சமீபத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்த்தேன்.தமிழ் சினிமாவின் புதிய நடிப்பு புயல் நடன சூறாவளி, நவயுக நாயகன், வெகு விரைவில் சூப்பர் ஸ்டார் ஆக்கப்படப் போகும் தகுதியுடைய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் மெய்மறந்தேன்.
படத்தில் டிராபிக் சிக்னலில் ஒரு பெண்ணை பார்க்கிறார். அவள் தன்னுடைய முகத்திரையை விலக்கியதும் ஐயோ அம்மா என்று கவுண்டமணி ரீதியில் அந்தப் பெண்ணை காரி உமிழ்ந்து இகழ்கிறார். நியாயமாகப் பார்த்தால் அந்தப் பெண்தான் இவரை உமிழ்ந்திருக்க வேண்டும்.என்ன செய்வது கோடிகளாய்க் குவித்த ஊழல் பணத்தில் ஒரே நாளில் நாயகனாகிவிட்டாரே. நாயகன் மீது உமிழ முடியுமா ?
ஜீவா நடித்திருந்திக்க வேண்டிய படம் இது. படத்தின் வெற்றியின் அளவைக் குறைத்ததில் நாயகனின் பங்கு மிகப் பெரிது.சந்தானம் தனியொரு ஆளாக படத்தைத் தாங்குகிறார். சந்தானம் மட்டும் இல்லை என்றால் வெறும் குப்பை என மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கும். என்னதான் சந்தானம் இருந்தாலும் கடைசி 20 நிமிடங்கள் திக்கித் திணறி தண்ணீர் குடித்து இயக்குனர் ஒப்பேற்றி இருப்பது சலிப்பை அளிக்கிறது.
நடிப்பு, நடனம், நகைச்சுவை என அனைத்தையும் திறம்படச் செய்ய முயன்று தோற்கிறார் ஹீரோ. சந்தானம் வசனம் பேசும்போது ஹீரோ கொடுக்கும் பார்வை ரியாக்ஷன்கள் படுபரிதாபம். பேசாமல் அப்போதும் கூலிங் கிளாஸ் போட்டிருந்திருக்கலாம்.நிறைய இடங்களில் SMS ஜீவாவை இமிடேட் செய்ய முயன்று எரிச்சலூட்டுகிறார்.
படம் முழுக்க தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசுவதாக நடிக்க முயற்சிக்கிறார் , கொஞ்சம் கூட சிரிப்பே வரவில்லை. படம் முடிய கால்மணி நேரம் இருக்கும்போது ஹீரோ சரியாக இங்கிலீஷில் பேசுகிறார்.ஏன் இங்கிலீஷ் தெரியாதது மாதிரி நடிக்க வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை. தமிழ் நாட்டின் கஷ்டகாலம், புதிய தளபதியின் அடுத்தடுத்த படங்களை பெரிய பெரிய இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பில் இனி வருடம்தோறும் காணலாம். இதனால் இளைய தளபதி கடுமையான பீதியில் இருப்பதாகக் கேள்வி. கவலைப் படவேண்டாம் நடனத்தில் உங்களை யாராலும் மிஞ்ச முடியாது.என்ன ஒன்று கஷ்டமான ஸ்டெப்புகளை ஆடுகிறேன் என்று சுறா படத்தில் செய்தது போல தரையில் படுத்து உருளாமல் இருந்தால் போதும். இல்லாவிட்டால் மக்கள் புதிய தளபதியின் பாக்கியராஜ் நடனமே பரவா இல்லை என்னும் முடிவெடுக்கும் சாத்தியம் உள்ளது.
நமது ஹீரோவின் நடனம் குறித்து யுவகிருஷ்ணா தனது விமர்சனத்தில் குறிப்பிடும்போது நடிக்க வந்து இத்தனை வருடங்களாகியும் அஜித்துக்கே நடனம் வரவில்லை என்று கூறுகிறார். வரலாறு படம் பார்க்கவில்லை போலும். தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டால் அப்படத்தில் அஜித் நன்றாகவே ஆடியிருப்பார் . சரி அத்தனை குறைகளை மீறியும் அஜித்தை நமக்கு ஏன் பிடிக்கிறது என்றால் ஊரை விற்ற ஊழல் பணத்தில் சொந்தப் படம் எடுத்து ஹீரோவாக அறிமுகம் ஆகவில்லை. எந்தத் திறமையும் இல்லாமல் அறிமுகம் ஆகி 20 வருடங்களில் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தினை பெறுவது எளிதான காரியம் அல்ல.
கன்னட சினிமாவில் எப்படி புனீத் ராஜ்குமார் வலுக்கட்டாயமாக ஹீரோ ஆக்கப்பட்டு ஒரு நட்சத்திரம் ஆக்கப்பட்டரோ அதே போன்ற நிலைமை தமிழ் நாட்டிலும் பிரகாசமாக தெரிகிறது. நாட்டில் நடக்கும் கொடுமைகளை மறக்க திரையரங்குக்கு சென்றால் அங்கேயும் ஊழல்வாதிகளின் வாரிசுகள் ஊழல் பணத்தில் ஆடிகொண்டிருந்தால் மக்கள் என்னதான் செய்வது ? நேற்று அருள்நிதி, இன்று உதயநிதி, நாளை தயாநிதி. ஆளுக்கு மூன்று படங்கள் வருடத்திற்கு நடித்தாலும் ஒன்பது படங்கள், சன் டிவி, கலைஞர் டிவி, கே டிவி என அனைத்திலும் அந்த ஒன்பது படங்களின் ட்ரைலர் மாறி மாறி ஓடி மக்களை இம்சிக்குமே?
ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆனவுடன் சன் மியூசிக், இசையருவி என சிறப்பு நிகழ்சிகள் போட்டு தாரை தப்பட்டைகளை அடித்துக் கிழித்து தொங்கவிடுவார்களே. தமிழ்நாட்டு மக்களின் நிலைமை கவலைக்கிடம்தான் இனி. மணிரத்னம், கவுதம் மேனன், செல்வராகவன், கே வி ஆனந்த் , AR முருகதாஸ், KS ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குனர்கள் இனி தெலுங்கு, ஹிந்தி படங்களை மட்டும் எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிடில் தங்களுடன் படம் பண்ண சொல்லி நிதிகள் "செல்லமாக" அழைக்கும் போது தலைவலி வயிற்று வலி , வாந்தி பேதி என்று கூறி எஸ்கேப் ஆகிவிடவும். தமிழ்நாட்டுக்கு புண்ணியமாகப் போகும்.
ஆனால் பாருங்கள் பதிவுலகில் சினிமாவை லட்சியமாகக் கொண்டு, எழுத்தை தவமாக கொண்ட சொம்படிக்கும் பதிவர்கள் யுவகிருஷ்ணா ,ஜாக்கி சேகர் போன்றவர்களுக்கு அடித்தது யோகம்.ஏற்கனவே பரசுராம் 55 மூலம் யு டியூபை கலங்கடித்தாயிற்று. வெள்ளித் திரையையும் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம், தங்கள் விமர்சனங்களில் புதிய தளபதியை புகழ்ந்து தள்ளியிருப்பதைப் பார்த்தால் அது நிஜமாகவே வாய்ப்பிருக்கிறது.
தமிழ்நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
