Sunday, December 19, 2010

மம்மொத்கள் ( MAMMOTHS) மீண்டும் பிறப்பது சாத்தியமா..?

ஜுராசிக் பார்க் படத்தில் டைனோசர்கள் மனிதனுடன் உலவுவதை பார்த்திருக்கிறோம். அது போல ஊழிப்பனிக் காலத்தில் வாழ்ந்த மிருகமான  வுல்லி மம்மோத் (Woolly Mammoth )  யானைகள் நம்முடன் சமகாலத்தில் உலவினால் எப்படி இருக்கும் ? சாத்தியம்  இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். 
இந்த துறையில் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட ஜப்பானிய ஆராய்ச்சியாளர் கஸு புமி கோட்டோ (Kazufumi Goto) கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு  மேலாக ஒரு உறைநிலை மம்மொத்தின் உடலத்தைத் தேடிவருகிறார். 2000 ஆண்டுவாக்கில் நேஷனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சியில் அடிக்கடி இவரது வாசகம் ஒன்று ஒளிபரப்புவார்கள்
" எனக்கு ஒரு முழுமையான மம்மொத்தின் உறைநிலை உடல் கிடைத்தால் கண்டிப்பாக நான் மம்மொத்தை மீண்டும் பிறக்க வைப்பேன்" என்பதாகும். திடீரென்று அந்த ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது என்று இணையத்தில் தேடிய போது கிடைத்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர விரும்புகிறேன். 
மம்மொத்கள் Mammuthus Premigenius என்னும்  பிரிவினைச் சேர்ந்ததாகும்.
இந்திய யானைகள் Elephas maximus indicus என்னும் பிரிவினைச் சேர்ந்தவையாகும்.
ஆப்பிரிக்க யானைகள் Loxodonta africana  என்னும் பிரிவினைச் சேர்ந்தவையாகும்.











குளிரிலிருந்து தம்மை காத்துக்கொள்ள அடர்த்தியான  கம்பளி ரோமங்களைப் பெற்றிருந்ததனால்தான் அவை வுல்லி மம்மோத் (Woolly Mammoth)  என்று அழைக்கப்படுகிறது.

ஊழிப்பனிக் காலத்தில் அதாவது "Ice Age" என்று அழைக்கப்பட்ட காலத்தில் சுமார் 10000 வருடங்களுக்கு முன்பு அந்த இனம் மெல்ல மெல்ல மறைந்து போகத் தொடங்கியது. பெரும்பாலும் இன்றைய அலாஸ்கா , ரஷ்யாவின் சைபீரிய தூந்திரப் பிரதேசங்களில் அவை அதிகம் வாழ்ந்திருக்கின்றன என்று கணிக்கப் படுகிறது. உலகம் தன் தட்ப வெப்ப நிலையிலில்  மாறுதல் அடைந்ததால் அவற்றிற்கான உணவுத் தாவரங்கள் அழிந்து போய் அதனால் அந்த இனம் அழிந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.
மேலும் பனி உருகத்தொடங்கிய காலத்தில் அவற்றிற்கான வாழ்விடப் பற்றாக்குறை காரணமாகவும் அவை இறந்திருக்கலாம்.
சிலவேளை மாறும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப பரிணாம வளர்ச்சி அடைந்து தன்னைத் தகவமைவு செய்து கொள்ளாததினாலும் அவை இறந்திருக்கலாம் என்று எண்ணப் படுகிறது.

10000 B.C திரைப்படத்தில் நவீன கணினித் தொழில்நுட்ப உதவியுடன் மிக தத்ரூபமாக மம்மோத் யானைகளை வடிவமைத்திருப்பார்கள். அவற்றைப் பிரமிடுகள் கட்ட பயன்படுத்துவதாகக் காட்டியிருப்பார்கள். ஆனால் அத்தகைய பாலைவனச்  சூழலில் வுல்லி மம்மொத்களால் வாழ்ந்திருக்க முடியாது. அவற்றின் ரோமமே அவற்றைக் கொன்றிருக்கும்.
















க்ளோனிங் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு ஒரு அழிந்து போன இனத்தை மீண்டும் 
பிறக்கச்செய்ய முடியும் என்னும் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. 1990 இல் காஸு புமி  கோட்டோ
ஒரு நாட்டு வகை ஜப்பானிய பசு இனத்தை மீட்டெடுக்க இறந்த பசுவின் உயிரணுக்களை முதிர்ந்த கருமுட்டையில் செலுத்தி வெற்றிகரமாக மீட்டெடுத்திருக்கிறார்.

தற்போது அவர் வேண்டுவதெல்லாம் DNA மூலக் கூறுகள் சிதையாமல் உள்ள ஒரு மம்மொத்தின் உடலம். தற்போது கிடைக்கப் பெற்ற சதைத் துணுக்குகளில் உள்ள DNA  மூலக்கூறுகள் 85 சதவிகிதம் மட்டுமே முழுமையாக உள்ளன. அவரது எண்ணம் என்னவென்றால் முதலில் ஒரு 100 சதவிகித DNA வைக் கொண்டு ஒரு ஆப்பிரிக்க யானை மூலம் ஒரு "மம்மோத் - ஆப்பிரிக்க யானை " கலப்பினத்தை உருவாக வேண்டும். பின்பு அந்த கலப்பின யானை கன்று மூலம் மம்மொத்தின் DNA  வைக் கொண்டு ஒரு முழு மம்மொத்தை உருவாக்கிவிடலாம் என்பதேயாகும்.இது ஒருவிதத்தில் பின்னோக்கிய பரிணாம வளர்ச்சி "Reverse  Evolution " என்று அழைக்கப்படுகிறது.
தற்போது ரஷ்ய சைபீரியப் பகுதியிலிருந்து  ஒரு யானை கன்றின் உறைநிலை உடல் கிடைக்கப் பெற்றுள்ளது.





















இம்முறை கோட்டோ வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அவ்வாறு ஒருவேளை உருவாகிவிட்டால் அவை இன்றைய சைபீரியப்  பகுதிகளில் வாழ முடியும்.
நாமும் ஜுராசிக் பார்க் படத்தில் டைநோசரைப்  பார்க்கப் போவது போல தூந்திரப் பகுதிக்கு சென்று பார்க்கலாம்.
 
இயற்கைக்கு எதிரான மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் இயற்கை கடுமையான எதிர்வினையைக் கொண்டிருக்கும்.மம்மோத் விஷயத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை ஆனால் இப்போதே விஞ்ஞானிகள் இது தடுக்கப் படவேண்டும் .இது இயற்கைக்கு எதிரானது என்று முறையிடுகின்றனர்.
ஒருவேளை இந்தியாவில் மம்மொத்கள் வந்தால் என்னவாகும் ? யானைப்பாகன் மம்மொத்தின் ரோமத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்கி விற்று மம்மொத்தை மொட்டையடிப்பான். சாதாரண யானைக்குப் பதில் மம்மொத்தை வைத்துப்  பிச்சை எடுப்பார்கள். எப்படியானாலும் அவை திரும்பவும் பூமிக்கு வராமலிருப்பதே
நன்று என்று நினைக்கிறேன்.

நன்றி :

மேலும் அதிக தகவல்களுக்கு மேற்குறிப்பிட்ட இணைப்பில் பார்க்கவும்.



Sunday, December 12, 2010

வலைப்பதிவுலகின் எழுத்து நடை ஒரு பார்வை

வலைப்பூக்களில் மொழிநடையை மூன்று  வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று, தேர்ந்த இலக்கியவாதியின் நடையைப் பின்பற்றுதல் இதில் பல சிக்கல்கள் உள்ளன.எந்தவகையான ஆளுமையைப் பின்பற்றி நம் மொழிநடையை அமைத்துக்கொள்வது என்பது முதல் விஷயம்.
அதிலும் பார்த்தோமானால் இன்றைய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் மற்று சாரு நிவேதிதா இருவரின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்.
முன்னவரைப் பின்பற்றுபவர்கள் அனைத்து வார்த்தைகளையும்
  தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று படாத பாடு படுத்திவிடுவர்.மிக எளிய வார்த்தைகளையும் சற்று வேறுவிதமாகக் கூற முற்படுவர்.
புறவயமாக சிந்தித்தல் , அகவயமான எண்ணங்கள் , பொதுவாக நான் அவதானித்த வகையில் , மேலதிக தகவல்கள் என்பன போன்ற வார்த்தைகளை
  புழக்கத்தில் விட்டு சற்றே ஒரு சிற்றிலக்கிய ஒப்பனை செய்வது ஒருவகை.
இலங்கையில் யுத்தம் உக்கிரமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நமது நாளிதழ்கள் புதிதாகக் கொண்டுவந்த வார்த்தைகளே மேலதிகம், பாரிய யுத்தம், காணொளி, சமர் என்பன போன்ற
  நற்றமிழ் வார்த்தைகள். இவற்றை போர் தமிழ்நாட்டுக்கு அளித்த கொடையாகக் கொள்ளலாம்.
வலைப்பதிவர்கள் இவ்வாறான வார்த்தைகளை அதிகம்  புழக்கத்தில் விட்டு தங்களை சற்றே வேறுபடுத்திக் காட்ட முயல்வர்.
பார்த்தீர்களா நான் ஒரு புதிய கலைச்சொல்லை தமிழுக்குத்
   தந்துவிட்டேன் என்பதான கர்வம் அது.இதில் ஒன்றும் தவறில்லை என்றாலும் அதனைப் படிக்கும்போது இயல்புக்கு மாறான ஒரு எண்ணம் நம்முள் எழும்பும். ஆனால் காலப்போக்கில் இச்சொற்களை நாம் படிக்கப் படிக்க மெல்ல நம்முள் ஒரு இயல்பான சொல்லாக அது உருமாறும் என்பது என் எண்ணம். இது ஆரோக்கியமான ஒன்றாகும்.
ஒருவனின் அன்றாட வாழ்க்கைக்கு அவன் ஈட்டும் பொருள் பற்றிக் குறிப்பிடும்போது இப்போதெல்லாம் அனைவரும் " வாழ்வியல் ஆதாரம் " என்னும் வார்த்தையை பயன்படுத்துகின்றனர். இயல் என்று முடியும் எதுவும் அதுபற்றிய படிப்பினைக் குறிப்பதாகும். அறிவியல் , பொறியியல் என்பன போன்ற வார்த்தைகளில் பொறியியல் என்பது , பொறிகள் குறித்த படிப்பு. எனும்போது வாழ்க்கை குறித்த படிப்பு வாழ்வியல் ஆகலாம். ஆங்கிலத்தில் "logy" என்று  முடியும்  விதமாய்  அமையும்  சொற்கள் இதற்கு சமமாக வரும்.
இவ்வாறாக வாழ்வில் ஆதாரம் எனும் சொல் சரியானதல்ல. விஜய் டிவி யின் நீயா நானா கோபிநாத் இன்னுமே இவ்வாறாகக் கூறுகிறார். நானும் அவ்வாறே தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன். குரு ஜெயமோகன்தான் இதுகுறித்து தெளிவுபடுத்தினார். எதோ ஒருவகையில் புதிய தமிழ் சொற்கள் பயன்பாட்டுக்கு வருவதில் மகிழ்ச்சியே.
உதாரணமாக "RESOLUTION" எனும் சொல் அதாவது செல் போன் திரையின் காட்சித்  தெளிவினைக் குறிக்கவும் , டிஜிட்டல் கேமராவின் காட்சித் தெளிவினைக் குறிக்கவும் உதவும் இச்சொல்லானது  தமிழில் "பிரிதிறன்" என்று அறியப்படுகிறது. காணொளி எனும் வார்த்தை போல இதுவும் ஈழப் போர் காலங்களில் என் அறிவுக்கு எட்டிய சொல்லாகும்.தமிழ் நாட்டில் மும்மொழி கரைத்துக் குடித்த செம்மொழி அறிஞரால் கூட இதுபோன்ற ஒன்றினை அளித்திருக்க முடியாது என்பது என் எண்ணம்.
இரண்டாவதாக  ஒரு முக்கியமான மொழிநடை புரட்சி எழுத்து. புரட்சி என்னும் சொல்லே தமிழ்நாட்டில் இப்போது ஒரு அர்த்தம் இழந்த சொல்லாகிற்று. போன தலைமுறையில் S.S.ராஜேந்தின் புரட்சி நடிகர்.அவர் புரட்சிகரமான வசனங்கள் பேசி நடித்தார். இப்போது புரட்சித்  தளபதி விஷால். விஷால் என்ன புரட்சி செய்து விட்டார் ? ஒன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறார். சற்றே வித்தியாசம் காட்ட வேண்டுமென்றால் அதிகபட்சமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறார்.இவ்வாறாக புரட்டி எடுப்பவர் எல்லாம் புரட்சி செய்பவர் என்றால் ஒவ்வொரு உணவகத்திலும் தோசை பரோட்டாவை புரட்டிப் போடும் மாஸ்டர்களெல்லாம்,இனி புரட்சி மாஸ்டர் என்று அழைக்கப் படவேண்டும்.  
பதிவுலகில் இவ்வாறான புரட்சி எழுத்துக்களை தொடர்ந்து நிறுவிக்கொண்டிருப்பவர் அன்பு அண்ணன் சாரு நிவேதிதாதான்.அப்பப்பப்பா என்ன ஒரு புரட்சி.அதாவது  கெட்ட வார்த்தைகளை நேரடியாக எழுதினால் அதுதான் புரட்சி. இன்னும் சில பெண்ணியக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.பெண்களின் அவையங்களை கொச்சையாகக் கூறுதல் அவர்கள் பொறுத்த மட்டில் புரட்சி.அவ்வார்த்தைகளை நான் இங்கு எழுதினால் நானும் ஒரு புரட்சி எழுத்தாளனே .
உலகின் ஆதிசெயலை ஆண் பெண் பந்தத்தை பச்சையாகக் கூறினால் அதுதான் புரட்சி. பதிவுலகின் கட்டற்ற சுதந்திரத்தை ஆக்கப்பூர்வமாக அன்றி, படிக்கும் வாசகனுக்கு ஒரு அதிர்ச்சி அளிக்க மட்டுமே பான்படுத்துவதே இன்றைய நிலையில் ஒரு புரட்சியாகிப் போனது.
இன்னும் ஒருவகையான மொழிநடை இருக்கிறது.அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டி கடைசியில் தன்  கருத்தினை ஒரு வரியில் கூறுவது. இது ஒரு சுலபமான வழி என்றாலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இது ஒருவகையில் பயனுள்ளாதாக இருக்கிறது.
மேற்கூறிய வகைகளெல்லாம் பதிவர்களால் ஒரு 15 சதவிகிதம் பயன்படுத்தப் படுகிறது என்று கொள்ளலாம். எனில் பெரும்பான்மை வகிப்பது " வம்பு" எனும் மொழிநடையே. சில முக்கியமான தலைப்புக்கள் சினிமாவில் MGR  சிவாஜி , ரஜினி கமல்,அஜித் விஜய்,சிம்பு தனுஷ் , இளையராஜா ரஹ்மான் . இதில் நானும் விதிவிலக்கல்ல.எழுத்துலகம் என்றால் பெரும்பாலான  வம்புகளின் தலைப்பு "ஜெயமோகன் சாரு நிவேதிதா" இதுவே  மூன்றாவது நடை.

ஆரம்பகால பதிவர்கள் அனைவரும் இது போன்ற மொழிநடைகளைக் கடந்தே வந்திருப்பர்.அபூர்வமாகவே தனக்கென ஒரு நடையை  முதலிலேயே அமைத்துக் கொண்டவர்கள் உண்டு.பெரும்பாலும் பதிவர்களாகிய நாமனைவருமே சுயபுராண பிதற்றல்களில் ஆரம்பித்திருப்போம்.அப்புறமாக் கொஞ்சம் நகைச்சுவையாக எழுத முயன்றிருப்போம் , பெரும்பாலும் வடிவேலு டயலாக்குகள் கைகொடுக்கும்.அப்புறம் விதவிதமான சொல்லாடல்கள் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி நமக்கு நாமே பாராட்டி மகிழ்ந்துகொள்வோம். இவ்வாறாக நம் சரக்கு எல்லாம் தீர்ந்து போய் புதிதாக நாம் ஒன்றை உருவாக்க முயலும்போதுதான் நமக்கான மொழிநடையை நாம் அறிந்துகொள்ள முடியும்.இந்த நிலைகள் எல்லாம் கடந்து போய் தற்போது எதை எழுதலாம் என்ற குழப்பத்தின் போதுதான் ஏன் இந்த மொழிநடை பற்றி எழுதக் கூடாது என்ற எண்ணம் வந்தது . எழுதிவிட்டேன்.