Friday, August 28, 2009

கால்சட்டை (Pants)

ஆங்கிலேய வருகைக்குப் பின் பிரபலமான பேன்ட் எனப்படும் கால்சட்டை நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகிப் போனது. சின்ன வயதிலிருந்து சொல்லப்போனால் 5 வயதிலிருந்தே பேன்ட் அணிவதை மிகவும் விரும்பியிருக்கிறேன்.அந்த வயதில் டவுசர் (எங்களூரில் நிக்கர் ) அணிந்த நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். "பார்ல .. பேண்டு போட்டுட்டு அப்பிடியே விளையாட வந்திருக்கான்.." என்று. தமிழ் "பேண்டுக்கு" வேறொரு அர்த்தம் இருப்பதை நினைவில் கொள்க.

என் பெரிய மாமா (அம்மாவின் முதல் அண்ணன்) ஒரு மெல்லிய பச்சை நிற சபாரி ஒன்று எனக்கு தந்தார். அது மிகவும் பிடித்தமையால் எப்போதும் அதையே அணிந்து என் ஆச்சி வீட்டுக்குப் போவேன். என் சித்திகள் என்னை பாச்சா உருண்டைக்காரன் என்று கிண்டல் அடிப்பார்கள். அவர்கள்
வீட்டுப் பக்கத்தில் ஒருவன் பேன்ட் சட்டை அணிந்து பாச்சா உருண்டை விற்பனை செய்துகொண்டிருப்பான்.


பேன்ட் என்றால் என்னைப் பொறுத்தவரையில் கச்சித அளவுடையதாக இருக்க வேண்டும். ரொம்பவும் இறுக்கமாக இல்லாமலும், ரொம்பவும் தளர்வாக இல்லாமலும் இருக்க வேண்டும். குறிப்பாக ஜிப் முடியும் பகுதி சரியாக அமையாமல் தொடைப்பகுதி வரை வந்தால் நடக்கும்போது நரகமாக இருக்கும்.அதே மாதிரி பின்பக்கமும் கச்சிதமான அளவுகளோடு இருக்க வேண்டும். ஆனால் இந்த வகைகளில் ஏதாவது ஒன்று நான் தைக்கும் அல்லது எடுக்கும் பேண்ட்களில் குறைவாக இருந்துவிடும், கடையில் அணிந்து பார்க்கும் போது சரியாக இருக்கும், பின்பு வீட்டுக்கு வந்து பார்த்தால் பல்லை இளிக்கும். இதனாலேயே பல பேண்ட்கள் அணியப்படாமலேயே இருக்கின்றன.

திரைப்படங்களில் தலைவர் ரஜினி பேன்ட்டை ஷூ வுக்குள் விட்டு வந்தால் எனக்கெல்லாம் பெரிய சிலிர்ப்பாக இருக்கும், தலைவா விடாதீங்க குதிரைய வேகமா ஓட்டுங்க என்று சிலாகித்துக் கொள்வேன். தலைவர் ஷூவுக்குள் பேன்ட் நுழைத்து வருகிறார் என்பதால் எனக்கு மன்னன்,பாண்டியன், மனிதன், போன்ற படங்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக மனிதனில் ரஜினி வில்லனை தாக்க கிளம்பும்போது ஷூவுக்குள் பேன்ட்டை விட்டு, ஜிப்பை இழுத்து மாட்டி, ஸ்லீவ்லெஸ் லெதர் ஜாக்கெட்டில் குண்டுகளை மாட்டும்போது, பார்க்கும் எனக்கு அதிகபட்ச அட்ரினலின் மூலாதாரத்திலிருந்து கிளம்பி மூளையை அடையும். எஜமானில் தலைவர் வேஷ்டி அணிந்து மட்டும் நடித்திருக்கிறார் என்றதும் அந்த படத்தையே வெறுத்தவன் நான்.
ரஜினியின் பழைய படங்களும் எனக்குப் பிடிக்காது. காரணம் பெல் பாட்டம் பேன்ட்.ரஜினி சென்னையில் நடந்து வந்தால் அவர் பேன்ட் தாம்பரத்தில் போய்க்கொண்டு இருக்கும்.வழி சுத்தமாக ஆகியிருக்கும். சாதாரண பெல்ஸ் இல்லை யானைக்கால் வந்த "elephant bells".

அதன் பிறகு வந்தது மார்லன் பிராண்டோ மாதிரி "மார்பன் பேண்ட்டோ" கள் காலம்.( இந்த சொலவடை நடிகர் விவேக் உருவாக்கியது-நன்றி விவேக்).
நடிகர்கள் வயிற்றுக்கு மேலே மார்புக்குக் கீழிருந்தே பேன்ட் ஆரம்பித்துவிடும். கமல் ஒரு மிகச்சிறந்த மார்பன் பேன்டோ.
நடிகனின் காதலி நாடகம் ஏனடி? என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு ? எங்கேயும் எப்போதும் என்று இளந்தொந்தி துடிதுடிக்க உருகி உருகி ஆடுவார்,

பொதுவாக எம்.ஜி.ஆர் படங்கள் நான் விரும்பி பார்ப்பதுண்டு.
தன திரைவாழ்வின் இறுதிக்காலங்களில் அவரும் பெல் பாட்ட்டம் அணிந்து நடித்திருப்பார். இதயக்கனி படம் பார்க்கும் போது அதில் M.G.R பெல்
பாட்டம் பேண்ட்டும் சுருளி ராஜன், ஐசரி வேலன் போன்றோர் சாதாரண பேண்டும் அணிந்திருப்பர். எனக்கு ஒரே குமைச்சலாக இருக்கும், என்னடா M.G.R. இப்படி பண்ணிட்டார் இவருக்கு ஒரு டேஸ்டே இல்லியே, ச்சே சுருளி எல்லாம் நல்ல பேன்ட் போட்டிருக்காரே, இவருக்கு என்ன ஆச்சு என்று புலம்பிக்கொண்டிருப்பேன். அவ்வளவு வெறுப்பு பெல் பாட்டம் பேன்ட் மீது.

என்னுடைய கச்சிதமான பேன்ட் ஆசைக்கு ஆப்பு வைத்தார் நடனப்புயல் பிரபு தேவா.கிட்டத்தட்ட ஒரு நாகரிக மாற்றத்தையே தொண்ணூறுகளில் கொண்டுவந்தவர் அவர். வால்டர் வெற்றிவேலில் தொடங்கி, காதலன், ராசையா, லவ் பேர்ட்ஸ் என்று பேகிஸ் பேஷன் கொண்டுவந்தவர் அவர். பேகிஸ் என்றால் தொடை அருகில் நான்கு வழிச்சாலை அளவு அகலமும் , கால் அருகில் ஒற்றையடிப்பாதை அளவு அகலமும் கொண்ட "பலூன் பேகிஸ் ". சிலநேரம் நான் நினைத்ததுண்டு, இவர் என்ன பேண்ட்டுக்குள் கொஞ்சம் ஆடிவிட்டுதான் வெளியில் ஆடுகிறாரோ என்று.

இந்த ட்ரெண்ட் அதிகமான காலகட்டங்களில் கடைகளில் ரெடிமேட் பேன்ட்கள் பெரும்பாலும் பேகிஸ் சேர்ந்தவையாகவே வரும். எவ்வளவு கதறினாலும் வீட்டில் அதை மட்டுமே எடுத்துத் தருவார்கள்.
பின்பு வந்த காலங்களில் parallels , slight bells அப்புறம் normal பேன்ட் என பல பேஷன்கள் வந்து போனாலும் இன்னும் எனக்கு மனதுக்குப் பிடித்த மாதிரி பேன்ட் அமைவது பெரும்பாடாகத்தான் இருக்கிறது. தப்பித்தவறி ஒன்று அமைந்துவிட்டால் அதையே விடாமல் அணிந்து அணிந்து கிழித்து விடுகிறேன்.

1 comment:

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !