Friday, October 22, 2010

மண்மணம் மாறா வைகைப்புயல்

சுமார் 18 வருடங்களுக்கு முன்னே ஒல்லியாக கருப்பாக தீக்குச்சி போன்ற உருவத்துடன் தீசலாக ஒரு உருவம் டப்பாங்குத்து பாட்டுடன் போடா போடா புண்ணாக்கு என்று ஆடிய போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் ஒருநாள் தமிழர்களின் வாழ்வில், கலாச்சாரத்தில் அவன் ஒரு பகுதியாக மாறுவான் என்று.

அண்ணே அத எப்பிடி என் வாயால சொல்லுவேன் என்று ஒப்பாரி வைத்து கவுண்டரிடம் அடிவாங்கும்போது கவுண்டர் கூட நினைத்திருக்க மாட்டார் இவன் ஒருநாள் தமிழ் திரையுலகின் நகைச்சுவை சக்கரவர்த்தியாக மாறுவான் என்று.

ஒருகையை இழந்து அதை பொருட்படுத்தாமல் சிவாஜி கணேசனிடம் " என்ன இனி திங்கிறதும் கழுவுறதும் இதே கையிலதேன்” என்று மருகும் போது கமல் கூட நினைத்திருக்க மாட்டார் தன் தனித்துவமான நகைச்சுவை மூலம் தமிழ் நாட்டை வசப்படுத்தப் போவது இவன்தான் என்று.

இந்த பதிவில் நமது வைகைப் புயல் வடிவேலு குறித்து என்னுடைய எண்ணங்கள் நான் ரசித்த சில காட்சிகள் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கைப்புள்ளை வின்னர், சிரிப்பு ரௌடி நாய் சேகராக தலை நகரம், சிரிப்பு போலீஸ் என்கவுண்டர் ஏகாம்பரமாக மருதமலை என்று தன் நகைச்சுவையால் ஓட வைத்த படங்கள் நிறைய.இதெல்லாம் பரவலாக அனைவரும் கண்டுகளித்த படங்கள். அவரது நகைச்சுவைகளில் அதிகமாக கவனிக்கப்படாமல் போன சில சிறந்த நகைச்சுவை காட்சிகள் பற்றியதே இந்த தொகுப்பு.






90 களின் துவக்கத்தில் ராஜ்கிரண் மூலமாக சினிமாவுக்கு வந்த வடிவேலு முதலில் கவுண்டமணி செந்தில் ஜோடியுடன் ஒரு சில காட்சிகளில் தோன்றும் காமெடியனாகத்தான் வலம்வந்தார். என் ராசாவின் மனசிலே,அரண்மனைக் கிளி, கும்பகரைத் தங்கைய்யா, போன்ற படங்களில் தோன்றியிருந்தாலும், ராஜகுமாரனில் வந்த வீச்சருவா வீராச்சாமி கதாபாத்திரம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக தொடக்க நாட்களில் அமைந்தது.

அதில் வடிவேலுவின் தங்கையின் குரலைக் கேட்டே மயங்கி பெண் பார்க்கவரும் கவுண்டமணி & செந்திலிடம், ஓ நீங்கதான் என் தங்கச்சிய புண்ணு பாக்க வந்தீங்களா என்பார்.. உடனே கவுண்டமணி “உங்க தங்கச்சிக்கு எங்கீங்கண்ணா புண்ணு?" என்று தனக்கே உரிய பாணியில் நக்கல் அடிப்பார்.

முகத்தில் முக்கால்வாசி மீசையுடன் கையிலிருக்கும் அரிவாளை கீழே வைத்துவிட்டு "இதுவரைக்கும் வீரத்துக்காக வானத்தையே பாத்திருந்த இந்த வீச்சருவா...மொத மொறையா பாசத்துக்காக தல வணங்குது.. என் பாசமலர, பவளமல்லிய , அந்த பாரிஜாத பூவ, என் மேகலைய கூட்டிட்டு வர்றேன் .. பொத்திப் பொத்தி வளத்த புள்ள மேகல ..அதனால வெக்கம் விட்டு போகல. என்று அவரது வசனங்களில் சிரிக்காதவர் எவரும் இருக்க முடியாது.




அவ்வளவாக கவனிக்கப்படாமல் போன பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தில் அவர் பீடி வாங்க கடைக்குப் போவார்.அங்கு ஒருவன் அவரை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பான். அந்த பயத்தில் அவர் பேசிய சில வசனங்கள் இப்போதெல்லாம் பரவலாக மேற்கோள்களாக பேச்சு வழக்கில் பயன்படுத்தப் படுகின்றன.நாம யாரு வம்புக்கும் போறதில்ல யாரு தும்புக்கும் போறதில்ல.. நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருந்துர்றது." கெட்ட நேரம்னு வந்தா ஒட்டகத்துல போனாலும் நாய் கடிச்சிருமா இல்லையா? பீடி இல்லேன்னாலும் பரவால்ல.. சுருட்டாச்சும் குடுரா. வகுத்த கலக்குது" என்று அப்பாவியாகப் புலம்பி "ஆஹா.. ஏய் ..ஆஹா ..! என்று அடிவாங்கும் அழகே  அழகு.


அதே படத்தில் தன்னை கலாய்க்கும் இருவரிடம் பதிலுக்கு  "பலே வெள்ளையத்தேவா..பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளையனா ? மெச்சினேன் வீராங்கடா.. மெச்சினேன்..! என்று உதார் விடுவார்..



மேலும் அப்படத்தில் சோளக் காட்டோரமாக நடந்துகொண்டிருக்கும்போது, கூட வருபவன் சோளம் பிடுங்கித்தின்னும்போது அவனை எச்சரிக்கிறார்." டேய் வெளக்கெண்ண ஊசிக்கு ஊசி எதிர் மொன பாயுமாடா? ரெண்டு கையும் ரெண்டு தேக்குடா, மரத்தோல்ல பெத்து உட்ருக்கா எங்க ஆத்தா அப்பன்.. என்று எகிறிவிட்டு சற்றே தணிந்து சரி சரி எனக்கும் ரெண்டு கருது கொடு என்று கெஞ்சும் போது பின்னுகிறார். என்ன சோண முத்தா போச்சா என்று எக்களிக்கும் போதும் அபாரமாக பின்னியிருப்பார்.


வடிவேலுவின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாக வின்னரைக் கூறுவார்கள். எப்போது போரடித்தாலும் வடிவேலுவுக்காக அவரது சவடால் நடிப்பிற்காக அப்படத்தைப் பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்னரே மிகப் பெரிய நகைச்சுவையை கண்ணாத்தாள் என்ற படத்தில் சூனா பானாவாக செய்திருப்பார். ஆனால் அவ்வளவாக பிரபலமாகாமல் போய்விட்டது. அப்படத்தில் ஊரில் ஒரு சவால் சண்டியராக உதார் விட்டுத் திரிந்து அடிவாங்குவார்.

அதிலும் அவரது ஒவ்வொரு வசனமும் அக்மார்க் சவடால் தரம். கோவிலில் ஆத்தாவிடம் வேண்டும்போது "வேற என்ன ஒன்கிட்ட கேக்கப் போறேன் ? தெனம் குடிக்கிறதுக்கு கொஞ்சம் பணமும் அத பயந்து கொடுக்க நாலு ஜாதி சனமும்தான் கேக்கப் போறேன்.. பிக்கப் பண்ணி உடு ஆத்தா பிக்கப் பண்ணி உடு" என்று கடவுளிடமே கலாய்ப்பார். கோவிலில் ஒரு பெண்ணை உரசும் ஆணை கணவன் என்று தெரியாமல் அடித்துவிட்டு அப்புறம் அடிவாங்கி விட்டு புலம்புவார். அவசரப் பட்டியே சூனா பானா அசிங்கப் பட்டியே... எவ்வளவு தெளிவாப் போனாலும் நாயிங்க அடிச்சுப் புட்றாங்க.. இதெல்லாம் உனக்கு ரொம்ப சாதாரணம்டா.வென்னி வச்சு குளிச்சா எல்லாம் சரியாப் போயிடும் என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொள்வார்.


அதே படத்தில் குடிக்கக் காசில்லாமல் திரியும் போது காதலியின் திருமணத்தன்று தற்கொலை செய்யும் எண்ணத்துடன் பிராந்தியை விஷத்தில் கலந்து குடிக்க இருக்கும் காதலனிடம் உருட்டி மிரட்டி விஷ பிராந்தியை வாங்கி குடித்துவிட்டு சலம்புவாறே ஒரு சலம்பல், அதை மிஞ்ச இனி தமிழ் சினிமாவில் யாராலும் முடியாது. ஏன்டா எல்லாருமே சூனா பானா ஆக முடியுமா ? இல்ல பிராந்திய பத்திதான் உனக்குத் தெரியுமா..? என்று பீற்றி விட்டு , ஏண்டா அம்பி லேசா தொண்ட கர கரன்னு இருக்கே சரக்கு பழசா? பதில் : விஷம் அப்பிடித்தாண்ணே இருக்கும் , உடனே சூனா பானா , வெசம்...? வெசம். ஆறுமாசக் கொழந்தைல இருந்து ஆத்தாளும் அப்பனும் இந்த வெசத்தக் கொடுத்துதான் இந்த ஒடம்ப வளத்திருக்காங்க.ஒடம்பெல்லாம் வெசம் என்று சலம்புவதும் பின்பு விஷம் தலைக்கேறி காப்பாற்ற சொல்லி புலம்புவதும் .. வடிவேலுவுக்கு நிகர் வடிவேலுதான்.


எல்லாவற்றிற்கும் மேலாக ஆடு திருடி மாட்டிக்கொண்டு, பஞ்சாயத்தில் கோபாலுவை நாக்கை கடித்து கண்ணை உருட்டி, பயப்படாதடா ..ம்ம்ம்..பயப்படாத..
நீதான் ரொம்ப தைரியமானவனாச்சே.. சொல்லு.. என்று மிரட்டி, வெகு லாகவமாக தப்பிப்பாரே . அந்த சாமர்த்தியத்தைப் பற்றி எழுத்தில் எழுதமுடியாது. நீங்களே பார்த்து மகிழுங்கள்.


ஒரு சில வருடங்களுக்கு முன்னாள் வந்த முருகா திரைப்படத்தில் தெரியாமல் எதிரில் மோதிவிடும் கரடுமுரடான மனிதரிடம் திமிர்த்தனமாக பேசி ஆடிவாங்குவார் பாருங்கள் ஆஹா. குறிப்பாக ஒவ்வொரு சிறைச்சாலையும் அவரது சொத்து போல எதுகை  மோனையோடு வசனங்களிலும் நடிப்பிலும் மின்னியிருப்பார்.

நகைச்சுவை நடிப்பென்றால் என்ன விலை என்று கேட்கும் சரத்குமாருடன் கூட இணைந்து அரசு படத்தில் கலக்கியிருப்பார். பிச்சுமணி பாத்திரத்தில் சரத்குமாருடன் சேர்ந்து அவர் நடித்த இந்த காட்சியைப் பாருங்கள்., சரத்குமாரையே காமெடி பண்ணவைத்த பெருமை வடிவேலுவையே சேரும்.



வடிவேலுவின் வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று பார்த்தால் அவர் மக்களில் ஒருவனாக தன்னை நிறுத்திக் கொண்டார். நம் மக்களுக்குத்தான் அறிவுரை சொன்னால் பிடிக்காதே. அதனால் எளிமையான கதாபாத்திரங்களில் மக்களில் ஒருவனாக ,ஒரு பாமரனாக சுய எள்ளலுடன் நடிக்கிறார். அவருடைய மொழிநடையும் உடல்மொழியும்அதற்கே கச்சிதமாகப் பொருந்துகிறது.பெரும்பாலும் ஒரு அப்பாவி பிறருக்கு உதவ நினைத்து ஆபத்தை விலைக்கு வாங்கி அடிவாங்குவதாக அவரது பாத்திரங்கள் அமைகின்றன.
அவரது பாமரத்தனமான பேச்சும் மண்மணம் மாறாத தமிழும்தான் அவரது பலம்.மேலும் சிறந்த நகைச்சுவை காட்சிகளை நமக்கு தொடர்ந்து வழங்கி நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.





4 comments:

  1. நல்லா சுவாரஸ்யமான பதிவு ராஜேஷ்! வைகை புயலை யாருக்கு தான் பிடிக்காது? அதுவும் அவர் எங்க ஊரு காரர்னு சொல்லிகிரத்தில் ரொம்பவே பெருமை எனக்கு..பெங்களூர் இல் நாங்க இருந்தபோது கன்னடா காரங்க கிட்டே இப்படி சொல்லி தான் பீத்திப்பேன்..அவங்களாம் வடிவேலு fans .இந்த கம்மென்ட் போடுறதுக்கு முன்னாடி கூட சச்சின் படத்தில் வடிவேலு காமடி பார்த்து சிரிச்சுட்டு வந்தேன்...இந்த படத்தோட மாஸ்டர் பீஸ் ஏ வடிவேலு காமடி தான் இல்லையா..நீங்க சொன்ன மாதிரி நல்லா பாடி லாங்குவேஜ்,டைமிங் சென்ஸ்,டைலாக் டெலிவரி எல்லாம் தான் வைகை புயலின் வெற்றின்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  2. Rendu tamil naatukaaran sernthaa pesuraa moonu mukiyaama topics
    1. Cinema
    2. arasiyal
    3. cricket

    Ippo add one more too 4. Vadivelu comedy...!!!

    I witnessed in lot of places!! :)

    Good one da!! keep posting !!

    ReplyDelete
  3. பிரவின், இன்றைய தேதியில் பெரியவர் ,குழந்தைகள், இளைய சமுதாயம், என அனைவராலும் விரும்பி பார்க்கப் படுவது வடிவேலு நகைச்சுவை காட்சிகள்தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏன் ரஜினி கூட சந்திரமுகி படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்ய சொன்னது வடிவேலுவைத்தான். தமிழ் மொழியிலே கூட பல பதங்கள் அவர் மூலமாக பிரபலமாகிவிட்டன ;-)
    நாதாரிப் பயலே, நன்னாரிப் பயலே, போடா டிபிக்க்க் என்பன போன்ற நாம் அன்றாடம் கேட்கும் சொற்கள் அவர் மூலம் அறிந்ததுதான்.

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !