Sunday, August 7, 2011

கந்தல் துணி - பாகம் 3


வெகுநாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் அபத்தங்கள் பற்றி பட்டியலிட ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சி இங்கு ;-)

நோயாளியே தீர்க்கதரிசி ஆகும்  அதிசயம் நம் தமிழ் சினிமாவில் தான் நடக்கும். இடைவேளைக்கோ க்ளைமேக்ஸ்கோ முன்பு ஹீரோ அல்லது ஹீரோயிநினின் தாயோ தந்தையோ வில்லனால் கத்தியால் குத்தப் பட்டோ , அல்லது நோயுற்று ஒரு அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியிருப்பர். ஆபரேஷன் தியேட்டரின் முன் குடும்பத்தினரோ தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகள் போல நிம்மதியற்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பார்கள். 
டாக்டர் வெளியிலயே வருவார். கவலைதோய்ந்த முகங்களைப் பார்த்து எங்களால முடிஞ்சத பண்ணிட்டோம் இனிமே எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு என்று கூறிவிட்டு, பேஷன்ட் இன்னும் ஐ சி யு லதான் இருக்கார். யாரும் அவங்கள தொந்தரவு பண்ணாதீங்க என்று கூறிவிட்டு நடையைக் கட்டிவிடுவார்.
ஆனால் நம் பேஷன்ட் தான் தீர்க்கதரிசியாயிற்றே. தான் குடும்பத்தினரை சைகையாலையே அழைப்பார் . ஹீரோ போய் கையைப் பிடித்துக் கொள்வார். அம்மா கவலைப் படாதேங்கம்மா .. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது .. அம்மாவோ , அதெல்லாம் இல்லப்பா இன்னும் நான் ரொம்ப நேரம் இருக்க மாட்டேன்.. என்று கூறிவிட்டு சைடு எபெக்டுக்காக லொக்கு  லொக்கென இருமித் தொலைந்து ஹீரோவுக்கு பீதியைக் கிளப்புவார். மிகுந்த சிரமப்பட்டு ஹீரோ பழிவாங்க வேண்டிய வில்லன் பெயரையோ , அல்லது சண்டையில்  பிரிந்து போன ஹீரோவின் அப்பா பற்றியோ , முக்கி முனகி கூறிவிட்டு செத்தும் போய்விடுவார். ஆபரேஷன் முடிந்து சற்று நேரம் அமைதியாக ஒய்வு எடுத்திருந்தால் கண்டிப்பாக இறந்திருக்க மாட்டார். 

இன்னும் இந்த ஆஸ்பத்திரி காட்சியும் முடிவை இசையாலும் நாம் தெரிந்து கொள்ளலாம். ஆபரேஷன் நடந்துகொண்டிருக்குபோது ஹீரோயின் பூஜையறையில் இருந்து சாமி கும்பிட்டுக்கொண்டு இருப்பார். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். ஆபரேஷனின் காம்ப்லக்சிட்டியைப் பொறுத்து விளக்கு மின்னி மின்னி, எரியவா   அணையவா என்று துடித்துக் கொண்டிருக்கும். ஆபரேஷன் முடிந்துவிட்டது , டொயிங் டொயிங் என்று ஒற்றை தந்தியின் மூலம் வீணையில் முகாரியை கேட்டால் ஹீரோ கதை முடிந்தது என்பது திண்ணம்.ஹீரோ இறந்தால் படம் எப்படி நகரும்? ஹீரோவின் வாரிசு வேடத்தில் இறந்த ஹீரோவே வந்து எதிரிகளைப் பழிவாங்குவார். அதே வீணையில் மங்கள இசை ஒலித்தால் ஹீரோ பிழைத்துக் கொள்வார். 

இவை தவிர மேலும் சில cliche பற்றி  தெரிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள் 

Sunday, May 1, 2011

தல போல வருமா ?

ஒரு மனிதன் எப்படி ஒரு நடிகனின் ரசிகனாகிறான் ? சிறுவயது முதலே ஒரு நடிகன் நடித்த படத்தின் பாடல்களைக் கேட்டோ , அவன் நடித்த படங்களில் உள்ள சண்டைக் காட்சியைப் பார்த்தோ , அவன் செய்யும் ஸ்டைலான செயல்களினாலோ ரசிகனாகிறான் . அந்த வகையில் பாடல்கள் மூலமாக நான் கமலின் ரசிகனானேன் , சண்டைக்காட்சிகளில் விஜயகாந்தை ரசித்தேன் , ஸ்டைலில் சூப்பர் ஸ்டார் ரஜினியை ரசித்தேன் .. அதாவது அந்த சிறுவயதில் நான் மட்டுமில்லை பொதுவில் எல்லாரும் சண்டைக்காட்சிகள் ரசிப்போம்.. எங்கவீட்டுப்பிள்ளை MGR நம்பியாருக்கு எதிராக சாட்டையை சுழற்றியபோது MGR ரசிகனாகவும் இருந்தேன் .. அதெல்லாம் ரொம்ப சின்ன வயது .. இன்ன நடிகர் தான் என்றில்லாமல் சண்டை போடும் எல்லா நடிகர்களும் எனக்குப் பிடிக்கும் .. ஒரே ஒரு விஷயம் அவர்கள் பேன்ட் அணிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.. அதுவும் பெல்பாட்டம் பேன்ட் என்றால் ஆகாது.. இறுக்கமான பேன்ட் அணிந்திருக்க வேண்டும். ஷூ வுக்குள் பேன்ட்டை விட்டிருந்தால் ரொம்பவும் குஷியாகிவிடுவேன். அதனாலேயே ரஜினி ஜெய்சங்கர் போன்றோரின் கவ்பாய் படங்கள் மிகவிருப்பம்.. அதன் பாதிப்பில் நானும் சாக்ஸ்க்குள் பேன்ட்டை சுருட்டிவிட்டு பெரிய ஹீரோ மாதிரி நினைத்துக்கொண்டு அலப்பறை பண்ணியிருக்கிறேன் .. சொல்லவந்தவிஷயத்திலிருந்து சற்றே விலகிவிட்டேன்.விஷயத்திற்கு வருவோம்.

ஒரு நடிகனின் ஆத்மார்த்தமான ரசிகனாக உருவெடுப்பது ஒரு 14 அல்லது 15 வயதிலிருந்துதான். விதிவிலக்கு ரஜினி மட்டுமே. சின்னக் குழந்தை முதல் வயதானவர்கள் என எல்லாரையும் கவர்ந்த அவர்போல உலகளவில் ஒருத்தரும் கிடையாது. சிறுவயதில் நகைச்சுவைக் காட்சிகளும் காதல் காட்சிகளும் படங்களில் நமக்கு போரடிக்கும். சண்டை மற்றும் நடனம் மட்டுமே பிடிக்கும் .அதனால்தான் என்னவோ இன்றைய குழந்தைகளுக்கு விஜயைப் பிடிக்கிறது . ஆனால் விடலைப்பருவத்தில் நமக்கு நகைச்சுவையும் காதல் காட்சிகளும் பிடிக்க ஆரம்பிக்கும். One Hero worship துவங்கும்.அப்படியான தருணத்தில் ஆசை , காதல் மன்னன் ,வாலி, அமர்க்களம், தீனா என்று அஜித் அசத்த ஆரம்பிக்க , இன்றைய ஒட்டுமொத்த தல ரசிகர்களுமே அந்நாளில் தான் தலையின் ரசிகனாக உணர ஆரம்பித்திருப்போம். விஜய் அளவுக்கு நகைச்சுவை நடிப்பு தெரியாது, நடனம் தெரியாது , வசன உச்சரிப்பும் சிறப்பில்லை போன்ற குறைபாடுகளுடன் அஜித் பற்றி மற்றவர்கள் தூற்றிக்கொண்டிருந்தபோது எனக்கு தலையிடம் தென்பட்டதெல்லாம் அவரிடம் இருந்த ஒரு விதமான ஸ்பார்க் தான் கண்களில் பரபரப்பைத் தேக்கி வைத்திருந்த அந்தப் பொறிதான் . ஜெயிக்கவேண்டும் என்ற அவரின் வைராக்கியமே அத்தனை குறைகளையும் மறைத்து இன்னும் அவரை அழகாக்கியது. குழந்தைகளும் பெரியவர்களாக மாறும் ஒரு 14 வயதில் அஜித் படங்களைப் பார்த்தால் கண்டிப்பாக அந்த மனிதனின் தகிக்கும் வேகம் அவர்களுக்குப் பிடிக்கும்.


அஜித்தின் மாபெரும் பலமாக இருப்பதே எத்தனை தோல்விகள் வந்தாலும் தளாராத அவரது தன்னம்பிக்கையும் பக்கபலமான மிகப்பெரிய ரசிகர் கூட்டமும்தான். உண்மையிலேயே மிகப்பெரிய ரசிகர் கூட்டம், எப்படிஎன்றால் ரஜினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரசிகர் படை.
இன்றைக்கு காசு கொடுத்து கட் அவுட்டுக்கு பாலூற்ற சொல்லும் ஜீவா போன்றவர்கள் அஜித்தின் ரசிகர்களில் 100 இல் ஒரு பங்கு இருந்தாலே , எடுரா வண்டிய .. விடுடா ராமேஸ்வரத்துக்கு என்று உண்ணாவிரதமிருந்து தமிழக மீனவனையும் ஈழத்தமிழனையும் காப்பாற்றி இருப்பர்.
இப்படி சுயலாபத்துக்காக ரசிகனை மொட்டை அடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் எனக்கு இனி ரசிகர் மன்றமே வேண்டாம் என்று உதறிய தலயை 
யார் தூற்றினாலும் என் போன்ற எண்ணிலடங்காத தல வெறியர்கள் அப்படியேதான் இருப்போம் தலையின் வெறியனாகவே.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கே இந்த முடிவு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் தல எப்பவுமே முதலில் வீட்ட நல்லா பாத்துக்கோங்க அப்புறம்தான் ரசிகர் மன்றம் என்றே கூறிவருபவர். எனவே அவரது முடிவு என்போன்றவர்களால் வரவேற்கப்படுமே ஒழிய வருந்த வைக்காது. ரஜினியே கூட பாபாவுக்கு நேர்ந்த எதிர்ப்பால் பாமக வுக்கு எதிராக இருந்து ரசிகர்களைத் தூண்டி  பின்பு கலைஞரையும் பாமக கூட்டணியையும் ஆதரித்து ரசிகர்களை கேனையர்களாக மாற்றினார். ஆனால் தல தெளிவாக, ரசிகர்கள் கைமீறிப் போனதும் நாகரிகமாக தான் நற்பணி மன்றங்களை கலைத்துவிட்டார். ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்து முதலமைச்சர் பதவிதான் என்று கனவுகாணும் நடிகர்களுக்கு மத்தியில் , நடிகர்களின் பலமான ரசிகர் மன்றங்களையே கலைக்கும் முடிவு அஜித்தின் நெஞ்சுரத்திற்கு ஒரு சான்று.


இத்தனை வருடங்களாக அவர் எவ்வளவு பக்குவமடைந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. வாய்க்கொழுப்பு நடிகரென்று அவரை இகழ்ந்த பத்திரிகைகள் எல்லாம் இன்று அவரைப் பார்த்து வாயடைத்து நிற்கின்றன. ச்சே என்ன ஒரு முடிவுடா..? நீதாண்டா பொதுவாழ்க்கையில் நடிக்காத ஒரே நடிகன் என்று போற்றுகின்றன.
தன்னுடைய லட்சியமான கார் ரேசில் கலந்துகொள்ளக் கூட தானே உழைத்து சம்பாதித்து கோடிகளைக் கொட்டி கலந்துகொண்டவர் அஜித். அதில் கூட 
தன்னால் யாருக்கும் பாதிப்பு வரக் கூடாது என்று படங்களைத் தவிர்த்து நஷ்டங்களை சம்பாதித்தவர் அஜித். உண்மையிலேயே இவர் அரசியலுக்கு வந்திருந்தால் ஒரு மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் தவிர்த்து நம்முள் ஒருவராக இருக்கவே அவர் விரும்புகிறார். அவருடைய எளிமைக்கு ஒரு சின்ன உதாரணம், ஓட்டளிக்கும் இடத்தில் கூட வரிசையில் ஒருவராக நின்று காத்திருந்து ஓட்டளிக்கிறார் . இத்தனைக்கும் மக்கள் அவரை முதலில் போக அனுமதித்தும் மறுக்கிறார்.தனக்கிருக்கும் பிரபலம் என்ற பிம்பத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று எண்ணுபவர் அஜித்.


அவருடைய இந்த முடிவினால் அவர் சில ரசிகர்களை இழக்கலாம். ஆனால் எண்ணற்ற நடுநிலை சினிமா ரசிகர்கள் மனதிலும் , என் போன்ற தல வெறியர்கள் மனதிலும் இன்னும் நூறு படிகள் மேலே ஏறி இருக்கிறார் .
என்றுமே நம்ம தல போல வருமா? 


பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல ..!


Saturday, April 23, 2011

இந்தியா தமிழனின் நாடா?


இதுநாள் வரையிலும் நானும் ஒரு இந்தியன் என்பதில் மிகுந்த பெருமை கொண்டிருந்தேன்.. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் என்று சிறுவயது பாடப்புத்தகங்களில் எழுதப் பட்டிருந்த வாசகங்களைப் புரியாத வயதில்  படித்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன்.   இப்போது என் நிலையை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு கடந்த சிலவருடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னைக் கொதிக்கச் செய்கின்றன. இருந்தாலும் கையாலாகாத தமிழினத்தில் ஒரு மெல்லிய ஈனஸ்வரத்தோடு முனகுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத என் நிலையை எண்ணி வெம்பிக்கொண்டிருக்கின்றேன்.

இதனால் நான் இந்திய இறையாண்மையை மீறிவிட்டேன் என்றால் அது குறித்து எந்தக் கவலையும் எனக்கு இல்லை. ஏனெனில் இன்றைய இந்தியாவில் தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனக்குழு எதுவென்றால் அது நம் தமிழினம்தான். துவேஷம் வளர்ப்பதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை..எனினும் சில விஷயங்களைப் பற்றி சற்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் கோபம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..

பீடிகைகள் போதும் நேராக விஷயத்திற்கு வருவோம்.
சில வாரங்களுக்கு  முன்பு நான்கு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர் .. நன்றாகக் கவனிக்கவும் "தமிழக மீனவர்கள் " என்று நான் குறிப்பிடக் காரணம் 
நமது தேசிய ஊடகங்கள் அவ்வாறுதான் முன்பு குறிப்பிட்டன .. இறந்தது இந்திய மீனவனில்லையாம் தமிழ் மீனவனாம். ஆக துவேஷம் நம்மளவில் இல்லை.ஒட்டு மொத்த  நாடே நம்மை ஒதுக்கியாயிற்று. மிக்க மகிழ்ச்சி.. ( வேறு வார்த்தைகள் தேடினால் கெட்டவார்த்தைகள் தான் தோன்றுகின்றன) சரி கொல்லப்பட்டதன் காரணம் ? இலங்கை அணி கிரிக்கெட்டில் இந்தியாவிடம் உலகக்  கோப்பையை இழந்து விட்டதாம். இது நாளேடுகளில் வந்த செய்தி.இந்தக் காரணமானது எந்த அளவிற்கு நம்பகமானது என்பதில் சில ஐயங்கள் இருந்தாலும் , ராமநாதபுரம் கடல் எல்லையில் மீனவன் கொல்லப்பட்டால் அதன் காரணம் கண்டிப்பாக இலங்கை ஓநாய்ப் படையைத் தவிர யாராக இருக்க முடியும்.? 
















எதிரி நாடான பாகிஸ்தான் நம் நாட்டு மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் சென்றால் கைது செய்து முறையாக நம் நாட்டிற்கே திருப்பி அனுப்புகிறார்கள். குறைந்தபட்சம் கொல்வதில்லை. இதற்காக நான் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் ? அவன் ஒரு குஜராத்தி மீனவனோ அல்லது மராத்தி மீனவனோ தானே ? அவன் செத்தால் என்னவென்று நான் யோசித்ததில்லை.ஏனென்றால் நான் ஒரு இந்தியன் .
நான் மட்டும் ஏன் என்னை ஒரு இந்தியன் என்று நினைத்து இந்த நாறிப்போன தேசிய நீரோட்ட இறையாண்மை கருமாந்திரத்துக்குள் இணைத்துக் கொள்ளவேண்டும்?

கேனைத் தமிழர்களான நாம் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் .. 
ஒரிசா மழை நிவாரணத்திற்கு அதிக நிதி கொடுத்தது தமிழன்
குஜராத் பூகம்பத்திற்கு அதிக நிதி கொடுத்தது தமிழன் 
கார்கில் போர் இழப்பிற்காக அதிக நிதி கொடுத்தது தமிழன் 
இப்படி இந்த இந்தியாவில் தலையிலிருந்து கால்வரை எந்தப் பகுதியில் ஒரு இயற்கைப்  பேரிடரோ , போரோ ஏற்பட்டாலும் தனக்கு நிகழ்ந்ததாக எண்ணி கண்ணீர் வடிப்பவன் தமிழன்.

அதற்கு கைம்மாறாக இந்த ஒட்டு மொத்த இந்தியாவும் நம்மை ஒதுக்கிவிட்டது.  ஊடகங்களிலிருந்து அரசியல் வரை தமிழன் ஒரு தீண்டத்தகாதவனாகவும் தமிழனுக்கு நேரும் துன்பம் கண்டால் எந்த எதிர்வினையும்  காட்டாத நாடாக இந்தியாவும் மாறிவிட்டது. 



















நம் மீனவர்கள் கொல்லப்பட்ட விஷயத்திற்கு வருவோம். இந்த  சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அன்னை சோனியா காந்தி , நமது முதுபெரும் இனமானத் (தற்போது ஈனமான) தமிழர் கருணாநிதியோடு இணைந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். நமது மக்களுக்கு வாக்களித்தார் ..இனிமேல் கடலில் தமிழன் குருதி வீழாது என்று. சொல்லிச் சென்ற சிலதினங்களில் குருதி வாராமல் அடித்தே மூன்று பேரையும் முண்டமாக்கி ஒருவனையும் கொன்று  அனுப்பின அரக்க வம்ச சிங்கள ஓநாய்கள். சில மாதங்களுக்கு முன்பு மண் (எழுத்துப் பிழை அல்ல ) மோகன் சிங் இனிமேல் தமிழன் மீது துப்பாக்கிச்சூடு இருக்காது என்று வாக்களித்தார். உடனே ஜெயக்குமார் என்ற மீனவனின் கழுத்தில் சுருக்கிட்டுக் கொன்று அனுப்பின அந்த ............. ( இரக்கமில்லாத அரக்கர்களை எவ்வாறு திட்டுவது) பயல்கள் .ஒவ்வொருமுறையும் தமிழக மீனவன் கொல்லப்படமாட்டான் என்று இவர்கள் வாக்களிக்கும்போதும், எவ்வாறு தமிழக மீனவனைக் கொல்வது என்னும் உத்தியை சிங்கள ............. பயல்களுக்கு இவர்களே சொல்லிக் கொடுப்பது போலுள்ளது.

இலங்கையில் இது போன்று தொடர்ந்த அடக்குமுறைகளினால்தான் LTTE இயக்கம் தோன்றியது . அதன்பின்பு இந்தியா தலையிட்டதும் ராஜீவ் காந்தியின் அமைதிப்படை அத்துமீறியதும் தொடர்ந்த துன்பியல் நிகழ்வுகளும் அதைத்தொடர்ந்து சோனியா அன்னை கொண்ட பழிவாங்கும் படலமும் ஒரு இனத்தையே வேரோடு அறுத்துக் கொண்டிருக்கின்றது. இத்தனை நாள் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது தவறு என்று மறுதலித்த நம் இந்திய அரசு இன்று சொந்த நாட்டுக்காரனையே பாதுகாக்க தவறி இருக்கின்றது.
 2008 நவம்பர் 26  அன்று பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் ஆடிய வெறியாட்டத்திற்கு எந்த விதத்திலும் குறைவாகிவிடாது கடலில்  சிங்கள ....... பயல்கள் ஆடும் கொலைவெறித் தாண்டவம்.எதிரி நாடு என்று சொல்லி அடித்ததனால் சற்றே கடினம் காட்டிய இந்திய அரசு , நட்பு நாடு என்று சொல்லி அடிக்கும் இலங்கையைக் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் அடிவாங்குவது தமிழன் தானே. 

ஒற்றை படைவீரனைத் தாக்கியதற்காக பாலஸ்தீனம் மீது போர் தொடுத்த இஸ்ரேல் எங்கே? (இஸ்ரேல் ஒன்றும் உத்தமமான நாடு இல்லை. எனினும் தன் குடிமகனைக் காக்கும் அறவுணர்ச்சி பாராட்டப் பட வேண்டிய விஷயம்). சொந்த நாட்டு மக்கள் 500 பேரைக்  காரணமின்றி கொன்ற சுண்டைக்காய் நாடு இலங்கையிடம் கண்டிப்பு காட்டாத இந்தியா எங்கே?  ஒருகாலத்தில் CK நாயுடு கோப்பைக்காக தமிழக  அணியுடன் கிரிக்கெட் விளையாடிய  இலங்கை இன்று சீனா உதவியுடன் இந்தியாவின் காலைக் குத்திக் கொண்டிருக்கின்றது . 
என்ன ஒரு முரண் பாருங்கள் ராஜபக்சே குருவாயூர் செல்கிறான் , திருப்பதி செல்கிறான் விட்டால் கருணாநிதி தோளில் கை போட்டுக்கொண்டு தஞ்சாவூர் வருவான்.. நமது நாட்டில் அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வேறு ..! கொஞ்சமேனும் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தால் நம் அரசாங்கம் இப்படி செய்யுமா? இன்று ராஜபக்சேவால் இந்தியா தவிர எந்த நாட்டுக்குள்ளும் நுழைய முடியாது ஏனெனில்  உண்மையிலேயே சொரணையுள்ள நம் ஈழத்தமிழர்கள் துரத்தி அடிப்பார்கள். 


















ஆனால் கோழைத் தமிழனான நமக்கு ஒரு கவலையும் இல்லை . நமக்கு வேண்டியதெல்லாம் இம்முறை மிக்சி கிடைக்குமா , லேப்டாப் கிடைக்குமா என்ற கவலைதான்.
நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் இனிமேல் இந்தியாவில் எந்த ஒரு பேரழிவோ , துயரோ நிகழ்ந்தாலும் ( நிகழக் கூடாது ) எந்த வகையான உதவியும் செய்யப் போவதில்லை .. என் இனம் சாகும்போது இந்தியாவில்  எவனும் ஒரு மயிரையும் பிடுங்கவில்லை.. நானும் அவர்களுக்காக ஒரு மயிரையும் பிடுங்கப்போவதில்லை . வாழ்க தமிழினம் ( அட போங்கப்பா )..!

படங்களுக்கு நன்றி : Google

Saturday, February 12, 2011

எங்கே நம் இளையராஜா ?

புதிய மில்லினியத்தில் இளையராஜாவின் இசை குறித்த என் அலசல் இப்பதிவு.
1960 முதல் 1970 இன் இறுதிவரை தமிழ் திரையிசையில் கோலோச்சிய மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா என்னும் இசைக் கலைஞனின் வரவிற்குப் பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனார். அன்னக்கிளியிலிருந்து 16 வயதினிலே, அவள் அப்படித்தான் , முள்ளும் மலரும், பிரியா , நிழல்கள் , உல்லாசப் பறவைகள் என்று அதிரடி கிளப்பிக் கொண்டிருந்தபோது , சாம்பலிலிருந்து மீண்டு எழும் பீனிக்ஸ் பறவையென நினைத்தாலே இனிக்கும் மூலம் MSV  அதிர்ச்சி அளித்தார்.பழைய  பாணியில் இசையமைப்பதினாலேயே MSV காணாமல் போனார் என்று நினைத்த மக்களுக்கு நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் அன்றைய ட்ரெண்டுக்கு இருந்தமையால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்றளவும் உற்சாகம் குறையாத பாடல்கள் அவை. அதன்பின்பு அத்தனை உற்சாகமான பாடல்களோ மெலடிகளோ அவரிடமிருந்து வெளிப்படவில்லை என நினைக்கிறேன். அதுகுறித்து அதிக தகவல்கள்  என் ஞாபகத்தில் இல்லை. பொதுவில் இளையராஜா துவக்க நாட்களில் இசையமைத்த முறையானது  70  களின் இறுதியில் msv   இசையமைக்கும் முறையை ஒத்திருந்தது. பின்பு வேகம் பெற்ற ராஜா இந்திய திரையிசையின் ஒப்பற்ற உன்னத கலைஞனானார்.

காலம், வரலாற்றின் நிகழ்வுகளை அடிக்கடி மீள்பதிவு செய்யும். இம்முறை  msv இன் இடத்தில் நமது ராஜா , ராஜா இடத்தில் ரஹ்மான். 1992 இல் அறிமுகமாகி ரோஜா, புதியமுகம், டூயட், திருடா திருடா என்று அதிரடி கிளப்பிக்கொண்டிருந்த ரஹ்மான் குறைவான படங்களை செய்து கொண்டிருந்தாலும் புதிய ரக இசையால் பெரிதும் விரும்பப் படுபவராய் இருந்தார். ராஜாவும் 1992 - 1997 வரையான காலகட்டத்தில் ஒன்றும் சளைத்துவிடவில்லை, மெல்ல மெல்ல தபேலாவும் மிருதங்கமும் அவரது பாடல்களிலிருந்து மறையத்தொடங்கியது ( முற்றிலுமாக இல்லை ) இந்த கால கட்டங்களில்தான். ராஜா அவருக்கென்றே உரித்தான பாணியை பெரிதும்  மாற்றாமலேயே தொடர்ந்தார்.






இந்த காலகட்டத்தில்தான் தேவாவும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.ஆசை பாடல்கள் குறித்து விகடன் விமர்சனத்தில் " தேவா எப்போ இளையராஜவிலிருந்து ரஹ்மான் பக்கம் வந்தீர்கள் என்று எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறது.பாடல்களில் தபேலாவின் ஆதிக்கம் குறைந்து டிரம்ஸ் ஆதிக்கம் அதிகமானது 
1996 இல் சட்டென்று இளையராஜாவுக்கு ஒரு தொய்வு ஏற்பட்டது போன்ற தோற்றம் நிலவியபோது காதலுக்கு மரியாதை மூலம் மிரட்டினார் ராஜா. MSV க்கு ஒரு நினைத்தாலே இனிக்கும் போல ராஜாவுக்கு காதலுக்கு மரியாதையை ஒரு "COMEBACK" ஆக அமைந்தது.
1996 - 2001 வரையிலான  சமயத்தில் தேவா , S.A.ராஜ்குமார், சிற்பி போன்ற இசையமைப்பாளர்களின் எழுச்சி புதிய இயக்குனர்களுக்கும் , சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது , தேவா ஆங்கிலம் மற்றும் ஹிந்தி , S.A.ராஜ்குமார் பெரும்பாலும் ஹிந்தி , சிற்பியோ பஞ்சாபி மற்றும் ஹிந்தி என்று காப்பிக்கடை நடத்திக் கொண்டிருந்தனர். மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் ரஹ்மானையும், மற்றவர்கள் தேவா சிற்பி போன்ற இசையமைப்பாளர்களிடமும் சென்றுவிட்டதால் ராஜாவைத் தேடுவோர் வெகுவாகக் குறைந்தனர். ராஜாவும் மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார்.
பாலச்சந்தர் , பாலுமகேந்திரா , பாரதிராஜா, மணிரத்னம் போன்ற ஜாம்பவான் இயக்குனர்களின் இசை ரசனை புதிய இயக்குனர்களிடம் காணப்படாததும் கூட ராஜாவின் தொய்வுக்கு ஒரு காரணம் . 
அதன் பின்பு ராஜாவின் இசைகேட்டு வளர்ந்து ராஜாவை தன் ஆதர்சமாக எண்ணிய இயக்குனர்களே ராஜாவை அணுகினர். குறிப்பாக பாலா , சேது படத்திற்கு  வியாபார ரீதியில் முக்கியமான  விஷயமாக அமைந்தது ராஜாவின் இசை என்றால் மிகையல்ல.பின்பு நந்தா தவிர்த்து பிதாமகன், நான்கடவுள் என ராஜாவிடம் வேண்டிய இசையை கேட்டுப் பெறுபவர் பாலா மட்டுமே.
மற்ற சாதாரண இயக்குனர்களின் படங்களுக்கு மிகச்சாதாரணமாகவே இசையமைத்திருக்கிறார் இளையராஜா என்பேன்
சேதுவுக்கு அப்புறம் ராஜா இசையமைப்பில் வெளிவந்த படங்களையும் பாடல்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும் கிட்டத்தட்ட 2005 ஆம் ஆண்டுவரை கூட அவர் இசையமைப்பில் வந்த சொற்ப படங்களில் நிறைவான இசையையே வழங்கியிருந்தார். எனினும் 80 மற்றும் 90 களில் அவர் இருந்த வீச்சினை ஒப்பிடும்போது அது குறைவுதான்.
ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி என்று ராஜாவை விட்டுவிடாமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் கமல். அவரும் தற்போது கட்சிமாறிவிட்டதால் தரமான ராஜா பாடல்கள் கிடைப்பது  சிரமமாகி விட்டது
அழகி, சொல்லமறந்த கதை , காசி, பாரதி, பிரண்ட்ஸ், ஒருநாள் ஒரு கனவு, கண்ணுக்குள் நிலவு , போன்ற படங்கள் 2005 ஆம் ஆண்டுக்குள் வந்த சில நல்ல பாடல்கள் அடங்கியவை.










அதன் பின்பு வந்த ஆண்டுகளில் ராஜா அளித்தது பெரும்பாலும் ஏமாற்றமே
உதாரணத்திற்கு சில படங்களைப்  பார்ப்போமே , தனம் , உளியின் ஓசை , கண்களும் கவி பாடுதே, ஜெகன் மோகினி , வால்மீகி , மிகச் சமீபத்தில் அய்யன் .
படங்களும் நினைவிருக்காது பாடல்களும் நினைவிருக்காது
ஒருகாலத்தில் புதிய இயக்குனர்களுக்கு பலமே ராஜாவின் இசைதான். செல்லத்தாயி, புதுநெல்லு புதுநாத்து , ஆவாரம்பூ, போன்ற படங்கள் நம் நினைவில் இல்லாவிட்டாலும் பாடல்கள் என்றும் நினைவிலிருக்கும்
தற்போது வரும் இயக்குனர்கள் இளையராஜாவிடமிருந்து ஏன் நல்ல இசையைப் பெற முடியவில்லை என்பது புரியவில்லை
சமீப காலங்களில் ஹிந்தியிலும் ராஜா இசை அமைக்கும்  படங்களின் பாடல்கள் நன்றாக உள்ளன, காரணம் அவை எல்லாம் 80 களின் மீளாக்கமே.ஜேம்ஸ், சீனி கம், பா போன்றவை சில உதாரணங்கள்
ராஜா சகாப்தம் முடிந்து விட்டதா? ஒருவேளை ராஜா ஓய்வு பெற எண்ணினாலும் ஒரே ஒரு படம் நச்சென்று அடித்து அதிரவைத்துவிட்டு ஓய்வு பெறட்டுமே 

ராஜா பற்றிய எனது  முந்தைய பதிவுகளைப் பார்க்க 

வருத்தத்துடன் ஒரு ராஜா ரசிகன்