Friday, October 23, 2009

கந்தல் துணி - பாகம் 2

இந்த வார விகடன் இணைப்பில் (செண்டிமெண்ட் விகடன்) நான் கடந்த பதிவின் தொடர்ச்சியாக (கந்தல் துணி) எழுத நினைத்த ஒன்றைப் பற்றி ரீ.சிவக்குமாரும் எழுதியிருக்கிறார். அட பரவாயில்லையே நாம கூட விகடன்ல வர்ற ஒரு பத்தி அளவுக்கு யோசிச்சிருக்கொமே என்று வியப்படைய ஒன்றுமில்லை.இந்த நொந்து போன செண்டிமெண்ட்ஸ் பத்தி யாரு எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.


நாயகனுக்கு குரல் கொடுக்கும் மக்கள்:

நாயகன் ஒரு ராபின் ஹூட்.கிளைமாக்ஸ் நெருங்கும் தருணத்தில் நம் ஸ்காட்லான்ட் யார்ட் போலீசில் மாட்டிக் கொள்வார்.நீதிமன்றம். நாயகன் தனக்குத் தானே ஆக்ரோஷமாக வாதாடிக் கொள்வார். நா ஒண்ணும் பணத்த எடுத்து என் சந்தோஷத்துக்காக பயன்படுத்தல.. இருக்குறவன்கிட்ட எடுத்து இல்லாதவங்களுக்கு கொடுத்தேன்.. இந்த அரசாங்கம் செய்ய வேண்டியத நான் தனி மனுஷனா செஞ்சிருக்கேன்.., இது தப்பா...? சொல்லுங்க .. சொல்லுங்க .. சொல்லுங்க .. ( echo effect).

மக்கள் வெகுண்டெழுவார்கள். சூர்யாவை விடுதலை செய்.! போலீஸ் அராஜகம் ஒழிக..! அதிலும் உழைக்கும் பெண்கள் இன்னும் உணர்ச்சிவசப்படுவார்கள். அந்த தம்பி வந்தப்புறம்தான் மாமூல் தொல்லை இல்லாம நிம்மதியா பூ விக்க முடியுது.புண்ணாக்கு விக்க முடியுது என்று நீட்டப்படும் மைக் முன்பாக கூறுவார்கள்.
நாயகன் போலீசில் சிக்காமல் அவனைத் தேடிக் கொண்டிருப்பார்கள் , தலைக்கு 25 லட்சம் அறிவித்திருப்பார்கள். அப்போதும் பெண்கள் கருத்துக்கூறுவார்கள்.. இந்தா? யார்கிட்ட கேக்குற துப்பு ? கா .. த்தூ.. இதாய்யா துப்பு.. போவியா வேலையப் பாத்துகிட்டு.. என்று நம்மை கரித்தெடுத்துவிடுவார்கள்.
நாயகனின் ஆட்களை போலீஸ் பிடித்து சித்ரவதை செய்வார்கள். அப்போது அந்த ஆட்களில் ஒருவரின் அம்மா (உ.ம் ரமணாவில் கலைராணி) போலீசிடம் "கடவுள பாத்திருக்கியாயா நீயி..? என்று கலைவெறியுடன் கத்தும்போது நமக்கு கொலைவெறி வருவதில் வியப்பில்லை.!

ஜென்டில் மேன், இந்தியன்,முதல்வன்,ரமணா, அந்நியன், சிவாஜி, கந்தசாமி என இந்த குரல் கொடுக்கும் மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

(இதே கருத்தில் விகடன் இணைப்பில் கருத்து கந்தசாமி என வந்துள்ளது)

பெண்கள்.. ஒரு முற்போக்குச் சித்தரிப்பு:

பெண்களை ஒரு முற்போக்குவாதியாகச் சித்தரிக்க பல யுக்திகளைத திரையுலகம் கையாண்டிருக்கிறது. சற்று விட்டேத்தியாக நிமிர்ந்து நடத்தல், ஸீ த்ரூ சாரி அணிந்து ஹேன்ட் பேக் வைத்திருத்தல் போன்றவை 70 களில் முற்போக்குப் பெண்களின் முக்கிய அடையாளங்கள்.அப்படி கெட்டப்புடன் முன்னால் போகும் எல்லாப் பெண்களும் முற்போக்குப் பெணகளல்லர். தன்னைப் பரிகசிக்கும் ஆணைத் துணிந்து செவிட்டில் அறைபவளே முற்போக்குவாதி.
அப்புறம் கொஞ்சம் வெளிப்படைப் பேச்சு, செக்ஸ் என்னும் வார்த்தையை உச்சரிப்பவள், ஜெயகாந்தன் கதை படிப்பவள் என்பவையும் முற்போக்கின் அடையாளங்கள்.
"மஞ்சுவுக்குத் தேவே ஒரு ஆம்பளேத் துண.." என்று ரஜினி ஸ்ரீபிரியாவைப் பற்றி கமலிடம் சொல்லுவது (அவள் அப்படித்தான்),ஸ்ரீபிரியாவின் முற்போக்குப் படிமமாக காட்டப்பட்டுள்ளது.
பொதுவில் " ஓ ஒரு தென்றல் புயலாகி வரும் நேரம்..!" என்று பாடல் ஒலிக்க வீறுநடை போட்டு படிதாண்டும் பத்தினிப் பெண்தான் நம் முற்போக்குவாதி.
அதுவே இப்போது காலப் பரிணாம வளர்ச்சியடைந்து ஒரு பெண் தம் அடித்தால் முற்போக்கு எண்ணமுடையவள் என்றாகிவிட்டது.(உன்னைப்போல் ஒருவன்).

இன்னும் துவைப்போம் அவ்வப்போது..!

2 comments:

  1. "அந்த தம்பி வந்தப்புறம்தான் மாமூல் தொல்லை இல்லாம நிம்மதியா பூ விக்க முடியுது" super appu..

    ReplyDelete
  2. நல்லாத் தொவச்சுட்டீங்க பாஸு!!!

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !