விடுதி எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களையும் சில கசப்பான அனுபவங்களையும் அளித்திருக்கிறது. பொதுவாக வகுப்பில் ஒரு மூலையில் உக்கார்ந்து "அண்ணே எனக்கு எது புடிக்கலியோ தூங்கிடுவேன்..!" என்று செந்தில் பாணியில் உறங்குபவன் நான்.நான்கு வருடங்களில் வெகு சில பேராசிரியர்கள் தவிர என் பெயர் யாருக்கும் தெரியாது. நாம யாரு வம்புக்கும் போறதில்ல யாரு தும்புக்கும் போறதில்ல.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம் என்று வடிவேலு பம்மும் விதமாக பம்மிக்கொண்டே வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பிரச்சனை இன்றி கழிந்தது.பரீட்சை நேரங்களில் கூட்டாக சேர்ந்து படிப்பது, அலாரம் வைத்து நள்ளிரவில் எழுந்து படிப்பது என்று இனிய விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன.மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது சனிதிசை எனக்கு.
