Wednesday, July 7, 2010

ஜெயமோகன் & ஜேம்ஸ் கேமரூன் , பனிமனிதனும் அவதாரும்

சிலமாதங்களுக்கு முன்பு வாங்கிய ஜெயமோகனின் பனிமனிதன் குழந்தைகளுக்கான நெடுங்கதை படித்தேன். முன்னுரையிலேயே குறிப்பிட்டு விடுகிறார். இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல பெரியவர்களுக்கானதும்தான் என்று.சின்னச் சின்ன வாக்கியங்களில் முழு நாவலும் கூடவே பற்பல அறிவியல் தகவல்களும்.


சின்ன வயதில் வெள்ளிக்கிழமைகளில் தினமலருடன் வரும் சிறுவர்மலரைக் கைப்பற்ற எனக்கும் அக்காவுக்கும் பலத்த போட்டி நடக்கும்.பெரும்பாலும் காலையில் விழித்தவுடன் ஓடோடிச்சென்று புத்தகத்தைக் கைப்பற்றி மெத்தைக்கு அடியில், ஸ்டோர் ரூமில், கிரைண்டருக்கு அடியில் என அவள் யூகிக்காவண்ணம் பல இடங்களில் ஒளித்துவைத்துவிட்டு பள்ளிக்கு செல்வேன்.மதிய உணவு இடைவேளை மணி அடித்ததும் வகுப்பிலிருந்து சிட்டெனப் பறந்து காட்டுவழிப் பாதையில் ஓடி 2 நிமிடங்களில் வீட்டை அடைந்து புத்தகத்தை படித்தால்தான் திருப்தி.பின்னாளில் அம்மாவிடம் இது குறித்து முறையிட்டு எனக்கு அடி வாங்கித்தந்தாள் அக்கா.அந்நாட்களில் அந்த அளவு வெறியுடன் சிறுவர்மலர் ராணி காமிக்ஸ் போன்றவற்றை நேசித்திருக்கிறேன்.எண்ணற்ற புத்தகங்களும் என்னிடம் இருந்தன.நினைவு தெரிந்து எழுத்துக்கூட்டி வாய்விட்டுப் படித்த ஞாபகம் இல்லை எனக்கு.வெகு சிறிய வயதிலேய மனதுக்குள் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டோம் நானும் அக்காவும்.கல்லூரியில் என்னுடன் படித்த சிலபேர் எழுத்துக்கூட்டி தமிழ் வாசித்ததைக் கண்டபோது என்னுள் அபாரமான நம்பிக்கை எழுந்தது செம்மொழி செத்த மொழியாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என.

நாவல் இமயமலை லடாக் பகுதிகளில் காணப்படும் மிகப்பெரிய காலடித்தடங்கள் குறித்த இராணுவத்தினரின் ஆய்வு பற்றியது.மேஜர் பாண்டியன் என்பவன் அக்காலடித்தடங்கள் குறித்து ஆராயப் போகிறான்.கூடவே பௌத்த மதம் குறித்த விஷயங்களும் வருகின்றன. வாழும் புத்தரைத்தேர்வு செய்வதற்காகன தேடலும் இடம்பெறுகிறது.யதி என்னும் பனி மனிதனைத் தேடும் ஒரு சாகசப் பயணம் தான் நாவல். மேலும் படிக்க ஆசையாக இருந்தால் udumalai.com இல் வாங்கிப் படிக்கவும்.

அதுவரை சாதாரணமாகப் படித்துக் கொண்டிருந்த நான் பனிமனிதனை அவர்கள் சந்திக்க ஆரம்பித்த இடத்தில் பனிமனிதர்கள் வாழும் இடம் பற்றிய வர்ணனைகளில் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். பல இடங்கள் எனக்கு அவதார் திரைப் படத்தை நினைவுபடுத்தின.நாவல் எழுதப் பட்டது 1999 ஆம் ஆண்டு.அவதார் ஜேம்ஸ் கேமரூனால்  14 ஆண்டுகளாக மெருகேற்றப் பட்டது என படித்துள்ளேன். கண்டிப்பாக ஜெயமோகனும் ஜேம்ஸ் கேமரூனும்   சந்தித்திருக்கும் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது மிகுந்த வியப்புக்குரிய ஒன்றுதான்.

சில உதாரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் படித்துவிட்டு நீங்களே கூறுங்கள்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும் )

31 ஆம் அத்தியாயத்தில் வரும் வரிகள்

// அங்கு நின்ற ஒவ்வொரு மரமும் மிகப் பெரியவையாக இருந்தன.நமது ஊரில் உள்ள ஒரு மிகப் பெரிய மரத்தின் அடிமரம் அளவுக்கு அந்த மரங்களின் கிளைகள் காணப்பட்டன.//


 
 
 
 
 
 
 
 
 
 
 
// ஒரு இடத்தில் ஏராளமான நாய்கள் மரங்கள் மீது துள்ளித்துள்ளி விளையாடின.அவற்றுக்கு ஆடுகள் போல கொம்புகள் இருந்தன.அவற்றின் கால்களும் குரங்குக் கால்கள் மாதிரி இருந்தன //
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எவ்வளவு கூர்மையான விவரிப்பு. கூடவே படத்தில் நாய்களின் கால்களைப் பாருங்கள்.எப்படி இருவரும் இது பற்றி யோசித்தனர் என்று வியப்பு மேலோங்குகிறது.
 
அத்தியாயம் 35 // மிகப்பெரிய நீல நிற மின்மினிகள் கூட்டம் கூட்டமாக எழுந்து பறந்தன.ஒவ்வொரு மின்மினியும் ஒரு ஜீரோ வாட் பல்ப் அளவுக்கு இருந்தது.//
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இவற்றிலும் பெரிய ஆச்சரியத்தைப் பாருங்கள்


அத்தியாயம் 34
//ஒவ்வொரு பனி மனிதனாக வந்து மேற்குத்திசை நோக்கி அமரத் தொடங்கினார்கள்.சற்று நேரத்தில் அங்கு ஏராளமான பனி மனிதர்கள் கூடி விட்டார்கள்.
"எப்படியும் இவை மூவாயிரத்துக்கு குறையாது" என்றார் டாக்டர்.
பனிமனிதர்கள் மறையும் சூரியனைப் பார்த்தபடி அமர்ந்தார்கள்.அவர்களுடைய முகமெல்லாம் சிவப்பாக அந்தியின் ஒளி பரவியது .
மிக மெதுவாக அவர்கள் பாட ஆரம்பித்தார்கள்.அது பாட்டு இல்லை வெறும் ரீங்காரம் மட்டும் தான்.ஆனால் அத்தனை பேரும்சேர்ந்து ஒரே குரலாக அதை எழுப்பினார்கள்.ஒரு குரல் கூட விலகவே இல்லை.//


அவதாரில் நாவிகளின் வாழ்க்கைக்கும் இயற்கைக்குமான நுண்ணிய பிணைப்பு, தங்கள் தெய்வம் ஏவாவிடம் வேண்டும்போது உட்கார்ந்து ஒத்த மனதுடன் வேண்டுதல் என பல நிகழ்வுகள் பனிமனிதன் கதையிலும் வந்துள்ளது.

என்னுள் எழுந்த வியப்பு இன்னும் அடங்கவே இல்லை. கிட்டத்தட்ட மனிதனால் எடுக்கப்படக்கூடிய சினிமாவின் எண்ணமுடியாத சாத்தியங்களைக் கடந்த படைப்பு அவதார் என்று சிலாகிக்கப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன்னரே படைக்கப்பட்ட படைப்பான பனிமனிதன் அவதாருடன் ஒரு வினோதமான தற்செயல் ஒத்தியல் நிகழ்வுதான்.

இதுகுறித்து நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதலாம் என்று எண்ணியிருந்தேன்.சில மாதங்கள் முன்பு வாசகர் கடிதம் ஒன்றில் நண்பர் ஒருவர் ஜெயமோகனிடம் தன் வியப்பை தெரிவித்திருந்தார்.எனினும் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள எண்ணியதன் விளைவே இப்பதிவு.


7 comments:

 1. Hello .... Hello.... அவதார் இனைப் படைத்தது ஜேம்ஸ் கமரூன்

  ReplyDelete
 2. பதிவு அருமை .. ஜெமோவின் ஏழாம் உலகம் புத்தகம் பற்றி எனது விமர்சனத்தை எழுதிள்ளேன் படித்து பார்க்கவும்

  ReplyDelete
 3. அவதார், ஸ்பீல்பெர்க்கின் படம் அல்ல. அது ஜேம்ஸ் கேமரான் படம். வரலாறு முக்கியம் !

  ReplyDelete
 4. இரவு ஒரு மணி அளவில் எழுதப்பட்டது , கவனப் பிறழ்வு காரணமாக ஸ்பீல்பெர்க் கேமரூன் குழப்பம் நிகழ்ந்துள்ளது. காலையில் யோசிக்கும்போது தவறு உறைத்தது.அதனை திருத்துவதற்குள் பின்னூட்டம் இட்டு சுட்டிக்காட்டிய அனானி நண்பர்களுக்கு நன்றி, தவறுக்கு வருந்துகிறேன்.எதிர்காலத்தில் நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 5. காமிக்ஸ் என்றதும்,

  மாயாவி
  பிளாஷ் கார்டன்
  இரும்புக்கை மாயாவி
  ஆர்ச்சி
  கபீஷ்..

  இது போல நிறைய காமிக் பாத்திரங்கள் நினைவில் வந்து போனது நண்பா.....

  நல்ல பதிவு...
  பனிமனிதன் - படித்துப் பார்க்கிறேன்

  ReplyDelete
 6. அன்புள்ள ராஜி,
  உங்கள் பதிவு நன்று.எழுதும் திறன், கருத்துப் பரிமாற்றல், சொல் வளம், எளிமை, இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
  "பனி மனிதன்" எழுதிய ஜெயமோகனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராடுக்கள்,
  தல, தல( J M ) தான்.

  சென்ற வாரம் தான் , "பனி மனிதன்" புத்தகம் வாங்கினேன், படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. படித்து விட்டு மீண்டும் உங்களை அஞ்சல் இடுவேன்.

  ReplyDelete
 7. தமிழிலும் மேதாவிகள் இருக்கிறார்கள் , ஜேம்ஸ்கேகரூனை விட ஜெயமோகன் ஒருபடி மேலேயே சிந்தித்திருக்கிறார் , என்ன , அதை கொண்டாடத்தான் தமிழர்களுக்கு அறிவு போதவில்லை , எத்தனைபேர் பனிமனிதன் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ?

  ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !