Thursday, September 10, 2009

கவிதை எனப்படுவது யாதெனில்..!

கவிதை எனப்படுவது யாதெனில் வரிவரியா
யெழுதப் படுமுரை நடையாம் .
ரீமிக்ஸ் குறள் நன்றாக இருக்கிறதா? இல்லாவிட்டால் காறி துப்பவும் :-)...

கவிதை எழுவது ஒரு நுட்பமான விஷயம். எல்லோராலேயும் அது முடியாது. "ஒரு ஸ்வீட் ஸ்டாலே" ஒண்ணுக்குக் கீழ ஒண்ணு.. அதானப்பா கவித... "பணியாரம் சாப்பிடுகிறதே" அடடே... ஆச்சரியக்குறி ... என்பதல்ல கவிதை.

தான் காணும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒரு சின்ன அழகியல் உணர்ச்சியோடு சரியான சொற்களை லயமாக சேர்த்தால் ஒரு நல்ல கவிதை கிடைக்கலாம்..பெரும்பாலும் கவிதைகள் எனக்கு நாளிதழ்களின் இணைப்பிதழ்கள் மூலமாகவே அறிமுகம் . வாரமலர் குடும்பமலர் போன்றவற்றில் இரண்டு பக்கங்கள் அல்லது கடைசி அட்டையில் கவிதைகள் பிரசுரமாகி இருக்கும்.
ரகம் ரகமான கவிதைகள் . பொதுவாக இரண்டே வகைகளில் அனைத்தையும் அடக்கிவிடலாம்.
ஒன்று காதல் தோல்வியில் எழுதப்படும் தத்துப்பித்துவங்கள்.
ஏய் பெண்ணே..!
உன் கூந்தல் மயிரிழையைக்
கூட நான் தவறவிட்டதில்லை..
என்னையே மயிரென தூக்கியெறிந்து விட்டாயே..!
என்ற ரீதியில் ஒன்று.

அப்புறம் காதல் வசப்பட்ட புதிதில் பரவச நிலையில் ஒன்று
ஏய் பெண்ணே ..!
உன் முத்துப் பற்கள் தெரிய
நீ சிரிக்கும்போது, பகலிலும்
32 பௌர்ணமி ...! என்ற ரீதியில் ஒன்று.

கவனமாகப் பார்க்கவேண்டிய ஒன்று என்னவென்றால் ,சாதாரண ஒரு சொற்றொடரை ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதி கவிதையாகக் கருதி போஸ்ட் கார்டில் அனுப்பியிருப்பார்கள், என்ன ஒரு நெஞ்சழுத்தம்?. ஆசிரியர் இலாகாவோ அதையும் பிரசுரித்திருப்பார்கள்,
இது போக இன்னும் சில உயர்வு மனப்பான்மை (superiority complex..?) கொண்ட ஜீவராசிகள் மானிட இனத்துக்கு அறிவுரை நல்கியிருப்பார்கள்.
ஏய் மானிடா..! (அவன் மனதில், தான் மனிதப்பிறவியும் தாண்டி புனிதமானவன் என்ற நினைப்பு)
யாருக்கும் போடாதே சலாம்..!( ஆச்சரியக்குறி இல்லாவிடில் கவிதை LOOK வராது போலும்.)
நீ ஆகிடு அப்துல் கலாம்..! என்று T.R. பாணியில் எதுகை மோனையோடு ரம்பம் போட்டிருப்பார்கள்.
இவ்வாறு எதற்கெடுத்தாலும் ஏய் புயலே, ஏய் சுனாமியே..! ஏய் மண்ணே ..! என்று ஏய் படத்தில் சண்டையிடும் சரத் குமாரை விட அதிகமாக ஏய் ஏய் என்று கூவியிருப்பார்கள். இதன் காரணமாகவே கவிதைகள் மீது நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. (மரபுக் கவிதைகள் விதிவிலக்கு).

இது போன்ற கவிதைகளால் வெகு காலம் வரை கவிதைகள் என்றாலே அடுக்கு மொழியில் அடித்து விளையாடி இருக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது எனக்கு.எதுகை மோனையின்றி ஏதடா கவிதை என்பதே என் நிலைப்பாடு.

நானும் கவிதை எழுத சில முயற்சிகள் எடுத்திருக்கிறேன். ஏழாம் வகுப்பில் ரத்தினம் சார் ஒரு கவிதைப் போட்டி நடத்தினார். யானை என்பது தலைப்பு.
தலைப்பைக் கேட்டவுடன் என் கற்பனைக் குதிரை நாலு கால் பாய்ச்சலில் வாயு வேகம் மனோ வேகத்தில் தறிகெட்டுப் பாய ஆரம்பித்தது. அதுவரை பார்த்திருந்த T.R. பட வசனங்கள் என் மனத்திரையில் காட்சிப்படமாக விரிந்தது.. வாடா மச்சி வாழக்கா பஜ்ஜி.. என்ன ஒரு கவிதைநயம்.
பேப்பரை எடுத்தேன்.. யானை.. எனக்குத்தெரிந்த அடுக்குமொழிகளை அடுக்க ஆரம்பித்தேன்." யானையின் தோலோ கட்டி.. அது போடுவதோ குட்டி (அப்புறம் என்ன முட்டையா போடும்..?) யானைக்குப் பிடித்தது கரும்பு .. யானைப்பாகன் மனமோ இரும்பு.. யானை குளிப்பது குளம்.. யானைக்குப் பிடித்தது பழம்.. இப்படி நீண்டது எனது கவிதை. கவிதை என்றால் ஏதாவது ஒரு மெசேஜ் சொல்லியாகவேண்டுமே.. நானும் சொன்னேன். ஏய் மனிதா..! யானைக்கு உள்ளது தும்பிக்கை.. உன் மேல் உனக்கு வேண்டும் நம்பிக்கை..!

இப்படி ரணகொடூர மொக்கையாக ஒரு கவிதை எழுதியிருந்தேன். ஆனால் அந்த வயதில் அதுவே பெரிய விஷயம் தானே..! என் அடுக்குமொழியில் கவரப்பட்டு எனக்கே முதல் இடம் அளித்தார் சார். என்னவோ அதற்குப்பிறகு எனக்கு இன்றுவரை கவிதை எழுதத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக எழுதும் எண்ணமிருக்கிறது. அடுத்த சில பதிவுகளில் முயற்சிக்கிறேன். படித்துவிட்டு பிடித்திருந்தால் ரசியுங்கள்.இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள். . எப்படியிருந்தாலும் கவிதைகளை ஒரு வழி பண்ணாமல் விடுவதாக இல்லை.

4 comments:

  1. உன்னுடைய அடுத்த கவிதை எந்த நடையில் இருக்கும்......காதல் பரவசதில்லா, காதல் தோல்வியில்லா அல்லது இயற்கையை சார்ந்ததா ......

    ReplyDelete
  2. பெரும்பாலும் பொதுவான விஷயங்கள் மீதுதான் என் கவிதைகள் இருக்கும்... மற்றதில்.., எனக்குத் தோணவில்லை..

    ReplyDelete
  3. Hi Rajesh,

    Neengal , kavithaikalai maattum, oru vali pannamal viduvathaga ilai...

    padikka pogum engalaium thannn

    -Dheiva.

    ReplyDelete
  4. நல்ல இருக்குதுடா !! இன்னும் சுவாரசியம் எதிர் பார்ர்கிறேன் ! :) !! கவிதைகளையும் தான்!

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !