Wednesday, July 22, 2009

கேள்வியும் நானே...! பதிலும் நானே..!

நான் எட்டாம் வகுப்பிலிருந்து நாகர்கோயிலில் படிப்பைத் தொடர்ந்தேன். அதற்கு முன் 1-4 வரை கீரிப்பாறை என்னும் கிராமம் என்று கூட சொல்ல முடியாத ஒரு காட்டுப்பகுதியில். ( அப்பாவுக்கு வனத்துறையில் வேலை). 4-7 வரை அருப்புக்கோட்டையில், அப்பாவுக்கு பணி இடமாற்றம் காரணமாக.)

வகுப்பில் நான் நான்காவது பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டேன். அதில் குப்புசாமி,பாலு,பாலசுப்ரமணி, ஸ்ரீனிவாசன் என்று ஏற்கனவே நான்கு பேர். சீக்கிரத்தில் சகஜமாகி விட்டோம்.

எங்கள் ஜோதியில் முருகேஷ் என்பவன் ஐக்கியமானான். அவன் ஒரு interesting personality. அதிதீவிர சினிமா நடிகைகள் ரசிகன். இன்ன நடிகைதான் என்றில்லாமல் டீன் ஏஜ் ஹீரோயினில் இருந்து நடுத்தர வயது கடந்த ஆன்ட்டி நடிகைவரை அவனுக்குப் பிடிக்கும்.

தன்னுடைய அபிமானத்தை வெளிக்காட்ட , தினத்தந்தி,தினகரன் பேப்பர்களில் வரும் சினிமா விளம்பரங்களை உள்ளடக்கிய பக்கங்களால் புத்தகங்களுக்கும், நோட்டுக்களுக்கும் அட்டை போட்டு வருவான். பாடம் நடக்கும் வேளைகளில் போட்டோ பார்த்து நேரம் போக்குவோம்.


அவனைக் கடுப்பேற்ற பாலு நடிகைகள் படத்தில் நாபிக்கமல பகுதியில் உமிழ்ந்து விரலால் தேய்த்து சேதப்படுதிவிடுவான். சிதைக்கப்பட்ட படங்களைப் பார்க்க நேரும் முருகேஷ் கோபத்தின் உச்சிக்கே சென்று வசன மழையை ஆரம்பித்து விடுவான். இத எவன் செஞ்சானோ அவங்க அப்பா அம்மா .. என்றாரம்பித்து ஒரு 3 தலைமுறையாவது அவமானப்படும். நாங்கள் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருப்போம். இப்படி அவனை சீண்டி விளையாடுவது எங்களுக்கு ஒரு முக்கியமான பொழுதுபோக்கு.

முருகேஷ் படிப்பில் பெரிய சூறாவளி எல்லாம் இல்லை. பல சமயங்களில் 2-3 பாடங்களில் விக்கெட் விழுந்து விடும். பாஸ் ஆனாலும் மில்லிக்ராம் சுத்தமாக பாஸ் மார்க் வாங்குவான். அவனுக்கு தீராத இம்சை என்றால் எங்கள் சமூக அறிவியல் டீச்சர் தான்.
பலே பாண்டியா படத்தில் M.R.ராதா, சிவாஜியிடம் கொடுத்த கடனை வசூலிக்க வரும் வட்டிக்கடன்காரர்களிடம் சிவாஜிக்காக பரிந்து பேசுவார்.
“ஏன்டா அவன தொந்தரவு பண்றீங்க..?
கொடுத்த கடன திருப்பி கேட்டா திருப்பி தர மாட்டேங்கறாரு..
ஏன்டா அப்போ கடன் கொடுத்தீங்க..?
இல்லேன்னு கேட்டாரு கொடுத்தோம் ..
இல்லாதவன்கிட்ட கொடுத்தா எப்டிய்யா திருப்பி தருவான்..? “
வசூலிக்க வந்தவர்கள் வாயடைத்துப் போய்விடுவார்கள்.

அதே மாதிரி எங்கள் டீச்சரும் பதில் தெரியாத முருகேஷிடமே கேள்வி கேட்டு நிற்க வைத்து ஆனந்தப்படுவார். "லேய் இம்போசிஷன் 10 மட்டம் எழுதிட்டு வால... " என்பார். சிலநாட்களில் முருகேஷே முதல் நாளே ஆட்டோமேட்டிக்காக இம்போசிஷன் எழுதிவிட்டு வந்துவிடுவான். அனால் டீச்சர் மிகவும் நல்ல டீச்சர். என்றுமே அவர் இம்போசிஷன்களை செக் பண்ணியது இல்லை.அவருக்கு அது அவனுடனான ஒரு விளையாட்டு. ஆனாலும் முருகேஷின் தன்மானத்தை இது உறுத்திக்கொண்டே இருந்தது.

ஒருநாள் மதிய இடைவெளியில் என்னிடம் வந்தான். "லேய் மக்கா ஒரு நாலு ஈசியான கேள்வி சொல்லுல.." என்றான். யாம்ல..? என்றேன். இன்னிக்கு டீச்சர் மூஞ்சில கரிய பூசணும்ல.. எப்பிடி இன்னிக்கு எங்கிட்ட கேள்வி கேட்டு நிக்க வைக்கானு பாப்போம் என்றான்.அவன் முகத்தில் தன்மான உணர்ச்சி அகோர தாண்டவமாடியது. நானும் நான்கு எளிய கேள்விகள் சொன்னேன்.
இந்தியாவின் எல்லைகள் எவை ?
இந்தியாவின் அண்டை நாடுகள் எவை?
இந்திய ஏன் ஒரு தீபகற்பம் என்று அழைக்கப்படுகிறது ?
இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள் எவை ?

அவன் ஆவலுடன் எதிர்பார்த்த சமூக அறிவியல் வகுப்பும் வந்தது.டீச்சர் வந்து மேஜையில் புக்கைப் போட்டுவிட்டு எல்லா மாணவர்களையும் பார்த்தார். கொஸ்டின் கேக்க போறேன் என்றார். எங்கள் ஏரியாவைப் பார்த்தார்.
வீறுகொண்ட சிங்கமாக வெகுண்டெழுந்து நின்றான் முருகேஷ். வகுப்பில் சில விநாடிகள் நிசப்தம். இவன் wanted ஆ வந்த ரவுடி போல எந்திரிச்சு நிக்கிறானே? என்ன பண்ண போறான் என்ற குழப்ப ரேகை டீச்சர் உட்பட எல்லார் முகத்திலும் ஓடியது. நடக்கவிருப்பதை அறிந்த நான் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வீரமாக முருகேஷ் ஆரம்பித்தான். கொஸ்டின் தான கேக்க போறீங்க ..? நில்லுங்க நானே சொல்றேன் டீச்சர் .. என்று சொல்லி , தயார் செய்து வைத்திருந்த கேள்விகளைச் சொல்லி பதில்களையும் சொன்னான். டீச்சர் கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். சொல்லி முடித்ததும் எங்கள் பக்கமாக திரும்பி ஒரு பெருமிதப் பார்வையை வீசினான். வகுப்பே சிரிக்க ஆரம்பித்தது. நாங்களும், டீச்சரும் கூட.
டீச்சரின் சுயகவுரவம் திடுக்கிட்டு விழித்துக்கொண்டது போலும். அவனிடமிருந்து இப்படி ஒரு பௌன்சரை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

லேய் ஒம் மனசில என்ன நெனச்சிட்டு இருக்க? இதெல்லாம் நாலாங்க்ளாஸ் பிள்ளைகள் சொல்லுமே.. இத சொல்லிட்டா உன்ன விட்ருவேனா? சரி நீ இதுக்கு பதில சொல்லு என்று ஒரு ஐந்து மார்க் கேள்வியை கேட்டார். வழக்கம்போல் இந்த அஸ்திரத்தை எதிர்பார்த்தமையால் ஒரு சிரிப்பையே பதிலாக உதிர்த்தான்.
"லேய் இம்போசிஷன் 10 மட்டம் எழுதிட்டு வா.." என்றவாறே பாடத்தை தொடங்கினார் டீச்சர் .

2 comments:

 1. Hello Dr.Rajesh.. when i read through this storylines,unkowlingly i wentback to my school days..... its not just because of the story behind the sch days, the narrative style of yours... great keep it up.. especially the thirunelveli slang is remarkable....
  Keep it up...
  I am expecting some topic about tamil literature..as u have enormous potential to do so....
  By
  U r s
  ISO

  ReplyDelete
 2. Hi da Rajesh,

  Its really nice to read your blog. Do keep posting some more interesting topics.

  Expecting new topics about our hostel life.

  Keep it up...

  Really you are awesome...


  By
  Ur Friend
  Senthilkumar B

  ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !