Saturday, September 19, 2009

கேட்கப்படாத ஒரு புள்ள பூச்சியின் குரல் (நியாயம்).!

கல்லூரியில் நான்கு வருடங்களும் நான் விடுதியிலேயே தங்கிப் படித்தேன். கடைசி வருடம் மட்டும் நான் வெளியில் அறை எடுத்து தங்குகிறேன் என்று சொன்னதற்கு வீட்டில் மறுத்து விட்டார்கள். கெட்டுப் போய் விடுவேனாம்.நானெல்லாம் " நீ ஊதவே வேணாம் பெருசு" கேஸ் என்பது தெரியாதல்லவா?. வேறு வழியின்றி நான் விடுதியிலேயே தங்க வேண்டியதாயிற்று.

விடுதி எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களையும் சில கசப்பான அனுபவங்களையும் அளித்திருக்கிறது. பொதுவாக வகுப்பில் ஒரு மூலையில் உக்கார்ந்து "அண்ணே எனக்கு எது புடிக்கலியோ தூங்கிடுவேன்..!" என்று செந்தில் பாணியில் உறங்குபவன் நான்.நான்கு வருடங்களில் வெகு சில பேராசிரியர்கள் தவிர என் பெயர் யாருக்கும் தெரியாது. நாம யாரு வம்புக்கும் போறதில்ல யாரு தும்புக்கும் போறதில்ல.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம் என்று வடிவேலு பம்மும் விதமாக பம்மிக்கொண்டே வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பிரச்சனை இன்றி கழிந்தது.பரீட்சை நேரங்களில் கூட்டாக சேர்ந்து படிப்பது, அலாரம் வைத்து நள்ளிரவில் எழுந்து படிப்பது என்று இனிய விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன.மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது சனிதிசை எனக்கு.


பொதுவாக விடுதியில் முதல் இரண்டு ஆண்டுகள் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமலிருந்தது.இரவு 9 மணிக்கு முன் விடுதி திரும்பிவிட வேண்டும என்பதைத் தவிர்த்து. மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் அனந்த பிரகாஷ் வார்டனாக வந்தார். அவருக்கு சைடு சப்போர்ட் ஆக இன்னும் இரண்டு பேர் துணை வார்டனாக வந்தார்கள். முதல் சில வாரங்கள் எப்போதும் போல சென்றது.அப்புறம் ஒரு மீட்டிங் வைத்து , விடுதியில் சில விதிமுறைகள் கொண்டு வரப் போவதாக சொன்னார் வார்டன். அதாவது இரவு 9.30 - 10.15 "study hour" படிக்கும் நேரமாக அறிவிக்கப் பட்டது.
பெரிய சிரமமில்லை.விளக்கை அணைத்து தூங்கி விடுவோம் அந்த நேரத்தில். அப்புறம் கட்டாயமாக படித்தே தீர வேண்டும் என்றார். அது கூட பிரச்சனை இல்லை. புத்தகத்தை விரித்து பாவனைக்காக வைத்து விட்டு அரட்டை அடிப்போம் சத்தமில்லாமல். ஒருவழியாக எங்கள் சுதந்திரம் சிறிது பறிபோனாலும் ஜாலியாகத்தான் சென்று கொண்டிருந்தது.

5 ஆம் செமஸ்டர் தேர்வுகள் நெருங்கிய நேரம். தேர்வுகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதம் முன்னரே விடுதியில் படிப்பார்வம் பல அறைகளில் காணப்படும். எங்கள் ரூம் பற்றி சொல்லத் தேவை இல்லை.விடுதி மெஸ்ஸில் இருந்து இரவு நேர தேநீர் வழங்கப்படும். நாங்கள் ஸ்டடி ஹவரில் தூங்கி தேநீர் வந்தவுடன் குடித்து துயில் கலைத்து அரட்டைக் கச்சேரியை நள்ளிரவு வரை நடத்துவோம்.

அது ஒரு பனிவிழும் நல்ல டிசம்பர் மாதம். ஈரோடு பகுதியில் இரவு நேரங்களில் கடும்பனியும் பகலில் கொடும் வெயிலும் வாட்டி வதைக்கும்.வழக்கம் போல ஸ்டடி ஹவரில் படித்துக் கொண்டிருந்தோம். இரவு 10.10 மணி. எங்களுக்கான தேநீர் கலயம் , கைப்புள்ள வடிவேல் பிரயாணிக்கும் அதிவேக மூன்று சக்கர வாகனத்தில் விடுதி வந்திறங்கிய சப்தம் கேட்டது. பொதுவாக தேநீர் வந்ததை அறிவிக்க டம்ளரால் தட்டியபடியே செல்வோம். சத்தம் கேட்டு அனைவரும் வருவார்கள்.

அன்று ஒரு 10.12 மணி வாக்கில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இருவர் ஸ்டடி ஹவர் முடியும் முன்பாக தேநீர் பிடிக்க வந்தனர். அவர்கள் கணக்கில் 10.15 ஆகி விட்டிருந்தது. ஆனால் வார்டன் பார்த்து விட்டார். விதியை மீறியதாகச் சொல்லி விடுதிக்கு வெளியே அனுப்பி கதவைத் தாளிட்டு விட்டார்.பணியில் இரவு 12 மணி வரை வெளியில் நின்ற பிறகே அவர் உள்ளே வர அனுமதித்தார். நான் பார்த்துவிட்டு மிகுந்த கடுப்புக்குள்ளானேன். அந்த மாணவர்கள் பெரிய தவறொன்றும் செய்யவில்லை.தண்ணி அடிப்பவனை விட்டு விடுவார்கள், டீ குடிப்பவனைப் பிடித்து துன்புறுத்துவார்கள். நேராக நான் ஜினு ரூம் சென்றேன். நடந்ததைக் கூறினேன். ஏதாவது பண்ணனும் ஜினு..! வார்டன் இன்னிக்கு பண்ணினது ரொம்ப ஓவர். நாம கேட்டே ஆகணும் ஜினு என்று உணர்ச்சிவசப் பட்டேன். அந்தகணம் எனக்கு 80 களில் வேலை இல்லத் திண்டாட்டம் பற்றி வந்த படங்களின் நாயகன் புரட்சி செய்வது நினைவில் வந்தது. ஜினு,,! நாம போய் நம்ம ரெப்ரசண்டடிவ் கிட்ட சொல்லுவோம்...!அப்புறம் எல்லாருமே போய் கேப்போம்..! பசங்களுக்கு எல்லாம் இன்பார்ம் பண்ணுவோம் என்றேன். ஒவ்வொரு ரூமாக தகவல் பரவியது. செல்வா சொன்னார் "இதெல்லாம் எதுக்கு பாஸ் ...? நாங்கெல்லாம் எவ்ளவோ பாத்துட்டு வந்திட்டோம் என்றார். இல்ல பாஸ் நாளைக்கு நம்மளையும் வெளிய தள்ளி கதவ சாத்துவார். இது ஒரு வரும் முன் காக்கும் யுக்தி என்றேன்.

அது என்னவோ பின்னாடி ஏறப்போகும் ஆப்பு பற்றி ஒரு அபாயச்சங்கு என் சிறு மூளையில் ஒலிப்பதே இல்லை. குறைந்த பட்சம் ஒரு அபாய மணியாவது அடித்திருக்கலாம். அது சரி.. கெட்ட நேரம்னு வந்திருச்சின்னா ஒட்டகத்துல போனாலும் நாய் கடிச்சிரும் இல்லியா ? நேராக புகழேந்தியிடம் (அவன்தான் ரெப்ரசண்டி) சென்று சொன்னோம். இந்த மாதிரி இந்தமாதிரி ஆயிப்போச்சு.(அந்த ஆய் இல்லப்பா).நாம் எல்லாரும் போய் கேக்கணும் என்றோம்.அவனும் சற்று நேரம் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய வைரமுத்து கணக்காக தாவாங்கட்டையில் கையை வைத்து நின்று கொண்டே யோசித்தான். சரி நண்பர்களே நாம கண்டிப்பா பேசலாம்..! மொதல்ல பாலமுருகன் சார் கிட்ட பேசிடலாம் என்றான். அவர்தான் வார்டன் கொள்ள குஸ்தி கூட்டத்துக்கு தலைவன்.

அப்பிடியே டீயைக் குடித்து விட்டு, காலையிலிருந்து மதியம் வரை உண்ணாவிரதம் (skip breakfast) இருந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உதவிய கலைஞர் போல கலைந்து சென்றோம்.அப்புறம் எங்கள் ரெப்ரசண்டி வார்டனிடம் பேசினானா என்று நாங்கள் கண்டுகொள்ளவில்லை.ஒரு சில நாட்களில் விடுமுறை வேறு வந்து விட்டது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிடோம். திரும்பவும் விடுதி சென்ற போது,பழைய பிரச்சனை மனதிலிருந்து ஆறி விட்டிருந்தது. ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தானே..! விட்றா விட்றா சூனா பானா என்று அவரவர் வேலையில் மும்முரமாகி விட்டோம். காக்கை வாகனத்தான் என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை நான் உணரவே இல்லை.

ஓரிரு நாட்கள் கழிந்திருக்கும், கல்லூரி முடிந்து விடுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன். விடுதியில் ஏதோ பரபரப்பு தெரிந்தது. சென்று உடை மாற்றி டீ பிடித்து விட்டு வெளியே வந்து என்ன என்று விசாரித்தேன்.எங்கள் ரெப்ரசண்டி மிகுந்த உத்வேகத்துடன் காணப்பட்டான். ஸ்டுடண்ட்ஸ் .. நாம எல்லாரும் இன்னிக்கு ஹாஸ்டல் உள்ள போகாம வெளிய நின்னு வார்டன் கிட்ட பேச போறோம் என்றான். எதுக்குடா..? என்றேன். பக்கத்திலிருந்த வேறு சில நண்பர்கள், மச்சி விஷயம் தெரியாதா? லேடீஸ் ஹாஸ்டல்ல பொண்ணுங்க இன்னிக்கு லல்லி மேடம் கிட்ட பிரச்சனை பண்ணி ஸ்ட்ரைக் பண்ணிட்டாங்கடா.. ! பொண்ணுங்க அவங்களுக்கே இவ்ளோ தைரியம் இருக்கும்போது நாம கண்டிப்பா இன்னிக்கு பண்ணனும்டா என்றனர்.
டேய் .. வேணாம்டா.. நமக்கு என்ன காரணம் இருக்கு ஸ்ட்ரைக் வரை போகுறதுக்கு? என்றேன். பொண்ணுங்க பண்ணின பின்னாடி நாம பண்ணாட்டினா நமக்கு பெரிய அவமானம்டா என்றனர் சிலர். டேய் லூசுத்தனமா பேசாதீங்கடா..! அவளுங்களப் பாத்து காப்பி அடிச்சது மாதிரி இருக்கும்டா என்றேன்..! போடா நீயும் பொம்பளைங்க மாதிரி பிஹேவ் பண்ணாத என்று, ஸ்ட்ரைக்குக்கான முஸ்தீபுகளில் மும்முரமாயினர். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் தகவல் போனது.அதாவது வார்டன் ஹாஸ்டல் வந்தவுடன் நாங்கள் வெளிநடப்பு செய்து வெளியிருப்புப் போராட்டம் நடத்த வேண்டுமாம்.

சரிதான் ரைட்டு ... சனி சடைய விரிச்சு போட்டு ஆடும் போது யார்தான் அதுக்குப் பேன் பார்த்து பின்னிவிட முடியும் என்று நினைத்துக் கொண்டு நான் விடுதி அறைக்குள் சென்றேன். கட்டிலில் உக்கார்ந்து யோசிக்கும்போதுதான் ஒன்று உறைத்தது.ஆஹா ஸ்ட்ரைக்குக்கு நதி மூலம் ரிஷி மூலம் பார்த்தால் நம்மகிட்டதான வருவாங்க என்று நினைத்தேன்.எனக்கு அப்போதுதான் பின்னால் ஆப்பு லேசாக ஏறுவது தெரிந்தது. சரி தல தப்பிச்சா தம்புரான் புண்ணியம் என்று நான் என் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன்.

7 மணி வாக்கில் வார்டன் வந்தார்.அவர் ரூம் சென்றவுடன் எல்லாரும் வெளியே வந்தனர். சற்றைக்கெல்லாம் சலசலவென சத்தம் ஹாஸ்டல் வளாகத்தில் வியாபித்திருந்தது. வந்தது AP அல்ல. சப் வார்டன்களில் ஒருவரான கார்த்திகேயன்.நண்பர்கள் அனைவரும் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக.! அமெரிக்க ஏகாதிபத்யம் ஒழிக! என்று கத்தாத குறையாக வெளி வராண்டாவில் குழுமி இருந்தனர்.கார்த்திகேயன் வந்து பார்த்துவிட்டு என்ன காரணம் ? தயவு செய்து எல்லாரும் உள்ளே போங்க..! AP வந்தவுடனே எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம் என்று கெஞ்சினார், கதறினார். இல்ல சார் .. வார்டன் வந்தாதான் நாங்க போவோம் என்றனர்.எனக்கு கலவரமாக இருந்தாலும் நானும் வெளியில் வந்து அமர்ந்து கொண்டேன்.

தகவல் ஒருவழியாக AP க்கு தெரியப்படுத்தப் பட்டது.அவசர அவசரமாக அவர் திரும்பிக்கொண்டிருந்ததாக் உளவுத்துறை தகவல் அனுப்பியது.
வந்தார் AP. கூடவே பாலமுருகனும். பாலமுருகனைப் பார்த்ததும் முன்வரிசையில் உக்கார்ந்து கொண்டு மனதிற்குள் சத்தமாக சலம்பிககொன்டிருந்த மாணவர் அணி துணைத்தலைவர்கள் எல்லாம் மம்மியைப் பார்த்த MLA மாதிரிப் பதுங்கினர்.தொண்டையைச் செருமி பாலமுருகன் ஆரம்பித்தார். சரி என்ன பிரச்சனைனு இப்படி வெளிய உக்காந்துட்டு இருக்கீங்க என்றார்? சார் இங்க கட்டுப்பாடு தேவை இல்லாத அளவுக்கு அதிகமா இருக்கு என்றன் உதயகுமார். ரெப்ரசண்டி என்னைப் பார்த்து டேய் ராஜேஷ் இப்போ பேசுடா என்றான். ஆகா நமக்கு சட்டைக்குள்ள எறும்பு போனாலே உதறும்.. இவன் என்னடான்னா டைனோசரைத் தூக்கி ஜட்டிக்குள்ள விடப் பார்க்குறானே..! நமக்கு ஏழரை ஆரம்பிச்சிடுச்சு என்று எண்ணியவாறே, சார் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த மாதிரி இந்த மாதிரி நடந்திச்சு. சின்ன தப்புக்கு பெரிய தண்டனை கொடுத்துட்டாங்க அதெல்லாம் பிடிக்கலை என்றேன். அதற்குள் எங்கள் அண்ணன் சட்டி சாம்பார் மோகன்ராஜ் , ஒரு லிஸ்ட் தயார் செய்திருந்தான்.வார்டன் நடந்து கொள்ளும் விதிமுறைகள் என்று ஒரு 10 விதிமுறைகள்.8.30 மணிக்குள் வார்டனும் ஹாஸ்டல் வந்துவிட வேண்டும் என்று ஆரம்பித்து, நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை நண்பர்களிடமிருந்து கேட்டு எழுதி விஞ்ஞானத்தோடு வீம்பாக விளையாடிவிட்டான்.

அதுவரை சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த பாலமுருகன் அந்த லிஸ்டைப் பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டார்.இருக்காதா பின்னே? இதற்குள் மணி நள்ளிரவு 12 ஐ நெருங்கியிருந்தது.அவனவன் உக்கார்ந்த இடத்திலேயே அப்பிடி அப்பிடியே செட்டில் ஆகி உறங்க ஆரம்பித்தனர்.ஒருசிலர் நமக்கென்ன என்று ரூமுக்குள் சென்று தூங்க ஆரம்பித்தனர். எங்கள் ரெப்ரசண்டி பாலமுருகனிடம் பேசிக்கொண்டிருந்தான். ரோஷத்திற்கும் தூக்கத்திற்கும் நடந்த போராட்டத்தில் தூக்கம் வென்றது. கடைசியில் எல்லாரும் ஒரு வழியாக சென்று தூங்கினோம்.

மறுநாள் இரண்டு வகுப்புகள் முடிந்த நிலையில் ECE இல் இருந்து ஒரு நண்பன் ஜினுவிடம் எச்சரிக்கை செய்துவிட்டுப் போனான். ஜினு என்னிடம், ராஜேஷ் எல்லாத்துக்கும் ரெடியாயிக்கோ..! என்றான். எனக்கோ அடிவயிற்றில் யாரோ கரண்டியை விட்டு கலக்குவது போன்ற உணர்வு. இருந்தாலும் வெளிக்காட்டாமல் சரி ஜினு பாத்துக்கலாம் என்றேன்.மூன்றாவது பீரியட் முடிந்தது. நான்காவது பீரியட் பாலமுருகனுடையது.கிட்டத்தட்ட என் இதயம் துடிக்கும் ஓசை என் காதிலேயே கேட்டது.தெர்மல் சயன்ஸ் ஏதோ நடத்திக் கொண்டிருந்தார்.என் மனமோ என்குயரியில் நான் படப் போகும் பாட்டை படமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. வகுப்பு முடியப் போகும் நேரம் நான் ஒருவேளை தப்பி விட்டோமோ என்று தப்புக் கணக்குப் போட்டேன். இங்க ராஜேஷ் யாரு?என்றார் பாலமுருகன். நான் எழுந்தேன்.

Jinu and rajesh ..! come to my cabin after the class..! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இந்த நேரத்தில் எங்கள் பாலமுருகன் சார் பற்றி சொல்ல வேண்டும். 45 கிலோ எடை, ஐந்தரை அடி உயரம் கொண்ட என் போன்ற "soft character " புள்ள பூச்சி பசங்களையா உருட்டி மெரட்டி பெரிய ரவிடியாக form ஆனவர்.
நேராக அவர் ரூமுக்கு சென்றோம். சென்றவுடன், நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நெனைக்கலப்பா என்றார் ஜினுவைப் பார்த்து. நான் " சார் நாங்க எதுவுமே பண்ணல" என்றேன்.நீ பேசாத! என்ன ஜினு, படிக்க வந்த எடத்துல படிச்சோமா போனோமான்னு இல்லாம என்ன வேலை இது? என்றார். ஜினு குஜராத்தில் வளர்ந்த மலையாளி. சரளமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான். சார் let me explain you about what happened actually என்று அடுக்க ஆரம்பித்தான். நமக்குத் தெரிந்த ஆங்கிலமோ As I am suffering from fever I am unable to attend the class தான். பருப்பு கண்டிப்பாக வேகாது என்று தெரிந்தது.இருந்தாலும் என் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தேன். என்ன நடந்தது இதுவரை என்றேன், எனக்கு ஸ்ட்ரைக் செய்யும் நோக்கமெல்லாம் இல்லை, லேடீஸ் ஹாஸ்டல்ல பொண்ணுங்க பண்ணினனாலதான் பசங்க உணர்சிவசப்பட்டுட்டாங்க என்றேன்.

பாயிண்ட்டைப் பிடித்துக் கொண்டார். அப்போ லேடீஸ் ஹாஸ்டல் வரைக்கும் தூண்டி விட்டு காலேஜ் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறியா? என்றார். என்ன சார் கப்பித்தனமா பேசுறீங்க? நான் மெக்கானிகல் சார், பொண்ணுங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று மனதிற்குள் கோவமாக கத்திக் கொண்டு, சன்னமாக "நான் மெக்கானிகல் சார், பொண்ணுங்க கூட எல்லாம் பழக்கம் இல்ல சார் என்றேன்". அதெல்லாம் தெரியாதுப்பா இவ்ளோ வருஷ காலேஜ் வரலாற்றுல இப்படி நடந்ததில்ல. நீ ஸ்ட்ரைக் வரைக்கும் கொண்டு வந்திட்ட. ரெண்டு பேரும் நேரா ஹாஸ்டல் போய் உங்க லக்கேஜ் அ பேக் பண்ணிடுங்க. ஈவினிங் காலேஜ் முடிஞ்சதும் போய் TC வாங்கிட்டு கிளம்புங்க என்றார்.ஜினு நல்ல ஆகிருதியான உடம்பு. உடம்பு என்பதை விட சதைதான் அதிகம்.நன்றாக குலுங்கியபடி மறுபடியும் ஆங்கிலத்தில் ஆரம்பித்தான்.எனக்கு செம்ம கடுப்பு, எப்படியாவது பேசி கரெக்ட் பண்ணலாம்னு பார்த்தா, இவன் வேற இங்கிலீஷ் ல பேசி நம்ம ஆட்டைய கலைக்கிறானே என்று நினைத்தவாறு, அவனுக்கு ஜால்ரா போட ஆரம்பித்தேன், Yes sir..! What he is saying is the real truth sir..! Please believe us sir என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கெஞ்ச ஆரம்பித்தேன்.

எதுவும் பேச வேண்டாம்.! நேரா டிபார்ட்மென்ட்டுக்கு வாங்க என்று எங்களை அழைத்துச் சென்றார். ஆரம்பித்தது அடுத்த கட்ட இம்சை. HOD முதற்கொண்டு லேப் அட்டண்டர் வரை எங்களைக் காட்டி திட்ட ஆரம்பித்து விட்டார். அங்கேயும் ஜினு ஆங்கிலத்தில் பேசி நிலைமையின் தீவிரத்தைக் கொஞ்சம் குறைத்தான்.

நான் அங்கே நின்றுகொண்டிருந்த வேளையில் எங்கள் டிபார்ட்மென்ட் சார்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர், யார் இந்த பையன் என்று என்னை நோக்கிக் கேட்டனர். அவர்தான் சார், ஸ்டுடண்ட்ஸ் மத்தில ஹீரோவாக ஸ்ட்ரைக்க தூண்டி விட்டவர் என்று சுட்டிக்காட்டினார். நினைத்துக் கொண்டேன் " அடப் பாவிகளா எதிர்த்துப் பேசாம , கேக்க நாதி இல்லாம ஒருத்தன் கிடைச்சா என்ன வேணும்னாலும் சொல்லுவீங்கடா" என்று. அன்றைய தினம் அவ்வாறு கழிந்தது,மறுநாளும் வகுப்பறை செல்ல விடவில்லை. டிபார்ட்மென்ட் வாசலிலேயே நின்று கொண்டு வருவோர் போவோரிடம் திட்டு வாங்கிக்கொண்டு பாலமுருகனைக் கன்வின்ஸ் செய்ய படாத பாடுபட்டேன், ஓட்ட இங்கிலீஷ் உம் உதவவில்லை.
நாள் 2003 டிசம்பர் 31. அந்த இரவு ஹாஸ்டலில் எந்த கொண்டாட்டமும் இல்லை.மறுநாள் விடிந்தது. அதே மாதிரி டிபார்ட்மென்ட் வாசலில் தேவுடு காத்தோம்.அன்றே வீட்டுக்கு தந்தி அனுப்பி விட்டனர். "Your son misbehaved in college- start immediately".

மாலை ஹாஸ்டல் வந்தவுடன் தொலைபேசியில் அழைப்பு,அப்பா கிளம்பி வந்தார்,எதுவும் சொல்லவில்லை என்றாலும் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஜினு எஸ்கேப்.கற்றிருந்த ஆங்கிலம் அவனுக்கு கைகொடுத்தது.விட்டுவிட்டார்கள்.அப்புறம் போய் ப்ரின்சிபாலைச் சந்தித்து மன்னிப்புக் கடிதம் எழுதி எல்லாம் முடித்துவிட்டு அப்பாவை பஸ் ஏற்றி அனுப்பி விட்டு வந்தேன்.

இந்த சம்பவத்திற்கு அப்புறம் லேடீஸ் ஹாஸ்டலில் யார் ராஜேஷ் என்று ஒரு சின்ன அதிர்வலை கிளம்பியதாக வினேஷ் சொன்னதாக ஜினு சொன்னான்." டேய் ராஜேஷ் ! லேடீஸ் ஹாஸ்டல்ல நாம பேமஸ் ஆயிட்டோம்டா என்றான். நான் கடுப்பில், போடா பு..... ட ..! எல்லாம் நமக்குத் தேவைதாண்டா..! கீழ டவுசர் கிழியும்போது கழுத்துல கட்டுறதுக்கு டை வேறயா? என்று சூடானேன். என்ன ராஜேஷ்..! வீக் என்ட் வெள்ளம் அடிச்சா எல்லாம் ஓகே ஆயிடும்.. ! இதெல்லாம் ஒரு Adventurous Experience டா..! நாள கோலேஜ் லைப் திரிஞ்சு நோக்கும்போள் இதொக்க வேணடா..! என்று சிரித்தான்.. ! சரி ஜினு அப்போ வீக் என்ட் என்ன சரக்கு அடிக்கலாம்? என்றேன். Thats my boy என்றான் ஜினு. அறையில் சிரிப்பொலி தொடங்கியது...!

4 comments:

 1. மாப்பி !!! புகழேந்திய விட்டு வைக்கலையா !!!!! "அவனும் சற்று நேரம் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய வைரமுத்து கணக்காக தாவாங்கட்டையில் கையை வைத்து நின்று கொண்டே யோசித்தான்"

  --Marimuthu--

  ReplyDelete
 2. "சனி சடைய விரிச்சு போட்டு ஆடும் போது யார்தான் அதுக்குப் பேன் பார்த்து பின்னிவிட முடியும்" - :) nice one da..

  ReplyDelete
 3. Good Narration. Expected more humor by looking at the flow the story was going. Anyway yet another Interesting writing. Please find the Highlights below from my perspective.

  அப்பிடியே டீயைக் குடித்து விட்டு, காலையிலிருந்து மதியம் வரை உண்ணாவிரதம் (skip breakfast) இருந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உதவிய கலைஞர் போல --- I liked it!! I believe it would be an "Early Breakfast" not skip breakfast!

  சனி சடைய விரிச்சு போட்டு ஆடும் போது யார்தான் அதுக்குப் பேன் பார்த்து பின்னிவிட முடியும் - Really good one. I had a similar thought. not exact words.

  கீழ டவுசர் கிழியும்போது கழுத்துல கட்டுறதுக்கு டை வேறயா? - Extra-ordinary da!! and out of the Box dialogue

  Keep goin !!! why cant you try some imaginary fiction sort stories?

  ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !