Friday, February 5, 2010

நான் மொழியறிந்தேன்

தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான்.என் அம்மா அப்பா நன்றாக மலையாளம் பேசுவார்கள்.எனக்கும் அக்காவுக்கும் தம்பிக்கும் நன்றாக மலையாளம் புரியும் என்றாலும் பேச முயற்சிப்பதில்லை.எப்பொழுதாவது திருமணங்களில் உறவினர்களைப் பார்க்கும் போது அவர்கள் மலையாளத்தில் ஏதாவது கேட்டால் தமிழில் பதில் கூறுவோம். "ஓ அவரொக்க தமிழாணோ?" என்று அம்மா அப்பாவைப் பார்த்துக் கேட்பார்கள். குமரி மாவட்டம் பண்டைய திருவிதாங்கூரின் ஒரு பகுதி என்பதால் மலையாளம் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் ஒருமாதிரியாக என்னால் சமாளிக்க முடியும்.அப்புறம் ஆங்கிலம். ஆங்கில வழியில் பள்ளியில் படித்தாலும் அதிகம் பேசியதில்லை. ஆனால் கல்லூரியின் இறுதிக்காலங்களில் ஆங்கிலம் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தினால் ஒருவாறு பேசத்தொடங்கினேன்.தற்சமயம் போதுமான அளவுக்கு பிழையின்றி பேசவும் எழுதவும் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


பொதுவில் ஒரு மொழியை கற்க வேண்டுமானால் அம்மொழி நம் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.பணி நிமித்தமாக நான் பெங்களூரில் எட்டு மாதங்கள் இருந்தேன்.அங்கு அலுவலகத்தில் பெரும்பாலும் கன்னட மக்கள்தான். ஆறில் நான்கு பேர். முதலில் எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.நம்மூரில் செந்தில் சரவணன் கார்த்திகேயன் எப்படி பொதுப்பெயரோ அங்கும் ஒரே ஒரு பெயர்தான் பொதுப் பெயர்.மஞ்சு நாதா.வீட்டுக்கு ஒரு மஞ்சு கண்டிப்பாக உண்டு.நான் அறிந்தவரை பிராந்திய மொழிகளில் ஒரு தமிழன் கற்பதற்கு எளிமையான மொழி கன்னடம்தான்.தமிழின் வேர்ச்சொற்கள் நாம் அதிகம் பேச்சுவழக்கில் பயன்படுத்தாத சொற்கள் கன்னடத்தில் பேச்சுவழக்கில் உபயோகிக்கப்படுகின்றன. கூந்தல் - கூதல்(கன்னடம்) ஓதுதல்- படித்தல் (தமிழ்) ஓது என்றால் படி என்று கன்னடத்தில் அர்த்தம்.

மொழியின் அர்த்தம் புரியாமையால் ஏற்படும் அதிர்ச்சிகளையும் நான் சந்திக்க வேண்டியிருந்தது. முதன் முதல் ஒரு தர்ஷினி வகை ஹோட்டல் (நின்று கொண்டே சாப்பிடும் சுய சேவை உணவகம்) சென்று இட்லி வடைக்கு டோக்கன் வாங்கி அதை கவுன்ட்டரில் கொடுத்து "இட்லி வடா" என்றேன். இரண்டு இட்லியை எடுத்து அதன் தலையில் நிறைய இனிப்பு சாம்பாரை ஊற்றி வடையைப் போட்டு ஒரு கரண்டியும் எடுத்து கவுன்ட்டரின் அருகில் வைத்து " தாயோளி" என்றான்.என்னடா இது ஒரு இட்லி வடைதான கேட்டோம்? இதற்கு போய் இப்படித் திட்டி விட்டானே? என்று மிகுந்த மனவருத்தத்துடன் வெளியேறினேன்.(இட்லி வடை சாப்பிட்டுவிட்டுத்தான்).

அப்புறம் சில நாட்கள் கூர்ந்து கவனித்த போதுதான் தெரிந்தது அவன் "தஹோவுளி" என்றிருக்கிறான். தகோ என்றால் எடுத்துக்கொள் என்று அர்த்தம்.என் நண்பன் பரவாயில்லை கெட்ட வார்த்தை எல்லாம்கேட்கவில்லை . நண்பன் செந்தில், மகேந்திரனுடனோ தயாவினுடனோ பெங்களூர் வந்த புதிதில் பஸ்ஸில் சென்றிருக்கிறான். படிக்கட்டில் நின்று இருவரும் பயணம் செய்திருக்கிறார்கள். நடத்துனர் வந்து “ஒழகட பன்னி” என்றிருக்கிறார். என்றால் உள்ளே வாங்க என்று அர்த்தம். நம்மாளு ஒரு பத்துரூபாய் நோட்டை நீட்டி கோயம்புத்தூர் பாஷையில் "மார்த்தஹள்ளி ரெண்டுங்க" என்றிருக்கிறான். நடத்துனர் இம்முறை சற்று சத்தமாக "ஒழகட பன்னி" என்றிருக்கிறார்.நம்மாளும் ஒருவேளை சொன்னது கேட்கவில்லை போலும் என்று நினைத்து இன்னும் சத்தமாக "மார்த்தஹள்ளி ரெண்டுங்க" என்றிருக்கிறான். பொறுமை இழந்த நடத்துனர் யோவ், உள்ளே வாய்யா எனவும் ... ஆங் இப்பிடி மரியாதையா மொதல்லேயே சொல்லிருக்கலாமில்ல" என்று உள்ளே சென்றனராம்.

தினமும் அலுவலகத்திற்கு பேருந்தில் செல்ல வேண்டியிருந்ததனால் அது குறித்த வார்த்தைகளை முதலில் கற்றுக் கொண்டேன். நம்மூரில் பாஸ் என்று கூப்பிடுவோமே அது போல அங்கு"குரு". குரு சொல்ப ஜாக பிட்ரி என்றால் பாஸ் கொஞ்சம் வழி விடுங்க என்ற அர்த்தம். கோரமங்கலா பஸ் எல்லி பரத்துதே? என்பதில் கோரமங்கலாவுக்கு பதில் தேவையான நிறுத்தங்களின் பெயரை இட்டு நிரப்பிக் கொண்டால் புதுப் புது வாக்கியங்கள் தயார். கொஞ்சம் புரியாத் வார்த்தைகளின் அர்த்தம் மஞ்சுநாதாவிடம் கேட்டுக் கொள்வேன்.தெரியாத கன்னட வார்த்தைகளுக்கு பதிலாக ஆங்கில வார்த்தைகள் உபயோகிப்பது நன்று.

பொதுவில் திரைகடலோடித் திரவியம் தேடும் தமிழன் நிலை கொஞ்சம் கஷ்டம்தான். கன்னடர்கள் நம்மிடம் ஏதாவது கேட்கும்போது "கன்னடா கொத்தில்லா" என்பேன் உடனே ஹிந்தியில் கேட்பார்கள், சளைக்காமல் "மாலும் நஹி" என்பேன்.ஏற இறங்க பார்த்துவிட்டு தெமிளா? என்பார்கள். ஆமாம் என்று அசட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தால் "கூபே" என்று மனதுக்குள் திட்டி விட்டு தமிழிலேயே கேட்பார்கள்.

சிலமாதங்களிலேயே உடைந்த கன்னடம் பேச ஆரம்பித்து விட்டேன். போளி மகனே சூளே மகனே என்பதெல்லாம் கெட்டவார்த்தைகள் என்று தெரிந்து கொண்டேன். ஒருமுறை பஸ்ஸில் ஒருவன் இன்னொருத்தனை "லோஃபர் நன்மகனே" என்று திட்டினான்.லோஃபர் புரிகிறது. அது என்ன கெட்ட வார்த்தையில் "நன்மகனே" என்கிறானே ? ஒருவேளை இது நல்ல கெட்டவார்த்தையோ என்று குழம்பியிருக்கிறேன்.

ஒருவழியாக கொஞ்சம் கன்னடம் கற்றுக்கொண்டேன். அவர்களே "ஒள்ளே உடுகானப்பா! சக்கத்தாகி மாத்தாடுதானப்பா!" என்று பாராட்டியிருக்கிறார்கள். வெகுநாட்களுக்கு முன்பே பெங்களூரை விட்டு வந்துவிட்டாலும் கன்னடம் இன்னும் கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கிறது. சமீபத்தில் கோவா போகும் வழியில் பெங்களூர் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் நான் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட கன்னடத்தை உபயோகப்படுத்தும் வாய்ப்பு வந்தது. நானும் பாண்டியும் ஒரு உணவு விற்பவனிடம் போய் " ஊட்டா ஏனிதி குரு? என்று பலவும் விசாரித்து வாங்கிவிட்டு "எஷ்டு ஆயித்து? என்றேன். இருபத்திநாலு ரூவா ஆச்சு சார் என்றான். எப்பிடித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ? என்று நொந்து கொண்டேன்.

எங்களூரில் ஆங்கிலமே பெரியவிஷயம். ஹிந்தி எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. 90 களில் கீரிப்பாறையில் 40 அடி உயர ஆண்டனா வைத்து புள்ளி புள்ளியாகத் தெரியும் மகாபாரதத்தைப் பார்ப்போம். எங்கள் வீட்டில் ஒரு கூட்டமே கூடிவிடும். ஒன்றுமே புரியாவிட்டாலும் பார்த்துப் பரவசப் படுவார்கள்.அது போக ரங்கோலி சித்ரகார் எல்லாம் பார்ப்போம். ரங்கோலியில் கிஷோர் குமார் , முஹம்மத் ரபி, முகேஷ் பாடிய கிளாச்சிக் பாடல்கள் மட்டும் போடுவார்கள். சித்ரகாரில் ஒரே ஒரு தமிழ் பாட்டு மட்டும் போடுவார்கள்.வாராவாரம் யாராவது ஒரு பிரபலம் வந்து தொகுப்பாளராக இருப்பார்கள்.ஒருமுறை ரெமோ என்ற ஹிந்தி பாப் இசைக்கலைஞர் வந்து "மேரா மன்பசந்த் கானா" என்று "வடுக பட்டிக்கு வலது பக்கம் பாரு சும்மா வளைஞ்சு வளைஞ்சு ஓடுதம்மா ஆறு" என்று ராதாரவி ஹீரோவாக நடித்த சின்ன முத்து என்ற திரைப்படத்தில் வரும் பாடலை ஒளிபரப்பினார்கள். என்ன பிடித்ததோ அந்தப் பாடலில்?

பின்பு 90 களின் மத்திம காலத்தில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த போதுதான் நிறைய ஹிந்தி வார்த்தைகள் அறிமுகம் ஆயின. தூர்தர்ஷனில் கிரிகெட் ஒளிபரப்பும்போது 10 ஓவர்களுக்கு ஒருமுறை ஆங்கிலம் ஹிந்தி வர்ணனை மாறி மாறி வரும். முதல் பத்து ஓவர்கள் டோனி கிரேக்க்கும் பேர்ரி ரிச்சர்ட்சும் வர்ணனை வழங்குவர். அடுத்த பத்து ஓவர்களுக்கு மணிந்தர் சிங்கும் யஷ்பால் சர்மாவும் ஹிந்தியில் ஆரம்பிப்பார்கள். . வந்தவுடன் நமஷ்கார் ஏ தோனோ பல்லே பாசி பேட்ஸ்மேன் அச்சா பேட்டிங் கர்ரஹாஹூன் என்று ஆரம்பிக்கும் போதே என்ன மாயமோ மந்திரமோ தெரியாது பொடக்கென ஒரு இந்திய விக்கெட் விழும். எதாவது ஒரு ஷாட் அடித்துவிட்டால் அச்சா ஷாட் ஹே என்று உச்சா போகும் அளவுக்கு கத்துவார். பீல்டர் பிடித்து விட்டால் "அச்சா ஷாட் ஹே" என்று கத்திவிட்டு உடனே "மகர் பீல்டர்கி தரப் சே… கேவல் ஏக் ரன்" என்று ஸ்ருதி குறைந்தது விடும்.தப்பித்தவறி ஒரு பவுண்டரி போனால் உடனே "அச்சா ஷாட் .. பீல்டர் சே கோயி மொக்கா நஹி... சார் ரன்" என்று உற்சாகமாக பேசுவார். அதிலும் நம் அணியினர் விளையாடும் போது "ஆல் அவுட்" விளம்பரம் வேறு மூச்சுக்கு முன்னூறு தடவை வந்து வெறுப்பேற்றும். இப்படியாக இவர்களின் ராசியினால் நமது விக்கெட்டுகள் மளமளவென சரியும். போதாக்குறைக்கு எதிரணியினர் நமது அகார்கரின் உதவியுடன் எளிதில் வெற்றி பெற்று விடுவார்கள்.

கல்லூரியில் நான் படித்த காலத்திலும் இவர்களின் ஹிந்தி வர்ணனை அட்டகாசம் தொடர்ந்தது. இவர்கள் வர்ணனை அளிக்கும் போதெல்லாம் நம் விக்கெட்டுகள் சரிவது சர்வநிச்சயமாகிப் போனதால் ஹாஸ்டலில் கிரிகெட் பார்க்க குழுமியிருக்கும் போது ஹிந்தி காமன்ட்ரி வந்தவுடன் , " ஓ.. தா .. கொ.. மா.. வந்துட்டானுங்களா ..? இனிமேல் வெளங்கிடும்!" என்ற ரீதியில் கண்டனக் குரல்கள் தொண்டை கிழியும் அளவுக்கு எழும். விச்சு எனக்கு நிறைய வார்த்தைகளும் அர்த்தங்களும் சொல்லிக் கொடுத்திருக்கிறான்.இப்போது நன்றாகப் புரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு என் ஹிந்தி அறிவு வளர்ந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்." சமீபத்தில் 3 இடியட்ஸ் படம் பார்த்தபோது சமத்கார்-பலாத்கார் நகைச்சுவை மற்றும் மாதவன் கிளைமாக்ஸ் செண்டிமெண்ட் வசனம் பேசும் காட்சிகள் தவிர்த்து முழுப்படத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னும் சில நாட்களில் வட நாடு செல்ல வேண்டியிருப்பதால் இப்பொழுதே அலுவலகத்தில் ஹிந்தி முடிந்தவரையில் முயற்சிக்கிறோம். எப்படி தெலுங்கிற்கு தமிழ் வார்த்தைகளின் இறுதியில் "லு" சேர்க்கிறோமோ அதுபோல ஹிந்திக்கு ஆங்கில வார்த்தைகளின் இறுதியில் ஹேனா சேர்த்து ரகளை செய்கிறோம். பாவம் ஹிந்திக்காரர்கள். என்ன பாடுபடப் போகிறார்களோ?

7 comments:

 1. // முதலில் எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது//
  நான் கர்நாடகத்தில் என்னுடைய அகரம் மற்றும் ಅகரம் பயின்றதால் இந்த பிரச்சனை இல்லை நண்பா...

  //வீட்டுக்கு ஒரு மஞ்சு கண்டிப்பாக உண்டு// கடைகள், லாரிகள் பெயரும் கூட...

  //தலையில் நிறைய இனிப்பு சாம்பாரை ஊற்றி வடையைப் போட்டு// இதுக்காகவே நான் self cooking மாறிட்டேன்

  //எப்பிடித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ?// --same feelings

  வட நாடு செல்வதற்கு வாழ்த்துக்கள்..

  பெரும்பாலான இடங்ககளில் என் மனநிலையின் பிரதிபலிப்பாக இருந்ததால் இந்த பதிவு பிடித்துவிட்டது.....தொடர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. மச்சி !!! மிகவும் உயிரோட்டமான நடை !!! நானும் கன்னடத்தில் சிறு அதிர்ச்சிகள் , சிறு நகைச்சுவைகளை அனுபவித்துக்கொண்டிருப்பவன்.
  "ஓலகட பண்ணி " நான் கற்ற முதல் வார்த்தை. நாம் "ப" உபயோகபடுத்தும் இடங்களில் கன்னடத்தில் "வ" பயன்படுத்தப்படுகிறது. "வோகில்ல - போகவில்லை". !!!!

  "தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு" - உண்மையான வார்த்தை

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. என் அன்பான ராஜிக்கு வணக்கம்,
  இன்னும் ஒரு மணி மகுடம் ஏந்தி விட்டீர். உங்கள் கட்டுரையை படிப்தற்கு போதுமான எழுத்துக்கள் இருபினும் , நீங்கள் கூறும் கருத்தை கச்சிசிதமாக கவ்வ விடுகிறீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. romba nalla iruku rajesh... "தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு" - migavum nitharsanamaana unmai.... ninachikko kooda paarka mudiyala... migavum arumaiyaana pathivu... hindi kaththuk kondu marupadi enaku sollik kodu... keep posting...........

  ReplyDelete
 5. Arey Rajesh....aapka hindi baguth improve ho gaya yaar..pune jana ke baad aap udhar naye star banoge....mera shubh kamnaye..

  I think u would have understand..Good one Rajesh..

  --Vichu

  ReplyDelete
 6. அன்பின் ராஜேஷ் , நான்தான் கண்டுபிடித்து வர தாமதப் படுத்திவிட்டேன் , மன்னிக்கவும் !
  ஆச்சர்யம் கலந்த அன்பின் வெளிப்பாடே இந்தப் பகிர்வு . மிகவும் நல்ல மொழி நடை , இயல்பான வார்த்தைகள் , அவைகளை கோர்த்த இடங்கள் எல்லாமும் அருமைடா. தொடர்ந்து எழுது , தொடர்வோம் !

  அலுவலகத்துல இருக்குறதால ரொம்ப எழுத முடியல , பேசுவோம் !

  ReplyDelete
 7. அன்புள்ள ஜோ .. வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி. உன்னுடைய வார்த்தைகள் மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. உன்னுடைய கவிதைகள் தரும் பிரமிப்பு மிகப் பெரியது. நகைச்சுவை மூலம் வண்டி ஓட்ட நினைக்கும் எனக்கு உன்னுடைய ஊக்கம் பெரும் பலம்.
  நன்றிகளுடன்
  ராஜேஷ்

  ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !