Tuesday, June 1, 2010

இமான்

முதல் முறை அவனைப் பார்த்த போது எதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. சாதாரண பையன்கள் போல இல்லை. ஒரு ஆறு வயது மதிக்கத்தக்க உருவம், கையில் ஒரு சின்ன தூக்குவாளியுடன், தோள்பட்டையுடன் இணைந்திருக்கும் நிக்கர் அணிந்து , சட்டை அணியாமல் நடந்து வந்தவன் முகத்தைப் பார்த்தேன்.குச்சி குச்சியாக சீனச் சிறுவர்கள் போல தலை முடி, கண்களும் அவ்வாறே மங்கோலிய பாணியில்.வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. அவன் முகத்தைப் பார்த்தவுடன் இவனது பெயர் கண்டிப்பாக கணேஷ் என்று இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.அவன் கண்கள் எங்கள் வீட்டிலிருக்கும் பிள்ளையார் படத்திலிருப்பது போல் இருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.

சில நிமிடங்களில் அவனது அம்மா பின்தொடர்ந்து வந்தார்கள். நீங்கதான் இந்த வீட்டுக்கு புதுசா வந்திருக்கீங்களா/ என்று என் அம்மாவிடம் கேட்டார்கள்.பின்பு அவர்கள் பெயரையும் சொந்த ஊரையும் கூறி பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டார்கள். பையன் பெயர் இமான் என்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு உண்டு என்றும் சொன்னார்கள். கணேஷ்... இமான்.... சம்பந்தமே இல்லை, இவனுக்கு கணேஷ் என்ற பெயர்தான் நன்றாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.

அம்மா விச்சு முட்டா என்றான். போய் அக்கா கடைல வாங்கிக்கோடா என்று சொன்னார் இமானம்மா.பின்பு அவனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனிப்பது என் வாடிக்கையாயிற்று.

இமான் சில வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருந்தான்.அம்மா அப்பா இன்னும் விச்சு முட்டா, விக்ஸ் மிட்டாய் தான் விச்சு முட்டா என்பான். அந்த வட்டாரத்தில் அவனை அனைவரும் அறிந்து வைத்திருந்தார்கள். அப்பா என்று அழைத்தால் அவனது அப்பா கோபப்படுவார். ஏனென்றால் இமான் அம்மாவின் முதல் கணவருக்குப் பிறந்தவன் , விவாகரத்தாகி மறுமணம் செய்து கொண்டவர்.இமான் அம்மா எங்களிடம் நல்ல பிரியமாக இருப்பார்.

இமானின் வார்த்தைகளில் எங்கள் பெயரும் சேர்ந்து கொண்டது, மாமா,அனு அம்மா ,அனு என்று என் தம்பியை அழைப்பான், அங்கா என்று என்னை அழைப்பான்.கண்ணா என்பது மருவி அங்கா ஆகிவிட்டது. என் அக்காவை எப்படி கூப்பிட்டான் என மறந்து விட்டது.

சிலநேரங்களில் காலையில் வீட்டுக்கு வருவான். அம்மா தோசையோ இட்லியோ கொடுப்பார்கள், அவனும் என் தம்பியும் சாப்பிடுவார்கள். அம்மா செய்யும் இடியாப்பம், ஆப்பம் போன்றவை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.தவறாமல் அவனுக்கும் சேர்த்து செய்வாள் அம்மா.எங்களுடன் சேர்ந்து விளையாடுவான்.ஏதாவது சொல்வான். ஒன்றும் புரியாது , இமான் அம்மா எங்களுக்கு அர்த்தம் சொல்வார்.நாங்கள் வந்த பிறகு இமான் நிறைய வார்த்தைகள் கற்றுக் கொள்வதாக இமானம்மா சொன்னார்.

ஒருநாள் அவன் வீட்டில் பெரும் சத்தம் கேட்டது, அவன் அப்பா திட்டிக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.அவன் அம்மா அழுது கொண்டிருந்தார். என்ன ஆயிற்று என்று கேட்டால் , இமானிடம் ஒரு நூறு ரூபாய்த் தாள் கொடுத்திருக்கிறார் அவன் அப்பா, இமான் சற்று நேரம் பார்த்து விட்டு சுக்கல் சுக்கலாக் கிழித்து எறிந்திருக்கிறான். அவன் அப்பா கோபத்தில் சாப்பாட்டுத் தட்டை எடுத்து எறிந்துவிட்டு வெளியே போய்விட்டார்.இமானுக்கு காசென்ன தாளென்ன என்று வித்தியாம் தெரியுமா..? அவனுக்கு தெரிந்த ஒரே காசு 50 காசுதான். கொடுத்தால் விச்சு மிட்டாய் கிடைக்கும்.சிறிது நேரம் அழுத அவன் அப்புறம் அம்மா விச்சு முட்டா என்று கடையை நோக்கி ஓடினான். அவனைப் பார்த்த அம்மா இன்னும் கொஞ்சம் அழுதார்.

அந்த வீட்டில் இன்னும் ஒரு வரவு வந்தது. இமானுக்கு ஒரு தம்பி பாப்பா வந்தான்.எங்களுக்கு விளையாடவும் பொழுது போக்கவும் குட்டிப் பையன் கிடைத்தான். சிலகாலங்கள் மகிழ்ச்சியாகச் சென்றது.

அவர்கள் வீட்டருகே நாங்கள் இருந்தது எட்டு மாதங்களே. அப்புறம் அப்பா வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்தார்.வீடு மாறிச் சென்றோம். சிலநாட்கள் கழித்து புதிய வீட்டுக்கு இமானுடன் குட்டிபையனையும் தூக்கிக் கொண்டு வந்தார்.

நாங்கள் வீடு மாறியவுடன் பூட்டிக் கிடந்த வீட்டில் காலையில் சென்று அனு .. அனு அம்மா என்று அழைத்தவாறே தட்டியிருக்கிறான்.விளையாடவும் பேசவும் ஆளில்லாமல் தவித்துப் போய்விட்டான் என்றார்கள். மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.என்ன செய்ய முடியும்.?

அப்புறம் எப்பொழுதாவது வீட்டுக்கு வருவார்கள், கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுப் போவான் .காலப்போக்கில் வரத்து குறைந்தது. ஒருநாள் நான் சைக்கிளில் சென்று பார்த்த போது அவர்கள் வீடு மாறிப் போய்விட்டிருந்தனர். அப்புறம் எந்த தகவலும் இல்லை.

ஒருநாள் அப்பா சொன்னார், இமான் அம்மாவிற்கு தொண்டையில் ஏதோ கட்டி வந்து மயக்கமருந்து கொடுத்தும் பலனின்றி ,உணர்விலேயே அறுவை சிகிச்சை செய்து இறந்து போனதாகவும், பின்பு வீட்டில் கொண்டு வந்து வைத்த பின்பு திடீரென்று நினைவு வர திரும்பி மருத்துவமனை கொண்டு சென்று பிழைத்துக் கொண்டதாகவும் சொன்னார்.அப்புறம் அவர்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்கள்.இமானைப் பற்றி நான் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனேன்.

13 வருடங்கள் கழித்து படிப்பு முடித்து வேலை தேடும் படலத்தில் ,வாழ்க்கை வெறுத்து சோர்ந்து போய் பெங்களூரில் மெஜஸ்டிக்கிலிருந்து மடிவாலா செல்லும் பேருந்தல் ஏறி அமர்ந்தேன்.என் எதிர் இருக்கையில் ஒரு தாயும் மகனும் வந்து அமர்ந்தார்கள்.பையன் சிரித்தவாறே இருந்தான் வாயிலிருந்து அனிச்சையாக எச்சில் ஒழுகியது.தாயோ ஒரு கைக்குட்டையால் துடைத்து விட்டபடி இருந்தாள். பையனுக்கு இமானின் வயது இருக்கலாம், அதே போன்ற கண்கள்.என்னைப் பார்த்து அம்மாவிடம் எதோ சொல்லி ஒலியெழுப்பினான். நான் அம்மாவைப் பார்த்து புன்னகைத்தேன். அவர்களும்.அவள் முகத்தில் ஒரு விதமான சங்கடத்தைக் கவனித்தேன். மேலும் அவர்களைப் பார்க்கத் திராணியின்றி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடியே வந்தேன்.ஏனோ பலவருடங்கள் கழித்து இமானின் முகம் என் நினைவுக்கு வந்தது.

5 comments:

 1. அன்புள்ள ராஜி,
  சங்கடங்கள் இல்லையேல் வாழ்க்கை இல்லை, சலனங்கள் இல்லையேல் மனித வளர்ச்சி இல்லை. இமான் உங்கள் கட்டுரையில் வருகின்ற பாத்திரம் மட்டும் இல்லை, உலகத்தின் ஒவ்வரு மூலையிலும் , ஒவ்வரு தெருக்களிலும் இருக்கிறான். மூளை வளர்ச்சி குன்றியவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இது இறைவனின் சாபக்கேடு என்று நான் சொல்ல மாட்டேன், ஏனெனில் இவர்களால் ,நம்மை சுற்றி நடக்கும் அக்க்ரமங்களையும் , குரோதங்களையும் பார்க்கவும் உணரவும் முடியாத ஒருவிதமான அற்புத படைப்புகள். விச்சு முட்டா மட்டுமே உலகமென வாழ்பவர்கள் இவர்கள். இந்த கட்டுரையை இயற்றியதர்காக உங்களுக்கு கோடி சமர்பணங்கள் .

  ReplyDelete
 2. நன்றி ஜி .. இனியொரு பிறவி இவன்போல் வேண்டாம் என்பதே கடவுளிடம் நான் வேண்டுவது...

  ReplyDelete
 3. //இனியொரு பிறவி இவன்போல் வேண்டாம் என்பதே கடவுளிடம் நான் வேண்டுவது// நானும்..

  ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !