Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, August 19, 2012

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!


நான் துவக்கப் பள்ளியில் படித்த போது பள்ளி பாடப்புத்தகங்களில் கடைசி பக்கத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பார்கள் "இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்". இன்று புத்தகங்களில் அந்த வாசகம் காணாமல் போயிருக்கலாம். அதே போல இந்திய ஒருமைப்பாடும் காணாமல் போய்க்கொண்டிருப்பது  கண்கூடாகத் தெரிகிறது.இதற்கான காரணங்கள் பலவாக இருப்பினும் மிக மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது  நமது இந்திய அரசியல் தலைமை.
பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியவுடன் வல்லரசு நாடுகள் னம் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தன. அந்த நேரத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை நாலாயிரம் ரூபாய்க்குப் பக்கத்தில். நாட்டின் உள்கட்டமைப்பு  வசதிகள் வலுப்பெறத்தொடங்கிய காலம் அது. 15 ஆண்டுகளாக இன்னமும் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பது ஜனநாயக அரசியலின் அளப்பரிய சாதனை.
இந்தியாவின் சிறப்பம்சமே வேற்றுமையில் ஒற்றுமை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நிகழ்வது அதற்கு தலைகீழாக இருக்கிறது. ஒரு  மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் இடையில் ஒற்றுமை என்பது மருந்துக்கும் கூட இல்லாத நிலைமை உள்ளது.நதிநீர் பங்கீடு முதல் வேற்று  மாநிலத்தோர் ஒரு மாநிலத்தில் பணிபுரிவது வரை இன்று ஒருமைப்பாடு சிறுமைப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. நீதியின் பக்கம் இருந்து அதனை சரியா செய்ய வேண்டிய மத்திய அரசோ ஓட்டுக்காக கையாலாகாத நிலையில் உள்ளது.


இலங்கையிலிருந்து அகதியாய் வந்த தமிழனுக்கு குடியுரிமையோ நல்ல வேலை வாய்ப்போ இந்தியாவில் கிடைப்பதில்லை. மாறாக வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இங்கே வாழ்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனில் மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்பது இயல்புதானே?
வங்கதேச அகதிகள் மேல் அரசாங்கம் கைவைக்க முடியாது , ஏனென்றால் நமது மதச்சார்பின்மை கொள்கை என்னாவது ? 
எனவே எத்தனை இந்தியக் குடிமகன் கலவரங்களில் இறந்தாலும் பரவா இல்லை. இலங்கையிலிருந்து தமிழன் வருகிறானென்றால் உள்நாட்டுப் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது ஒரு காரணம். ஆனால் சின்ன பாகிஸ்தனாகிய வங்கதேசத்தில் இப்போது என்னதான் பிரச்சனை ? 1972 இலேயே  காசுவெட்டி பிரித்து விட்டது இந்தியாதானே ? கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்திடம்  தோற்றால் கூட பாக் கேப்டன் "எங்கள் சகோதரரிடம்தான் தோற்றோம் இது ஒன்றும் அவமானமில்லை" என்கிறான்.அப்புறம் என்ன மயித்துக்குடா பிரிஞ்சீங்க என்று இங்கு யாரும் கேட்க முடியாது, ஏனென்றால் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு.இன்றும் கூட கள்ளநோட்டுக்கள் ஆயுதங்கள் அதிகமும் இந்தியாவுக்கு வருவது பாகிஸ்தான்  மூலம் வங்கதேசம் வழியாகத்தான்.இப்போது கூட வங்கதேச அகதிகளை இந்திய அரசாங்கம் திரும்பிப் போக சொல்லட்டும் பார்ப்போம்?நமது பதிவுலகிலேயே  சுவானப் பிரியர்கள், அரேபிய  இஸ்லாமிய கனவு தேசத்தை இந்தியாவில் கட்டமைக்க போராடுபவர்கள் " சகோ சகோ" என்று தமிழ்மணத்தில் இந்தியா அரசாங்கத்தின் காவி பயங்கர வாதத்தையும் பாசிச வெறியையும் போட்டுத் தாக்கி பொளந்து விடுவார்கள்.

இந்திய என்பது பல தேசிய இனக்குழுக்கள் இணைந்த ஒரு தொகுப்பு. ஏதோ ஒரு தர்மத்திற்கு கட்டுப்பட்டு இன்னும் ஒரே நாடாகத் திகழ்வது மிகப்பெரும் அதிசயமே. அந்த கண்ணுக்குத்தெரியாத இணைப்பை உறுதிபடுத்த வேண்டியதுதான் மத்திய அரசாங்கத்தின் கடமை. கூட்டணி தர்மம் என்னும் நிர்பந்தத்தில் ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊமையாய் இருப்பதற்குப்பதில் , இதுவரை அடித்த கொள்ளையோடு இவர்கள் ஒதுங்கிவிட்டு வேறு  ஒரு நல்ல தலைமை வர வழிவிட்டால் நன்றாக இருக்கும்.( பகல்கனவு )

எது எப்படியோ போய்க்கொண்டிருக்க நமது தமிழ்நாட்டிலோ மதச்சார்பின்மையானது சிறந்த அளவில் பேணிக் காக்கப்படுகிறது. எப்படியெனில் , கிருஸ்துமஸ் மற்றும் பிற இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும்  முதுபெரும் கலைஞர் தீபாவளிக்கு மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார். ஏனென்றால் இந்துக்கள் காட்டுமிராண்டிகள்.இந்துப் பண்டிகைகள் மூடநம்பிக்கைகள். ஆனால் பாருங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று மற்ற தொலைக்காட்சிகள் சிறப்புநிகழ்ச்சிகள் மூலம் காசு அள்ளிக்கொண்டிருக்கும் வேளையில் கலைஞரின் தொலைகாட்சி மட்டும் ஏன் வருமானம் இழக்கவேண்டும் ? விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் அங்கே மதச்சார்பின்மை பேணிக்காக்கப்படும் .ஆக பிள்ளையார் வேண்டாம் ஆனால் அவர் பிறந்த நாளில் விளம்பர வருமானம் வேண்டும். இந்த பிழைப்பிற்கு ஒரு நாலு பேரிடம் .............. வாங்கி ......... ஹ்ம்ம் இதை எப்படி என்கையால் எழுதுவது ? இவர்கள்தான் இந்திய ஒருமைப் பாட்டினைக் கட்டிக் காப்பாற்றும் மிகப்பெரிய தூண்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை பாகிஸ்தானோ சீனாவோ இலங்கையோ அல்ல. மாறாக தான் ஒரு வல்லரசு என்னும் எண்ணமே இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை.  இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட குடிநீரோ , தரமான சாலை வசதியோ , தடையில்லா மின்சாரமோ அனைவருக்கும் கிடைப்பதில்லை.இவ்வளவு ஏன் நல்ல பொதுக் கழிப்பறை வசதிகள் நாட்டிலேயே கிடையாது எனினும் நம் வல்லரசு இந்தியாவோ தள்ளாடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த 10 பில்லியன் டாலர்கள் வழங்கப்போவதாகப்   படித்து மனம் அதிர்ந்தேன்.மேலும் தமிழ் நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கடுமையான  மின்வெட்டுப் பிரச்சனை நிலவி வரும்போது பாகிஸ்தானுக்கு 5000  மெகா வாட் மின்சாரம் வழங்கப்போவதாக திருவாளர் மன்மோகன் சிங் சில வாரங்களுக்கு முன்  மேலும் ஒரு அதிர்ச்சி அளித்தார். இந்தமாதிரி பெருமைக்குப் பி  தின்னும் போக்கினை நமது அரசாங்கம் என்று மாற்றுமோ தெரியவில்லை.

இப்போதுதான் 2G ஊழல் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி எனும் இலக்கினை நிர்ணயம் செய்து சிலவருடங்கள் ஆகவில்லை, வந்தாயிற்று சுரங்க ஊழல் முறைகேடுகள் ஒரு லட்சத்து எண்பத்து மூன்றாயிரம் கோடிகள். ஆஹா அருமை.
இந்தியாவில் நிகழும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. இவற்றிற்கு எதிராகப் போராடிய அண்ணா ஹசாரே வை   
ஊடகங்களே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டன. சோனியா மன்மோகன்சிங் , ப சிதம்பரம், சுரேஷ் கல்மாடி, சரத் பவார், நாராயண சாமி  போன்ற அப்பழுக்கில்லாத தலைவர்கள் இருக்கும்போது ஊழலாவது ஒன்றாவது ? அண்ணா ஹசாரே ஒரு விளம்பரப்பிரியர் என்றெல்லாம் எழுதிய  என்வழி போன்ற இணைய தளங்கள் தள்ளாத வயதிலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அந்த விவசாயி ஹசாரே போராடுவது அவரை எதிர்க்கும் ஆட்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொள்ளவே இல்லை. 


காந்திய வழி நடப்பதாகக் கூறிக்கொள்ளும்  காங்கிரஸ் அரசு , காந்தியின் ஆயுதமான உண்ணாவிரதத்தை மயிருக்கும் சமானமாக மதிக்கவில்லை. இடிந்தகரையில் கூடங்குளம் அணுமின் நிலையத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திய வழியில் போராடிய மக்களை எக்கேடோ கேட்டு செத்துத் தொலையுங்கள் என்று கண்டு கொள்ளாமல் விட்ட தருணம் இந்தியாவில் ஜனநாயகம் என்ற விழுமியத்தின் இறுதி மூச்சினை நிப்பாட்டிய தருணம்.
மொத்த இந்திய ஊடகங்களும் ஆரம்ப கட்டப் பரபரப்புக்குப்பின் தற்போதைய நிலைமை என்ன ஏது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தவில்லை. 
தமிழக மக்களுக்கு கதிர்வீச்சினால் கல்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களில் மரபணுக் குறைபாடுகள் அதிகமுள்ள குழந்தைகள் பிறப்பது பற்றிக் கவலையில்லை. நாளை நம்முடைய பிள்ளைகள் அவ்வாறு பிறக்கும் என்பதைப் பற்றிய கவலை இல்லை. நமக்கு இப்போதைக்கு வேண்டியது மின்சாரம் , கள்ள உறவினை சித்தரிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் , ஐ பி எல் ,டாஸ்மாக்  மது.


கேரளாவிற்கு தன் மாநிலத்தில் அணுமின் நிலையம் வேண்டாம் ஆனால் கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வேண்டும். பிறமாநில செய்திகள் கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஒரு மக்கள்விரோத போராட்டமாகவே பார்க்கின்றன. இப்படி மொழியால் , கலாச்சாரத்தால் இன்னும் பலவற்றாலும் வேறுபட்டுக் கிடக்கும் இந்தியா மேலும் மேலும் சீரழியும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. எனக்கு தேசப்பற்று ஒரு புண்ணாக்கும் கிடையாது.

இங்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்திருப்பதால் நான் கண்மூடித்தனமான  பிஜேபி ஆதரவாளர் என்று நினைக்க  வேண்டாம். அவர்களும் காங்கிரசுக்கு சளைத்தவர்கள் இல்லை. என்ன ஒன்று அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பிலும் அடி பின்னி எடுத்து விட்டார்கள் (கர்நாடகா) ஆனால் காங்கிரசை விட சற்றேனும் மேம்பட்ட  அரசியல் நடத்துவார்கள் என்றே நம்புகிறேன் .இந்தியாவின் இன்றைய இழிநிலையைப் போக்க நமக்குத் தேவை ஒரு சர்தார் வல்லபாய் படேல். மீண்டும் ஒரு குஜராத்தி (மோடி) வந்தால் நிலைமை மேம்படும் என்று எண்ணுகிறேன்.

Sunday, December 12, 2010

வலைப்பதிவுலகின் எழுத்து நடை ஒரு பார்வை

வலைப்பூக்களில் மொழிநடையை மூன்று  வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று, தேர்ந்த இலக்கியவாதியின் நடையைப் பின்பற்றுதல் இதில் பல சிக்கல்கள் உள்ளன.எந்தவகையான ஆளுமையைப் பின்பற்றி நம் மொழிநடையை அமைத்துக்கொள்வது என்பது முதல் விஷயம்.
அதிலும் பார்த்தோமானால் இன்றைய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் மற்று சாரு நிவேதிதா இருவரின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்.
முன்னவரைப் பின்பற்றுபவர்கள் அனைத்து வார்த்தைகளையும்
  தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று படாத பாடு படுத்திவிடுவர்.மிக எளிய வார்த்தைகளையும் சற்று வேறுவிதமாகக் கூற முற்படுவர்.
புறவயமாக சிந்தித்தல் , அகவயமான எண்ணங்கள் , பொதுவாக நான் அவதானித்த வகையில் , மேலதிக தகவல்கள் என்பன போன்ற வார்த்தைகளை
  புழக்கத்தில் விட்டு சற்றே ஒரு சிற்றிலக்கிய ஒப்பனை செய்வது ஒருவகை.
இலங்கையில் யுத்தம் உக்கிரமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நமது நாளிதழ்கள் புதிதாகக் கொண்டுவந்த வார்த்தைகளே மேலதிகம், பாரிய யுத்தம், காணொளி, சமர் என்பன போன்ற
  நற்றமிழ் வார்த்தைகள். இவற்றை போர் தமிழ்நாட்டுக்கு அளித்த கொடையாகக் கொள்ளலாம்.
வலைப்பதிவர்கள் இவ்வாறான வார்த்தைகளை அதிகம்  புழக்கத்தில் விட்டு தங்களை சற்றே வேறுபடுத்திக் காட்ட முயல்வர்.
பார்த்தீர்களா நான் ஒரு புதிய கலைச்சொல்லை தமிழுக்குத்
   தந்துவிட்டேன் என்பதான கர்வம் அது.இதில் ஒன்றும் தவறில்லை என்றாலும் அதனைப் படிக்கும்போது இயல்புக்கு மாறான ஒரு எண்ணம் நம்முள் எழும்பும். ஆனால் காலப்போக்கில் இச்சொற்களை நாம் படிக்கப் படிக்க மெல்ல நம்முள் ஒரு இயல்பான சொல்லாக அது உருமாறும் என்பது என் எண்ணம். இது ஆரோக்கியமான ஒன்றாகும்.
ஒருவனின் அன்றாட வாழ்க்கைக்கு அவன் ஈட்டும் பொருள் பற்றிக் குறிப்பிடும்போது இப்போதெல்லாம் அனைவரும் " வாழ்வியல் ஆதாரம் " என்னும் வார்த்தையை பயன்படுத்துகின்றனர். இயல் என்று முடியும் எதுவும் அதுபற்றிய படிப்பினைக் குறிப்பதாகும். அறிவியல் , பொறியியல் என்பன போன்ற வார்த்தைகளில் பொறியியல் என்பது , பொறிகள் குறித்த படிப்பு. எனும்போது வாழ்க்கை குறித்த படிப்பு வாழ்வியல் ஆகலாம். ஆங்கிலத்தில் "logy" என்று  முடியும்  விதமாய்  அமையும்  சொற்கள் இதற்கு சமமாக வரும்.
இவ்வாறாக வாழ்வில் ஆதாரம் எனும் சொல் சரியானதல்ல. விஜய் டிவி யின் நீயா நானா கோபிநாத் இன்னுமே இவ்வாறாகக் கூறுகிறார். நானும் அவ்வாறே தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன். குரு ஜெயமோகன்தான் இதுகுறித்து தெளிவுபடுத்தினார். எதோ ஒருவகையில் புதிய தமிழ் சொற்கள் பயன்பாட்டுக்கு வருவதில் மகிழ்ச்சியே.
உதாரணமாக "RESOLUTION" எனும் சொல் அதாவது செல் போன் திரையின் காட்சித்  தெளிவினைக் குறிக்கவும் , டிஜிட்டல் கேமராவின் காட்சித் தெளிவினைக் குறிக்கவும் உதவும் இச்சொல்லானது  தமிழில் "பிரிதிறன்" என்று அறியப்படுகிறது. காணொளி எனும் வார்த்தை போல இதுவும் ஈழப் போர் காலங்களில் என் அறிவுக்கு எட்டிய சொல்லாகும்.தமிழ் நாட்டில் மும்மொழி கரைத்துக் குடித்த செம்மொழி அறிஞரால் கூட இதுபோன்ற ஒன்றினை அளித்திருக்க முடியாது என்பது என் எண்ணம்.
இரண்டாவதாக  ஒரு முக்கியமான மொழிநடை புரட்சி எழுத்து. புரட்சி என்னும் சொல்லே தமிழ்நாட்டில் இப்போது ஒரு அர்த்தம் இழந்த சொல்லாகிற்று. போன தலைமுறையில் S.S.ராஜேந்தின் புரட்சி நடிகர்.அவர் புரட்சிகரமான வசனங்கள் பேசி நடித்தார். இப்போது புரட்சித்  தளபதி விஷால். விஷால் என்ன புரட்சி செய்து விட்டார் ? ஒன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறார். சற்றே வித்தியாசம் காட்ட வேண்டுமென்றால் அதிகபட்சமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறார்.இவ்வாறாக புரட்டி எடுப்பவர் எல்லாம் புரட்சி செய்பவர் என்றால் ஒவ்வொரு உணவகத்திலும் தோசை பரோட்டாவை புரட்டிப் போடும் மாஸ்டர்களெல்லாம்,இனி புரட்சி மாஸ்டர் என்று அழைக்கப் படவேண்டும்.  
பதிவுலகில் இவ்வாறான புரட்சி எழுத்துக்களை தொடர்ந்து நிறுவிக்கொண்டிருப்பவர் அன்பு அண்ணன் சாரு நிவேதிதாதான்.அப்பப்பப்பா என்ன ஒரு புரட்சி.அதாவது  கெட்ட வார்த்தைகளை நேரடியாக எழுதினால் அதுதான் புரட்சி. இன்னும் சில பெண்ணியக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.பெண்களின் அவையங்களை கொச்சையாகக் கூறுதல் அவர்கள் பொறுத்த மட்டில் புரட்சி.அவ்வார்த்தைகளை நான் இங்கு எழுதினால் நானும் ஒரு புரட்சி எழுத்தாளனே .
உலகின் ஆதிசெயலை ஆண் பெண் பந்தத்தை பச்சையாகக் கூறினால் அதுதான் புரட்சி. பதிவுலகின் கட்டற்ற சுதந்திரத்தை ஆக்கப்பூர்வமாக அன்றி, படிக்கும் வாசகனுக்கு ஒரு அதிர்ச்சி அளிக்க மட்டுமே பான்படுத்துவதே இன்றைய நிலையில் ஒரு புரட்சியாகிப் போனது.
இன்னும் ஒருவகையான மொழிநடை இருக்கிறது.அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டி கடைசியில் தன்  கருத்தினை ஒரு வரியில் கூறுவது. இது ஒரு சுலபமான வழி என்றாலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இது ஒருவகையில் பயனுள்ளாதாக இருக்கிறது.
மேற்கூறிய வகைகளெல்லாம் பதிவர்களால் ஒரு 15 சதவிகிதம் பயன்படுத்தப் படுகிறது என்று கொள்ளலாம். எனில் பெரும்பான்மை வகிப்பது " வம்பு" எனும் மொழிநடையே. சில முக்கியமான தலைப்புக்கள் சினிமாவில் MGR  சிவாஜி , ரஜினி கமல்,அஜித் விஜய்,சிம்பு தனுஷ் , இளையராஜா ரஹ்மான் . இதில் நானும் விதிவிலக்கல்ல.எழுத்துலகம் என்றால் பெரும்பாலான  வம்புகளின் தலைப்பு "ஜெயமோகன் சாரு நிவேதிதா" இதுவே  மூன்றாவது நடை.

ஆரம்பகால பதிவர்கள் அனைவரும் இது போன்ற மொழிநடைகளைக் கடந்தே வந்திருப்பர்.அபூர்வமாகவே தனக்கென ஒரு நடையை  முதலிலேயே அமைத்துக் கொண்டவர்கள் உண்டு.பெரும்பாலும் பதிவர்களாகிய நாமனைவருமே சுயபுராண பிதற்றல்களில் ஆரம்பித்திருப்போம்.அப்புறமாக் கொஞ்சம் நகைச்சுவையாக எழுத முயன்றிருப்போம் , பெரும்பாலும் வடிவேலு டயலாக்குகள் கைகொடுக்கும்.அப்புறம் விதவிதமான சொல்லாடல்கள் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி நமக்கு நாமே பாராட்டி மகிழ்ந்துகொள்வோம். இவ்வாறாக நம் சரக்கு எல்லாம் தீர்ந்து போய் புதிதாக நாம் ஒன்றை உருவாக்க முயலும்போதுதான் நமக்கான மொழிநடையை நாம் அறிந்துகொள்ள முடியும்.இந்த நிலைகள் எல்லாம் கடந்து போய் தற்போது எதை எழுதலாம் என்ற குழப்பத்தின் போதுதான் ஏன் இந்த மொழிநடை பற்றி எழுதக் கூடாது என்ற எண்ணம் வந்தது . எழுதிவிட்டேன்.  

Thursday, July 29, 2010

தூர்தர்ஷன் சில நினைவுகள்

நிகழ்காலத்தில் கடந்த நாட்களை நினைத்துக்கொண்டே இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பார்கள். ஆனாலும், பால்யத்தின் நினைவுகளை மனம் மீண்டும் மீண்டும் அசை போட்டுக்கொண்டே இருக்கிறது.இன்றைய சூழலில் ஒருவருடைய வாழ்வின் மிகச்சிறந்த நாட்கள் தம் 15 ஆம் வயதுக்குள்தான் நிகழ்கின்றன என்பது என் எண்ணம்.அதன் பிறகு அவனுக்கு வாழ்வைப்பற்றிய பயமுறுத்தல்களே ஊட்டப்படுகின்றன . பத்தாவது படிக்கும்போது எப்படியாவாது பத்தாவது நல்லா படிச்சீங்கன்னா அப்புறம் கவலை இல்லை என்றனர் ஆசிரியர்கள். தமிழ் வாத்தியார் சுப்பிரமணியன் சொன்னார், பன்னண்டாங் கிளாஸ்ல நல்லா படிச்சு டாக்டருக்கோ இஞ்சினீரிங்குக்கோ போனீங்கன்னா பிறகு லைப்ல கவலை இல்லடே, எனக்கு தெரிஞ்சு ஏழெட்டு வருசமா டாக்டர் படிக்கவன் இருக்கான், என்றார்.கல்லூரியில் சேர்ந்த போது இந்த நாலு வர்ஷமும் நல்லா படிச்சு நல்லா வேலைக்கு போயிட்டா அப்புறம் உங்கள யாரு படிக்கச் சொல்லப் போறாங்க? அப்புறம் நீங்கதான் ராஜா என்றனர். இப்படியாக இலக்குகள் மாறியதே தவிர பயமுறுத்தல்கள் குறையவே இல்லை.
வேலையிலும் கூட இப்போ ஹார்ட் வொர்க் பண்ணினீங்கன்னா அப்புறம் ஹாயா இருக்கலாம் என்று வேலைத் திணிப்புகள்.அப்படியென்றால் எப்பொழுதுதான் ஒரு மனிதன் கவலையின்றி வாழ்வது? பால்யத்தின் நினைவுகள் மட்டுமே எண்ணிப் பார்க்கும்தோறும் மகிழ்ச்சியை அளிக்க வல்லது. சிலருக்கு கசப்பான அனுபவங்களும் இருக்கலாம் .பொதுவில் மகிழ்ச்சியே அதிகம் இருக்கும் என்று நம்புகிறேன்.சில நாட்களுக்கு முன்னால் "போயின அந்நாட்கள்" "gone are the days" என்று ஒரு மின்னஞ்சல் வந்தது.

அந்த மின்னஞ்சலில் என்னுடைய சிறுவயதின் காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவை இடம் பெற்றிருந்தன. அப்பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அடையாளமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்தன.

கீரிப்பாறையில் 1988 இல் டயனோரா வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினோம். ஆன்டனா, டிவி பூஸ்டர், ஆன்டனா பூஸ்டர் ,ஸ்டெபிலைசர் என்று 12 ஆயிரம் ஆனதாக அப்பா சொன்னார்.எட்டு சானல்களுக்கு தனித்தனி பட்டன்கள் இருக்கும்.மலைப்பகுதி ஆனதால் டிவி புள்ளி புள்ளியாகத் தெரியும்.பெரும்பாலும் பகல் நேரங்களின் திருவனந்தபுரம் மண்டல ஒளிபரப்பின் கதகளி மட்டுமே தெரியும்.நான் சட்டை செய்ததில்லை. எனக்கு விளையாட காடும் ஓடைகளும் இருந்தன.முழங்கால் வரை சருகுகள் மூடிய ரப்பர் காடுகளில் பயமின்றித் திரிந்திருக்கிறேன்.
ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் எங்கள் வீட்டில் ராமாயணம் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் கூடிவிடும். மலையாளம் கலந்த தமிழ் தவிர வேறு மொழிகளே அறிந்திருக்காத மக்கள் ராமனையும் சீதாவையும் தந்திரக்காட்சிகளையும் பார்த்து மகிழ்வார்கள்.ஒன்றும் புரியாததால் நான் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டேன்.



 
 
 
 
 
 
 
 
 
 
 
   
 
 
கீரிப்பாறையில் ஒருநாளும் டிவியில் வண்ணம்  தெரிந்ததில்லை. அப்போது VCR எனப்படும் டெக் பிரபலமாகத் தொடங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் பள்ளி விடுமுறை சமயங்களில் ஐந்தாறு குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து டெக் மற்றும் கேசட்டுகள் வாடகைக்கு எடுத்து படங்கள் பாப்போம்.அப்போது மட்டுமே கலரில் தெரியும் டிவியை மிகுந்த விருப்பத்துடன் பாப்போம்.
 
அங்கிருந்து அப்பாவுக்கு அருப்புக்கோட்டைக்கு மாற்றலாகியவுடன் முதன் முதலில் டிவி கலரில் தெரிய ஆரம்பித்தது. கொடைக்கானல் டிவி நிலையம் அருகில் இருந்ததால். துல்லியமான வண்ணத்தில் டிவி பார்ப்பதே அலாதியானது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நான் பார்த்த முதல் திரைப்படம் "வெற்றிக் கரங்கள்".அதுவும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகப் போகும் படம் பற்றி புதன் கிழமை எதிரொலி என்னும் நிகழ்ச்சியில் வாசகர் கடிதம் படித்துக்கொண்டே இருக்கும் போது கடைசியாகச் சொல்வார்கள்.அந்த அறிவிப்பிற்காக முழு நிகழ்ச்சியின் மொக்கைகளையும் பாப்போம்.
தூர்தர்ஷன் மட்டுமே தெரிந்த அந்த நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகள் மிகுந்த எதிர்பார்ப்பினை அளித்தன. இரண்டு அரைவட்ட வடிவங்கள் "சங்கீத ஸ்வரங்கள்" என்னும் அழகன் படப் பாடலில் இறுதியில் வரும் ஓசையோடு சுழலுவதில் ஆரம்பிக்கும் அன்றைய ஞாயிறின் பொழுது.















அப்பா காலையில் ரங்கோலி பார்க்க ஆரம்பிக்கும் போது அரைத் தூக்கத்திலேயே அந்நாளைய ஹிந்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விழிக்க மனமின்றி படுத்திருப்பேன்.
கார்ட்டூன் படங்கள் பார்க்க அவ்வளாக வாய்ப்பில்லாத அச்சமயங்களில் ஜங்கிள் புக் என்னுடைய விருப்பமான நிகழ்ச்சி.மோக்லி,பாலு,பஹீரா, மோக்லியின் ஓநாய் அம்மா, கண்ணைக்கவரும் வண்ணத்தில் நீலவானம் , நட்சத்திரங்கள் , ஷேர்கான் வில்லன் புலி,மோக்லியின் பூமாராங் என்று பலவுமாகச் சேர்ந்து என்னை அந்த உலகத்தினுள்ளே அழைத்துச் சென்றுவிடும்.





அப்புறம் ஜங்கிள் புக் முடிந்தவுடன் டக் டேல்ஸ் , டேல்ஸ் பின் என்று மனம் மகிழும் கார்டூன்கள் பார்ப்பேன். 

 

அதன் பிறகு வந்தது சந்திர காந்தா. மிகப் பெரும் செலவில் உருவாக்கப் பட்ட ஒரு ஹிந்தி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர். சந்திரகாந்தாவில் எப்போதும் இடி இடித்துக் கொண்டே இருக்கும். ராஜா அரண்மனையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல தொடர் முழுவதும் நடந்து கொண்டே இருப்பார்.

மகராஜா ஷிவ்தத்,குரூர் சிங் ,சனி, என்று பல கதாபாத்திரங்கள். யக்கு கதாபாத்திரம் எங்களிடையே மிகப் பிரபலம். தலையில் அடிபட்டால் மூளை குழம்பி முட்டாள் போல நடந்துகொள்ளும் காமடி வில்லன் கதாபாத்திரம் அது.


அப்புறம் அந்த தொடர் இடையிலேயே நிறுத்தப் பட்டது. பின்பு மகாபாராதம் ஒளிபரப்பானது,
1992 இல் தூர்தர்ஷனில் சில வெளிநாட்டுத் தொடர்கள் இடம்பெற்றன.ஓஷீன் எனும் ஜப்பானியத் தொடர், ஒரு ஏழை அனாதைப் பெண் ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருப்பாள்.


அவள் படும் கஷ்டங்கள், அவள் அவற்றை சமாளிக்கும் விதம் என்று கதை செல்லும். மொழி புரியாமலேயே கண்களில் நீர் வரவழைத்த நிகழ்ச்சி அது .மொழி அப்போது ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை.கேட்டலிலும் பார்த்தாலே உவகை அளிப்பதாக இருந்தது. ஜப்பானின் பனிக்காலம், கூசும் பனியின் ஒளி, என்ற அந்த காட்சிப் பிம்பம் இன்னும் கண்ணில் நிற்கிறது.
அப்புறம் ஜையண்ட் ரோபோ என்னும் குழந்தைகள் நிகழ்ச்சி , ஒரு ரோபோவுடன் சிறுவனின் நட்பு பற்றிய தொடர். ஒரு எதிரி ரோபோ நகரத்தை அழிக்க முயலும்போது ஜையண்ட் ரோபோவும் சிறுவனும் சேர்ந்து காப்பாற்றுவார்கள். சிறுவன் ஆபத்து நேரங்களில் கையில் கட்டியிருக்கும் வாட்ச் மூலம் ரோபோவை உதவிக்கு அழைப்பான். அதில் சிறுவன் ரோபோவின் கரங்களில் உட்கார்ந்து ரோபோவுடன் சேர்ந்து பறப்பான்.


இதே போன்று ஒரு ரோபோ கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.கடைசியில் நல்ல ரோபோவை கேட்ட ரோபோ அடித்து வீழ்த்தும்போது கமான் ஜையண்ட் ரோபோ கமான் என்று சிறுவனுடன் சேர்ந்து நானும் கதறியிருக்கிறேன்.
ஸ்டிரீட் ஹாக் (Street Hawk) என்னும் அதிரடித்தொடர்,ஒரு மோட்டார் பைக் சாகச வீரன் தன் பிரத்யேக பைக்குடன் செய்யும் அதிரடி சாகசங்கள். 

ஜேம்ஸ் பாண்டின் கார் போல இதில் ஹீரோவுக்கு பைக். பைக் பறக்கும், அதில் துப்பாக்கியிருக்கும் இன்னும் பல சிறப்பம்சங்கள் இருக்கும். எனினும் பைக்கில் உட்காந்திருக்கும்போது மட்டும்தான் ஹீரோ பலமுடன் இருப்பான். மற்ற சமயங்களில் அடிவாங்குவான்.

ஞாயிறு மாலை நாலேகால் மணியிலிருந்து நாலரை மணிவரை விளம்பரங்கள் ஒளிபரப்புவார்கள். கபில் தேவ் வரும் பூஸ்ட் விளம்பரம் சன் பிளவர் எண்ணையின் மிகப் பெரிய பூரிகள் வரும் விளம்பரம்,நிஜாம் பாக்கு விளம்பரம் என ஒரு கதம்பமாக அந்த பதினைந்து நிமிடங்களும் கழியும்.பின்பு இப்போது போல உலகத் தொலைகாட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்கிற அறைகூவல்கள் எதுவுமின்றி ஒரு படம் ஒளிபரப்புவார்கள். இடையில் திரைப்படம் தொடர்கிறது என்று நீளத்தைக் குறைக்கும் வேலைகள் நடக்கும்.

எப்போதாவது தலைவர்கள் மரணம் நிகழ்ந்தால் அன்று படம் கோவிந்தாதான். காலையிலிருந்து ஒரு கிழவர் "டொயிங் டொயிங் "என்று வீணை போல ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு முகாரியில் மூக்கைச் சீந்திக்கொண்டு இருப்பார். சரி எப்படியும் நான்கு மணிக்குள் இந்த இழுவை முடிந்துவிடும் என்று பார்த்தால் நான்குமணிக்கு மேலாகவும் தொடர்ந்து கொண்டிருக்கும். சரி நாலரை மணி ஆகவில்லையே என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டால் நாலரைக்கும் அவரே இம்சிப்பார்.லேசாக நம்பிக்கை இழந்தாலும் ஐந்து மணிக்கு ஒருவேளை படம் போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு ஐந்து மணிக்கு வந்து பார்த்தால் கிழவர் இன்னும் உற்சாகமாக முகாரியில் ஒப்பாரி நிகழ்த்திக் கொண்டிருப்பார். அப்படியே மனம் துவண்டு விடும். தலைவர் இறந்த துக்கத்தை விட படத்தை இழந்த எரிச்சலே அதிகம் இருக்கும்.
இதற்கிடையில் 1993 இல் சன் டிவி தனது ஒளிபரப்பைத் தொடங்கியது.பலரும் கால மாற்றத்திற்கேற்ப கேபிள் டிவி இணைப்பினைப் பெற்று பல டிவி சானல்களை பார்க்கத் தொடங்கினார்கள் .இருந்தாலும் தூர்தர்ஷன் தொடர்ந்து போட்டியில் இருந்தது.

பின்பு ஸ்ரீ கிருஷ்ணா, ஓம் நமச்சிவாயா, ஜெய் ஹனுமான், அலிப் லைலா என்று மந்திர தந்திர மாயக் காட்சிகள் நிறைந்த தொடர்களை ஒளிபரப்பி பார்வையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டது. 

 

தொண்ணூறுகளின் இறுதியில் சன் டிவியில் மர்மதேசம் மிகப் பெரும் பிரபலமாக விளங்கிய போது பள்ளியில் நண்பர்கள் இந்தவாரம் ராஜேந்திரன் என்ன பண்ணினான் தெரியுமா என்று பீற்றிக்கொள்வார்கள்.நாங்கள் பதிலுக்கு இந்த வாரம் ஜெய் ஹனுமான்ல என்ன ஆச்சு தெரியுமா என்று தூர்தர்ஷனை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
மிலே சுரு மேரா தும்ஹாரா என்ற பாடல் , ஒளியும் ஒலியும் இவையெல்லாம் தூர்தர்ஷனின் அடையாளச்சின்னங்கள்.


சுரபி , "Turning Point " போன்ற பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கிய தூர்தர்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக சோகை இழந்தது. (சித்தார்த் ஹக்கும் ரேணுகா சஹானேயும் நிகழ்ச்சியை வழங்கும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும்.இன்று மானாட மயிலாட கலா மாஸ்டர் கெமிஸ்ட்ரி கமெண்டுகள் கேட்கும்போது காதில் ரத்தம் வரும்.)


 












பல தமிழ் ஆங்கில சானல்களின் வரவால் தூர்தர்ஷன் காணாமல் போயிற்று. வெகுநாட்களுக்குப் பிறகு கல்லூரியில் விடுதியில் தூர்தர்ஷன் மட்டும் தெரியும். அப்போது வேறு வழியில்லாமல் பார்க்க நேர்ந்தது.
கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார். எல்லா நவீன தொழில்நுட்ப வசதிகளை வைத்துக்கொண்டிருந்தும் ஏன் தூர்தர்ஷன் தள்ளாடுகிறது என்று புரியவில்லை என்று. இனிமேல் அது மீண்டெழ சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
எப்படிஎன்றாலும் தற்போது 25 வயதை ஒத்தவர்களுக்கு பல இனிய நினைவுகளை அளித்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

Wednesday, July 7, 2010

ஜெயமோகன் & ஜேம்ஸ் கேமரூன் , பனிமனிதனும் அவதாரும்

சிலமாதங்களுக்கு முன்பு வாங்கிய ஜெயமோகனின் பனிமனிதன் குழந்தைகளுக்கான நெடுங்கதை படித்தேன். முன்னுரையிலேயே குறிப்பிட்டு விடுகிறார். இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல பெரியவர்களுக்கானதும்தான் என்று.சின்னச் சின்ன வாக்கியங்களில் முழு நாவலும் கூடவே பற்பல அறிவியல் தகவல்களும்.


சின்ன வயதில் வெள்ளிக்கிழமைகளில் தினமலருடன் வரும் சிறுவர்மலரைக் கைப்பற்ற எனக்கும் அக்காவுக்கும் பலத்த போட்டி நடக்கும்.பெரும்பாலும் காலையில் விழித்தவுடன் ஓடோடிச்சென்று புத்தகத்தைக் கைப்பற்றி மெத்தைக்கு அடியில், ஸ்டோர் ரூமில், கிரைண்டருக்கு அடியில் என அவள் யூகிக்காவண்ணம் பல இடங்களில் ஒளித்துவைத்துவிட்டு பள்ளிக்கு செல்வேன்.மதிய உணவு இடைவேளை மணி அடித்ததும் வகுப்பிலிருந்து சிட்டெனப் பறந்து காட்டுவழிப் பாதையில் ஓடி 2 நிமிடங்களில் வீட்டை அடைந்து புத்தகத்தை படித்தால்தான் திருப்தி.பின்னாளில் அம்மாவிடம் இது குறித்து முறையிட்டு எனக்கு அடி வாங்கித்தந்தாள் அக்கா.அந்நாட்களில் அந்த அளவு வெறியுடன் சிறுவர்மலர் ராணி காமிக்ஸ் போன்றவற்றை நேசித்திருக்கிறேன்.எண்ணற்ற புத்தகங்களும் என்னிடம் இருந்தன.நினைவு தெரிந்து எழுத்துக்கூட்டி வாய்விட்டுப் படித்த ஞாபகம் இல்லை எனக்கு.வெகு சிறிய வயதிலேய மனதுக்குள் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டோம் நானும் அக்காவும்.கல்லூரியில் என்னுடன் படித்த சிலபேர் எழுத்துக்கூட்டி தமிழ் வாசித்ததைக் கண்டபோது என்னுள் அபாரமான நம்பிக்கை எழுந்தது செம்மொழி செத்த மொழியாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என.

நாவல் இமயமலை லடாக் பகுதிகளில் காணப்படும் மிகப்பெரிய காலடித்தடங்கள் குறித்த இராணுவத்தினரின் ஆய்வு பற்றியது.மேஜர் பாண்டியன் என்பவன் அக்காலடித்தடங்கள் குறித்து ஆராயப் போகிறான்.கூடவே பௌத்த மதம் குறித்த விஷயங்களும் வருகின்றன. வாழும் புத்தரைத்தேர்வு செய்வதற்காகன தேடலும் இடம்பெறுகிறது.யதி என்னும் பனி மனிதனைத் தேடும் ஒரு சாகசப் பயணம் தான் நாவல். மேலும் படிக்க ஆசையாக இருந்தால் udumalai.com இல் வாங்கிப் படிக்கவும்.

அதுவரை சாதாரணமாகப் படித்துக் கொண்டிருந்த நான் பனிமனிதனை அவர்கள் சந்திக்க ஆரம்பித்த இடத்தில் பனிமனிதர்கள் வாழும் இடம் பற்றிய வர்ணனைகளில் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். பல இடங்கள் எனக்கு அவதார் திரைப் படத்தை நினைவுபடுத்தின.நாவல் எழுதப் பட்டது 1999 ஆம் ஆண்டு.அவதார் ஜேம்ஸ் கேமரூனால்  14 ஆண்டுகளாக மெருகேற்றப் பட்டது என படித்துள்ளேன். கண்டிப்பாக ஜெயமோகனும் ஜேம்ஸ் கேமரூனும்   சந்தித்திருக்கும் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது மிகுந்த வியப்புக்குரிய ஒன்றுதான்.

சில உதாரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் படித்துவிட்டு நீங்களே கூறுங்கள்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும் )

31 ஆம் அத்தியாயத்தில் வரும் வரிகள்

// அங்கு நின்ற ஒவ்வொரு மரமும் மிகப் பெரியவையாக இருந்தன.நமது ஊரில் உள்ள ஒரு மிகப் பெரிய மரத்தின் அடிமரம் அளவுக்கு அந்த மரங்களின் கிளைகள் காணப்பட்டன.//


 
 
 
 
 
 
 
 
 
 
 
// ஒரு இடத்தில் ஏராளமான நாய்கள் மரங்கள் மீது துள்ளித்துள்ளி விளையாடின.அவற்றுக்கு ஆடுகள் போல கொம்புகள் இருந்தன.அவற்றின் கால்களும் குரங்குக் கால்கள் மாதிரி இருந்தன //
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எவ்வளவு கூர்மையான விவரிப்பு. கூடவே படத்தில் நாய்களின் கால்களைப் பாருங்கள்.எப்படி இருவரும் இது பற்றி யோசித்தனர் என்று வியப்பு மேலோங்குகிறது.
 
அத்தியாயம் 35 // மிகப்பெரிய நீல நிற மின்மினிகள் கூட்டம் கூட்டமாக எழுந்து பறந்தன.ஒவ்வொரு மின்மினியும் ஒரு ஜீரோ வாட் பல்ப் அளவுக்கு இருந்தது.//
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இவற்றிலும் பெரிய ஆச்சரியத்தைப் பாருங்கள்


அத்தியாயம் 34
//ஒவ்வொரு பனி மனிதனாக வந்து மேற்குத்திசை நோக்கி அமரத் தொடங்கினார்கள்.சற்று நேரத்தில் அங்கு ஏராளமான பனி மனிதர்கள் கூடி விட்டார்கள்.
"எப்படியும் இவை மூவாயிரத்துக்கு குறையாது" என்றார் டாக்டர்.
பனிமனிதர்கள் மறையும் சூரியனைப் பார்த்தபடி அமர்ந்தார்கள்.அவர்களுடைய முகமெல்லாம் சிவப்பாக அந்தியின் ஒளி பரவியது .
மிக மெதுவாக அவர்கள் பாட ஆரம்பித்தார்கள்.அது பாட்டு இல்லை வெறும் ரீங்காரம் மட்டும் தான்.ஆனால் அத்தனை பேரும்சேர்ந்து ஒரே குரலாக அதை எழுப்பினார்கள்.ஒரு குரல் கூட விலகவே இல்லை.//


அவதாரில் நாவிகளின் வாழ்க்கைக்கும் இயற்கைக்குமான நுண்ணிய பிணைப்பு, தங்கள் தெய்வம் ஏவாவிடம் வேண்டும்போது உட்கார்ந்து ஒத்த மனதுடன் வேண்டுதல் என பல நிகழ்வுகள் பனிமனிதன் கதையிலும் வந்துள்ளது.

என்னுள் எழுந்த வியப்பு இன்னும் அடங்கவே இல்லை. கிட்டத்தட்ட மனிதனால் எடுக்கப்படக்கூடிய சினிமாவின் எண்ணமுடியாத சாத்தியங்களைக் கடந்த படைப்பு அவதார் என்று சிலாகிக்கப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன்னரே படைக்கப்பட்ட படைப்பான பனிமனிதன் அவதாருடன் ஒரு வினோதமான தற்செயல் ஒத்தியல் நிகழ்வுதான்.

இதுகுறித்து நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதலாம் என்று எண்ணியிருந்தேன்.சில மாதங்கள் முன்பு வாசகர் கடிதம் ஒன்றில் நண்பர் ஒருவர் ஜெயமோகனிடம் தன் வியப்பை தெரிவித்திருந்தார்.எனினும் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள எண்ணியதன் விளைவே இப்பதிவு.






Monday, June 21, 2010

சாரு நிவேதிதாவை ஏன் நிராகரிக்க வேண்டும்?

முதலில் இந்தமாதிரியான ஒரு பதிவை எழுத நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன். பொதுவில் யாரையும் தூற்றி எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மெல்லிய பகடி என்றால் நலமே.அதுவே கடுமையான தாக்குதலே தொழில் என்றால் அது அருவருக்கத்தக்கது.எழுதுவதற்கு ஒன்றும் தோன்றவில்லை என்றால் எழுதாமல் வெறுமனே இருந்துவிடுதல் உத்தமம்.அப்படியாகப் பட்ட தூற்றுதலையே தொழிலாகக் கொண்ட நபர்தான் சாரு நிவேதிதா. இவருடைய முழுமுதற் தொழில் ஜெயமோகனை நேரடியாகத் தூற்றுவது ,இல்லாவிடில் பினாமி பெயரில் மறைமுகமாகத் தூற்றுவது.

சில வாரங்களுக்கு முன் சாரு தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு இணைப்பை அளித்திருந்தார்.என்னவென்று பார்த்தால் அறிவுபுத்திரன் @ ஸ்டீபன் மாணிக்கம் என்னும் நபரின் ஜெயமோகத் தாக்குதல்கள்.(arivuputhiran.blogspot.com என்னும் தளம் தற்போது நீக்கப்பட்டுவிட்டது).

மேற்கூறிய நபர் தனிமனிதத் தாக்குதல்களாக அடுக்கியிருந்தார். அதாவது ஜெயமோகன் ஒரு மனநிலை சரியில்லாதவர்.அவரே இதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பதே.

ஜெயமோகன் சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்து கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான நிலையையே இவ்வாறு சாரு அல்லது அவரது பினாமி குறிப்பிடுகிறார்.நிஜவாழ்வில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தடம் புரளும் எத்தனையோ பேர்களுக்கு மத்தியில் தன்னுடைய மன அழுத்தத்தின் மூலம் கொண்ட மன எழுச்சியை முறையாக இலக்கியத்தின்பால் திருப்பி உச்சம் அடைந்திருக்கும் ஜெயமோகன் மனநிலை சரியில்லாதவரா ? இல்லை அவரைத் தூற்றி யே புகழ் பெற நினைக்கும் சாரு போன்றவர்கள் மன நிலை சரியில்லாதவர்களா?

எனக்கு என்ன கோபம் என்றால் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி ஜெயமோகனைத் தாக்கி எழுதிவிட்டால் உடனே புகழ் பெறலாம் என்னும் வலைப்பதிவர்களின் குறுக்கு வழி யுக்தி குறித்ததே. நமக்கென ஒரு நடையை நாள்பட உருவாக்கிக்கொண்டால் தானாகப் புகழ் வரும் ,அன்றி எதிர்மறை அரசியல் புரிந்து புகழடைய நினைப்பது பேடித்தனம். நீ மட்டும் உத்தமனா இப்போது சாருவைத்தாக்கி எழுதுகிறாயே என்று கேள்வி எழலாம்.என்றாலும் குறுக்குவழியில் செல்ல நினைப்பவனின் யோக்கியத்தனத்தை யாராவது கூறியாகவேண்டுமே?

ஜெயமோகன் தன்னை ஒரு மனநோயாளி என்று ஒத்துக்கொண்டார் என்று கூறும் சாரு @ பினாமி நபர், சாரு தான் ஒரு " womanizer" என்று கூறிவிட்டு ஒரு குட்டிக்கரணம் அடித்து மறுத்தாரே இதை எந்தவிதத்தில் எடுத்துக் கொள்வது ?

ஜெயமோகன் மேல் வைக்கப்படும் மற்றுமொரு குற்றச்சாட்டு அவர் ஒரு இந்துத்வா ஆதரவாளர் என்பது. அவரது எழுத்துக்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும், அவர் கூற விரும்புவதன் சாராம்சம். எப்படி சாருவுக்கு தான் ஒரு " man of total contradictions" also "a womanizer" என்று கூற உரிமை இருக்கிறதோ அதேபோல் ஜெவுக்கும் தன் நிலைப்பாட்டைக் கூற விருப்பம் உள்ளது. இந்துமதம் என்பது ஒரு மதமே அல்ல, பண்டைய மக்களின் வாழ்க்கை நெறியின் தொகுப்பே இந்து மதமாக அறியப்படுகிறது என்ற உண்மை புரிந்திருந்தால் இந்துத்வா ஆதரவாளர் என்னும் கோஷம் வந்திருக்காது.

அப்படியெனில் சாரு நித்யானந்தாவை ஆதரித்தது , கண்மூடித்தனமாக புகழ் பாடியது எந்த விதத்தில் சேர்க்கலாம்? வாங்கிய காசுக்கு குரைத்துக் காட்டிய விசுவாசமோ?

ஜெயமோகனே பகடி என்னும்பெயரில் எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் கிண்டல் அடித்துள்ளார் என்று கேட்கலாம்.இதுபோன்ற மென்பகடியையே ஒத்துக் கொள்ள மறுக்கும் தமிழ்ச்சமூகம் மாறவேண்டியுள்ளது.நம்மில் எத்தனை பேர் எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மிமிக்ரி செய்து பகடி செய்கிறோம்? எத்தனை ஜோக்குகள் உருவாக்கியிருக்கிறோம் ? கலக்கப் போவது யாரு அசத்தப் போவது யாரு என்று நிகழ்சிகளைத் தடை செய்ய நம்மால் முடியுமா? ஆனால் அடிச்சா திருப்பி அடிக்கமாட்டான் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அடிக்கும் சட்டாம்பிள்ளைகளை எதைக் கொண்டு அடிக்கலாம்?

எந்த ஒரு எழுத்தாளனையும் வாசகர்கள் அந்தரங்க வாழ்க்கை கொண்டு எடைபோடுவதில்லை.மாறாக படைப்புகளின் ஆழம்தான் அவனின் அடையாளம்.அந்தவிதத்தில் ஜெயமோகன் சாருவைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்குகள் முன்னால் நிற்கிறார்.

கூர்ந்து கவனித்தால் சாருவின் மன ஆழத்திலிருக்கும் பொறாமைத்தீயே துவேஷ வார்த்தைகளாக வெளிவருகிறது.

எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்த ஒரு விஷயம்அறிவுபுத்திரன் வலைத்தளத்தில் பத்தில் ஒன்பது பேர் சாருவை நிராகாரித்து பின்னூட்டமிட்டுள்ளனர். வாசகர்கள் கொண்டாடும் எழுத்தாளர் நான் என்று கூறிக்கொள்ளும் சாருவிற்கு அந்தோ பரிதாபம் துணை வரக்கூட ஒரு பின்னூட்டமிடுபவர் இல்லை.மக்கள் அவரைப் பற்றி சரியாகப் புரிந்துள்ளனர் என்று எண்ணுகிறேன்.

மற்றபடி ஜெயமோகனின் படைப்புகளைக் குறித்து சாருவின் பினாமி குறை கூறியிருந்தார்.சரி அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம் .ஆனால் சாரு படைப்பிலக்கியத்தில் எத்தகைய சாதனை படைத்துவிட்டார் என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.

வெறும் சுய பீற்றல்கள், தம்பட்டம், நானொரு நல்லவன் வல்லவன் நாலும் தெரிந்தவன், ஒரு இடிதாங்கி,சுமைதாங்கி, தண்ணி டாங்கி, வெண்ணை என்று ஒரே அனத்தல்கள். இல்லாவிட்டால் காசு கேட்டு பிச்சை எடுக்கிறார். உயர்தர ஹோட்டல் பாரில் போய் குடிப்பாராம், ஆனால் நாய்குட்டிக்கு உணவு வாங்க காசில்லையே என்று பிச்சை எடுப்பாராம்.

அதையும் மீறி என்ன எழுதுகிறார் என்று பார்த்தால் சும்மா பச்சை வார்த்தைகளுக்கு தாவிவிடுகிறார் , காயடித்து விட்டார்கள், கு.....டியடித்து விட்டார்கள் , நடிகையின் கு...டியை நானா நக்கினேன்..? என்று சாணித்தாள் பேப்பர் சரோஜாதேவி புக் எழுத்தாளர் அளவுக்கு இறங்கிவிடுகிறார். இதுவா ஒரு இலக்கியவாதியின் அழகு..?

கேட்டால் நானொரு கட்டுடைப்பவன் என்ற விளக்கம் வேறு.

ஜெயமோகன் வலைத்தளத்தில் வாசித்ததிலிருந்துதான் அவரது புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன்.சாருவின் வலைத்தளத்தையும் வாசிக்கிறேன்.ஆனால் புத்தகங்கள் வாங்கும் எண்ணம் தோன்றவில்லை.ஒரு சோறு பதம்.

எனில் சாருவை ஒரு இலக்கிய உலகின் சுப்பிரமணியம்சாமியாகக் கருதி அவருடைய தூற்றல்களை நிராகரித்தோமானால் ஒருக்கால் இதில் கிடைக்கும் இன்பம் குறைந்து ஒருவேளை நல்ல படைப்புக்கள் அவரிடமிருந்து தோன்றலாம்.

(இலக்கிய உலகின் சுப்பிரமணியம்சாமி-இந்தச் சொலவடை குறித்து சாருவே தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு வரி குறிப்பிட்டிருந்தார்.என்றால் பட்டம் நன்றாக பொருந்துகிறது மனிதருக்கு .)

Tuesday, June 1, 2010

இமான்

முதல் முறை அவனைப் பார்த்த போது எதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. சாதாரண பையன்கள் போல இல்லை. ஒரு ஆறு வயது மதிக்கத்தக்க உருவம், கையில் ஒரு சின்ன தூக்குவாளியுடன், தோள்பட்டையுடன் இணைந்திருக்கும் நிக்கர் அணிந்து , சட்டை அணியாமல் நடந்து வந்தவன் முகத்தைப் பார்த்தேன்.குச்சி குச்சியாக சீனச் சிறுவர்கள் போல தலை முடி, கண்களும் அவ்வாறே மங்கோலிய பாணியில்.வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. அவன் முகத்தைப் பார்த்தவுடன் இவனது பெயர் கண்டிப்பாக கணேஷ் என்று இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.அவன் கண்கள் எங்கள் வீட்டிலிருக்கும் பிள்ளையார் படத்திலிருப்பது போல் இருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.

சில நிமிடங்களில் அவனது அம்மா பின்தொடர்ந்து வந்தார்கள். நீங்கதான் இந்த வீட்டுக்கு புதுசா வந்திருக்கீங்களா/ என்று என் அம்மாவிடம் கேட்டார்கள்.பின்பு அவர்கள் பெயரையும் சொந்த ஊரையும் கூறி பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டார்கள். பையன் பெயர் இமான் என்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு உண்டு என்றும் சொன்னார்கள். கணேஷ்... இமான்.... சம்பந்தமே இல்லை, இவனுக்கு கணேஷ் என்ற பெயர்தான் நன்றாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.

அம்மா விச்சு முட்டா என்றான். போய் அக்கா கடைல வாங்கிக்கோடா என்று சொன்னார் இமானம்மா.பின்பு அவனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனிப்பது என் வாடிக்கையாயிற்று.

இமான் சில வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருந்தான்.அம்மா அப்பா இன்னும் விச்சு முட்டா, விக்ஸ் மிட்டாய் தான் விச்சு முட்டா என்பான். அந்த வட்டாரத்தில் அவனை அனைவரும் அறிந்து வைத்திருந்தார்கள். அப்பா என்று அழைத்தால் அவனது அப்பா கோபப்படுவார். ஏனென்றால் இமான் அம்மாவின் முதல் கணவருக்குப் பிறந்தவன் , விவாகரத்தாகி மறுமணம் செய்து கொண்டவர்.இமான் அம்மா எங்களிடம் நல்ல பிரியமாக இருப்பார்.

இமானின் வார்த்தைகளில் எங்கள் பெயரும் சேர்ந்து கொண்டது, மாமா,அனு அம்மா ,அனு என்று என் தம்பியை அழைப்பான், அங்கா என்று என்னை அழைப்பான்.கண்ணா என்பது மருவி அங்கா ஆகிவிட்டது. என் அக்காவை எப்படி கூப்பிட்டான் என மறந்து விட்டது.

சிலநேரங்களில் காலையில் வீட்டுக்கு வருவான். அம்மா தோசையோ இட்லியோ கொடுப்பார்கள், அவனும் என் தம்பியும் சாப்பிடுவார்கள். அம்மா செய்யும் இடியாப்பம், ஆப்பம் போன்றவை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.தவறாமல் அவனுக்கும் சேர்த்து செய்வாள் அம்மா.எங்களுடன் சேர்ந்து விளையாடுவான்.ஏதாவது சொல்வான். ஒன்றும் புரியாது , இமான் அம்மா எங்களுக்கு அர்த்தம் சொல்வார்.நாங்கள் வந்த பிறகு இமான் நிறைய வார்த்தைகள் கற்றுக் கொள்வதாக இமானம்மா சொன்னார்.

ஒருநாள் அவன் வீட்டில் பெரும் சத்தம் கேட்டது, அவன் அப்பா திட்டிக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.அவன் அம்மா அழுது கொண்டிருந்தார். என்ன ஆயிற்று என்று கேட்டால் , இமானிடம் ஒரு நூறு ரூபாய்த் தாள் கொடுத்திருக்கிறார் அவன் அப்பா, இமான் சற்று நேரம் பார்த்து விட்டு சுக்கல் சுக்கலாக் கிழித்து எறிந்திருக்கிறான். அவன் அப்பா கோபத்தில் சாப்பாட்டுத் தட்டை எடுத்து எறிந்துவிட்டு வெளியே போய்விட்டார்.இமானுக்கு காசென்ன தாளென்ன என்று வித்தியாம் தெரியுமா..? அவனுக்கு தெரிந்த ஒரே காசு 50 காசுதான். கொடுத்தால் விச்சு மிட்டாய் கிடைக்கும்.சிறிது நேரம் அழுத அவன் அப்புறம் அம்மா விச்சு முட்டா என்று கடையை நோக்கி ஓடினான். அவனைப் பார்த்த அம்மா இன்னும் கொஞ்சம் அழுதார்.

அந்த வீட்டில் இன்னும் ஒரு வரவு வந்தது. இமானுக்கு ஒரு தம்பி பாப்பா வந்தான்.எங்களுக்கு விளையாடவும் பொழுது போக்கவும் குட்டிப் பையன் கிடைத்தான். சிலகாலங்கள் மகிழ்ச்சியாகச் சென்றது.

அவர்கள் வீட்டருகே நாங்கள் இருந்தது எட்டு மாதங்களே. அப்புறம் அப்பா வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்தார்.வீடு மாறிச் சென்றோம். சிலநாட்கள் கழித்து புதிய வீட்டுக்கு இமானுடன் குட்டிபையனையும் தூக்கிக் கொண்டு வந்தார்.

நாங்கள் வீடு மாறியவுடன் பூட்டிக் கிடந்த வீட்டில் காலையில் சென்று அனு .. அனு அம்மா என்று அழைத்தவாறே தட்டியிருக்கிறான்.விளையாடவும் பேசவும் ஆளில்லாமல் தவித்துப் போய்விட்டான் என்றார்கள். மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.என்ன செய்ய முடியும்.?

அப்புறம் எப்பொழுதாவது வீட்டுக்கு வருவார்கள், கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுப் போவான் .காலப்போக்கில் வரத்து குறைந்தது. ஒருநாள் நான் சைக்கிளில் சென்று பார்த்த போது அவர்கள் வீடு மாறிப் போய்விட்டிருந்தனர். அப்புறம் எந்த தகவலும் இல்லை.

ஒருநாள் அப்பா சொன்னார், இமான் அம்மாவிற்கு தொண்டையில் ஏதோ கட்டி வந்து மயக்கமருந்து கொடுத்தும் பலனின்றி ,உணர்விலேயே அறுவை சிகிச்சை செய்து இறந்து போனதாகவும், பின்பு வீட்டில் கொண்டு வந்து வைத்த பின்பு திடீரென்று நினைவு வர திரும்பி மருத்துவமனை கொண்டு சென்று பிழைத்துக் கொண்டதாகவும் சொன்னார்.அப்புறம் அவர்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்கள்.இமானைப் பற்றி நான் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனேன்.

13 வருடங்கள் கழித்து படிப்பு முடித்து வேலை தேடும் படலத்தில் ,வாழ்க்கை வெறுத்து சோர்ந்து போய் பெங்களூரில் மெஜஸ்டிக்கிலிருந்து மடிவாலா செல்லும் பேருந்தல் ஏறி அமர்ந்தேன்.என் எதிர் இருக்கையில் ஒரு தாயும் மகனும் வந்து அமர்ந்தார்கள்.பையன் சிரித்தவாறே இருந்தான் வாயிலிருந்து அனிச்சையாக எச்சில் ஒழுகியது.தாயோ ஒரு கைக்குட்டையால் துடைத்து விட்டபடி இருந்தாள். பையனுக்கு இமானின் வயது இருக்கலாம், அதே போன்ற கண்கள்.என்னைப் பார்த்து அம்மாவிடம் எதோ சொல்லி ஒலியெழுப்பினான். நான் அம்மாவைப் பார்த்து புன்னகைத்தேன். அவர்களும்.அவள் முகத்தில் ஒரு விதமான சங்கடத்தைக் கவனித்தேன். மேலும் அவர்களைப் பார்க்கத் திராணியின்றி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடியே வந்தேன்.ஏனோ பலவருடங்கள் கழித்து இமானின் முகம் என் நினைவுக்கு வந்தது.