்டாலும் அவருக்குப் பிரச்சனை இல்லை.ஆனாலும் மிகச்சிறந்த பாடல்களை தன் தொடக்க காலங்களில் வழங்கியிருக்கிறார். டூயட்,ரோஜா,ரிதம்,என் சுவாசக் காற்றே, என்று பல படங்களை குறிப்பிடலாம்.
இப்போது ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.ரஹ்மான் ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்களே இசையமைப்பார்.ராஜாவோ 80 களில் தொடங்கி 90 களின் பாதிவரையில் ஆண்டுக்கு 20 படங்களுக்கு குறையாமல் இசையமைத்திருக்கிறார்.ஒவ்வொரு படத்திலும் குறைந்தது 3 பாடல்களாவது பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றிப் பாடல்கள்.இல்லாவிடில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றவை.ஏழைத் தயாரிப்பாளர்களின் கமலஹாசன் என்று அழைக்கப் பட்ட மோகனின் வெற்றிக்கு இளையராஜா 75 சதவிகிதம் காரணம் என்றால் மிகையில்லை.இன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளில் எல்லா பாடல் போட்டிகளிலும் ராஜாவின் பாடல்களே அதிகம் பாடப் படுகிறது.

ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றது தேர்ந்த விளம்பர வியாபர யுக்திகளினால் அந்த திரைப்படம் உலக அரங்கில் வைக்கப்பட்டதன் மூலமாகத்தான். ஜெய்ஹோ பாடலைவிட அவருடைய மற்ற எத்தனையோ துள்ளிசைப் பாடல்கள் தமிழிலும் ஹிந்தியிலும் எவ்வளவு சிறப்பாக உள்ளன என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.இளையராஜா உலக இசையின் சாற்றினை இந்திய இசையில் கலந்தார்.ரஹ்மானோ உலக இசையை (மேற்கத்திய இசையை) மறு ஆக்கம் செய்கிறார். "Originality" என்பது ராஜவிடமே அதிகமாக இருக்கிறது.தற்போது அவர் குறைவாகவே இசையமைக்கிறார் என்றாலும் சற்றே தேக்க நிலை அடைந்துவிட்டார் போலுள்ளது. எனினும் அவ்வப்போது விருமாண்டி படப் பாடல்கள் போல ஆளை அசத்துவதும் உண்டு.ரஹ்மான் மிகவும் சுருங்கி ஒரு "Template" ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் எனத் தோன்றுகிறது.ராவணன் பாடல்கள் கேட்டதில் உசுரே போகுதே தவிர மற்ற ஒன்றும் தேறவில்லை."கெடாக் கெடாக் கறி அடுப்புல கெடக்கு" மிக மிகச் சாதாரணம்.

நாம் விரும்புவது நம் மண்ணின் இசை அதன் பாரம்பரியம் கெடாமல் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே.இளையராஜா அதைத் தொடங்கி செவ்வனே செய்து நம்மை மகிழ்வித்து ஓய்விலுள்ளார்.ரஹ்மானும் அதன் நீட்சியாகத் தொடரவேண்டும் என்பதே நம் விருப்பம்.

Wednesday, July 7, 2010

ஜெயமோகன் & ஜேம்ஸ் கேமரூன் , பனிமனிதனும் அவதாரும்

சிலமாதங்களுக்கு முன்பு வாங்கிய ஜெயமோகனின் பனிமனிதன் குழந்தைகளுக்கான நெடுங்கதை படித்தேன். முன்னுரையிலேயே குறிப்பிட்டு விடுகிறார். இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல பெரியவர்களுக்கானதும்தான் என்று.சின்னச் சின்ன வாக்கியங்களில் முழு நாவலும் கூடவே பற்பல அறிவியல் தகவல்களும்.


சின்ன வயதில் வெள்ளிக்கிழமைகளில் தினமலருடன் வரும் சிறுவர்மலரைக் கைப்பற்ற எனக்கும் அக்காவுக்கும் பலத்த போட்டி நடக்கும்.பெரும்பாலும் காலையில் விழித்தவுடன் ஓடோடிச்சென்று புத்தகத்தைக் கைப்பற்றி மெத்தைக்கு அடியில், ஸ்டோர் ரூமில், கிரைண்டருக்கு அடியில் என அவள் யூகிக்காவண்ணம் பல இடங்களில் ஒளித்துவைத்துவிட்டு பள்ளிக்கு செல்வேன்.மதிய உணவு இடைவேளை மணி அடித்ததும் வகுப்பிலிருந்து சிட்டெனப் பறந்து காட்டுவழிப் பாதையில் ஓடி 2 நிமிடங்களில் வீட்டை அடைந்து புத்தகத்தை படித்தால்தான் திருப்தி.பின்னாளில் அம்மாவிடம் இது குறித்து முறையிட்டு எனக்கு அடி வாங்கித்தந்தாள் அக்கா.அந்நாட்களில் அந்த அளவு வெறியுடன் சிறுவர்மலர் ராணி காமிக்ஸ் போன்றவற்றை நேசித்திருக்கிறேன்.எண்ணற்ற புத்தகங்களும் என்னிடம் இருந்தன.நினைவு தெரிந்து எழுத்துக்கூட்டி வாய்விட்டுப் படித்த ஞாபகம் இல்லை எனக்கு.வெகு சிறிய வயதிலேய மனதுக்குள் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டோம் நானும் அக்காவும்.கல்லூரியில் என்னுடன் படித்த சிலபேர் எழுத்துக்கூட்டி தமிழ் வாசித்ததைக் கண்டபோது என்னுள் அபாரமான நம்பிக்கை எழுந்தது செம்மொழி செத்த மொழியாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என.

நாவல் இமயமலை லடாக் பகுதிகளில் காணப்படும் மிகப்பெரிய காலடித்தடங்கள் குறித்த இராணுவத்தினரின் ஆய்வு பற்றியது.மேஜர் பாண்டியன் என்பவன் அக்காலடித்தடங்கள் குறித்து ஆராயப் போகிறான்.கூடவே பௌத்த மதம் குறித்த விஷயங்களும் வருகின்றன. வாழும் புத்தரைத்தேர்வு செய்வதற்காகன தேடலும் இடம்பெறுகிறது.யதி என்னும் பனி மனிதனைத் தேடும் ஒரு சாகசப் பயணம் தான் நாவல். மேலும் படிக்க ஆசையாக இருந்தால் udumalai.com இல் வாங்கிப் படிக்கவும்.

அதுவரை சாதாரணமாகப் படித்துக் கொண்டிருந்த நான் பனிமனிதனை அவர்கள் சந்திக்க ஆரம்பித்த இடத்தில் பனிமனிதர்கள் வாழும் இடம் பற்றிய வர்ணனைகளில் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். பல இடங்கள் எனக்கு அவதார் திரைப் படத்தை நினைவுபடுத்தின.நாவல் எழுதப் பட்டது 1999 ஆம் ஆண்டு.அவதார் ஜேம்ஸ் கேமரூனால்  14 ஆண்டுகளாக மெருகேற்றப் பட்டது என படித்துள்ளேன். கண்டிப்பாக ஜெயமோகனும் ஜேம்ஸ் கேமரூனும்   சந்தித்திருக்கும் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது மிகுந்த வியப்புக்குரிய ஒன்றுதான்.

சில உதாரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் படித்துவிட்டு நீங்களே கூறுங்கள்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும் )

31 ஆம் அத்தியாயத்தில் வரும் வரிகள்

// அங்கு நின்ற ஒவ்வொரு மரமும் மிகப் பெரியவையாக இருந்தன.நமது ஊரில் உள்ள ஒரு மிகப் பெரிய மரத்தின் அடிமரம் அளவுக்கு அந்த மரங்களின் கிளைகள் காணப்பட்டன.//


 
 
 
 
 
 
 
 
 
 
 
// ஒரு இடத்தில் ஏராளமான நாய்கள் மரங்கள் மீது துள்ளித்துள்ளி விளையாடின.அவற்றுக்கு ஆடுகள் போல கொம்புகள் இருந்தன.அவற்றின் கால்களும் குரங்குக் கால்கள் மாதிரி இருந்தன //
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எவ்வளவு கூர்மையான விவரிப்பு. கூடவே படத்தில் நாய்களின் கால்களைப் பாருங்கள்.எப்படி இருவரும் இது பற்றி யோசித்தனர் என்று வியப்பு மேலோங்குகிறது.
 
அத்தியாயம் 35 // மிகப்பெரிய நீல நிற மின்மினிகள் கூட்டம் கூட்டமாக எழுந்து பறந்தன.ஒவ்வொரு மின்மினியும் ஒரு ஜீரோ வாட் பல்ப் அளவுக்கு இருந்தது.//
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இவற்றிலும் பெரிய ஆச்சரியத்தைப் பாருங்கள்


அத்தியாயம் 34
//ஒவ்வொரு பனி மனிதனாக வந்து மேற்குத்திசை நோக்கி அமரத் தொடங்கினார்கள்.சற்று நேரத்தில் அங்கு ஏராளமான பனி மனிதர்கள் கூடி விட்டார்கள்.
"எப்படியும் இவை மூவாயிரத்துக்கு குறையாது" என்றார் டாக்டர்.
பனிமனிதர்கள் மறையும் சூரியனைப் பார்த்தபடி அமர்ந்தார்கள்.அவர்களுடைய முகமெல்லாம் சிவப்பாக அந்தியின் ஒளி பரவியது .
மிக மெதுவாக அவர்கள் பாட ஆரம்பித்தார்கள்.அது பாட்டு இல்லை வெறும் ரீங்காரம் மட்டும் தான்.ஆனால் அத்தனை பேரும்சேர்ந்து ஒரே குரலாக அதை எழுப்பினார்கள்.ஒரு குரல் கூட விலகவே இல்லை.//


அவதாரில் நாவிகளின் வாழ்க்கைக்கும் இயற்கைக்குமான நுண்ணிய பிணைப்பு, தங்கள் தெய்வம் ஏவாவிடம் வேண்டும்போது உட்கார்ந்து ஒத்த மனதுடன் வேண்டுதல் என பல நிகழ்வுகள் பனிமனிதன் கதையிலும் வந்துள்ளது.

என்னுள் எழுந்த வியப்பு இன்னும் அடங்கவே இல்லை. கிட்டத்தட்ட மனிதனால் எடுக்கப்படக்கூடிய சினிமாவின் எண்ணமுடியாத சாத்தியங்களைக் கடந்த படைப்பு அவதார் என்று சிலாகிக்கப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன்னரே படைக்கப்பட்ட படைப்பான பனிமனிதன் அவதாருடன் ஒரு வினோதமான தற்செயல் ஒத்தியல் நிகழ்வுதான்.

இதுகுறித்து நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதலாம் என்று எண்ணியிருந்தேன்.சில மாதங்கள் முன்பு வாசகர் கடிதம் ஒன்றில் நண்பர் ஒருவர் ஜெயமோகனிடம் தன் வியப்பை தெரிவித்திருந்தார்.எனினும் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள எண்ணியதன் விளைவே இப்பதிவு.