Monday, December 31, 2012

சச்சின்

இந்தப் பதிவு சச்சினின் புள்ளி விபரங்களையோ  "On field Myths" கள் பற்றியோ அலசுவது அல்ல. மாறாக என்னுடைய கிரிக்கெட் நினைவுகள் சச்சினுடன் கூடவே தொடர்பானதாக உள்ளன. அவை பற்றிய சிறு பகிர்தலே இப்பதிவு.

கிரிக்கட் முதன் முதலில் எப்படி எனக்கு அறிமுகமாகியது என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன். எண்பதுகளின் இறுதியில் ஒவ்வொரு நடுத்தர வர்க்க வீடுகளிலும் கருப்புவெள்ளை அல்லது தவணை முறையில் வாங்கிய கலர் டிவிகள் அலங்கரிக்கத் தொடங்கிய காலம் அது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒரு காடும் காடும் காடு சார்ந்த ஊர் கீரிப்பாறை. மிக உயரத்தில் ஆண்டனா அமைத்தால் தான் திரையில் உடைத்த உளுந்துகளுடன் போனால் போகிறது என்று சற்றே படமும் தெரியும். 1991 அல்லது 1992 ஆக இருக்கலாம். எங்கள் வீட்டுக்கு மேலே சாத்தான்குளமோ சாத்தூரோ ஞாபகம் இல்லை ஒரு புதிய குடும்பம் வந்தது. அவர்கள் வீட்டில் ராஜா சுந்தர் என்று இரண்டு பள்ளிப் பருவத்தில் சிறுவர்கள்.ஒரு கோடைவிடுமுறையில் ஊரில் இருந்து வந்த தனது சொந்தக்கார சிறுவர்களுடன் ஒரு தெருவில் மூன்று குச்சிகளை நட்டு மரத்தை அறுத்து செய்த ஒரு மட்டையுடன் விளையாடக் களமிறங்கினர்.அதுவரையில் கிராமத்து விளையாட்டுக்களான சோறு பொங்கி விளையாடுதல் ,மற்றும் அக்காவின் நண்ப நண்பிகளுடன் சேர்ந்து கழங்கு அம்மனை சிற்றில் சிறுபறை சிறுதேர் இன்னபிற பிள்ளைத்தமிழ் விளையாட்டுக்கள் விளையாடிக்கொண்டிருந்த எங்களுக்கு அது ஒரு மிகப் பெரும் கலாச்சார அதிர்ச்சி. சற்றே ஆர்வம் மேலிட அந்த புதிய விளையாட்டை வேடிக்கை பார்த்தோம். மெதுவாக என்ன தம்பிங்களா ? விளையாட வர்றீங்களா ? என்று கேட்டனர். இந்த வ்ளாட்டு எங்களுக்கு தெரியாதுண்ணே என்றோம். சரி நாங்க சொல்லித்தர்றோம் கவலைப்படாதீங்க என்று சேர்த்துக் கொண்டனர். இவ்வாறாக அகில உலக கிரிக்கட் வரலாற்றில் மாபெரும் வீரர்களாக ஆகிவிடுவோம் என்னும் நம்பிக்கையில் பந்து பொறுக்கிப் போடும் சிறுவர்களாக அடியெடுத்து வைத்தோம்.இப்படியாக கிரிக்கட்டுடன்னான எனது தொடர்பு உருவாகியது.அது மேலும் வளர்ந்தது அருப்புக்கோட்டையில். அங்கே 40 அடி உயர ஆண்டனா தேவைப்படவில்லை.எனவே தூர்தர்சனின் கிரிக்கட் ஒளிபரப்புக்களைக் காண ஆரம்பித்தோம். எனக்கு நினைவுதெரிந்து முதன் முதலில் இந்தியா நியுசிலாந்து 1993 அல்லது 1994 இல் தான் முதன் முதலில் நான் கிரிக்கட் டிவி இல் பார்த்தது. அப்போது சச்சின் யார் அசாருதீன் யார் காம்ப்ளி யார் என்பது போன்ற எந்த விவரமும் தெரியாது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விளையாட ஆரம்பித்தவுடன்தான் விளையாட்டின் விதிகள் புரிய ஆரம்பித்தன. பின்பு நண்பர்கள் மூலமாக தெரிந்த இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் தான் சச்சின். அப்போது நவ்ஜோத் சித்து, அசாருதீன், காம்ப்ளி, மஞ்ச்ரேக்கர், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் போன்றோரும் சச்சினுடன் விளையாடிக்கொண்டிருந்தனர் . அன்றைய காலகட்டத்தில் சச்சின் என்பவர் இந்திய அணியின் பிரம்மாஸ்திரம். ஒட்டுமொத்த இந்திய அணியும் சச்சினின் ஆட்டத்தினை பொறுத்தே வெற்றியைப் பெற்றது. 1996 உலகக்கோப்பையில் அதிரடியாக ரன்குவித்த சச்சின் அதன்பின்பு தன்னுடைய பார்ம்மை 2011 உலகக்கோப்பை வரையிலுமே தக்கவைத்துக்கொண்டிருந்தார். 1996 உலகக்கோப்பைக்கு பின்பு யாராலுமே வெல்லமுடியாத அணியாக கோலோச்சிக் கொண்டிருந்தது இலங்கை அணி. அந்த காலகட்டத்தில் இந்தியாவுடன் விளையாடும் போது ஒரு 250 ரன்கள் எடுத்திருக்கும். பின்பு இந்தியா விளையாடும்போது துவக்க ஆட்டக்காரரான சச்சின் இருக்கும் வரையில் ரன்விகிதம் தேவையை விட அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பந்து பவுண்டரி சிக்ஸர் என்று பறந்து கொண்டிருக்கும். பின்பு சமிந்தா வாஸ் ஒரே ஒரு பந்தை வைடாக போடுவார். தேவையில்லாமல் அதனைத் தொட்டு கீப்பர் கேட்ச் ஆக சச்சின் அவுட் ஆனதும் ரன்விகிதம் குறைந்து இந்தியா தோல்வியைத் தழுவும். இந்த நிலை இரண்டு வருடங்கள் தொடர்ந்தது.1998 இல் சச்சின் தனது கிரிக்கட் வாழ்வின் அதிகபட்ச பார்மில் இருந்த சமயம் இலங்கை அணியை வெற்றி பெற ஆரம்பித்தது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா போன்ற வலுவான நாடுகளையும் வெல்ல முடிந்தது. சச்சின் 50 ரன்களை 100 ரன்களாக மாற்றும் வித்தையில் நிபுணராகி உலகச்சாதனையும் படைத்தார்.


23 வருடங்கள் சச்சின் எப்படி தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தார்? கால மாற்றத்திற்கேற்ப கிரிக்கெட்டின்  ஆட்ட விதிகளும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறின. முதல் பத்து ஓவர்கள் பவர் ப்ளே அப்புறம் பேட்டிங் பவர் ப்ளே பவுலிங் பவர் ப்ளே என்று ஆட்டம் விறுவிறுப்படைந்தபோது அதற்கேற்ப தனது ஆடும் முறையை அப்டேட் செய்து கொண்டார்.1998-1999 இல் இந்திய அணிக்கு மிகப்பெரும் எதிரியாக விளங்கியவர் நமது அணிக்குள்ளே இருந்த அஜித் அகார்கர். கிரிக்கெட்டின் கடையேழு வள்ளல்களில் ஒருவராக விளங்கிய அவர் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணிக்கு வாரிவழங்கிய 60-70 ரன்களையும் மீறி இந்தியா வெற்றி பெற முடிந்ததின் காரணம் சச்சின்தான். 1999 இல் உலகக்கோப்பை சமயம் தினமலரில் ஒவ்வொரு ஆட்டக்காரரின் தனிச்சிறப்பு வாய்ந்த ஷாட்களை அலசி ஆராந்து வரைபடங்கள் மூலம் விளக்கி ஒரு  பக்கம் வரும். அதில் சச்சினின் தனித்துவமான ஷாட்டான பிட்சில் இறங்கி வந்து நேராக ஒரு சிக்ஸர் அடிப்பாரே ஆது குறித்து விவரித்திருந்தனர். டோனி க்ரைக் Huge six Huge six என்ற, ஷார்ஜா  பாலைவனப் புயலில் ஷேன் வார்ன்னின் பந்துகளை பறக்கவிட்ட அதே ஷாட் தான். மைக்கேல் காஸ்பரோவிச் என்பவற்றின் கிரிக்கட் வாழ்வையே அஸ்தமிக்கச் செய்ததும் சச்சினின் அதே ருத்ரதாண்டவம் தான்.
பிற்காலத்தில் தனது முதுகு வலிக்கு காரணாமாக விளங்கியதும் அதுதான். பின்பு அதிலிருந்து மீண்டு வந்தாலும் அது போன்ற அக்ரஸிவ் அணுகுமுறை முற்றிலும் மறைந்து நிதானமான அதே சமயம் இலகுவாக விளையாடி ரன்களைக் குவித்ததும் அவரது தகவமைத்துக் கொள்ளும் திறனுக்குச் சான்று.எனினும் சச்சின் அவரது அக்ரஷனை 2003 உலகக் கோப்பையில் வெளிப்படுத்தி பாகிஸ்தானை சிதறடித்தபோது வந்துட்டார்யா பழைய சச்சின்  என்று துள்ளிக் குதித்தது என்றும் மறக்காது.

1999-2000 வரையில் அவரது அதிகபட்ச ரன்கள் 143 தான். அடுத்த 12 வருடங்களில் 186, 163, 175, 200 என்று பெரிய ஸ்கோர்களை குவித்தார். ஒருவிஷயம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அப்போது சச்சினுக்கு 35 வயதாகி விட்டிருந்தது. ஆனால் முன்னெப்போதை விடவும் நிபுணத்துவம் மிக்க ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார். பேடில் ஸ்வீப், ஷட்டில் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என்பது போன்ற இந்திய ஆட்டக்காரர்கள் அதிகம் ஆடாத ஷாட் களையும் அவர் ஆடத்தவறியதில்லை. அதுபோக அப்பர் கட் ஹெலிகாப்டர் ஷாட் போன்ற ஷாட்களையும் இந்தியாவில் முதலில் ஆடியது அவர்தான். 


ஒருமுறை ஜெயமோகன் ஆந்திராவில் எதோ ஒரு குக்கிராமத்தில் மைக்கேல்  ஜாக்சன் படம் உள்ள டிஷர்ட்டை ஒரு சிறுவன் அணிந்திருந்ததும்  மைக்கேல் ஜாக்சன் குறித்து அவன் அறிந்திருந்ததும் வியப்பான ஒன்று என்று எழுதியிருந்தார். அதேபோலத்தான் சச்சினும், படிப்பறிவே இல்லாத எனது பாட்டி சச்சினைத் தெரிந்து வைத்திருந்ததும் வியப்பான ஒன்றுதான். சச்சின் ஆட்டமிழந்தால் சச்சின் அவுட்டா அப்போ இந்தியா அவ்ளோதான்   தோத்துடும் என்று என்னோடு சேர்ந்து என் பாட்டியும் நம்பியது உண்டு.  நாம் எப்போதுமே சச்சின் நன்றாக விளையாடி நிறைய ரன்கள் குவிக்கவே விரும்புவோம் எதிர்பார்ப்புகள் எப்போதும்  நிறைவேறும் என்பது சாத்தியமில்லை. ஆனாலும் சச்சின் நமது எதிர்பார்ப்பை பெரும்பாலும்  பூர்த்தி  செய்திருக்கிறார். 450 ஆட்டங்கள் ஆடி 45 ரன் விகிதம்  என்பது சாதாரண விஷயமில்லை. 1990 களின் மத்தியில் Bigfun  என்னும் சூயிங்கம் வாங்கும்போது கிரிக்கட் வீரர்களின் தகவல்கள் அடங்கிய கார்டுகள் கிடைக்கும்.அதிக ரன்கள் அதிக விக்கட்கள் அதிக ரன் விகிதம் போன்றவற்றை வைத்து  நீ பெரிதா நான் பெரிதா என்று விளையாடுவோம். தற்போது அந்த கார்டுகள் வந்தால் அதிகம் விரும்பப்படும் கார்டு சச்சினின் தகவல் அடங்கிய கார்டாக இருக்கும்.

இந்திய அணியை பொறுத்த வரையில் ஜாம்பவான்களின் ஒய்வு என்பது இனிய விஷயமாக இருந்ததில்லை. எனினும் சச்சின் விரும்பும்வரையில் விளையாடலாம் அன்று BCCI இத்தனை நாட்கள் கூறிவந்த நிலையில் சச்சினின் திடுதிப்பென்ற ஒய்வு முடிவு அதிர்ச்சிதான். ஜெயசூர்யாவை போன்று கடைசியாக ஒரு போட்டியில் விளையாடி ரசிகர்கள் மத்தியில் ஒரு Grand Exit சச்சின் பெற்றிருக்கலாம். சச்சினின் டெஸ்ட் கிரிக்கட் வாழ்வில் ஒரு இனிய அனுபவமாக ஒய்வு பெறும் வைபவம் நடைபெறும் என்றே நினைக்கிறேன்.