Thursday, July 29, 2010

தூர்தர்ஷன் சில நினைவுகள்

நிகழ்காலத்தில் கடந்த நாட்களை நினைத்துக்கொண்டே இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பார்கள். ஆனாலும், பால்யத்தின் நினைவுகளை மனம் மீண்டும் மீண்டும் அசை போட்டுக்கொண்டே இருக்கிறது.இன்றைய சூழலில் ஒருவருடைய வாழ்வின் மிகச்சிறந்த நாட்கள் தம் 15 ஆம் வயதுக்குள்தான் நிகழ்கின்றன என்பது என் எண்ணம்.அதன் பிறகு அவனுக்கு வாழ்வைப்பற்றிய பயமுறுத்தல்களே ஊட்டப்படுகின்றன . பத்தாவது படிக்கும்போது எப்படியாவாது பத்தாவது நல்லா படிச்சீங்கன்னா அப்புறம் கவலை இல்லை என்றனர் ஆசிரியர்கள். தமிழ் வாத்தியார் சுப்பிரமணியன் சொன்னார், பன்னண்டாங் கிளாஸ்ல நல்லா படிச்சு டாக்டருக்கோ இஞ்சினீரிங்குக்கோ போனீங்கன்னா பிறகு லைப்ல கவலை இல்லடே, எனக்கு தெரிஞ்சு ஏழெட்டு வருசமா டாக்டர் படிக்கவன் இருக்கான், என்றார்.கல்லூரியில் சேர்ந்த போது இந்த நாலு வர்ஷமும் நல்லா படிச்சு நல்லா வேலைக்கு போயிட்டா அப்புறம் உங்கள யாரு படிக்கச் சொல்லப் போறாங்க? அப்புறம் நீங்கதான் ராஜா என்றனர். இப்படியாக இலக்குகள் மாறியதே தவிர பயமுறுத்தல்கள் குறையவே இல்லை.
வேலையிலும் கூட இப்போ ஹார்ட் வொர்க் பண்ணினீங்கன்னா அப்புறம் ஹாயா இருக்கலாம் என்று வேலைத் திணிப்புகள்.அப்படியென்றால் எப்பொழுதுதான் ஒரு மனிதன் கவலையின்றி வாழ்வது? பால்யத்தின் நினைவுகள் மட்டுமே எண்ணிப் பார்க்கும்தோறும் மகிழ்ச்சியை அளிக்க வல்லது. சிலருக்கு கசப்பான அனுபவங்களும் இருக்கலாம் .பொதுவில் மகிழ்ச்சியே அதிகம் இருக்கும் என்று நம்புகிறேன்.சில நாட்களுக்கு முன்னால் "போயின அந்நாட்கள்" "gone are the days" என்று ஒரு மின்னஞ்சல் வந்தது.

அந்த மின்னஞ்சலில் என்னுடைய சிறுவயதின் காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவை இடம் பெற்றிருந்தன. அப்பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அடையாளமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்தன.

கீரிப்பாறையில் 1988 இல் டயனோரா வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினோம். ஆன்டனா, டிவி பூஸ்டர், ஆன்டனா பூஸ்டர் ,ஸ்டெபிலைசர் என்று 12 ஆயிரம் ஆனதாக அப்பா சொன்னார்.எட்டு சானல்களுக்கு தனித்தனி பட்டன்கள் இருக்கும்.மலைப்பகுதி ஆனதால் டிவி புள்ளி புள்ளியாகத் தெரியும்.பெரும்பாலும் பகல் நேரங்களின் திருவனந்தபுரம் மண்டல ஒளிபரப்பின் கதகளி மட்டுமே தெரியும்.நான் சட்டை செய்ததில்லை. எனக்கு விளையாட காடும் ஓடைகளும் இருந்தன.முழங்கால் வரை சருகுகள் மூடிய ரப்பர் காடுகளில் பயமின்றித் திரிந்திருக்கிறேன்.
ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் எங்கள் வீட்டில் ராமாயணம் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் கூடிவிடும். மலையாளம் கலந்த தமிழ் தவிர வேறு மொழிகளே அறிந்திருக்காத மக்கள் ராமனையும் சீதாவையும் தந்திரக்காட்சிகளையும் பார்த்து மகிழ்வார்கள்.ஒன்றும் புரியாததால் நான் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டேன்.



 
 
 
 
 
 
 
 
 
 
 
   
 
 
கீரிப்பாறையில் ஒருநாளும் டிவியில் வண்ணம்  தெரிந்ததில்லை. அப்போது VCR எனப்படும் டெக் பிரபலமாகத் தொடங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் பள்ளி விடுமுறை சமயங்களில் ஐந்தாறு குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து டெக் மற்றும் கேசட்டுகள் வாடகைக்கு எடுத்து படங்கள் பாப்போம்.அப்போது மட்டுமே கலரில் தெரியும் டிவியை மிகுந்த விருப்பத்துடன் பாப்போம்.
 
அங்கிருந்து அப்பாவுக்கு அருப்புக்கோட்டைக்கு மாற்றலாகியவுடன் முதன் முதலில் டிவி கலரில் தெரிய ஆரம்பித்தது. கொடைக்கானல் டிவி நிலையம் அருகில் இருந்ததால். துல்லியமான வண்ணத்தில் டிவி பார்ப்பதே அலாதியானது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நான் பார்த்த முதல் திரைப்படம் "வெற்றிக் கரங்கள்".அதுவும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகப் போகும் படம் பற்றி புதன் கிழமை எதிரொலி என்னும் நிகழ்ச்சியில் வாசகர் கடிதம் படித்துக்கொண்டே இருக்கும் போது கடைசியாகச் சொல்வார்கள்.அந்த அறிவிப்பிற்காக முழு நிகழ்ச்சியின் மொக்கைகளையும் பாப்போம்.
தூர்தர்ஷன் மட்டுமே தெரிந்த அந்த நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகள் மிகுந்த எதிர்பார்ப்பினை அளித்தன. இரண்டு அரைவட்ட வடிவங்கள் "சங்கீத ஸ்வரங்கள்" என்னும் அழகன் படப் பாடலில் இறுதியில் வரும் ஓசையோடு சுழலுவதில் ஆரம்பிக்கும் அன்றைய ஞாயிறின் பொழுது.















அப்பா காலையில் ரங்கோலி பார்க்க ஆரம்பிக்கும் போது அரைத் தூக்கத்திலேயே அந்நாளைய ஹிந்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விழிக்க மனமின்றி படுத்திருப்பேன்.
கார்ட்டூன் படங்கள் பார்க்க அவ்வளாக வாய்ப்பில்லாத அச்சமயங்களில் ஜங்கிள் புக் என்னுடைய விருப்பமான நிகழ்ச்சி.மோக்லி,பாலு,பஹீரா, மோக்லியின் ஓநாய் அம்மா, கண்ணைக்கவரும் வண்ணத்தில் நீலவானம் , நட்சத்திரங்கள் , ஷேர்கான் வில்லன் புலி,மோக்லியின் பூமாராங் என்று பலவுமாகச் சேர்ந்து என்னை அந்த உலகத்தினுள்ளே அழைத்துச் சென்றுவிடும்.





அப்புறம் ஜங்கிள் புக் முடிந்தவுடன் டக் டேல்ஸ் , டேல்ஸ் பின் என்று மனம் மகிழும் கார்டூன்கள் பார்ப்பேன். 

 

அதன் பிறகு வந்தது சந்திர காந்தா. மிகப் பெரும் செலவில் உருவாக்கப் பட்ட ஒரு ஹிந்தி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர். சந்திரகாந்தாவில் எப்போதும் இடி இடித்துக் கொண்டே இருக்கும். ராஜா அரண்மனையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல தொடர் முழுவதும் நடந்து கொண்டே இருப்பார்.

மகராஜா ஷிவ்தத்,குரூர் சிங் ,சனி, என்று பல கதாபாத்திரங்கள். யக்கு கதாபாத்திரம் எங்களிடையே மிகப் பிரபலம். தலையில் அடிபட்டால் மூளை குழம்பி முட்டாள் போல நடந்துகொள்ளும் காமடி வில்லன் கதாபாத்திரம் அது.


அப்புறம் அந்த தொடர் இடையிலேயே நிறுத்தப் பட்டது. பின்பு மகாபாராதம் ஒளிபரப்பானது,
1992 இல் தூர்தர்ஷனில் சில வெளிநாட்டுத் தொடர்கள் இடம்பெற்றன.ஓஷீன் எனும் ஜப்பானியத் தொடர், ஒரு ஏழை அனாதைப் பெண் ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருப்பாள்.


அவள் படும் கஷ்டங்கள், அவள் அவற்றை சமாளிக்கும் விதம் என்று கதை செல்லும். மொழி புரியாமலேயே கண்களில் நீர் வரவழைத்த நிகழ்ச்சி அது .மொழி அப்போது ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை.கேட்டலிலும் பார்த்தாலே உவகை அளிப்பதாக இருந்தது. ஜப்பானின் பனிக்காலம், கூசும் பனியின் ஒளி, என்ற அந்த காட்சிப் பிம்பம் இன்னும் கண்ணில் நிற்கிறது.
அப்புறம் ஜையண்ட் ரோபோ என்னும் குழந்தைகள் நிகழ்ச்சி , ஒரு ரோபோவுடன் சிறுவனின் நட்பு பற்றிய தொடர். ஒரு எதிரி ரோபோ நகரத்தை அழிக்க முயலும்போது ஜையண்ட் ரோபோவும் சிறுவனும் சேர்ந்து காப்பாற்றுவார்கள். சிறுவன் ஆபத்து நேரங்களில் கையில் கட்டியிருக்கும் வாட்ச் மூலம் ரோபோவை உதவிக்கு அழைப்பான். அதில் சிறுவன் ரோபோவின் கரங்களில் உட்கார்ந்து ரோபோவுடன் சேர்ந்து பறப்பான்.


இதே போன்று ஒரு ரோபோ கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.கடைசியில் நல்ல ரோபோவை கேட்ட ரோபோ அடித்து வீழ்த்தும்போது கமான் ஜையண்ட் ரோபோ கமான் என்று சிறுவனுடன் சேர்ந்து நானும் கதறியிருக்கிறேன்.
ஸ்டிரீட் ஹாக் (Street Hawk) என்னும் அதிரடித்தொடர்,ஒரு மோட்டார் பைக் சாகச வீரன் தன் பிரத்யேக பைக்குடன் செய்யும் அதிரடி சாகசங்கள். 

ஜேம்ஸ் பாண்டின் கார் போல இதில் ஹீரோவுக்கு பைக். பைக் பறக்கும், அதில் துப்பாக்கியிருக்கும் இன்னும் பல சிறப்பம்சங்கள் இருக்கும். எனினும் பைக்கில் உட்காந்திருக்கும்போது மட்டும்தான் ஹீரோ பலமுடன் இருப்பான். மற்ற சமயங்களில் அடிவாங்குவான்.

ஞாயிறு மாலை நாலேகால் மணியிலிருந்து நாலரை மணிவரை விளம்பரங்கள் ஒளிபரப்புவார்கள். கபில் தேவ் வரும் பூஸ்ட் விளம்பரம் சன் பிளவர் எண்ணையின் மிகப் பெரிய பூரிகள் வரும் விளம்பரம்,நிஜாம் பாக்கு விளம்பரம் என ஒரு கதம்பமாக அந்த பதினைந்து நிமிடங்களும் கழியும்.பின்பு இப்போது போல உலகத் தொலைகாட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்கிற அறைகூவல்கள் எதுவுமின்றி ஒரு படம் ஒளிபரப்புவார்கள். இடையில் திரைப்படம் தொடர்கிறது என்று நீளத்தைக் குறைக்கும் வேலைகள் நடக்கும்.

எப்போதாவது தலைவர்கள் மரணம் நிகழ்ந்தால் அன்று படம் கோவிந்தாதான். காலையிலிருந்து ஒரு கிழவர் "டொயிங் டொயிங் "என்று வீணை போல ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு முகாரியில் மூக்கைச் சீந்திக்கொண்டு இருப்பார். சரி எப்படியும் நான்கு மணிக்குள் இந்த இழுவை முடிந்துவிடும் என்று பார்த்தால் நான்குமணிக்கு மேலாகவும் தொடர்ந்து கொண்டிருக்கும். சரி நாலரை மணி ஆகவில்லையே என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டால் நாலரைக்கும் அவரே இம்சிப்பார்.லேசாக நம்பிக்கை இழந்தாலும் ஐந்து மணிக்கு ஒருவேளை படம் போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு ஐந்து மணிக்கு வந்து பார்த்தால் கிழவர் இன்னும் உற்சாகமாக முகாரியில் ஒப்பாரி நிகழ்த்திக் கொண்டிருப்பார். அப்படியே மனம் துவண்டு விடும். தலைவர் இறந்த துக்கத்தை விட படத்தை இழந்த எரிச்சலே அதிகம் இருக்கும்.
இதற்கிடையில் 1993 இல் சன் டிவி தனது ஒளிபரப்பைத் தொடங்கியது.பலரும் கால மாற்றத்திற்கேற்ப கேபிள் டிவி இணைப்பினைப் பெற்று பல டிவி சானல்களை பார்க்கத் தொடங்கினார்கள் .இருந்தாலும் தூர்தர்ஷன் தொடர்ந்து போட்டியில் இருந்தது.

பின்பு ஸ்ரீ கிருஷ்ணா, ஓம் நமச்சிவாயா, ஜெய் ஹனுமான், அலிப் லைலா என்று மந்திர தந்திர மாயக் காட்சிகள் நிறைந்த தொடர்களை ஒளிபரப்பி பார்வையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டது. 

 

தொண்ணூறுகளின் இறுதியில் சன் டிவியில் மர்மதேசம் மிகப் பெரும் பிரபலமாக விளங்கிய போது பள்ளியில் நண்பர்கள் இந்தவாரம் ராஜேந்திரன் என்ன பண்ணினான் தெரியுமா என்று பீற்றிக்கொள்வார்கள்.நாங்கள் பதிலுக்கு இந்த வாரம் ஜெய் ஹனுமான்ல என்ன ஆச்சு தெரியுமா என்று தூர்தர்ஷனை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
மிலே சுரு மேரா தும்ஹாரா என்ற பாடல் , ஒளியும் ஒலியும் இவையெல்லாம் தூர்தர்ஷனின் அடையாளச்சின்னங்கள்.


சுரபி , "Turning Point " போன்ற பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கிய தூர்தர்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக சோகை இழந்தது. (சித்தார்த் ஹக்கும் ரேணுகா சஹானேயும் நிகழ்ச்சியை வழங்கும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும்.இன்று மானாட மயிலாட கலா மாஸ்டர் கெமிஸ்ட்ரி கமெண்டுகள் கேட்கும்போது காதில் ரத்தம் வரும்.)


 












பல தமிழ் ஆங்கில சானல்களின் வரவால் தூர்தர்ஷன் காணாமல் போயிற்று. வெகுநாட்களுக்குப் பிறகு கல்லூரியில் விடுதியில் தூர்தர்ஷன் மட்டும் தெரியும். அப்போது வேறு வழியில்லாமல் பார்க்க நேர்ந்தது.
கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார். எல்லா நவீன தொழில்நுட்ப வசதிகளை வைத்துக்கொண்டிருந்தும் ஏன் தூர்தர்ஷன் தள்ளாடுகிறது என்று புரியவில்லை என்று. இனிமேல் அது மீண்டெழ சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
எப்படிஎன்றாலும் தற்போது 25 வயதை ஒத்தவர்களுக்கு பல இனிய நினைவுகளை அளித்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

18 comments:

  1. // நீங்கள் 25-30 வயதுள்ளவரெனில் கண்டிப்பாக இப்பதிவு உங்கள் சிறுவயதின் நினைவுகளை மீட்டெடுக்கும். ஒரு சின்ன பிளாஷ் பேக்.ஓவர் டு 1990 s //

    மிகச்சரியான முன்னுரை....

    //வாழ்வைப்பற்றிய பயமுறுத்தல்களே ஊட்டப்படுகின்றன//
    // இப்படியாக இலக்குகள் மாறியதே தவிர பயமுறுத்தல்கள் குறையவே இல்லை//

    நல்லா இருக்கு டாக்டர் ராஜேஷ்!!!

    ReplyDelete
  2. Hi RK really I went back to my (g)olde(r)n days.It was amazing experiences.

    Jeyasingh,
    Nagercoil(Alanchi)

    ReplyDelete
  3. அருமையான பதிவு.எனக்கும் தூர்தர்சன் என்றால் பல கடந்த கால நினைவுகள் ஞாபகம் வரும்.

    ReplyDelete
  4. Machi!!! cool blog!!!! it made me to go thru the cool memories once again!! its really good tat u changed me as a 10 year old boy for some 10 mins!! good da!! :) ! Keep goin!! :)

    ReplyDelete
  5. அன்புள்ள ராஜிக்கு,

    உங்கள் பதிவு என் மனதுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. பதினைந்து வருடம் , கால சக்கரத்தில் பின்னோக்கி கூட்டி போனதற்கு நன்றி. நம் சிறுவயதின் முக்கிய பொழுதுபோக்கே , "ஒளியும் ஒலியும்". இந்த நிகழ்ச்சி மட்டும் இல்லை என்றால், நாமெலாம் எவ்வாறு ரஜினி கமல், கேப்டன், கார்த்திக் போன்றவர்களின் மெகா ஹிட் பாடல்களை கேட்டிருக்கவும் , பாத்திருக்கவும் முடியுமா( ஏனெனில் அந்த கால கட்டத்தில் ஏது செல்போன் , இபோனே(IPHONE ) , இபோத்(IPOD ) , வால்க்மன். என்னே ஒரு இம்பயமய்மான ஒரு வாழ்க்கை, கோடி கோடியாக அள்ளிக் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு அற்புத காலம்.

    ஞாயிற்றுகிழமையில் ஒளிபரப்பாகும் தமிழ் படத்தைப் பார்க்க, உங்களை போன்று நானும் அரக்க பறக்க எனது தெரு கிரிகெட்டை விட்டு விட்டு, தொலைகாட்சியின் முன் உட்கார்ந்து பார்ப்பேன். இடையிடையே ஒநூக்கு போவது என்றால் கூட , போக மாட்டேன் , ஏனென்றால் தலைவர் சண்டை காட்சி, ஸ்டைல் காட்சி, அழுவை காட்சி, சவால் விடும் காட்சி, போன்றவற்றை பார்க்க முடியாமல் போய்விடுமே என்ற அச்சம்.

    அன்றைய நேரத்தில் , "வயலும் வாழ்வும்" பற்றி நாம் என்ன வேண்டும், தினமும் ஒளிபரப்பாகி நம்மை போன்ற சிறுவர்களை நோகடிபதுக்கென்றே போடுவார்கள். அதுவும் சரி "வயலும் வாழ்வில்" என்னதான் உருப்படியாக இருகின்றது என்று பார்த்தல் , நயபய்சாவுக்கு கூட ஒன்றும் இருக்காது. இன்றும் நான் வெறுக்கும் ஒரே நிகழ்ச்சி அது தான்.

    ராஜேஷ் , மிக்க நன்றி.

    ReplyDelete
  6. தூர்தர்ஷனில் சப்தம் வரும்போது நான் டிவியில் சப்தம் அதிகம்மாக வைத்து விளையாடுவதாக அம்மா சொல்லி ஞாபகம்
    பழைய நினைவுகளை வெளிகொனர்ததுகு நன்றி

    ReplyDelete
  7. இம்முறை Pune to கோவை ரயில் மார்க்கமாக சென்றேன். தனிமை தோழன் என்னை Jungle புக் முதல் suntv யின் விடாது கருப்பு வரை நினைவு ஊட்டினான் . பணம் , எதிர்காலம் , காதல், கசப்பு என்ற எந்த வலியும் இல்லாத சுகமான பொற்காலம்(கோல்டன் days ) ..அருமை ராஜேஷ் அருமை.....

    ReplyDelete
  8. De Rajesh,

    Captain Vyom,knight rider,Shakthi.shakthi..shakthimaa ellam solla maranthitaye!!!
    Nice Package da..

    ReplyDelete
  9. Hi Rajesh, You are really gr8 da.. Thanks for taking me to 1990's ..

    ReplyDelete
  10. innimaiyana, thelivana neerodai poll kalanga millatha thogupuku ennadhu valthukkal. paditha piragu silla ninaivalaigal; magilchiyilum, sogathtilum kalangiyathu en nenjam...enimaiyana ninaivugal thorattum....

    endrum anbudan...hyacinth

    ReplyDelete
  11. பின்னூட்டங்கள் மூலம் மேலும் இது போல பதிவுகள் எழுத உத்வேகம் அளித்த மாரிமுத்து, ஜெய சிங் ,சிந்திப்பவன் , பிரவின் ,பாலாஜி சங்கர், ஜெய்,செந்தில்,ஹ்யாசிந்த் முதலானோருக்கு என் நன்றிகள்.
    @ விச்சு
    நண்பா சக்திமான் ,கேப்டன் வியோம், தண்ணீர் மனிதன் எல்லாம் கொஞ்சம் நமக்கு விவரம் தெரிஞ்சபிறகு வந்தது டா.. எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
    நான் சொல்ல ஆசைப் பட்டது வெளிநாட்டுத் தொடர்கள் அப்புறம் பத்து வயசுக்குள்ள பார்த்த நிகழ்ச்சிகள் பற்றி..
    @ மகேஷ்
    என்ன கேப்டன் வயலும் வாழ்வும் பற்றி தப்பா சொல்லிட்டீங்க ?
    விவசாயிகளின் வாழ்வுக்கு விளக்கேற்றும் நிகழ்சியல்லவா அது ? டிஸ்கவரி சானல் இல்லாத காலத்தில் ஆடு, கோழி, மாடு, பன்றி, மற்றும் வாத்து வளர்ப்பு என பல நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன். உளுந்து சாகுபடியில் ஊடுபயிர் என்ன விதைக்கலாம்? தென்னங்காய்கள் போரோன் குறைபாட்டினால் எப்படி பாதிக்கப் படும் போன்று பல தகவல்களை வழங்கிய விவசாயிகளின் நண்பன் அந்நிகழ்ச்சி.
    அதையும் நான் விட்டு வைத்ததில்லை ;-)

    ReplyDelete
  12. Hello Rajesh ! I could forgot Shakthiman and Jai hanuman...I literally run from school to see shakthiman on saturdays..that too I might already saw that episode on tuesdays..Thanks for reminding doooooordarshan...

    ReplyDelete
  13. Wow.. Machi ur best blog till date.. Amazing with ur memories da.. I do got all the memories when Iam reading through.. Sakthimaan, reporter, junoon apram Anubam kare oru nigalchi naduthunaaru... then leave naal-la Shanthi, tuesday 7.30-8.30 set naadagam.. Amazing days da.. hmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    ReplyDelete
  14. Hi Partner,

    Arumayana blog.... nan ungakita munadiye sonnathu than, unga parvayil samuthayathai patri eluthina nanla iruukum.... try pannavum...

    neenga mageshku alitha bathililku enn comment...
    Magesh vayalum valvum namaku pudikathu-bore endru than sonnar thappa sollala.... 10 vayathu pasangaluku kandipa athu boru than. antha 1/2 mani neram neega vayalum valvum patheengalanu nenachu parrunga (kandipa irrukathu....) athu nalla program than anna nammaku bore adicha nalla programla athuvum onu...

    .... sithaarth

    ReplyDelete
  15. Hi Rajesh.. Superb da.. I stil cant forget those Surabhi episodes.. Keep going RK..
    //Velmurugan...

    ReplyDelete
  16. ராஜேஷ்..உங்க பதிவு எனக்குள்ளேயும் யோசிக்க வச்சது..இதே அனுபவங்கள் எனக்கும் இருந்திருக்கு..ஓஷின் நைட் போடுவாங்க..வீட்டில் அடம் பிடிச்சு பார்ப்பேன்..அந்த குட்டிபொண்ணு எவளவு அழகு..குச்சி வச்சு எதையோ எடுத்து சாப்பிடும்போது பார்த்துட்டே இருக்கலாம் போலே இருக்கும்..அப்புறம் spider man ,விக்ரம் aur வேதாள்..ரஜனி னு ஒரு காமெடி ஹிந்தி டிராமா..இதர் உதர் னு ஒரு காமெடி டிராமா..(அப்போ கூட பார்த்து பார்த்து ஹிந்தி நல்லா புரிய ஆரம்பிச்சது..இப்போ சுத்தமா புரில)..எங்க வீட்லயும் எங்க காலனிலேயே முதல டிவி வாங்கினோம்..விசிஆர் ஓட சேர்ந்து..காலனி பசங்க பூராவும் எங்க வீட்ல தான்..ரொம்ப அலட்டுவோம்..அதை செய்..இதை செய் னு.. பிரண்ட்ஸ் மத்தியில் செம மரியாதை தான்..அது ஒரு நிலா காலம்...

    ReplyDelete
  17. இத படிக்கும் போதே உண்மையா மனசு அப்படியே லேசாகுது... ச்சே இனி அந்த நாள் எல்லாம் திரும்ப கிடைக்காதானு தோணுது... இப்ப எவ்ளோ சேட்டி(ட)லைட் சேனல் வந்தாலும் அப்ப நம்ம பாத்த ஜங்கிள் புக்குக்கோ இல்ல சந்திர காந்தாவுக்கோ ஈடாகாது... 1994 ல அத பாக்குறதுக்காகவே எப்ப ஞாயிற்று கிழமை வரும்ணு உக்காந்துருப்பேன். அது எல்லாம் ஒரு காலம்.. ஹ்ம்ம்ம்ம்...

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !