Thursday, October 1, 2009

கந்தல் துணி - பாகம் 1

தமிழ் சினிமா இன்றுவரையில் எண்ணற்ற cliche க்களை கொண்டுள்ளது.பலரும் பல பதிவுகளில் அடித்துத் துவைத்த கந்தல் துணிதான் என்றாலும் என் பங்குக்கு கொஞ்சம் நானும் துவைக்கிறேன். இல்லாவிட்டால் blogger இலக்கணம் மீறப்படுவிட்டதாகிவிடும். எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

1. க்ளைமாக்ஸ் ஐ நெருங்கும் சமயம், வில்லன் ஹீரோயினைத் துரத்திக் கொண்டிருப்பான். இருபது வயலின்கள் பின்னணியில் ஆர்ப்பரிக்க ஜீவமரணப் போராட்டத்தில் ஹீரோயின் ஓடிக்கொண்டிருப்பாள்.இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு கட்டத்தில் ஹீரோயின் வில்லனின் பின்னால் தூணுக்குப் பின்பாக மறைந்திருப்பாள். வில்லன் அவளைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பான். ஒரு கட்டை ஹீரோயின் கண்ணில் படும், அந்தக் கட்டையை எடுத்து சத்தம் போடாமல், பதுங்கி வந்து வில்லன் மண்டையில் அடித்தால் தப்பித்து விடலாம்,
ஆனால் நம் ஹீரோயின் செய்வது என்ன? கட்டையைத் தூக்கி ஆவேசமாக ஏய் என்று கத்தியபடி ஆக்ரோஷமாக அவனைப்பார்த்து குரலெழுப்பியபடியே ஓடி வருவாள், வில்லன் சட்டெனச் சுதாரித்து லாகவமாக தப்பி அவளை மடக்கி ஹீரோவிடம் தண்ணி காட்டுவான்.

2.ஹீரோவும் ஹீரோயினும் காதலில் ஒரு பிரிவு ஏற்பட்டு பிரிந்திருப்பார்கள். காரணம்,? ஹீரோ ஒரு தவறு செய்வதை ஹீரோயின் பார்த்திருப்பாள் அல்லது கேள்விப்பட்டிருப்பாள். ஹீரோதான் எல்லாப் படத்திலும் உத்தமனாயிற்றே? அது ஹீரோயினின் தவறான புரிதல் தான்.ஒரு நாள் இருவரும் எங்கேயாவது சந்திக்கும் சமயத்தில் ஹீரோ தன் தரப்பு நியாயங்களைக் கூற முற்படுவார். அனால் ஹீரோயின் செவிமடுக்க மாட்டார், பொறுமை இழந்து வாக்குவாதம் முற்றும் சமயத்தில் பளாரென ஹீரோ அவளை அறைந்து விடுவார். நாயகி விசும்பத்தொடங்கி விடுவாள்.நான் எந்த பொண்ணையும் கை நீட்டி அடிச்சதில்ல என்ன மன்னிச்சிடு என்று ஹீரோ மெல்ல உண்மை சொல்ல ஆரம்பிப்பார்.அப்போது டயலாக் இல்லாமல் வெறும் பின்னணி இசை மட்டுமே ஒலிக்கும். ஒரு பத்து செகண்ட் முடிந்ததும் " இதாம்மா நடந்திச்சு.. இதுக்கு மேலையும் நீ என் மேல சந்தேகப்பட்டா நான் உன்னைத் தொந்தரவு செய்யல என்று சென்டிமென்ட் பிட்டைப் போடுவார் ஹீரோ. " நடந்தது என்னன்னு தெரிஞ்சிக்காம நாந்தாங்க அவசரப் பட்டு உங்கள தப்பா புரிஞ்சிக்கிட்டேன் என்று ஹீரோயின் சமாதானமாகி ஹீரோ தோளில் சாய்வார். அடுத்த ஷாட் வெளிநாட்டில் டூயட் தான்.

3. ஹீரோ ஒரு பரம ஏழை. கல்லூரியில் படிப்பார். அடுத்தவேளை சாப்பாட்டிற்கே வழி இருக்காது. ஆனால் விலையுயர்ந்த ஷூ அணித்து நன்றாக உடையணிந்திருப்பார். கல்லூரி கட்டணம் கட்டவே டண்டணக்கா போடுவார். ஆனால் நண்பர்கள் உதவி கேட்டால் எப்படியாவது பணம் புரட்டி விடுவார். கல்லூரி விழாக்களில் கவிதைப் போட்டி முதல் பரிசு... ராஜா, பேச்சுப் போட்டி முதல் பரிசு.... ராஜா,கட்டுரைப் போட்டி முதல் பரிசு.... ராஜா,விளையாட்டுப் போட்டி முதல் பரிசு.... ராஜா , என்று எல்லா முதல் பரிசையும் வாங்கி விடுவார். இதனாலேயே ஹீரோயினுக்கு லவ் வந்துவிடும்.

4. இன்னொரு அதரப் பழைய கொடுமை இந்த பணக்காரன் ஏழை பற்றிய கண்ணோட்டம். போன பத்தியில் பார்த்த ஹீரோ ஹீரோயினை ஏறெடுத்துக்கூட பார்க்காமல் உதாசீனப் படுத்துவார்.ஏனென்றால் ஹீரோயின் பணக்காரியாம்.இருவரும் மோதிக் கொள்ளும் காட்சியில் "உன் பணக்கார புத்தியக் காமிச்சிட்டியேடி.., உன் பணத்திமிருக்கெல்லாம் இந்த ராஜா படிய மாட்டான்" என்றெல்லாம் அதி உக்கிரமாக ரௌத்திரம் பழகுவார். என்ன லாஜிக்கோ? பணக்காரர்களெல்லாம் திமிர் பிடித்தவர்கள், கெட்டவர்கள்,.. அட போங்கப்பா..!

5.ஒருமாறுதலுக்காக ஹீரோ ஒரு மிகப் பெரிய பணக்காரரின் மகன், ஆனால் தாயை இழந்தவர். ஹீரோயினிடம் பிட்டு போட ஒரு செண்டிமெண்ட் டயலாக்," சின்ன வயசிலேயே அம்மாவ இழந்துட்டதினால தாய்ப்பாசம்னா என்னண்ணு தெரியாமலேயே போச்சு" என்பார். ஹீரோயின் ஒருநாள் ஹீரோ வீட்டுக்கு செல்வார் அப்போது வீடு வேலைக்கார பாட்டி அல்லது ஹீரோவின் பாட்டி ஏற்கனவே இளகியிருக்கும் ஹீரோயினின் மனதில் இன்னுமொரு செண்டிமெண்ட் பிட்டைப் போடுவார், " பாவம் தாயில்லாப் புள்ள .. நீதான் அவனுக்கு இனிமேல் எல்லாம்.." என்பார்.

இவ்வாறு இன்னும் ஒரு 20 , 25 கண்டுபிடித்து வகைப்படுத்தலாம். தற்சமயம் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். மிச்சம்... வரும் பதிவுகளில் காண்போம் ...

1 comment:

  1. Nice one da!! Had a relaxed laugh.. Tamil Thiraippadangalin Thaakam Satru Athigam Pola!! ;)

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !