Saturday, February 12, 2011

எங்கே நம் இளையராஜா ?

புதிய மில்லினியத்தில் இளையராஜாவின் இசை குறித்த என் அலசல் இப்பதிவு.
1960 முதல் 1970 இன் இறுதிவரை தமிழ் திரையிசையில் கோலோச்சிய மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா என்னும் இசைக் கலைஞனின் வரவிற்குப் பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனார். அன்னக்கிளியிலிருந்து 16 வயதினிலே, அவள் அப்படித்தான் , முள்ளும் மலரும், பிரியா , நிழல்கள் , உல்லாசப் பறவைகள் என்று அதிரடி கிளப்பிக் கொண்டிருந்தபோது , சாம்பலிலிருந்து மீண்டு எழும் பீனிக்ஸ் பறவையென நினைத்தாலே இனிக்கும் மூலம் MSV  அதிர்ச்சி அளித்தார்.பழைய  பாணியில் இசையமைப்பதினாலேயே MSV காணாமல் போனார் என்று நினைத்த மக்களுக்கு நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் அன்றைய ட்ரெண்டுக்கு இருந்தமையால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்றளவும் உற்சாகம் குறையாத பாடல்கள் அவை. அதன்பின்பு அத்தனை உற்சாகமான பாடல்களோ மெலடிகளோ அவரிடமிருந்து வெளிப்படவில்லை என நினைக்கிறேன். அதுகுறித்து அதிக தகவல்கள்  என் ஞாபகத்தில் இல்லை. பொதுவில் இளையராஜா துவக்க நாட்களில் இசையமைத்த முறையானது  70  களின் இறுதியில் msv   இசையமைக்கும் முறையை ஒத்திருந்தது. பின்பு வேகம் பெற்ற ராஜா இந்திய திரையிசையின் ஒப்பற்ற உன்னத கலைஞனானார்.

காலம், வரலாற்றின் நிகழ்வுகளை அடிக்கடி மீள்பதிவு செய்யும். இம்முறை  msv இன் இடத்தில் நமது ராஜா , ராஜா இடத்தில் ரஹ்மான். 1992 இல் அறிமுகமாகி ரோஜா, புதியமுகம், டூயட், திருடா திருடா என்று அதிரடி கிளப்பிக்கொண்டிருந்த ரஹ்மான் குறைவான படங்களை செய்து கொண்டிருந்தாலும் புதிய ரக இசையால் பெரிதும் விரும்பப் படுபவராய் இருந்தார். ராஜாவும் 1992 - 1997 வரையான காலகட்டத்தில் ஒன்றும் சளைத்துவிடவில்லை, மெல்ல மெல்ல தபேலாவும் மிருதங்கமும் அவரது பாடல்களிலிருந்து மறையத்தொடங்கியது ( முற்றிலுமாக இல்லை ) இந்த கால கட்டங்களில்தான். ராஜா அவருக்கென்றே உரித்தான பாணியை பெரிதும்  மாற்றாமலேயே தொடர்ந்தார்.






இந்த காலகட்டத்தில்தான் தேவாவும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.ஆசை பாடல்கள் குறித்து விகடன் விமர்சனத்தில் " தேவா எப்போ இளையராஜவிலிருந்து ரஹ்மான் பக்கம் வந்தீர்கள் என்று எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறது.பாடல்களில் தபேலாவின் ஆதிக்கம் குறைந்து டிரம்ஸ் ஆதிக்கம் அதிகமானது 
1996 இல் சட்டென்று இளையராஜாவுக்கு ஒரு தொய்வு ஏற்பட்டது போன்ற தோற்றம் நிலவியபோது காதலுக்கு மரியாதை மூலம் மிரட்டினார் ராஜா. MSV க்கு ஒரு நினைத்தாலே இனிக்கும் போல ராஜாவுக்கு காதலுக்கு மரியாதையை ஒரு "COMEBACK" ஆக அமைந்தது.
1996 - 2001 வரையிலான  சமயத்தில் தேவா , S.A.ராஜ்குமார், சிற்பி போன்ற இசையமைப்பாளர்களின் எழுச்சி புதிய இயக்குனர்களுக்கும் , சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது , தேவா ஆங்கிலம் மற்றும் ஹிந்தி , S.A.ராஜ்குமார் பெரும்பாலும் ஹிந்தி , சிற்பியோ பஞ்சாபி மற்றும் ஹிந்தி என்று காப்பிக்கடை நடத்திக் கொண்டிருந்தனர். மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் ரஹ்மானையும், மற்றவர்கள் தேவா சிற்பி போன்ற இசையமைப்பாளர்களிடமும் சென்றுவிட்டதால் ராஜாவைத் தேடுவோர் வெகுவாகக் குறைந்தனர். ராஜாவும் மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார்.
பாலச்சந்தர் , பாலுமகேந்திரா , பாரதிராஜா, மணிரத்னம் போன்ற ஜாம்பவான் இயக்குனர்களின் இசை ரசனை புதிய இயக்குனர்களிடம் காணப்படாததும் கூட ராஜாவின் தொய்வுக்கு ஒரு காரணம் . 
அதன் பின்பு ராஜாவின் இசைகேட்டு வளர்ந்து ராஜாவை தன் ஆதர்சமாக எண்ணிய இயக்குனர்களே ராஜாவை அணுகினர். குறிப்பாக பாலா , சேது படத்திற்கு  வியாபார ரீதியில் முக்கியமான  விஷயமாக அமைந்தது ராஜாவின் இசை என்றால் மிகையல்ல.பின்பு நந்தா தவிர்த்து பிதாமகன், நான்கடவுள் என ராஜாவிடம் வேண்டிய இசையை கேட்டுப் பெறுபவர் பாலா மட்டுமே.
மற்ற சாதாரண இயக்குனர்களின் படங்களுக்கு மிகச்சாதாரணமாகவே இசையமைத்திருக்கிறார் இளையராஜா என்பேன்
சேதுவுக்கு அப்புறம் ராஜா இசையமைப்பில் வெளிவந்த படங்களையும் பாடல்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும் கிட்டத்தட்ட 2005 ஆம் ஆண்டுவரை கூட அவர் இசையமைப்பில் வந்த சொற்ப படங்களில் நிறைவான இசையையே வழங்கியிருந்தார். எனினும் 80 மற்றும் 90 களில் அவர் இருந்த வீச்சினை ஒப்பிடும்போது அது குறைவுதான்.
ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி என்று ராஜாவை விட்டுவிடாமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் கமல். அவரும் தற்போது கட்சிமாறிவிட்டதால் தரமான ராஜா பாடல்கள் கிடைப்பது  சிரமமாகி விட்டது
அழகி, சொல்லமறந்த கதை , காசி, பாரதி, பிரண்ட்ஸ், ஒருநாள் ஒரு கனவு, கண்ணுக்குள் நிலவு , போன்ற படங்கள் 2005 ஆம் ஆண்டுக்குள் வந்த சில நல்ல பாடல்கள் அடங்கியவை.










அதன் பின்பு வந்த ஆண்டுகளில் ராஜா அளித்தது பெரும்பாலும் ஏமாற்றமே
உதாரணத்திற்கு சில படங்களைப்  பார்ப்போமே , தனம் , உளியின் ஓசை , கண்களும் கவி பாடுதே, ஜெகன் மோகினி , வால்மீகி , மிகச் சமீபத்தில் அய்யன் .
படங்களும் நினைவிருக்காது பாடல்களும் நினைவிருக்காது
ஒருகாலத்தில் புதிய இயக்குனர்களுக்கு பலமே ராஜாவின் இசைதான். செல்லத்தாயி, புதுநெல்லு புதுநாத்து , ஆவாரம்பூ, போன்ற படங்கள் நம் நினைவில் இல்லாவிட்டாலும் பாடல்கள் என்றும் நினைவிலிருக்கும்
தற்போது வரும் இயக்குனர்கள் இளையராஜாவிடமிருந்து ஏன் நல்ல இசையைப் பெற முடியவில்லை என்பது புரியவில்லை
சமீப காலங்களில் ஹிந்தியிலும் ராஜா இசை அமைக்கும்  படங்களின் பாடல்கள் நன்றாக உள்ளன, காரணம் அவை எல்லாம் 80 களின் மீளாக்கமே.ஜேம்ஸ், சீனி கம், பா போன்றவை சில உதாரணங்கள்
ராஜா சகாப்தம் முடிந்து விட்டதா? ஒருவேளை ராஜா ஓய்வு பெற எண்ணினாலும் ஒரே ஒரு படம் நச்சென்று அடித்து அதிரவைத்துவிட்டு ஓய்வு பெறட்டுமே 

ராஜா பற்றிய எனது  முந்தைய பதிவுகளைப் பார்க்க 

வருத்தத்துடன் ஒரு ராஜா ரசிகன்