Friday, July 6, 2012

பில்லா 2 முன்னோட்டம் - சில பகிர்வுகள்

எல்லாருக்கும் வணக்கம். இது முழுக்க முழுக்க தல வழிபாட்டுப் பதிவு. படிச்சிட்டு கமன்ட் ல வந்து திட்ட நினைக்கிறவங்க (வேற யாரு டாக்டர் ரசிகர்கள் தான்) படிக்காமல் தவிர்ப்பது நலம். நன்றி.



சென்ற வருடம் மங்கத்தா யூ டியூபைக் கலக்கியது போல் இந்த வருடம் பில்லா 2 இன் டிரைலர்கள் கலக்கி எடுக்கின்றன. இந்தமுறை டிரைலரைப் பார்க்கும்போது  வசனங்கள் மிகுந்த கவனத்துடன் அஜித்துக்காகவே எழுதப்பட்டுள்ளன எனத் தோன்றுகிறது.
ஒரு காலத்தில் " நான் தனி ஆளு இல்ல " " அத்திப்பட்டினு ஒரு கிராமம் இருந்துது உங்களுக்கு தெரியுமா " என்று சீரியஸ் ஆகப் பேசி கிண்டலுக்குள்ளான காலங்கள் மலையேறிப் போயாச்சு. 

டிரயிலரில் அவர் பேசும் வசனங்கள் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதைப் போலவே உள்ளன. என்னோட  வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்  ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினது டா , கண்டிப்பாக சுயமாக செதுக்கிய வாழ்க்கைதான் அவருடையது.
மேலும் "எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்ல , ஆனா எதிரியா இருக்க கண்டிப்பா தகுதி வேணும் என்னும் வசனத்தைக் கேட்கும்போது  ஒரு காலத்தில் அவருடைய திரைப் போட்டியாளராக கருதப்பட்ட ஒரு நடிகர் தற்காலத்தில் தனது படங்கள் மொக்கை வாங்குவதால் அரசியலுக்கு செல்ல முயன்று அங்கேயும் மொக்கை வாங்கி , ஆளும் கட்சிகளுக்கு மாற்றி மாற்றி சொம்படித்து காலத்தை ஒட்டி தற்போது பிறந்தநாளுக்கு குழந்தைகளுக்கு மோதிரம் போடுகிறேன் என்று மருத்துவமனைக்குப் போய் கலாட்டா உண்டு பண்ணி அங்கேயும் பல்பு வாங்கி எப்படியாவது விளம்பரம் கிடைக்காதா என்று தரை லெவலுக்கு இறங்கி தன்னுடைய தகுதியை தாழ்த்திக் கொண்டே செல்வது ஞாபகம் வருகிறது.
(ஒரு காலத்தில் அவர் ரசிகர்கள் ஆடிய ஆட்டமென்ன ? தற்போது அவர்கள் நடந்த பிள்ளை தவழுதடி .. நான் செய்த பாவமடி என்று வருத்தத்தில் உள்ளனர்.)
சமூகத்தில் மரியாதை என்பது தானாக வரவேண்டும். பிறருடன் பண்புடன் நடந்துகொண்டாலே தானாக வரும். இன்னும் சுயவிளம்பரங்கள் மூலமாக புகழ் மற்றும் மரியாதை பெற நினைத்தால் கூடிய விரைவில் பவர் ஸ்டாருக்கு போட்டியாகும் வாய்ப்புள்ளது. 
இன்று திரைத்துறையில் அஜித்துக்கு இருக்கும்  மரியாதை பற்றி இங்கு எழுதவே தேவை இல்லை. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு , தலையா ..? அவரு கிரேட்டுப்பா என்று கூறுபவர்களே அதிகம்.
இந்த மரியாதை எதனால் சாத்தியமாயிற்று? வயது கூடிவருவதனால் வந்த பக்குவம் ஒரு காரணமாக இருக்கலாம். நடிக்கும் படங்களில் தன்னுடைய வேலையைத் தவிர்த்து பிற விஷயங்களில் தலையிடாததும், அனைவரிடமும் சகஜமாகப் பழகுவதும் காரணமாக இருக்கலாம்.
எது எப்படியோ இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் அவருக்கு இருக்கும் வரவேற்பும் , ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகும் எகிறும் ரசிகர்கள் எண்ணிக்கையும் எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களும் பெரும் ஆச்சரியமே.
அஜித்துக்கு ரஜினியைப் போலவோ கமலைப் போலவோ இவ்வளவு ஏன் டாக்டர் விஜய் போலவோ இந்திய அளவில் பரந்த சந்தை மதிப்பு கிடையாது.  (டாக்டரின் படங்கள் கேரளாவில் வரவேற்பினைப் பெறுகின்றன. முல்லைப் பெரியாரில் தண்ணீர் தராத மலையாளிகளுக்கு தமிழன் தரப்பிலிருந்து வழங்கப் படும் மிகப் பெரிய தண்டனை டாக்டரின் படங்கள் என்பது என் எண்ணம்.) தான் படங்களை விநியோகம் செய்கிறார்கள் எனும் ஒரே காரணத்திற்காக சன் மியூசிக்கிலோ இசையருவியிலோ வந்து வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி என்று கூப்பாடு போடுவதும் கிடையாது. பிஹைண்ட் உட்ஸ் போன்ற இணைய தளங்களும் அஜித்தின் படங்களின் உண்மையான சந்தை நிலவரத்தை இருட்டடிப்பு செய்கின்றன.
விகடன் விமர்சனமும் போனால் போகிறது என்று 40 மதிப்பெண்கள் மட்டும் கொடுக்கும். போதாக்குறைக்கு டாக்டரின் ஆதரவாளர்கள் இணைய தளத்தில் கிழித்துத் தொங்கவிட்டு விமர்சனம் எழுதுவார்கள்.எனினும் அஜித் படங்களின் வசூல் நிலைவரமானது ரஜினி கமலுக்கு அடுத்தபடியாகவே இருக்கின்றன.  

எந்த விளம்பரமும் இல்லாமல் மிகக் காலதாமதமாக வெளியான வரலாறு வெகுநாட்கள்  தமிழ் சினிமாவின் அதிக வசூல் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தது . பில்லா பற்றி நான் கூறவே தேவை இல்லை. மங்காத்தா ரிலீஸ் ஆகுமோ ஆகாதோ என்னும் நிலையில் மிகக் குறுகிய நாட்களே சன் டிவியால் விளம்பரம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு அதிக வசூலைக் குவித்தது. சன் டிவி எல்லா படங்களையுமே மாபெரும் வெற்றி என்று சொல்லும் என்பவர்களுக்கு சுறா, வேட்டைக்காரன், குருவி போன்ற படங்களை நியாபகப் படுத்த விரும்புகிறேன்.

சரி மீண்டும் பில்லா 2 ற்கு வருவோம். மிகச் சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் அமையப்பெற்றுள்ளதாகத் தோன்றுகிறது. குறிப்பாக ஹெலிகாப்டரிலிருந்து ஒற்றைக் கையில் தொங்கும் காட்சி மயிர்க் கூச்செறியச் செய்கின்றது. 
என்னதான் முன்னெச்சரிக்கை உபாயங்கள் கையாளப் பெற்றிருந்தாலும் தல இத்தகைய ஆபத்து நிறைந்த காட்ச்களில் நடிக்க வேண்டாம் என்பது என் விருப்பம். ஒரு காலத்தில் ஒரு நடிகர் ஒரு ஏணி மூலமாக ஒரு பால்கனியிலிருந்து இன்னொரு பால்கனிக்கு தாவுவார். உடனே இந்த காட்சியில்  டூப் போடாமல் நடித்தது உங்கள் டாக்டர் என்று வெட்கமில்லாமல் திரையில் ஒரு சுய விளம்பரம் வேறு. குருதிப் புனலில் கமல் ஒரு ஓடும் ரயிலை தண்டவாளத்தில் குறுக்காகத் தாண்டுவார். அது ஒரே ஒருமுறை மாத்திரம் திரையில் காண்பிக்கப்படும். ஆனால் டாக்டரோ ஏணி மூல தாண்டுவதை பல   ஆங்கிள்களில் படம்பிடித்து திரும்பத் திரும்ப நான்கு முறை காட்டுவார். ஜாக்கி சான் கூட இப்படி விளம்பரம் செய்ய மாட்டார்.



தல வெறுமனே திரையில் வந்தால் மட்டும் போதும். அவருடைய ஸ்கிரீன் ப்ரசென்ஸ் ஒன்று மட்டுமே மொத்த திரைப் படத்தையும் தாங்கி நிற்கும்.
சும்மா கதை  விடாதீங்க என்பவர்களுக்கு பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் உதாரணம். கமலுக்கு அடுத்தபடியாக என்ன உடை அணிந்தாலும் , எந்த வித சிகை அலங்காரத்திலும்  சிறப்பாக தோன்றுவது தல தான். மங்கத்தா நரைமுடி தோற்றத்திலேயே அசத்திய தைரியம் யாருக்கும் வராது. டாக்டரின் ப்ளாண்ட் ஹேர் ஸ்டையிலை பார்க்கும் தைரியம் யாருக்கும் வராது.. 



எதற்கெடுத்தாலும் கோட் அணித்ந்து கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு சும்மா அங்கேயும் இங்கேயும் நடக்கிறார் என்று தலையைப் பற்றிக் கூறுபவர்களுக்கு ஒரு கேள்வி. ஒரு ஹை ப்ரோபைல் டான் படத்தின் ஆம்பியன்சிற்கேற்ப பாந்தமாக கோட்  ஸ்யூட் அணிந்து வந்தது நன்றாக இருந்ததனால்தானே பில்லா வெற்றிபெற்றது? மாறாக மொட்டை வெயிலில் சிகப்பு நிற லெதர் கோட் போட்டுக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டே சேரிப் பகுதிகளில் வீரமாக தொண்டரடிப்பொடிகள் சூழ டாக்டர் நடந்து வந்த சுறாவோ வேட்டைக்காரனோ என்ன ஆயிற்று?



எது எப்படியோ பில்லா  2 வெற்றி பெறுகிறதோ இல்லையோ தல ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமே இல்லை. உட்றா உட்றா சூனா பானா என்று அடுத்த படத்திற்கு தயாராகிவிடுவோம். இதே மாதிரி தல ஆராதனைப் பதிவுகள் எழுதிக்கொண்டேதான் இருப்போம்.

Friday, May 4, 2012

தமிழ் சினிமாவின் புதிய தளபதி


சமீபத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்த்தேன்.தமிழ் சினிமாவின் புதிய நடிப்பு புயல் நடன சூறாவளி, நவயுக நாயகன், வெகு விரைவில் சூப்பர் ஸ்டார் ஆக்கப்படப் போகும் தகுதியுடைய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் மெய்மறந்தேன்.
படத்தில் டிராபிக் சிக்னலில் ஒரு பெண்ணை பார்க்கிறார். அவள் தன்னுடைய முகத்திரையை விலக்கியதும் ஐயோ அம்மா என்று கவுண்டமணி ரீதியில் அந்தப் பெண்ணை காரி உமிழ்ந்து இகழ்கிறார். நியாயமாகப் பார்த்தால் அந்தப் பெண்தான் இவரை உமிழ்ந்திருக்க வேண்டும்.என்ன செய்வது கோடிகளாய்க் குவித்த ஊழல் பணத்தில் ஒரே நாளில் நாயகனாகிவிட்டாரே. நாயகன் மீது உமிழ முடியுமா ?

ஜீவா நடித்திருந்திக்க வேண்டிய படம் இது. படத்தின் வெற்றியின் அளவைக் குறைத்ததில் நாயகனின் பங்கு மிகப் பெரிது.சந்தானம் தனியொரு ஆளாக படத்தைத் தாங்குகிறார். சந்தானம் மட்டும் இல்லை என்றால் வெறும் குப்பை என மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கும். என்னதான் சந்தானம் இருந்தாலும் கடைசி 20 நிமிடங்கள் திக்கித் திணறி தண்ணீர் குடித்து இயக்குனர் ஒப்பேற்றி இருப்பது சலிப்பை அளிக்கிறது.

நடிப்பு, நடனம், நகைச்சுவை என அனைத்தையும் திறம்படச் செய்ய முயன்று தோற்கிறார் ஹீரோ. சந்தானம் வசனம் பேசும்போது ஹீரோ கொடுக்கும் பார்வை ரியாக்ஷன்கள் படுபரிதாபம். பேசாமல் அப்போதும் கூலிங் கிளாஸ் போட்டிருந்திருக்கலாம்.நிறைய இடங்களில் SMS ஜீவாவை இமிடேட் செய்ய முயன்று எரிச்சலூட்டுகிறார்.


படம் முழுக்க தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசுவதாக நடிக்க முயற்சிக்கிறார் , கொஞ்சம் கூட சிரிப்பே வரவில்லை. படம் முடிய கால்மணி நேரம் இருக்கும்போது ஹீரோ சரியாக இங்கிலீஷில் பேசுகிறார்.ஏன் இங்கிலீஷ் தெரியாதது மாதிரி நடிக்க வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை. தமிழ் நாட்டின் கஷ்டகாலம், புதிய தளபதியின் அடுத்தடுத்த படங்களை பெரிய பெரிய இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பில் இனி வருடம்தோறும் காணலாம். இதனால் இளைய தளபதி கடுமையான பீதியில் இருப்பதாகக் கேள்வி. கவலைப் படவேண்டாம் நடனத்தில் உங்களை யாராலும் மிஞ்ச முடியாது.என்ன ஒன்று கஷ்டமான ஸ்டெப்புகளை ஆடுகிறேன் என்று சுறா படத்தில் செய்தது போல தரையில் படுத்து உருளாமல் இருந்தால் போதும். இல்லாவிட்டால் மக்கள் புதிய தளபதியின் பாக்கியராஜ் நடனமே பரவா இல்லை என்னும் முடிவெடுக்கும் சாத்தியம் உள்ளது.

நமது ஹீரோவின் நடனம் குறித்து யுவகிருஷ்ணா தனது விமர்சனத்தில் குறிப்பிடும்போது நடிக்க வந்து இத்தனை வருடங்களாகியும் அஜித்துக்கே நடனம் வரவில்லை என்று கூறுகிறார். வரலாறு படம் பார்க்கவில்லை போலும். தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டால் அப்படத்தில் அஜித் நன்றாகவே ஆடியிருப்பார் . சரி அத்தனை குறைகளை மீறியும் அஜித்தை நமக்கு ஏன் பிடிக்கிறது என்றால் ஊரை விற்ற ஊழல் பணத்தில் சொந்தப் படம் எடுத்து ஹீரோவாக அறிமுகம் ஆகவில்லை. எந்தத் திறமையும் இல்லாமல் அறிமுகம் ஆகி 20 வருடங்களில் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தினை பெறுவது எளிதான காரியம் அல்ல.


கன்னட சினிமாவில் எப்படி புனீத் ராஜ்குமார் வலுக்கட்டாயமாக ஹீரோ ஆக்கப்பட்டு ஒரு நட்சத்திரம் ஆக்கப்பட்டரோ அதே போன்ற நிலைமை தமிழ் நாட்டிலும் பிரகாசமாக தெரிகிறது. நாட்டில் நடக்கும் கொடுமைகளை மறக்க திரையரங்குக்கு சென்றால் அங்கேயும் ஊழல்வாதிகளின் வாரிசுகள் ஊழல் பணத்தில் ஆடிகொண்டிருந்தால் மக்கள் என்னதான் செய்வது ? நேற்று அருள்நிதி, இன்று உதயநிதி, நாளை தயாநிதி. ஆளுக்கு மூன்று படங்கள் வருடத்திற்கு நடித்தாலும் ஒன்பது படங்கள், சன் டிவி, கலைஞர் டிவி, கே டிவி என அனைத்திலும் அந்த ஒன்பது படங்களின் ட்ரைலர் மாறி மாறி ஓடி மக்களை இம்சிக்குமே? 

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆனவுடன் சன் மியூசிக், இசையருவி என சிறப்பு நிகழ்சிகள் போட்டு தாரை தப்பட்டைகளை அடித்துக் கிழித்து தொங்கவிடுவார்களே. தமிழ்நாட்டு மக்களின் நிலைமை கவலைக்கிடம்தான் இனி. மணிரத்னம், கவுதம் மேனன், செல்வராகவன், கே வி ஆனந்த் , AR முருகதாஸ், KS ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குனர்கள் இனி தெலுங்கு, ஹிந்தி படங்களை மட்டும் எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிடில் தங்களுடன் படம் பண்ண சொல்லி நிதிகள் "செல்லமாக" அழைக்கும் போது தலைவலி வயிற்று வலி , வாந்தி பேதி என்று கூறி எஸ்கேப் ஆகிவிடவும். தமிழ்நாட்டுக்கு புண்ணியமாகப் போகும்.

ஆனால் பாருங்கள் பதிவுலகில் சினிமாவை லட்சியமாகக் கொண்டு, எழுத்தை தவமாக கொண்ட சொம்படிக்கும் பதிவர்கள் யுவகிருஷ்ணா ,ஜாக்கி சேகர் போன்றவர்களுக்கு அடித்தது யோகம்.ஏற்கனவே பரசுராம் 55 மூலம் யு டியூபை கலங்கடித்தாயிற்று. வெள்ளித் திரையையும் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம், தங்கள் விமர்சனங்களில் புதிய தளபதியை புகழ்ந்து தள்ளியிருப்பதைப் பார்த்தால் அது நிஜமாகவே வாய்ப்பிருக்கிறது.

தமிழ்நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

Thursday, May 3, 2012

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு என் அனுபவம்-7

இதுநாள் வரை இயந்திரப் பொறியியல் துறையில் Design Engineer குறித்து சில விஷயங்களைப் பார்த்தோம்.இந்த பதிவில் வேலை வாய்ப்பு பற்றி பார்ப்போம்.இன்றைய கால கட்டத்தில் ஒரு இயந்திரப் பொறியியல் மாணவர் வேலை வாய்ப்பு குறித்து கவலைப்படத் தேவை இல்லை.உலகெங்கிலும் வாய்ப்புகள் பரவிக்கிடக்கின்றன.திரைகடலோடியும் திரவியம் தேடும் தில் இருந்தால் போதும். ஆப்பிரிக்க நாடுகளில் ஆசிரியர் வேலைகள், மத்திய கிழக்கு , அரேபிய தீபகற்பத்தில் Refrigeration and Air conditioning , Heavy Fabrication and erection  மற்றும் செங்கோவி அண்ணன் பணிபுரியும் குழாயில் துறை Pipinig என எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோக வடிவமைப்பு Design துறையில் பல நாடுகளிலும் சென்று பணிபுரியலாம்.


ஒரு இயந்திரப் பொறியியல் வல்லுனரால் கணினித் துறையில் மென்பொருள் வடிவமைப்பாளராகிவிட முடியும். என்னுடன் படித்த நிறைய நண்பர்கள் இன்று தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிகின்றனர். (நமக்கு இந்த C,C++, எல்லாம் வேலைக்காகவில்லை).Main Frame technology என்ற  தொழில்நுட்பம் கற்று IBM போன்ற நிறுவனங்களில் நுழைந்தவர்கள் அதிகம்.
என்னதான் இருந்தாலும் கல்வி கற்ற துறையிலேயே வேலை பார்ப்பது என்பது அலாதி அனுபவம்.ஒரு டிசைன் எஞ்சினியர் சாகும் வரையில் டிசைன் எஞ்சிநியராகவே இருக்க விரும்புவான்.அந்த உணர்வை இங்கே வார்த்தைகளில் எழுத முடியாது. அது உணரப்பட வேண்டிய ஒன்று.

தொடரின் துவக்கத்தில் கூறியது போல படிக்கும் போது arrears இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கியம். GE போன்ற நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க சில அடிப்படைத் தகுதிகளில் அதுவும் ஒன்று. சில நிறுவனங்கள் அதிகபட்சம் இரண்டு arrears மட்டும் ஏற்றுக்கொள்ளும்.

அரசுப்பணிகளில் ரயில்வே , IES Indian Engineering Service, மற்றும் பல UPSC Union public service Comission, ISRO, DRDO, மற்றும் பல போட்டித் தேர்வுகள் எழுதலாம்.இதுபற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

கல்லூரியில் படிக்கும் போதே உங்கள் விருப்பம் எந்தப் பிரிவில் என்று தெரிந்து கொண்டால் அது தொடர்பான திறன்களை மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கும். சிலருக்கு வாகனம் தொடர்பாக ஆர்வமிருக்கும், அவர்கள் Thermodynamics, thermal Engineering , Automobile, போன்ற பாடங்களின் அடிப்படைகளை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

சிலருக்கு Refrigeration and Air conditioning துறையில் ஆர்வமிருக்கும். அவர்கள் Thermodynamics, thermal Engineering, Heat and Mass Transfer போன்ற பாடங்களில் நல்ல தேர்ச்சி இருக்கவேண்டும்.

இதுபோக இயந்திரப் பொறியியல் துறையின் எந்தப் பிரிவுக்கு வேலைக்கு செல்லவேணடுமென்றாலும் "Engineering  drawing, Engineering Mechanics, Strength of materials" போன்ற பாடங்களின் அடிப்படைகள் தெரிந்திருக்க  வேண்டும்.

நான் சொல்வது மிகவும் அடிப்படையான விஷயங்கள் தெரிந்திருந்தால் போதும் என்பதே. படித்த அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. எனவே நேர்முகத்தேர்வில் உங்களிடம் கேள்வி கேட்பவர்கள் எதிர்பார்ப்பது உங்களுக்கு அடிப்படை அறிவு அனைத்து பாடப் பிரிவுகளிலும் உள்ளதா என்பதே. அதனை சமாளித்து விட்டால் போதும்.வேலையை பெற்றுவிடலாம்.

இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் கோலோச்சும் அனைத்து பெரிய நிறுவனங்களும் , இயந்திரப் பொறியியல் டிசைன் துறையில் கால்பதித்துள்ளன.Infosys , CTS, TCS, Wipro  என அனைத்து பெரிய நிறுவனங்களும் வாகன உற்பத்தி, விமானம், கனரக இயந்திரங்கள் போன்ற அனைத்து துறைக்கும் டிசைன்   சேவையை அளிக்கின்றன.இவை போன்ற நிறுவனங்கள் "Service Providers". 

இதுபோக OEM (Original Equipment Manufacturer என்ற வகையில் நிறுவனங்களின் design center கள் இந்தியாவில் நிறைய உள்ளன. அதாவது மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய டிசைன் சென்டர்களை இந்தியாவில் நிறுவியுள்ளன.இது TCS,Infosys,Wipro போல அன்று. TCS போன்ற நிறுவனங்கள் பல நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும். ஆனால் OEM தனக்கான தேவையை தன்னுடைய  design center கள் மூலமாக பெற்றுக்கொள்ளும்.

ஒரு டிசைன் என்ஜினியர் ஆவதற்கு அடிப்படைத் தகுதி பாடங்களில் அடிப்படைகளில் பலமாக இருத்தல் மற்றும் ஏதேனும் ஒரு 3D CAD Modelling Software அறிந்து வைத்திருப்பது.இன்றைய சூழ்நிலையில் பெருவாரியான நிறுவனங்கள் PRO-E என்னும் சாப்ட்வேர் உபயோகிக்கின்றன.
இதுபோக Catia,Unigraphics, Solidworks  என பல மென்பொருட்கள் உள்ளன.

Robert Bosch  போன்ற நிறுவனங்கள் "Internship" "Apprenticeship" தகுதித் தேர்வுகள் நடத்தி பயிற்சி அளிக்கின்றன.இவைகள் மூலமாகவும் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

Central Institute of Plastic Engineering & Technology (CIPET) இல் பட்டயப் படிப்புகள் படிப்பவர்களுக்கு பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வடிவமைக்கும் நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

Atlantis lab போன்ற சில நிறுவனங்கள் PRO E  பயிற்சியும் அளித்து வேலை வாய்ப்பு பெறவும் உதவுகின்றன. ஆனால் கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்.

ஒரு வழியாக ஒரு வேலை கிடைத்தாயிற்று. எப்போதும் நமக்கு வழங்கப்படும் முதல் ப்ராஜக்ட் சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும், முடிவு எப்படி இருந்தாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் முக்கியம். நிர்வாகம் நம்முடைய ஆளுமையை நாம் எடுக்கும் முயற்சிகளைக் கொண்டே கணிக்கும். 21 அல்லது 22 வயதில் கல்லூரியை முடித்து வந்திருப்போம்.விளையாட்டு மனப்பான்மை முற்றிலும் அகலாத பருவம்  இது. விளையாட்டுத் தனமாக பணியில் இருந்தாலும் சிறப்பாக வேலையை முடித்தால் பிரச்சனை இல்லை.ஆனால் வெறும் விளையாட்டு பணி உயர்வினையும் சம்பள உயர்வினையும் பாதிக்கும்.எனவே கவனம் தேவை.


இதுநாள் வரையில் நான் இங்கு பகிர்ந்து கொண்டது பெரிதும் என்னுடைய அனுபவங்களே. இதில் நான் பகிந்து கொண்டவை முற்றிலும் சரியானது என்பது என் வாதமல்ல.நான் கூறியவற்றில் தவறுகள் இருக்கலாம். இதில் நான் தெரிந்து கொள்ளத் தவறியவை , அடி வாங்கி கற்றுக் கொண்டவை போன்றவற்றைப் பகிந்துள்ளேன்.என்றாவது ஒருநாள் யாருக்காவது ஒருவகையில் பயன்படும் என்கின்ற நம்பிக்கையில்.

வாழ்த்துக்களுடன்

Tuesday, April 24, 2012

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு என் அனுபவம்-6

கடந்த பதிவுகளில் ஓரளவிற்கு "design" பற்றி பார்த்துவிட்டோம். இந்த பதிவில் "Product Development Cycle" பற்றி பார்ப்போம்.எந்த ஒரு பொருளும் கருத்து வடிவிலிருந்து (idea) பொருளாக (product) மாறுவதற்கு சில இடைநிலைகள் உண்டு. இது எந்த ஒரு பொருளுக்கும் பொருந்தும்.
இதனை "Product Development cycle" பொருள் வளர்நிலை சுழல் எனலாம். (இன்னும் மேலான தமிழாக்கம் தெரிந்தால் கூறவும்)

Conceptualization -->  Conversion -->  Production Evaluation & Testing --> Product Release
கருத்துருவாக்கம்--கருத்து உருமாற்றம்--மதிப்பீடு செய்தல்--சந்தைப்படுத்துதல் 

முதல் நிலையை "Conceptualization" - கருத்துருவாக்கம் எனலாம். 

இதில் சில இடைநிலைகள் உள்ளன.
Opportunity Identification    குறிப்பிட்ட பொருளுக்கான தேவையைக் கண்டறிதல் 
Idea Generation                 பொருளுக்கான கருத்து வடிவினை உருவாக்குதல்  
Idea Selection                    சிறந்த கருத்து வடிவினைத் தேர்ந்தெடுத்தல்
Conceptualization              அதனை கருத்துரு வாக மாற்றுதல்
Concept Evaluation           கருத்துருவை மதிப்பீடு செய்தல்

இந்நிலைகள் அனைத்தும் ஒரு பொறியாளரால் மட்டுமே செய்யப்படுவதில்லை. "Opportunity Identification" னுக்கு Marketting  துறையின் உதவி தேவைப்படும்.மற்ற நிலைகளுக்கு அனைத்து துறைகளிலிருந்தும் நிபுணர்களால் (Subject Matter Experts)  உள்ளீடுகள் (Inputs) அளிக்கப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு கருத்துருவும் மெருகேற்றப்பட்டு அதில் சிறந்த ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அது அடுத்த நிலைகளுக்கு முன்னேறும்.

அடுத்த நிலை தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துருவை பொருள் வடிவமாக மாற்றுதல் - Conversion 

ஒரு டிசைன் எஞ்சினியரின் பணி கருத்துருவாக்க நிலையிலிருந்தே துவங்கி விடுகிறது. இந்த Conversion நிலையில் இன்னும் அதிகமான உழைப்பு டிசைன் என்ஜினியருக்குத்தான். concept ஐ தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் ஒரு 3D CAD மென்பொருள் மூலம் வடிவமைப்பதும் வரைபடங்கள் தயார் செய்வதும் டிசைன் எஞ்சினியரின் பணி.இடையில் ஏதேனும் மெருகூட்டும் எண்ணம் தோன்றினால் நிபுணர்களிடம் கலந்தாய்வு செய்துவிட்டு தேவைப்படும் மாற்றங்களை செய்யலாம்.
பின்பு வரைபடங்கள் ஒரு Manufacturing அல்லது Production எஞ்சினியர் துணையுடன் தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் உள்ளனவா என்று மதிப்பீடு செய்யப்பட்டு தயாரிப்பிற்காக அனுமதிக்கப்படுகின்றன. (Production Release).

அடுத்த நிலையானது Production Evaluation & Testing: தயாரித்த பொருளை மதிப்பீடு செய்தல்.

தயாரிக்கப்பட்ட பொருளானது முறையாக இயங்குகிறதா , சரியான தரத்தில் தயரிக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்யப்பட்ட பிறகே சந்தையில் விற்பனைக்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு ஒரு புதிய பொருள் விற்பனைக்கு வருகிறது என்றால் குறைந்தது நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பே  அப்பொருளினைத் தயாரித்து விடுவார்கள். பின்பு சோதனைச் சாலையில் அதனை பல்வேறு சூழ்நிலைகளில் இயக்கி பரிசோதிப்பார்கள். இதனை "Accelerated Life test" " Endurance test" என்பர்.பின்பு சில  பொருட்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு ஓரிரு மாதங்கள் அவர்கள் அதனை பயன்படுத்தி , பின்பு அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் , புதிதாக தயாரிக்கப் போகும் பொருட்களில் நிவர்த்தி செய்வார்கள். பின்பு அவை சந்தைக்கு அனுப்ப தயாராகும்.
இவ்வாறு  குறைகளைக் கண்டறிதல்அதனை குறிப்பிட்ட பொறியாளருக்கு , துறைக்கு அறிவித்தல்  தரக்கட்டுப்பாட்டுத் துறையின் (Quality Department) பணியாகும். 

அடுத்த நிலையானது தயாரிக்கப்பட்ட பொருளை சந்தைப்படுத்துதல் (Product Release)

இதில் Marketting Department,மற்றும்  Logistics department  முக்கிய பங்கு வகிக்கின்றன.
Marketing Department 
தயாரிக்கப்பட்ட பொருள் பற்றிய செய்திகள் மக்களைச் சென்றடையும் விதத்தில் விளம்பரப் படுத்துதல் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து பொருட்களில் தேவையான மாறுதல்கள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தல் போன்றவை marketting துறையின் பணியாகும்.
Logistics ( Material management)  - பொருள் நிர்வாகம் 
தேவையான பொருள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருப்பதை உறுதி செய்வது லாஜிஸ்டிக் துறையின் பொறுப்பு. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருளானது உலகமெங்கிலும் உள்ள நாடுகளுக்கு, நகரங்களுக்கு தரை வழியாகவோ , கடல்வழியாகவோ வான்வழியாகவோ  சென்று சேர்ப்பது  இவர்கள் வேலை.

இவ்வாறு உள்ள நிலைகளில் ஒவ்வொரு நிலையின் இறுதியிலும் அனைத்து துறைகளையும்  சேர்ந்த நிபுணர்களின் கலந்தாய்வுக் கூட்டம் (Technical Reviews)நிகழும். இதனை சில நிறுவனங்கள் toll gate என்று அழைக்கின்றன, சில நிறுவனங்கள் gateway என்று அழைக்கின்றன ஒவ்வொரு நிலையிலும் ஏதேனும் குறைகளைக் கண்டால் நிவர்த்தி செய்ய முந்தைய நிலைக்கு பரிந்துரைப்பது இக்குழுவின் பொறுப்பு.
இவ்வாறு தரமான பொருள் உருவாகுவதை உறுதி செய்கின்றனர்.இத்தகைய Reviews பொருளில் கடைசிநேர மாறுதல்கள் தேவைப்படுவதை தவிர்க்கின்றன.தரத்தினை உறுதி செய்கின்றன.
ஒரு "Product development Cycle" உதாரணம் காண்போம்.
இது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சற்று வேறுபடும்.ஆனால் அடிப்படை இதுதான்.

கடுமையான சோம்பேறித்தனத்திற்கு இடையே நான் பகிர விரும்பியதை ஓரளவுக்கு கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.மேலும் ஒரு பதிவுடன் இத்தொடரை நிறைவு செய்ய எண்ணம்.

மேலும் பார்ப்போம்!

Monday, November 7, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5

"Design" என்பது வரைபடம் "drawing" இல்லாமல் முழுமையாகாது. ஏனெனில் டிராயிங் தான் இயந்திரப் பொறியாளர்களின் மொழி (Engineers language). [சில நேரங்களில் பதிவுகளில் மேஜர் சுந்தர்ராஜன் போல தமிழிலும் ஆங்கிலத்திலும் சிலவிஷயங்களைக் கூற வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. பொறுத்துக் கொள்ளவும்].ஒரு எஞ்சினியரின் மனதில் இருப்பதை, இயந்திரத்தில் அப்பொருளை உருவாக்கும் தொழிலாளிக்கு கொண்டு சேர்ப்பதே "drawing". ஒரு இசையமைப்பாளர் தான் மனதில் தோன்றும் இசையை குறிப்புகள் மூலம் இசைக்கருவியை வாசிப்பவருக்கு தெரியப்படுத்துவது போலத்தான் இதுவும். ஒரு "Technical drawing " எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.


இதில் அந்த பொருளைத் தயாரிக்க என்னென்ன அளவுகள் தேவை என்பன போன்ற விஷயங்கள் டிராயிங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். வலது மேல் மூலையில் காணப்படும் தோற்றம் " Pictorial View' எனப்படும். பழையகால கையால் வரையப்பட்ட படங்களில் இது சாத்தியமில்லை. தற்போதுள்ள 3D modelling software கள், Drawing களின் சிக்கல்களை (Complexity) வெகுவாகக் குறைத்துள்ளன.

மேலும் "Drawing" இல் இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. ஒன்று பெரிய இரும்புத் தகடுகளை வெட்டி ஒட்டி செய்யப்படும் "Fabrication" சம்பந்தமான டிராயிங்க்குகள். இதில் drawing களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளை இரும்புத் தகடுகளில் வரைந்து , Cutting torch flame மூலம் வெட்டி welding மூலம் இணைத்து தேவையான வடிவங்களாக உருவாக்குவது "Fabrication" எனப்படும். இரும்புத் தகடுகள் என்றில்லை , கூரைகளைத் தாங்கும் அமைப்புகள் செய்வதும் "Fabrication" எனப்படும்.


இன்னொரு வகை plastic பொருட்களின் Drawings. இவற்றில் தயாரிக்க வேண்டிய பொருளின் அளவுகள் இருந்தாலும் அவை தயாரிப்பில் அவசியப்படுவதில்லை. ஏனெனில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் "Molding" எனும் தயாரிப்பு முறை மூலம் " Molding Machine" கள் மூலமாக உருவாக்கப் படுகின்றன.


இது ஒரு பாட்டிலின் அச்சு (Mold). நமக்கு வேண்டியது பாட்டில், ஆனால் உண்மையில் அதற்கு முதலில் தேவைப்படுவது பாட்டிலுக்கான "Die" (அச்சு). இந்த Mold அல்லது Die உருவாக்குவதற்கு தனி படிப்பு உள்ளது. "Tool and die making". இந்தத் துறையில் தேர்ச்சி பெறுபவர்கள் "Tool Designer" என்று அழைக்கப்படுவார்கள்.சரி எவ்வாறு ஒரு die அல்லது mold உருவாகிறது ?
முதலில் பாட்டிலின் 3D மாடல் ஆனது ஒரு Modellinrg Software (CAD Computer Aided Design & Drafting) இல் உருவாகப் படுகிறது.பின்பு அது ஒரு Manufacturing Software (CAM Computer Aided Manufacturing) க்கு மாற்றப்படுகிறது.இப்படியாக பாட்டிலின் 3D Model ஐ CAM software இரு பகுதி அச்சுகளாக பிரித்தெடுக்கும்.பின்பு அந்த இரு பகுதிகளுக்கும் "Tool Path" குறியீடுகளையும் உருவாக்கிவிடும்.


"Tool Path" குறியீடுகளை ஒரு CNC (Computer Numeric Control) Machine இல் மாற்றி பாட்டிலின் அச்சினை உருவாக்கிவிடலாம்.இது ஒரு எளிய உதாரணமே.இதன் பின்புலத்தில் Tooling Engineer இன் பெரும்பங்கு உள்ளது.

CNC பற்றி விரிவான தகவல்களுக்கு நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் வலைத்தளம் பார்க்கலாம். இங்கே CNC Program


இப்போது பாட்டிலின் Die அல்லது Mold ஐ உருவாக்கியாயிற்று.பிளாஸ்டிக் பாட்டிலை உருவாக்க சில "Molding Process" உள்ளன.அது பற்றி கூற ஆரம்பித்தால் அது ஒரு பெரிய கதையாகிவிடும். தற்போதைக்கு பிளாஸ்டிக் பாட்டில் "Blow Molding" எனும் முறையில் உருவாக்கப்படுகிறது என்பதை மட்டும் சொல்கிறேன். 


இப்போது ஒரு முக்கியமான விஷயத்திற்கு மீண்டும் வருவோம். சரி பாட்டிலுக்காக வரைந்த drawing என்ன ஆயிற்று.? இப்போது பாட்டில் சரியான அளவுகளில்தான் உருவாகியுள்ளதா என்று சோதித்துப் பார்க்க "Quality Department" இல் உள்ள பொறியாளருக்கு Drawing அவசியமாகிறது.

......மேலும் பார்ப்போம்

Tuesday, August 30, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-4

Research & Engineering அல்லது Research & Development:

Research & Engineering அல்லது Research & Development என்பது ஒரு Product Development நிறுவனத்தின் மூளையைப் போன்றதாகும்.இங்குதான் ஒரு Design Engineer இன் வேலை ஆரம்பமாகிறது. மார்க்கெட்டிங் துறை மக்கள் விரும்பும் வகையில் வேண்டிய வசதிகளுடன் Industrial Designers மூலமாக பொருளின் வெளி வடிவத்தை R&D துறைக்கு அனுப்பும். ஆனால் இங்கு வெறுமனே கையால் வரையப்பட்ட படங்கள் உதவாது. மேற்கொண்டு அந்த வடிவினை பூர்த்தி செய்ய அளவுகள் (Dimensions) வேண்டும்.

சரி இந்த அளவுகளை (Dimensions) எங்ஙனம் நிர்ணயம் செய்வது ? அதற்கு இருவிதமான வழிமுறைகள் உள்ளன. ஒன்று அதற்காகவே உள்ள ஒரு intermediate software.அதில் ஒரு பொருளுக்கான அடிப்படை அளவுகளை நிறுவலாம்.சிரமமின்றி Complex surface geometry ஐ வடிவமைக்கலாம்.



ஆனால் இதைக் கொண்டு முழுமையான டிசைனை வடிவமைக்க முடியாது. எனவே வெளிப்புறப் பரப்பினை (Outer Surface) மட்டும் ஒரு பொதுவான Format இல் Pro-E போன்ற அதிக வலுவான மென்பொருளுக்கு மாற்றி அதிலிருந்து மேம்படுத்துவார்கள்.

இன்னொரு வழிமுறை என்னவென்றால் மரத்தாலோ, "பிளாஸ்டர் ஆப் பாரிஸ்" ஆலோ அந்த பொருளின் "மாதிரி" யை "Exact Replica" உருவாக்குவார்கள். அது நாம் செய்ய வேண்டிய பொருளின் அளவினைக் கொண்டிருக்கும். பிறகு அப்பொருளை ஒரு "Laser Scanner" இன் மூலமாக அதனுடைய வெளிப்புறப் பரப்பினை (Outer surface) ஸ்கேன் செய்து மென்பொருள் மூலம் Pro-E போன்ற High End software க்கு மாற்றி மேலும் மேம்படுத்துவார்கள்.


ஒரு 30 வருடங்களுக்கு முன்புவரை "Draftsman அல்லது Draughtsman" என்பவர் அதற்கென பணியமர்த்தப்பட்டிருப்பார். பொதுவாக டிசைன் இஞ்சினியர் விரும்பியபடி வரை படங்கள் வரைந்து கொடுப்பதுதான் அவரது வேலை.

கணினி தொழில்நுட்பம் வளர ஆரம்பித்த 80 களின் தொடக்கத்தில் "Auto CAD" எனப்படும் 2D software Draftsman களின் பணியை இலகுவாக்கியது. அதுவரை கையால் பென்சிலின் உதவி கொண்டு டிராயிங் போர்ட் (Drawing Board), டிராப்டர் (Drafter) மூலம் வரைந்துகொண்டிருந்தவர்கள், கணினியின் உதவியால் சிரமமின்றி வரைய ஆரம்பித்தனர்.

தற்போது தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக கணினியில் 3D CAD Software மூலம் டிசைனரே தனக்கு வேண்டியவற்றை வடிவமைத்துக் கொள்வது எளிதாகிவிட்டது. (Draftsman என்னும் வேலை கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.)
இதற்கு நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் அதிகமாக

1.Pro Engineer
2.Catia
3.Solid works
4.Unigraphics
5.Ideas
போன்ற மென்பொருட்கள் பயன்படுகின்றன.

சரி வேறு என்னவெல்லாம் R&D இல் செய்கிறார்கள் ? ஒரு பொருள் எந்தவிதமான தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கவேண்டும் (Technology),போட்டியாளர்களிடம் இல்லாத புதிய விஷயங்கள் என்னென்ன இடம்பெற்றிருக்க வேண்டும் (Innovation) போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பது இவர்கள் வேலை.
உதாரணத்திற்கு வாஷிங் மெஷினை எடுத்துக்கொள்வோம்( நான்கரை வருடங்கள் இதிலேயே உழண்டு கொண்டிருப்பதனால் எனக்கு வேறு வழியில்லை). வாஷிங் மெஷினில் ஒரு டிஸ்ப்ளே யூனிட் (Display unit) இருக்கும். இன்னும் எவ்வளவு நேரம் துவைக்கும் தற்போது மெஷின் எந்த பணியை செய்து கொண்டிருக்கிறது (துவைத்தல்,அலசுதல், பிழிதல்) போன்ற விஷயங்களை தெரிவிப்பது டிஸ்ப்ளே யூனிட்.
இதில் வெறும் LED அமைக்கலாமா , LCD அமைக்கலாமா அல்லது Touch Screen அமைக்கலாமா என்று தீர்மானிப்பது இவர்கள் வேலை.

கீழே காணும் படத்தில் மூன்று விதமான மெஷின்களின் User Interface பகுதி காண்பிக்கப்பட்டுள்ளது.



முதலில் காணும் மெஷினில் வெறும் LED விளக்குகள், பட்டன்கள் (Buttons) மற்றும் ஒரு நாப் (Knob)(குமிழ்) உள்ளன. இவை மூலம் நமக்கு வேண்டிய செட்டிங்க்ஸ் செய்து கொள்ளலாம்.
இரண்டாவது காணும் மெஷினில் நாப், பட்டன்கள் மற்றும் ஒரு 7 Segment Display உள்ளன.
மூன்றாவது காணும் மெஷினில் நாப் இல்லை , இரண்டே இரண்டு பட்டன்கள் மற்றுன் ஒரு தொடு திரை உள்ளன.

இவை அனைத்துமே செய்யப்போவது ஒரே வேலையைத்தான், ஆனால் தொழில்நுட்பங்கள் வெவ்வேறு. 
இது ஒரு சிறிய உதாரணம் தான். இது போல அஜிடேட்டர் (Agitator) எந்த டிசைனில் இருந்தால் நன்றாக் துணி துவைக்கும், எந்த மோட்டார் பொருத்தினால் மின்சாரம் குறைவாக செலவாகும் என்று மெஷினின் பலபகுதிகளையும் பற்றி ஆராய்வது மற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பங்களையும் நம்முடைய தேவைக்கேற்றபடி எவ்வாறு வடிவமைக்கலாம் என்று ஆராய்ச்சி செய்வது இவர்கள் வேலை.

மேலும் Design  பற்றி விரிவாக அடுத்த பதிவில் காண்போம்.

படங்கள்:
Google,http://www.emiracle.eu

Thursday, August 25, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-3

Research and Engineering (R&E) மற்றும் Human Resource பற்றி பார்ப்பதற்கு முன்னால் கொஞ்சம் "Industrial Design" பற்றி பார்ப்போம். Industrial design என்பது ஒரு பொருளுக்கான வெளிப்புறத் தோற்றம் "External appearance" எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் துறை. Marketing மற்றும் R&E க்கு இடைப்பட்ட துறை. பெரும்பாலும் மார்க்கெட்டிங் தேவைகளுக்கு ஏற்ற படி வேலை செய்வதால் அதிகமும் மார்க்கெட்டிங் துறையின் கையிலிருக்கும் துறை இந்த Industrial Design.

ஒரு டிஜிட்டல் பேட் (Digital Pad) இல் ஸ்டைலஸ் (Stylus) மூலமாக வரைந்து அதனை புகைப்படத்திற்கு இணையாக ஒளியூட்டி உருமாற்றுவார்கள் (Photo Realistic Rendering).















ஒரு காகிதத்தில் வரைந்து வண்ணமூட்டுவது போலத்தான் இதுவும். ஆனால் இது அதற்கென உள்ள பிரத்யேக மென்பொருட்கள் மூலமாக கணினியில் செய்வார்கள். இதில் Adobe illustrator, Solid works, Rhinoceros, Pro-E போன்ற மென்பொருட்கள் உதவுகின்றன.



இது போல வரைவதற்கு Industrial Design என  தனிப் படிப்பே உள்ளது. IIT களிலும், National Institute of design அகமதாபாத் , மேலும் வேறு பல கல்லூரிகளிலும் கற்றுத்தருகிறார்கள்.

பொதுவாக ஒரு பொருளின் முப்பரிமாண தோற்றத்தினைக் (3D view) காட்ட Isometric view ஐசொமெட்ரிக் என்னும் வகையினைப் பயன்படுத்துவார்கள்.ஆனால் விளம்பரங்களுக்காக எடுக்கப்படும் Portfolio வில் (ஒரு ஆல்பம் எனக் கொள்ளலாம்) ஐசொமெட்ரிக் வியூ அவ்வளவு எடுப்பாகத் தெரியாது. அங்கே " Perspective view" எனப்படும் வரையும் உத்தியைக் கையாள்கிறார்கள். இது வரைதலானாலும் புகைப்படம் எடுத்தாலும் இரண்டிலும் பயன்படுகிறது.

உதாரணங்களுக்கு சில படங்களைப் பார்ப்போம்.
(படங்களைப் பெரிதாக்க அதன் மீது கிளிக்கவும்.)



இதில் முதலில் உள்ள பெர்ஸ்பெக்டிவ் வியூ (Perspective view) ஒரு பொருளை குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்ப்பதாக வரையப்பட்டுள்ளது.ஒரு நேரிணையான தோற்றத்தை (Realistic Appearance) அளிப்பதற்கு இந்த Perspective view ஆனது பயன்படுத்தப் படுகிறது. இதில்

1.Single point perspective
2.Two point perspective
3.Three point perspective
என மூன்று வகையுள்ளது.

வேனிஷிங் பாயின்ட் களின் எண்ணிக்கையை பொறுத்து இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றது. அதிகமும் Two point perspective மற்றும் Three point perspective உபயோகிக்கப் படுகிறது.
வேனிஷிங் பாயின்ட் (Vanishing Point) எனப்படுவது ஒரு பொருள் பார்வையிலிருந்து மறையும் தூரத்திலுள்ள ஒரு புள்ளி எனக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ரயில் தண்டவாளங்களைப் பார்க்கும்போது எந்தப்புள்ளியில் இரண்டு தண்டவாளங்களும் இணைகின்றனவோ அதுவே அதன் வேனிஷிங் பாயிண்ட்.
Isometric view தட்டையான தோற்றத்தை அளிப்பதால் Portfolio வில் அதனை உபயோகப்படுத்துவதில்லை. ஆனால் ஒரு பொருளுக்கான வரைபடத்தில் (Drawing )அது முக்கியப் பங்காற்றுகிறது.
சரி இதற்கு மேலும் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் பற்றி கூறப்போவது இல்லை.
படங்களைப் பார்த்து வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளுங்கள்.

(படங்களைப் பெரிதாக்க அதன் மீது கிளிக்கவும்.)

இப்படியாக இண்டஸ்ட்ரியல் டிசைன் என்பது நன்றாக வரையத் தெரிந்த மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.மிக நல்ல வேலைவாய்ப்புகள் மிக அதிக சம்பளத்துடன் உலகம் முழுவதிலும் எளிதில் கிடைக்கும். அது என்ன நன்றாக வரையத் தெரிந்த மாணவர்கள் ? மற்றவர்கள் படிக்க முடியாதா? கண்டிப்பாக முடியும் ஆனால் அதற்கு மிகக் கடுமையான பயிற்சி தேவைப்படும். ஏனெனில் ஒரு கான்செப்ட்டுக்கு வரை வடிவம் கொடுக்கும் சமயத்தில் பெரும்பாலும் மென்பொருட்கள் உபயோகிப்பதில்லை. கையாலேயே வரைந்து ஒரு வடிவம் கொடுப்பார்கள்.அதற்கு இயல்பிலேயே நன்றாக வரையும் திறன் பெற்றவர்களாலேயே எளிதில் வரைய முடியும்.

ஒரு டிசைனின் துவக்கத்தில் இவ்வாறுதான் வரைபடங்கள் உருவாக்குவார்கள்.



இவ்வாறாக இண்டஸ்ட்ரியல் டிசைன் பற்றி ஓரளவுக்கு கூறியாயிற்று என்று நினைக்கிறேன். நான் படித்த போது இதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாமலேயே கடந்து வந்து விட்டேன். அடுத்த பதிவில் R&E மற்றும் Human Resource பற்றி பார்க்கலாம்.

படங்களுக்கு நன்றி:
brookbanham.com