மது அருந்தும் குரங்குகள் :
மது அருந்துவது ஏதோ மனித இனம் மட்டும் செய்யும் செயல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்பதன் ஆதாரமே கீழ்வரும் காணொளி. கரீபியன் தீவுகளில் குரங்குகள் கடற்கரையோர மது விடுதிகளில் புகுந்து மதுபானங்களைத் திருடிக் குடிப்பது சாதாரண நிகழ்வு. மனிதன் மதுவை விரும்பும் ஜீன்களுக்கான காரணி முன்னோர்களிடமிருந்து மரபணு வழியாகத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பது விஞ்ஞானிகள் வாதம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை மது பிடிப்பதைப் போல குரங்குகளும் தனக்கென தனியான ருசியினை விரும்புகின்றனவாம்.
ஆச்சரியப் படத்தக்க வகையில் வெகு சில குரங்குகளே மதுவைத் தவிர்க்கின்றன, அந்த சதவிகிதம் மது அருந்தாத மனிதர்களின் சதவிகிதத்திற்கு நிகராக இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
குரங்குகள் போதையில் செய்யும் குறும்பும் சேட்டைகளும் அட்டகாசம் ;-)
அகவொலி (Infrasonic Sound) ஆல் ஈர்க்கப்படும் முதலைகளும் திமிங்கலங்களும் :
மனிதன் செவிகளுக்கெட்டாத நுண்ணிய ஒலிகளை மிருகங்கள் கேட்பதுண்டு. மனிதன் வேட்டை மிருகமாக இருந்த காலத்தில் அவனுக்கும் அத்தகைய புலன் கூர்மை இருந்தது. பரிணாமம் வளர வளர தனக்கான ஆயுதங்களை அவன் செய்யத்தொடங்கியதும் கூரிய புலன் உணர்விற்கான அவசியம் குறையலாயிற்று.காலப்போக்கில் அவன் அத்திறனை இழந்துவிட்டிருந்தான்.
அமெரிக்காவின் ஒரு மாகாணமாகிய ப்ளோரிடாவில் வசிக்கும் முதலைகள் கார்களின் உறுமலில் உள்ள அகவொலிகளைக் கேட்டு தன்னுடைய இணையென எண்ணி ஏமாறுகின்றனவாம். கார் மட்டுமல்ல , படகுகள் ஏற்படுத்தும் சத்தமும் , விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகள் எழுப்பும் நுண்ணொலிகளும் கூட அவற்றைக் குழப்புகின்றனவாம். இணைதான் அருகில் உள்ளது என்று எண்ணி தன் உடம்பை அதிரச்செய்து தண்ணீர் திவலைகளை எழுப்பி தன் இருப்பிடத்தை அறியச்செய்யுமாம்
அதுபோலவே பாடும் திமிங்கலங்களும் ஒன்றையொன்று தொடர்புகொள்ள பிரத்யேக அகவொலிகளை எழுப்பும். கடினமான சொற்றொடர்களை நாம் நினைவில் கொள்ள ராகமாக படிப்பதுபோல அவைகளும் ராகமாக ஒலி எழுப்புமாம். ஆனால் மனிதன் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல்களும் இது போன்ற Infrasonic Sound மூலமாகவே வேறு கப்பல்களுடன் தொடர்பு கொள்வதால் திமிங்கலங்களின் சமிக்ஞை இடையூறுக்குள்ளாகின்றனவாம்.
எறும்புகளின் விவசாயம்
விவசாயம் செய்வது மனிதனின் தொழில் மட்டும் இல்லை. சிலவகையான எறும்புகளும் தனக்கென்ற உணவினை விளைவித்துக் கொள்கின்றன.
ஒருவகையான பூச்சிகள் தேன்போன்ற திரவம் ஒன்றை சுரக்கின்றன. எறும்புகள் அவற்றை மொத்தமாகப் பிடித்து அந்த பூச்சி விரும்பி உண்ணும் தாவரத்தின் மேல் கொண்டு சேர்க்கின்றன. பூச்சிகள் தாவரத்தின் சத்தினை உறிஞ்சி வாழ்கின்றன, பதிலுக்கு எறும்புகள் விரும்பும் தேன்போன்ற திரவத்தை (Nectar) எறும்புகளுக்கு அளிக்கின்றன. எறும்புகள் செய்யவேண்டியது தன்னுடைய கொம்புகளினால் (Antennae) அந்த பூச்சிகளை உரசித் தூண்டுவது மட்டுமே. பூச்சிகளுக்கும் நன்மை உண்டு , பிற பூச்சிகளிடமிருந்து எறும்புகள் அந்த தேன் தரும் பூச்சிகளைக் காக்கின்றன.
எறும்புகளின் விவசாயம் ஆச்சரியமூட்டுகின்றது.
எண்ணற்ற விந்தைகள் கொண்ட விலங்குகளின் உலகத்தைப் பற்றி மனிதன் அறிந்தது மிக மிகக் குறைவுதான்.நவீன தொழில்நுட்பத்துடன் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை ஆவணப்படுத்தி வருகின்றோம்.
மேலும் சில சுவாரஸ்யமான காணொளிகளை வரும் பதிவுகளில் காண்போம்.