Thursday, October 28, 2010

காடு-நாவல்; சமகாலத் தமிழிலக்கியத்தில் ஒரு செவ்வியல் படைப்பு

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தடுப்பணை அமைத்து நீரைத்திருப்பிவிடும் ஒரு சிறிய கட்டுமானப்பணி உரிமையாளரின் உறவினனான கிரிதரன் தன் வாழ்வின் நினைவுகளை மீட்டெடுப்பதை, நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் முன்னும் பின்னுமாகக் கூறும் உத்தியில் அமைந்தது இந்தக் கதை. கதைக் களம் நாஞ்சில் நாடு எனப்படும் குமரி மாவட்டத்தின் மேற்குத்தொடற்சிமலைக் காடுகள்.இன்றளவும் தன்னுள் கொஞ்சம் ஈரத்தையும் பசுமையையும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் குமரிக் காடுகளில் நாப்பது ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் நடந்ததாகப் புனையப்பட்டிருக்கிறது இந்நாவல்.

ஜெயமோகன் தனது கதைகளில் நாயகனை சாதனைகள் புரிபவனாக காட்டுவதில்லை. எல்லா பலகீனங்களும் ஆசாபாசங்களும்,சமரசங்களும் செய்துகொள்ளும் எளிய மனிதனாக, நித்தம் வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் மனிதனாக, சமயங்களில் குரூரமும் வஞ்சமும் பொய்மையும் நிறைந்தவனாக மொத்தத்தில் ஒரு கலவையான பாத்திரமாகப் படைக்கிறார்.

அவரது நாவல்கள் எளிய மனிதனின் வாழ்க்கைக்கு நெருங்கி காணப்படுவதன் காரணம் இதுவே. ஏழாம் உலகம் ஆகட்டும், மத்தகம், அனல் காற்று ஆகட்டும் நாயகன் ஒரு சராசரி மனிதனே. சமயங்களும் சூழ்நிலைகளுமே அவனை நல்லவனாகவும் கெட்டவனாகவும், துரோகம் செய்பவனாகவும் மாற்றுகிறதாகக் காட்டுகிறார். இதில் வரும் நாயகன் கிரிதரனும் அப்படித்தான்.மிகச் சாதாரணமாக கனவுலகில் மிதக்கும் மனிதன். சூழ்நிலைகளாலும் எளிதில் மற்றவர்களாலும் ஆட்டுவிக்கப்படும் மனிதனாகவும், தன்னுடைய இயலாமையின் மேல் கனத்த கோபமுற்று அதனை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் உள்ளுக்குள் புழுங்கும் சராசரி மனிதன் அவன்.


கிரிதரன் ஒரு மிளாவைப் பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது நாவல்.
கிராமத்து வாழ்க்கையிலிருந்து பிழைப்புக்காக காடு புகும் அவன் பின்பு காட்டின் வசீகரத்தால் இழுக்கப் படுகிறான். தன் வாழ்வின் இறுதிவரை காட்டிலிருந்தும் அதன் நினைவுகளிலிருந்தும் வெளிவர முடியாமல் தன் கண்முன்னே காடு அழிவதைக் கண்டு மனம் வெதும்பிப் புலம்புவனாக வளைய வருகிறான்.

கதையில் வரும் மற்ற பாத்திரங்கள் மிக எளிய மக்கள்.ஆனால் அசாதாரணமான உண்மைகளை எளிய வார்த்தைகளில் கூறி பொட்டில் அறைவது போல் விளக்குவார்கள்.ஜெயமோகனின் எண்ணங்களின் ஆழமும் மொழியின் வீச்சும் பிரம்மாண்டமாய் வெளிப்படும் இடங்கள் நாவலில் அதிகம் வருகின்றன.

முக்கியமான கதாபாத்திரம் குட்டப்பன். தடுப்பணைகள் கட்டும் தேர்ந்த வேலையாளாகவும், காடுகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறந்த சுவையான உணவுகளை சமைப்பவனாவும், எந்தவிதமான எதிர் சூழ்நிலைகளிலும் மனம்தளராமல் சமாளிப்பவனாகவும், கிரிதரனுக்கு ஒரு வழிகாட்டி போலும் வருகிறான்.காட்டில் வாழ்ந்துவிட்டமையால் வெளயுலகிற்குப் போக விரும்பாதவனாயும், தன் மரணம் காட்டிலேயே, அதுவும் யானை மிதித்துக் கொன்றால் புண்ணியம் என்றும் கூறுகிறான்.

ஜெயமோகனுக்கு யானைகளின் மேலுள்ள அபாரமான காதல் , அதன் நடவடிக்கைகளை,யானையின் மன ஓட்டத்தை அவர் விவரிப்பதன் மூலம் புலனாகிறது. குமுதத்தில் ஒருமுறை கொச்சு கேசவன் குறித்து எழுதியிருந்தபோது படித்திருக்கிறேன் , பின்பு ஊமைச் செந்நாயில் ஒரு யானை வேட்டையாடப் படுவதைக் குறித்து எழுதியிருந்தார். அதனை படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் எனக்கு கணினித்திரை மறைந்து ஒரு திரைப்படம் காண்பதைப் போலத் தோன்றிற்று.

எப்போதும் யானையை ஒரு கரிய பாறைக்கு நிகராக ஒப்பிடுகிறார். உயிருள்ள ஒரு கரிய பாறை.காட்டின் ராஜா என்கிறார். மழையில் நனைந்து அழுக்குகள் களைந்து காணப்படும் யானையை கழுவப்பட்ட பாறை எனக் கூறுகிறார். மத்தகம் நாவலில் இன்னும் கூர்மையான விவரிப்புகளில் யானையின் இயல்புகளையும் அதன் கம்பீரத்தையும் விவரித்திருப்பார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவனாதலால் அவரது வட்டார வழக்கும் அதற்கே உரிய நுண்ணிய அங்கதச்சுவைகளும் கெடாமல் என்னால் நாவலில் ஒன்ற முடிந்தது.

ரெசாலம், குரிசு நாடார், சினேகம்மை,ரெஜினாள் போன்ற கதாபாத்திரங்கள் கடின உழைப்பாளிகளாகவும், என்றும் மாறா விசுவாசம் உள்ளவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. அவர்கள் எதையும் வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்கள். கிரிதரனை ஒரு இளைஞனாக இருப்பினும் பாலகனாகவே பாவித்து அன்புடன் பழகுபவர்கள். ஒழுக்கநெறி குறித்து அவர்களுக்கு பெரிய விழுமியங்கள் ஒன்றும் இல்லை.அடுத்தவனை ஏமாற்றாமல் வாழ்வதுவரை எதுவும் தவறில்லை என்று இயல்பாய் இருப்பவர்கள்.

ரெசாலம் ஒரு முறை கறி சமைப்பதற்காக குட்டப்பனால் பிடித்து வரப்பட்ட தேவாங்கு ஒன்றினை தான் வளர்க்கப்போவதாகக் கூறி பிடிவாதத்துடன் வளர்க்க ஆரம்பிக்கிறார். அப்போது மற்றவர்கள் அந்த தேவாங்கினை அவரது மகள் என கிண்டல் செய்கின்றனர். எதைபற்றியும் கவலையின்றி வளர்க்கிறார். சில நாட்களில் தேவாங்கும் அவருடன் ஒன்றி விடுகிறது.

இதுகுறித்து கிரிதரன் ஒருமுறை கேட்கும்போது "காட்டில் இருக்கும் எல்லா ஜீவன்களும் அன்புக்கு ஏங்குவதாகவும் அன்பினால் அனைத்தையும் அடிமையாக்கிவிட முடியும்" என்று குட்டப்பன் கூறுகிறான்.

பின்னாளில் தேவாங்கை இழக்க நேரிடும் ரெசாலம் மனம் பிறழ்ந்து மீளாத் துயரில் ஆழ்ந்து விடுகிறார். அவரை வீட்டில் கொண்டுவிட வரும் கிரிதரன் திண்ணையில் மனநலம் குன்றிய சிறுமியைப் பார்க்கிறான். பெரிய தலையுடன் குச்சி உடம்புடன் மந்தமாக மிக மெதுவாக தலையைத் திருப்பி கிரிதரனைப் பார்க்கும் சிறுமியைக் கண்டவுடன் கிரிதரனுக்குப் புரிகிறது ,ரெசாலத்தின் மகளின் வடிவம்தான் அந்த தேவாங்கு என்று.

குரிசு நாடார் எப்போதும் பைபிளை பாராயணம் செய்கிறார். மிக மெதுவாக , ஒவ்வொரு எழுத்துக்களாகத்தான் அவரால் படிக்க முடியும்.பைபிள் அவரை ஒரு மர்ம வழிப்பாதையாக பல வருடங்களுக்கு அலைக்களித்ததாகச் சொல்கிறார் ஜெ.அது குறித்த நுண்ணிய நகைச்சுவை நிறைய நாவலில் உண்டு. எனினும் கிறித்தவ மதம் பலன் எதிர்பார்க்காமல் மலைவாழ் மக்களுக்கு ஆற்றும் சேவை குறித்து நாவலின் இறுதிப் பகுதிகளில் எழுதுகிறார்.

குரிசு நாடரும் ஊருக்குத் திரும்பிய உடன் ஆபேல் மற்று ராபி என்னும் இருவர் புதிதாக வேலைக்கு வருகின்றனர்.அவர்கள் இருவரும் வேலை செய்வது ஒரு கரிய இயந்திரத்தின் இரு பகுதிகள் இயங்குவது போல் என்று வர்ணிக்கிறார். இருவரும் நாவலின்படி இரட்டைப் பிணைகள். அதாவது வடிவேலு பாஷையில் கூறினால் "அவனா நீயி ..?" வகை. கடின உழைப்பாளிகள். ஒருவர் மீது ஒருவர் வெறித்தனமான பிரியம் கொண்டுள்ளவர்கள்.அவர்களுக்கிடையிலான அன்பை எவ்வாறு வகைப்படுத்துவது என்று தெரியவில்லை என்கிறார் ஜெ.ஒருவன் விஷக் காய்ச்சலில் துவளும்போது மற்றொருவன் கண்ணின் இமைபோல சேவகம் செய்து அவனைக் காக்கிறான்.

கதையில் கிரிதரனின் மலைஜாதிப் பெண்ணின் மீதான காதல் ஒரு கவிதை போல் வருகிறது.அந்தப் பெண் கரிய நிறத்தவள். ஜெ கருமையின் மீது மோகம் கொண்டவர். சிலைக்கு நிகரென அப்பெண்ணை வர்ணிக்கிறார். கருமைதான் அப்பழுக்கில்லாதது, அழகானது , மலையன் மகள் நீலி என்பதே அவள் பெயர்.அவளை சுனைப்பூ மகள் ,மழைக்கண் மடந்தை , அணங்கு என்று சங்கப் பாடல் வரிகள் மூலமாக உவமை சொல்கிறார். கிரிதரன் அவளுடன் பழகிய சொற்ப நாட்களின் நினைவுகளை காலம் முழுக்க மீட்டி எடுத்து அது தரும் இதத்திலேயே வாழ்கிறான். எல்லாவித தோல்விகளிருந்தும் அவன் ஆறுதல் அடைவது அவள் நினைவுகளால் தான்.

கிரிதரன் தனித்து முடிவெடுக்க முடியாதவனாக எப்போதும் அன்னையால் வழிநடத்தப்படுகிறான்.விருப்பமே இல்லாமல் வேணியை மணக்கிறான். தன் அன்னை இறக்கும்வரை அவளாலும், இறந்தபின் வேணியாலும் செலுத்தப்படுகிறான்.வேணியின் அம்மா , அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கண்டன் புலையன் , காட்டில் அவன் சந்திக்கும் எஞ்சினியர் அய்யர், ஊரில் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் போத்தி, போத்தியின் சகோதரி மனநலம் தவறி எப்போதும் கெட்டவார்த்தை பேசி எல்லாருக்கும் காட்சிப்பொருள் ஆகிய பெண் என்று ஒவ்வொரு பாத்திரங்களும் வெகு இயல்பாக ஆனால் ஆழமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன .

முதல் காதலின் இனிமையும் , தவிப்பும் பைத்தியக்காரத்தனங்களும், ஏக்கங்களும் சந்தோஷங்களும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குறிஞ்சிப் பூவைத்தேடி கிரியும் நீலியும் செல்லும் இடங்கள். பேச்சிமலையில் மலையன்களின் பறவை பாறை ஒன்றில் இருப்பதாகக் கூறும் கிளைக்கதைகள், காட்டில் வளர்ந்த மிகப்பெரும் காஞ்சிர மரத்தை வெட்டி ராஜாவுக்கு குடில் செய்யும் கதை , அதில் வரும் அமானுஷ்ய நிகழ்வுகள் என மிக சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்நாவல்.

நீலியின் இழப்பிற்குப்பின் கிரி மனம் தளருதல், ஊருக்குத்திரும்புதல், சம்பாதித்த பணத்தை இழத்தல் என்று அவனுடைய தோல்விகள் நம்மை கவலை கொள்ளச் செய்கின்றன.கடைசியில் புதிய எஞ்சினியர் மேனனின் மனைவி கிரிதரனை அணைக்கும் போது நீலியின் ஆன்மா தம்புரானே என்று கதறுவதுடன் நாவல் நிறைவுறுகிறது.
சற்று பொறுமையுடன் வாசிக்கப்படவேண்டிய இந்நாவல் கதையினூடாக காடு பற்றிய பல அரிய விஷயங்களைக் கூறுகின்றது. சாலை என்பது காட்டினை அழிக்கும் ஒரு பெரிய கை என்கிறார் ஜெ.

நாவலைப் படித்துமுடித்ததும் ஒரு பெரிய துக்கம் என்னுள் குடியேறியது.சிலநாட்களுக்கு காட்டுக்குள் உலவுவது போலவே இருந்தது.கண்டிப்பாக சமகாலத் தமிழில் ஒரு செவ்வியல் படைப்பு என்று இதனைக் கூறலாம். அனைவரும் படியுங்கள். www.udumalai.com இல் ஜெயமோகனின் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன.இன்னும் இந்நாவல் குறித்து எழுதப் பல விஷயங்கள் உள்ளன.அனைத்தையும் எழுதி விட்டால் நாவல் படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் முடித்துக்கொள்கிறேன்.

2 comments:

  1. செவ்வியல் படைப்பை எழுத முடியுமா? நான் ஒரு இலக்கியம் செவ்வியல் படைப்பாய் ஆகும் என்று தானே நினைத்திருந்தேன். அதெப்படி செவ்வியல் படைப்பை எழுதுவது???

    ReplyDelete
  2. அன்புள்ள மோகன், செவ்வியல் படைப்பிற்கான இலக்கணங்கள் எனக்குத் தெரியவில்லை.பொதுவாக ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்தால் "ச்சே ...! கிளாஸ்ஸிக் மூவி ப்பா .. கொன்னுட்டான்.." என்று சொல்வோமே அது போலத்தான் இங்கேயும் குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !