Wednesday, January 20, 2010

தாய் மீது சத்தியம்

சமீபகாலமாக அரசு விரைவுப் பேருந்துகளில் "BOOM TV" மூலமாக திரைப்படங்கள் பாடல்கள் நகைச்சுவைக் காட்சிகள் என ஒரு கலவையாக ஒளிபரப்புகிறார்கள்.நல்ல விஷயம் தானே ,பேருந்தில் சலிப்பின்றி செல்லலாமே என நீங்கள் எண்ணலாம். எப்பொழுதாவது பயணம் செய்பவர்களுக்கு உங்கள் வாதம் பொருந்தும் .அடிக்கடி பயணம் செய்யும் என் போன்றவர்களுக்கு சில சமயங்களில் இந்த கேளிக்கை சாதனம் ஒரு தலைவலியாக அமைவதுண்டு.

எனக்கு நடந்த ஒரு கொடுமையான அனுபவத்தைப் பற்றி சொல்கிறேன்.
ஒருமுறை பாண்டியிலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஒரு படத்தைக் கண்டேன்.சிறுவயதில் நான் மிகவும் சிலாகித்த அதி தீவிர உக்கிரத்துடன் ரசித்த சில படங்கள் இப்போது பார்க்கும் பொழுது மகா அபத்தமாகத் தெரிகின்றன. அவ்வகைப் படங்களில் ஒன்றுதான் தாய் மீது சத்தியம். ரஜினி,ஸ்ரீபிரியா,மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்தது.தேவர் பிலிம்சின் கந்தரலங்காரங்களில் ஒன்று.சொல்ல மறந்து விட்டேன் ஒரு அதி முக்கிய கதாபாத்திரத்தில் நமது ராமு வேறு நடித்திருப்பான்(ரஜினி வளர்க்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்). படம் ஒரு கௌ பாய் வகைப் படம்.80 களின் முற்பகுதியில் வந்த ரெட்ரோ வகையைச் சார்ந்த ஈஸ்ட்மன் கலர் திரைப்படம்.ஜெய்ஷங்கர் நடித்த ஜம்பு, ஜக்கு, கங்கா வகைப் படங்களின் நீட்சி. படத்தில் ரஜினியின் பெயர் பாபு.

படத்தில் ரஜினி ஒரு நல்லவர், ஏழை. அந்த ஊரில் கொள்ளை அடிக்கும் இருவர் ரஜினியில் பெற்றோரைக் கொன்று விடுகின்றனர்.அந்தசமயத்தில் கொலையாளிகளில் ஒருவர் கழுத்தில் ஒரு பெரிய டாலரை ராமு பார்க்கிறது.க்ளோசப்பில் ராமு, டாலர்,கொலையாளி..சில ப்ளாஷ்கள். ராமு புரிந்துகொள்கிறான்.டாலர் அணிந்தவந்தான் கொலையாளி என்று. என்னே அதன் மதியூகம். பின்பு வரும் ரஜினி ஒரு சபதமெடுக்கிறார் அம்மா அப்பா உங்களே கொன்னவனே என் கையாலே கொல்லுவேன். இது என் தாய் மீது சத்தியம் என்று ராமுவுடன் புறப்படுகிறார்.

படத்தில் வில்லன்கள் மொட்டை வெயிலில் பொட்டல் காட்டில் தலையில் தொப்பி லெதர் ஜாக்கெட் முட்டிவரை ஷூ இடுப்பில் பெல்ட்டில் இணைக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் சகிதமாக புழுதி பறக்க குதிரையில் எங்கோ செல்வார்கள். (கிளின்ட் ஈஸ்ட்வுட் படங்களின் பாதிப்பு.)

இதில் ரஜினியும் ஸ்ரீபிரியாவும் காதலர்கள்.ரஜினி பழிவாங்க சென்று விடுவதால் அவரைத்தேடி ஸ்ரீபிரியாவும் அவர் அண்ணன் சுருளி ராஜனும் செல்கின்றனர்.போகும் வழியில் ஒரு ஊரில் ஸ்ரீபிரியா முகம் கழுவ ஒரு குளத்தில் இறங்குகிறார். உடனே ரஜினியின் பெற்றோரைக் கொன்றவர்களில் ஒருவன் அங்கே வந்து ஸ்ரீபிரியாவை பலவந்தம் செய்ய துரத்துகிறான். ஸ்ரீ தப்பி ஓடி மேஜர் சுந்தர்ராஜனிடம் தஞ்சம் அடைகிறார். மேஜரின் மகன் தான் ஸ்ரீ யைத் துரத்தியது.(மேஜர் முன்பு ஒருமுறை ரஜினியால் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டவர்).

ரஜினி இதற்கிடையே ஒரு ஊரில் அம்பரீஷைச் சந்தித்து துப்பாக்கிச் சண்டையில்  தேர்ச்சி பெறுகிறார். பின்பு அவரும் தொப்பி லெதர் ஜாக்கெட் முட்டிவரை ஷூ இடுப்பில் பெல்ட்டில் இணைக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் சகிதமாக புழுதி பறக்க குதிரையில் பழிவாங்கப் புறப்படுகிறார்.கூடவே நமது ராமுவும். அம்பரீஷின் நகையைக் காப்பற்றியதால்தான் கொள்ளையர்கள் ரஜினியின் பெற்றோரைக் கொன்றிருப்பர் . என்ன தலைசுற்றுகிறதா?

மேஜரின் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீ யைப் பார்த்து வீட்டிலேயே அவரை நெருங்குகிறான் மேஜரின் மகன். அதற்குள் மேஜர் வந்து விடவே ஸ்ரீ யையே தனக்கு மணமுடித்து வைக்குமாறு கேட்கிறான். அவரும் ஸ்ரீ பிரியாவிடம் கேட்பதாகக் கூறுகிறார்.ஆனால் ஸ்ரீபிரியா அவர் மகன் பற்றிய உண்மைகளைக் கூறி விருப்பமில்லை என நிராகரித்து விடுகிறார்.

இதற்குள் சென்னை வந்துவிடவே நான் விடுதலை பெற்றேன். பின்பு பாண்டி திரும்பும் போது ஒரு பஸ்ஸில் அதே படம். சரி விட்ட இடத்திலிருந்து பார்த்துக் கொள்ளலாம் என விகடனில் மூழ்கினேன். இப்போது மீண்டும் படத்திற்கு வருவோம்.

மேஜரின் மகன் ஒரு பெண் பித்தன். பாரில் காபரே ஆடும் ஜெயமாலினி அவன் ஆசை நாயகி. (ஜெயமாலினி இன்ட்ரோ சாங் "நீயும் நானும் இங்கு ஜோடி சேர்ந்து விட்டால் கூட்டல் கணக்குதான்... தனக்குதிக்கா .... பலே பலே ). திருமண விஷயம் கேள்விப்பட்ட ஜெ தன்னை மணமுடிக்கவிட்டால் அவன் அயோக்கியத்தனத்தை வெளியில் சொல்லிவிடுவதாக மிரட்டுகிறாள்.உடனே அவளை சமாதானப் படுத்தும் விதமாக வில்லன் அவள் கழுத்தில் தன் டாலர் செயினை அணிவிக்கிறான். சமாதனம் அடைந்தவளாக ஜெ இப்போதான் எனக்கு நிம்மதி என்று வில்லன் தோளில் சாய்கிறாள் . வில்லனோ குரூரப் புன்னகையுடன் " இனிமேல் தான் உனக்கு நிரந்தரமான நிம்மதி" என்று கூறி வெளியேறுகிறான். ஜெயமாலினி காதில் அந்தவார்த்தைகள் அசரீரி போல ஒலிக்கிறது "நிரந்தரமான நிம்மதி"

வில்லனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஜெயமாலினி அங்கிருந்து தப்பி ஓடுகிறாள். வில்லனின் ஆட்கள் துரத்துகிறார்கள்.சம்மந்தமே இல்லாமல் ஒரு செம்மண் மேட்டுக்கு வருகிறாள் ஜெ. அங்கிருந்து கீழே விழுந்துவிடுகிறாள். அந்த நேரத்தில் அங்கு வரும் ராமு அவள் கழுத்தில் இருக்கும் டாலரைப் பார்த்து (ஞாபகம் கொள்க டாலர், ராமு, வில்லன், ரஜினி பெற்றோர் கொலை) ஜெயமாலினி தான் கொலைகாரன் என்று நினைத்து அவளைத் தாக்குகிறது.ரஜினி வந்து காப்பாற்றுகிறார்.ரஜினியிடம் அவள் வசித்த ஊரை சொல்லிவிட்டு மரணம் அடைகிறாள்.ராமு டாலரைக் கவ்வுகிறது. உடனே ரஜினி " என்ன சொல்றே ராமு ? அப்போ இந்த டாலருக்கும் நம்ம அம்மா அப்பாவ கொன்னவனுக்கும் தொடர்பு இருக்கா? என கேட்கிறார். ராமு உடனே முன்னங்கால்களைத் தூக்கி தரையில் ஊன்றி வவ் வவ் என்று ஆமோதிக்கிறது.அப்போ நம்ம அம்மா அப்பாவ கொன்னவன் அந்த ஊர்லதான் இருப்பான் .. வா போலாம் என்று புறப்படுகிறார்கள்.

எனக்கு கண்ணை கட்டியது . என்னடா இது கேள்வியையும் அவரே கேட்டுவிட்டு பதிலையும் அவரே சொல்லிவிட்டு ஊரைத்தேடி போறாரே என்று. ஜெயமாலினி சொன்ன ஊருக்குப் போய் மேஜரைச் சந்திக்கிறார். மேஜர் மகன்தான் வில்லன் எனத் தெரிந்து கொள்கிறான்.அவனைத் துரத்துகிறார். அந்த சமயம் ஸ்ரீபிரியா மனநிம்மதி தேடி கோவிலுக்குப் போயிருப்பார். வில்லன் ரஜினியிடமிருந்து தப்பி உயிர் பயத்தில் ஓடிக்கொண்டிருப்பான். கோவில் அருகே வந்ததும் கோவிலிலிருந்து வெளியே வரும் ஸ்ரீ பிரியாவைப் பார்த்து விடுவான். உடனே உயிர் பயம் போய் காம வெறியேறி ஸ்ரீ பிரியாவைத் துரத்த ஆரம்பிப்பான் கோவில் என்று கூட பார்க்காமல். என்ன எழவு படம்டா இது என்று மனம் வெதும்பி தலையிலடித்துக் கொண்டே பார்த்தேன்.அதற்குள் ஊர்மக்கள் ஸ்ரீ பிரியாவை அவனிடமிருந்து காப்பாற்றி அவனைப் பிடித்து தூக்கில்போட முயலும் வேளையில் ரஜினி குதிரையில் வந்து தூக்குக் கயிற்றை சுட்டு வீழ்த்தி அவனைக் காப்பாற்றி அப்புறம் ஒரு NEUTAL VENUE வில் வைத்து சுட்டுக் கொன்று சபதத்தில் ஒரு பாதியை நிறைவேற்றுகிறார்.
அப்புறம் மேஜரும் ரஜினியை மகனாக ஏற்றுக் கொள்கிறார். (என்ன கொடும சார்?).

எஞ்சியிருக்கும் இன்னொரு வில்லனைக் கொல்ல ரஜினி ராமுவுடன் குதிரையில் புறப்படுகிறார். ஸ்ரீ பிரியாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு மேஜரிடம் ஒப்படைத்துவிட்டு செல்கிறார். ஸ்ரீபிரியா அங்கிருந்து லாவகமாகத் தப்பி ரஜினியைத் தேடித் புறப்படுகிறார். ரஜினி போகும் வழியில் இன்னொரு வில்லன் கோஷ்டியுடன் மோதுகிறார்.கன்னட பிரபாகர் தான் இன்னொரு கொலையாளி.அவன் ரஜினியிடம் உன்பேரு பாபு இல்லையே ? என்ன கொல்ல பாபுன்னு ஒருத்தனும் அவன் நாயும் வந்திருக்கிறதா கேள்விப் பட்டேன் என்பான்.உடனே ரஜினி என் பேரு கோபு என்று கூறுவார். உடனே வில்லன் ரஜினியின் வீரத்தைப் பார்த்து தன்னுடன் இணைந்து கொள்ள அழைப்பான்.ரஜினி உடனே சிறுநீர் கழிக்கும் விதமாக ராமு ஒளிந்திருக்கும் பாறை அருகே வந்து " ராமு இவன் கூடவே போய் இவன கொல்லணும், நீ இவங்க கண்ணுல பட்டா, என்ன பாபுன்னு கண்டுபிடிச்சிருவாங்க. அதனால இவங்களுக்குத் தெரியாம என் பின்னாடியே வா என்று கூறுவார். ராமு சத்தம் போடாமல் கால்களை தூக்கி ஊன்றி ஓகே சொல்லும், ரஜினி கிளம்ப எத்தனிப்பார். அந்த இடத்தில் டைரக்டர் வைத்தார் ஒரு ட்விஸ்ட்.

அந்த சமயத்தில் எப்படியோ ஸ்ரீ பிரியா அங்கே வந்து பாபு பாபு என்று கத்துவார். உடனே ரஜினியும் பேக்கு மாதிரி திரும்பிப் பார்த்துத்தொலைத்துவிடுவார். “நான் பாபு இல்லே.. என் பேர் பாபு கடியாது.. என் பேர் கோபு” என்று சமாளிக்க முயல்வார்.வில்லன் உடனே சந்தேகம் கொள்ளவே ஸ்ரீ பிரியா நிலைமையை உணர்ந்து ரஜினியிடம் "நீங்க பார்க்க என் பாபு மாதிரியே இருக்கீங்க” என்று சமாளிக்க முயல்வார்.

அவள நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வாங்கடா என்று கூறிவிட்டு வில்லன் புறப்படுகிறான். கூடவே ராமுவும் யாருமறியாவண்ணம் தொடர்கிறது.
அட்டைப் பேட்டிகள் சூழ ஒரு கொடௌன் அது.அங்கே ஸ்ரீ பிரியாவை அடைத்து அவளைக் கெடுக்க அவள் அறைக்குள் வில்லன் செல்ல முயலும் வேளையில் ரஜினி வில்லனிடம்,நான் பாபு மாதிரி நடிச்சு உண்மையான பாபு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறேன் என்று கூறுவார். நல்ல யோசனை என்று கூறி கூமுட்டை வில்லனும் ஒத்துக் கொள்வான்.கோபு ஸ்ரீ பிரியா இருக்கும் அறைக்குள் நுழைகிறார்.

இப்போது ஸ்ரீ பிரியா பற்றி கொஞ்சம் பார்ப்போம். சும்மா ஒரு 35-40 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது பெண்மணி மாதிரி, ஒரே வேளையில் அசால்ட்டாக 4 பிரியாணி சாப்பிடும் கெப்பாகுட்டி உள்ள தொப்பையுடனும் , மகன் மகள் பள்ளி செல்லும் இடைவெளியில் பார்ட் டைம் ஆக நடிக்க வந்ததை போன்ற தோற்றத்தில் இருப்பார். ரஜினி அறைக்குள் நுழைந்தவுடன் வில்லன் கோஷ்டியினர் சுற்றி நின்று ஜன்னல்வழியாக வேடிக்கை பார்ப்பார்கள்.

"பாபு பாபு பாபு எங்கே? கோபு கோபு கோபு இங்கே.
பாபு இங்கே கோபு இங்கே ?கோபு எங்கே?
பாசமுள்ள பாபு நானே , வேஷத்தாலே கோபு ஆனேன்
கோபு ஆனேன் பாபு நானே பாபு நானே"

செம்ம பாட்டு தலைவா..

முடிவில் ராமு வில்லன்கள் வழக்கம் போல் சீட்டாடும்போது பதுங்கிப்போய் (அவ்வளவு பெரிய நாய் பதுங்கிப்போவது வில்லன்கள் யாருக்கும் பார்க்க முடியாதாம், அதுசரி யானை போனாலே பார்க்காதவர்களா நாய் போகும்போது பார்க்கப் போகிறார்கள்? ) வில்லன்களின் துப்பாக்கிகளை எடுத்து ஒளித்து வைக்கிறது. முடிவில் ரஜினி டூயட் ஆடி முடிந்தவுடன் "பாபுவும் நான்தான் கோபுவும் நான்தான் " என்று கர்ஜித்து வில்லனை சுட்டுக் கொன்று மீதி சபதத்தையும் நிறைவேற்றுகிறார்."சுபம்".

முடிந்தவரை சுருக்கமாக ஆனால் எல்லாவற்றைப் பற்றியும் நான் எழுதக் காரணம் ஒரே மாதத்தில் நான்கு முறை இப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.நண்பன் ஜினு திருமணத்திற்கு திருவனந்தபுரம் செல்லும்போது பஸ்ஸில் இதே படம்தான். திரும்ப நாகர்கோவில் வருவதற்காக செம்பானூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு தமிழ்நாடு பஸ்ஸில் ஏறினேன்.நடத்துனர் BOOM TV யை ஆன் செய்தார். நீயும் நானும் ஒரு ஜோடி சேர்ந்தா இங்கு கூட்டல் கணக்குதான் என்று ஜெயமாலினி ஆட, திரும்பவும் மொதல்லேருந்தா என்று அலறி அடித்து பஸ்ஸை விட்டு இறங்கி டப்பா கேரளா வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். என்றாவது திரும்பவும் பஸ்ஸில் இதே படம் போட்டால் அந்த டிவி உடைவது நிச்சயம்.இது என் தாய் மீதுசத்தியம்.

8 comments:

 1. Macha sonna nambamaata.. ethae padatha boom tv la villupuram to chennai varum bothu parthain da..

  ReplyDelete
 2. முழுவதும் படிக்க கஷ்டமாக இருக்கு நண்பா...
  ஆனா முழுவதும் பார்த்த உன் மன தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்...

  ReplyDelete
 3. Annnnan mudiyala,

  Unga kathai maathireyee thaaan ennakum. Chumma illinga , vokkali ellla tamilnadu transport vandilayuim ithe CD thaan oduthu. Irandarai mani nera mokka padathai, konjamum siramam indri vadivamaithukku en vaalthukkal. Karuthukkalai kachiiiathamaagha kavungal.

  ReplyDelete
 4. Rajesh,

  I have same expreiences too!!!! every weekend i used come to my native by bus from vilupurum.
  Those days i have seen/heard "Chandramuki" more than 10 times...

  The loud speakers won't allow you to sleep also..

  you have to either watch or close the eyes and hear the dialogues......really boring moments....

  ReplyDelete
 5. Thank God!! They didn't put any "Vijay" film to you.

  ReplyDelete
 6. Gud one.. people whoever red this.... they can avoid TN govt buses

  ReplyDelete
 7. என்னக்கொடும சார் இது.........

  ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !